Saturday 8 August 2020

THANGA PATHAKKAM DRAMA




THANGA PATHAKKAM DRAMA



சிவாஜி கணேசன் ‘இரண்டில் ஒன்று’  நாடகத்தைப் பார்த்தார். அந்த நாடகத்தை சிவாஜியின் நண்பர் எஸ்.ஏ. கண்ணன் இயக்கியிருந்தார். எஸ்.பி. சவுத்ரி வேடத்தில் செந்தாமரை நடித்திருந்தார். அது 42வது முறையாக அன்று அரங்கேறியிருந்தது. நாடகத்தை உன்னிப்பாக பார்த்துக்கொண்டிருந்த சிவாஜி ரசிகர்களின் கைத்தட்டலையும், ஆரவாரத்தையும் கூட கவனித்தார். நாடகம் முடிந்ததும் மேடைக்கு போனார் சிவாஜி. எஸ்.ஏ. கண்ணனையும், செந்தாமரையையும் அழைத்தார்.

`நாளைக்கு எங்கே நாடகம்?’ என்று கேட்டார். சொன்னார்கள். `நாளையோட நாடகத்தை நிறுத்திக்குங்க. அப்புறம் இந்த நாடகத்தை நம்ப சிவாஜி நாடக  மன்றம் நடத்தும்.  எஸ்.பி. சவுத்ரி நான்தான்’. அவர் அப்படிச் சொல்ல சொல்ல அவர்கள் இருவரும் திகைத்தனர். அடுத்ததாக ` சரி! நாடக ஆசிரியர் எங்கே?’ என்றார்.


மகேந்திரனை கொண்டு போய் அவர் எதிரே நிறுத்தினார்கள். `உங்களை இதுக்கு  முன்னாடி எங்கேயோ பார்த்திருக்கேனே?’ என்றார் நடிகர் திலகம். `நான் எழுதிய ‘நிறைகுடம்’ பட பூஜையில்.. உங்களிடம் என்னை இயக்குநர் முக்தா சீனிவாசன் அறிமுகம் செய்து வைத்தார்’ என்றார் மகேந்திரன்.

`சரி! ஆசிரியரே… நாளைக்கு நாடகம் நடக்கும்போது நான் மேடையில்  ‘சைடு ஸ்டே’ஜில் இருப்பேன். நீங்களும் எனக்கு பக்கத்தில் இருக்கவேண்டும். எனக்குத் தோன்றுகிற சில ஐடியாக்களைச் சொல்கிறேன்’ என்றார்.

அதன்படியே மறுநாள் நடந்தது.  அவருக்கு அருகில் மகேந்திரன் அமர்ந்திருந்தார்.  நாடகம் முடியும் வரை மகேந்திரனிடம் சிவாஜி எதுவும் பேசவில்லை. கடைசியில் `அந்த படவா ராஸ்கலை நான் (சவுத்ரி) சுட்டுக்கொல்ல வேண்டும்! என்ன சொல்றீங்க?’ என்றார். மகேந்திரனும் `சரி’ என்றார். ‘இரண்டில் ஒன்று’ நாடகத்தின் இறுதியில் கவர்னரிடம் தங்கப்பதக்கம் வாங்கும் ஒரு நாளில்  எஸ்.பி. சவுத்ரி தற்கொலை செய்து கொள்வார்.அதாவது தன்னை பழிவாங்க நினைக்கும் முயற்சியில், மகன் தனது வாழ்க்கையை  அழித்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக! இதைத்தான் நடிகர் திலகம் மாற்ற வேண்டுமென்றார். இப்படித்தான் ‘இரண்டில் ஒன்று’ நாடகம் ‘தங்கப் பதக்கம்’ ஆனது. மூன்றே நாட்கள்தான். நாடகப் பிரதியைப் படிக்கச் சொல்லி, கொண்டே கண்மூடிக் கேட்பார்.  அவ்வளவுதான், நான்காம் நாள்,

` கிராண்ட் ரிகர்சல் ( இறுதி ஒத்திகை). மறுநாள், மியூசிக் அகாடமியில் ‘தங்கப் பதக்கம்’ நாடகம் அரங்கேற்றம். சென்னை நகரம் முழுவதும் திரைப்பட போஸ்டர் மாதிரி ‘தங்கப் பதக்கம்’ நாடக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு,  ரசிகர்களது எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. பெருந்தலைவர் காமராஜர் நாடகம் பார்க்க வந்திருந்தார்.  மகேந்திரன் `கிரீன்’ ரூமுக்கு  போய் சிவாஜியை எட்ட நின்று பார்த்தார். ஒப்பனை நடந்து கொண்டிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அவர் உடம்பு எகு போல நிமிர்கிறது.

`மூன்று நாட்கள்தானே வசனம் படிக்கச் சொல்லி கேட்டார். எதையும் மறக்காமல் இவர் எப்படி வசனம் பேச போகிறார் என்பது மாதிரியான சந்தேகக் கேள்விகளை  மகேந்திரனுக்குள் எழுந்தது. அரங்கில் மணியடித்தது. நாடகம் தொடங்கியது. மகேந்திரன் எழுதிய ஒரு வசனத்தைக் கூட அவர் மறக்கவில்லை.

மகேந்திரனின் வசனத்திற்கு தனது நடிப்பு ஆற்றலால், குரல் வளத்தால், அதை உன்னதமாக பயன்படுத்த தெரிந்த மேடை அனுபவத்தால், புதியதோர்  அழகையும்,  உயிரோட்டத்தையும்  கம்பீரத்தையும்  சிவாஜி படைத்துக் காட்டியபோது மகேந்திரன் வியந்தே போனார்.

மகேந்திரனுக்குள் அப்படியொரு பிரமிப்பு! நாடகம் முடியும் வரை அமோகமான  கைத்தட்டல்கள் ஓயவில்லை. நாடகம் முடிந்ததும், மகேந்திரன் `கிரீன்’ ரூமுக்குப் போனார். ஒப்பனை கலைக்கப்பட்டு களைப்புடன் அமர்ந்திருந்தார் நடிகர் திலகம்.

நாடகம் முழுக்க  அவர் காட்டிய கம்பீரத்துக்கும்  ஒப்பற்ற நடிப்புக்கும் அவர் தனது உடலின் சக்தி மொத்தத்தையும் செலவழித்திருந்தார். ஒப்பனை கலைவது வரை  சவுத்ரியாக வாழ்ந்தவர், இப்போது தனது இயல்பு நிலைக்குத் திரும்பி அவர் அவராகிவிட்டார்.

மகேந்திரனைப் பார்த்ததும், `என்னப்பா உன் டயலாக்கையெல்லாம் நான் ஒழுங்காக பேசினேனா?’ என்று ஒரு மாணவனைப் போலக் கேட்டார்.

மாபெரும் நடிகர்! மகேந்திரனின் கண்கள் கலங்கின. மனம் சிலிர்த்தது.

‘தங்கப் பதக்கம்’ நாடகம் இந்தியா முழுக்க நடைபெற்று இணையற்ற வெற்றியை ஈட்டியது. அதன் பிறகு மும்பையில் நடந்த நாடகத்திற்கு மட்டும்தான் மகேந்திரனால் போக முடிந்தது. நடிகர் ராஜ்கபூர் உட்பட மற்ற பிரபல நடிகர்களில் பெரும்பாலானோர் சிவாஜியின் காலை தொட்டு வணங்கி, அவரது நடிப்பின் மேன்மையை  ஆராதித்த காட்சியை மகேந்திரனால் இன்றும் மறக்க முடியவில்லை. அது சிவாஜி என்ற மகா கலைஞனது மொழி தாண்டிய  அற்புத நடிப்பாற்றலின்  வல்லமையை மட்டுமல்ல,  நாடகக்கலையின்  சிறப்பையும் உன்னதத்தையும்  மகேந்திரனுக்கு ஆழமாக உணர்த்தியது. ‘தங்கப் பதக்கம்’ 100 வது நாள் நாடகத்தின்போது மேடையில் மகேந்திரனுக்கு மோதிரம் அணிவித்து மரியாதை செய்து மகிழ்ந்தார் நடிகர் திலகம். ஒரு நாள் மாலை நேரத்தில் துக்ளக் அலுவலகத்தில் அமர்ந்திருந்தார் மகேந்திரன். அன்றைய மாலைப் பத்திரிகைகளில் ஒரு முழுப் பக்க விளம்பரம் வந்திருந்தது.  ‘தங்கப் பதக்கம்’ திரைப்படம் ஆகப்போகிற விளம்பரம் அது! மகேந்திரனுக்குள் ஓர் அதிர்வு. இதனால் தான் மிகவும் நேசிக்கும் துக்ளக் பணி பாதிக்கப்படுமோ என்று பயந்தார்.  அவர் நினைத்தபடியேதான் நடந்தது.

சிவாஜி பிலிம்ஸிலிருந்து மகேந்திரனுக்கு அழைப்பு வந்தது.  நடிகர் திலகத்தின் தம்பி சண்முகம்தான் பேசினார்.  `படம் முடியும் வரை ஷூட்டிங் நாட்களில்  நீங்கள் படப்பிடிப்புத் தளத்தில்  இருக்க வேண்டும்!’ என்று அன்பான வேண்டுகோள் விடுத்தார்.

படப்பிடிப்புக்கான வேலைகள் துவங்கி விட்டன. செட்டுக்கு போக வேண்டுமென்றால், துக்ளக்கிலிருந்து மகேந்திரன் விலக வேண்டும். மகேந்திரனால் அதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. ஆனால் சோ பெருந்தன்மையோடு, `இது சிவாஜி படம். நீங்கள் கூட இருந்தால்தான் சரியாக இருக்கும்’ என்று பெருந்தன்மையோடு மகேந்திரனை அனுப்பி வைத்தார்.

‘தங்கப் பதக்கம்’ தயாராகி சென்னை சாந்தி தியேட்டரில் ரிலீஸானது. ஆரம்ப காட்சியில் ஒரு சாதாரண இன்ஸ்பெக்டராக, அந்த காலத்து இன்ஸ்பெக்டர் மாதிரி சிவாஜி அரை டிராயரோடு ஜீப்பில் இருந்து ரவுடி மேஜர் சுந்தரராஜனை மடக்க வருவார். அவர் ஜீப்பிலிருந்து அவரது பிரவுன் கலர் ஷூ தெரிந்தவுடனேயே தியேட்டரில் விசில் பறக்கும். பாடல்களும் ‘தங்கப் பதக்கம்’ படத்திற்கு மெருகு சேர்த்தன. நாடகத்தில் இல்லாத ஒரு கதாபாத்திரத்தை அதாவது சோவுக்கு இரட்டை வேடம் ஒன்றை திரைக்காக உருவாக்கினார்கள். அதில் சோவின் ஒரு கதாபாத்திரம் அரசியல்வாதி. பாடல்கள் பட்டித்தொட்டியெங்கும் ஒலித்தன.

(தொடரும்)

செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 153 – சுதாங்கன்
‘தங்கப்பதக்கம்’ படம் வெளியாகி  மகத்தான வெற்றியைக் கண்டது. தெலுங்கில் என்.டி.ராமராவ் ‘தங்கப்பதக்க’த்தை எடுத்து அவரே எஸ்.பி. சவுத்ரி வேடத்தில் நடித்தார். அதுவும் மிகப்பெரிய ஹிட். கன்னடத்தில் டாக்டர் ராஜ்குமார் ‘தங்கப்பதக்கம்’ எடுத்தார். அதுவும் மிகப்பெரிய வெற்றி. கன்னடம், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் படம் பெரிய வெற்றியைப் பெற்றது. ‘தங்கப்பதக்கம்’ இந்தியில் ‘ஷக்தி’ என்ற பெயரில் எடுக்கப்பட்டது.

எஸ்.பி. சவுத்ரி கேரக்டரில் திலீப்குமாரும், மகன் வேடத்தில் அமிதாப் பச்சனும் நடித்தார்கள். இந்தியிலும் படம் பெரும் வெற்றியை அடைந்தது. இந்த படத்திற்கு கதை, வசனம் எழுதிய மகேந்திரன்தான் பின்னர் பிரபல இயக்குநர் ஆனார். மகேந்திரன் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டவர். பிறகுதான் சிவாஜி படங்களுக்குள் வந்தார். இவர்தான் சிவாஜி நடித்து முக்தா பிலிம்ஸ் தயாரித்த ‘நிறைகுடம்’ படத்திற்கும் கதை எழுதினார்.

படத்திற்கு திரைக்கதை, வசனத்தை சோ எழுதினார்.  மகேந்திரனுக்கு சிவாஜி மீது அளவு கடந்த ரசிப்பு உண்டு. அவர் தன்னுடைய புத்தகத்தில் `இயற்கை அதிசயங்களில் சிவாஜியும் ஒருவர்!’ என குறிப்பிட்டிருக்கிறார். நம்மை நினைத்து தூண்டுபவர் சிவாஜி. தமிழ் சினிமாவின் நிரந்தரப் பெருமை அந்த மகா கலைஞன்! உலக சினிமாவில்  புகழ்பெற்ற நடிகர்கள் நடித்த ஏராளமான படங்களைப் பார்த்திருக்கிறேன். அவர்களில் பலர் மூன்று, நான்கு வேறுபட்ட கதாபாத்திரங்களை மட்டுமே ஏற்று மிகச் சிறப்பாக நடிக்கும் ஆற்றல் படைத்தவர்களாக இருக்கிறார்கள்.

நடிகர் திலகத்தை பொறுத்தவரை அவர் ஏற்று  நடிக்காத கதாபாத்திரங்களே கிடையாது என்பதே வியப்பானது. கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பது மட்டும் பெரிய காரியமல்ல.. அந்தக் கதாபாத்திரமாகவே மாறிவிடும் அமானுஷ்ய திறமை படைத்தவர் அந்த மேதை. சமூகப் படங்களா.. சரித்திர படங்களா.. புராண இதிகாச படங்களா...... அவர் எதைத்தான் விட்டு வைத்தார்? சத்ரபதி சிவாஜியை மாணவர்கள் கண்முன்னே கொண்டு வந்தவர். ‘வீரபாண்டிய கட்டபொம்ம’னை நமக்கு அறிமுகப்படுத்தியவர். சிவபெருமான் இப்படித்தான் பேசியிருப்பார், நடந்திருப்பார்,  சிரித்திருப்பார் என்று நமக்குக் காட்டியவர். ‘தில்லானா மோகனாம்பா’ளில் நாதஸ்வர கலைஞனாக.. ‘மிருதங்க சக்ரவர்த்தி’யில் மிருதங்க வித்வானாக.. ‘கப்பலோட்டிய தமிழ’னில் வ.உ. சிதம்பரம் பிள்ளையாக.. ‘கைகொடுத்த தெய்வம்’ படத்தில் பாரதியாராக.. கர்ணனாக.. ‘திருவருட் செல்வ’ரில் அப்பராக.. புகழ்பெற்ற பிராமண வழக்கறிஞராக.. திருடனாக… வயதான தாத்தாவாக… கம்பீரமான போலீஸ் அதிகாரியாக.. உடல் ஊனமுற்றவராக… அப்பாவியாக…. மாமேதையாக  அவரைப் போல நடிக்க வேறு எவராலும் முடியுமா? முடியாது, முடியாது, முடியவே முடியாது. ‘நவராத்திரி’யில் அவர் ஏற்று நடித்த ஒன்பது வேடங்களைப் போலவோ.. ‘தெய்வ மகனி’ல் அவர் நடித்த அப்பா, மகன்கள் கதாபாத்திரம் போலவோ.. ‘சபாஷ் மீனா’விலும், ‘கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி’யிலும் அவர் ஏற்று நடித்த நகைச்சுவை கதாபாத்திரங்கள் போலவோ.. ‘திரும்பிப் பார்’,  ‘அந்த நாள்’, ‘ரங்கூன் ராதா’, போன்ற படங்களில் அவர் ஏற்று நடித்த வில்லத்தனம் கொண்ட அற்புத கதாபாத்திரங்களைப் போலவோ நடிப்பதற்கு வேறு எவரால் முடியும்?

‘நவராத்திரி’ படத்தின் இறுதிக் காட்சியில்  நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திக்கும்  காதலியிடம் பேசாமலேயே  அவர் நடித்துக் காட்டிய அற்புதத்தை எளிதில் மறக்க முடியுமா?

`அவர் சிவபெருமானாக நடித்ததைப் பார்த்த பிறகே எனக்கு கடவுள் நம்பிக்கை வந்தது’ என்று என்னிடம் சொன்னவர்கள் உண்டு. தமிழ் சினிமா, உலக அளவில் தன் நெஞ்சை நிமிர்த்திக் கொள்ள அவதரித்த அற்புதக் கலைஞன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்! அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர்கள் என்றைக்கும் பெருமைப்பட வேண்டும்.

நமது அதிர்ஷ்டம்… அவர் வாழ்ந்த காலகட்டத்தில் நாம் பிறந்திருக்கிறோம் என்பது! அவருடன் நடித்தவர்களும், அவருடன் பேசிப் பழகிய அத்தனை பேருமே  ‘நான் வள்ளுவன் காலத்தில் வாழ்ந்தவன்!’ என்று சொல்லும் அளவுக்கு பேறு பெற்றவர்கள். என் போன்றவனுக்குத்தான் எத்தனை பாக்கியம்!

அந்த நடிப்புலக மாமேதை நான் எழுதிய வசனத்தைப் பேசினார் என்று அப்பாவை யானையாக நினைத்து சவாரி செய்து குதூகலிக்கும் குழந்தையைப் போல, சந்தோஷமாக ஆர்ப்பரிக்கிறேன்.

நான் உருவாக்கிய கதாபாத்திரத்துக்கு அவர் உயிரும் உருவமும் கொடுத்து வாழ்ந்து காட்டியதை, என் சந்ததியினால் மறக்க முடியாது. அப்பேர்ப்பட்ட நடிப்புலக சக்ரவர்த்தியுடன்தான் எனக்கு எத்தனை விதமான  அற்புதத் தருணங்கள்!  நினைக்க நினைக்க பரவசமாக இருக்கிறது!

அவர் ‘பராசக்தி’ படத்தில் பேசிய அழகைப் பார்த்துவிட்டு பள்ளி நாட்களில் அவருக்காகவே அந்த வசன புத்தகத்தை வாங்கி உருப்போட்ட பல்லாயிரக்கணக்கான மாணவர்களில் நானும் ஒருவன். அப்பேர்ப்பட்ட பிறவிக் கலைஞன், எப்பேர்ப்பட்ட தொழில் பக்தி கொண்டவர் தெரியுமா? காலையில் ஏழு மணிக்கு படப்பிடிப்பு என்றால், 6.40க்கே படப்பிடிப்பு தளத்தில் இருப்பார். மதிய சாப்பாடு இடைவேளை வரை செட்டை விட்டு வெளியே வரமாட்டார். மாலையில் நாடகம் என்றால், மதியம் ஒரு மணிக்கே  நாடகமேடைக்கு வந்து தங்கிவிடுவார். காரணம்?  நடிக்கப்போகும் நாடகத்துக்கு போடப்பட்டிருக்கும்  அவருடைய வீடு அல்லது அரண்மனையே தான் வாழும் இடம் என்ற உணர்வை தனக்குள்ளே ஏற்படுத்திக் கொள்ளத்தான்.

நாடகம் தொடங்கி முடியும் வரை தன் பெயர் சிவாஜி கணேசன் என்பதையே மறந்து நாடகத்தின் ‘கட்டபொம்ம’னாகவோ, எஸ்.பி. சவுத்ரியாகவோ கூடுவிட்டு கூடு பாய்ந்துவிடுவார்.

`அவருக்கு சராசரி உயரம்தான். ஆனால், மேடையிலும், சினிமாவிலும் அவரைப் பார்க்கும்போது உயரம் அதிகமாகத் தெரிவார்.  அது எப்படி?’ என்று சிவாஜி நாடக மன்ற இயக்குநர் எஸ்.ஏ. கண்ணனிடம் ஒரு நாள் கேட்டேன்.

அதற்கு அவர், “சின்ன வயதிலிருந்து நானும்  அவருடன் நாடகங்களில் நடிக்கிறேன். ஆனால் இவர் எப்படி இவ்வளவு உயரமாகத் தெரிகிறார் என்பது எனக்கே புரியாத புதிர்தான்” என்றார்.

ஒரு சமயம் நான் திரைக்கதை எழுதிய படத்தின் படப்பிடிப்பு இடைவேளையில், அவரிடமே இந்த சந்தேகத்தைக் கேட்டேன்.

அந்த மாபெரும் கலைஞன் சொன்னார், `இங்கே பாரு… நான் கால்களில் உயரமான ஹீல்ஸ் போடுவது கிடையாது.  அதே போல, காலின் முன்பாதத்தை அழுத்திக் குதிகால் உயர்த்துவதும் கிடையாது. எனக்குத் தரப்படும் கதாபாத்திரத்தின் கவுரவத்தை, பெருமையை,  மேன்மையை என் மனம் அப்படியே உள்வாங்கிக் கொள்ளும். அதே நினைப்புடன் நடிக்கும்போது, என் பேச்சு, பார்வை, கையசைவு, நடை, இந்த உடல்மொழி எல்லாமே அந்த கதாபாத்திரத்தை நேரில்  பார்ப்பது போன்ற உணர்வு ஏற்பட்டு `எவ்வளவு உயர்ந்த மனிதன்’ என்ற கண்ணோட்டத்தில் என்னைப் பார்க்கிறார்கள். மேலும் தொடர்ந்து….

(தொடரும்)

No comments:

Post a Comment