SULAKSANA ,TAMIL ACTRESS
BORN 1965 SEPTEMBER 1
தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த 80’ஸ் எவர்கிரீன் கதாநாயகிகள், தங்களின் வெற்றிக் கதை சொல்லும் தொடர் இது. இந்த இதழில், சுலக்ஷனா.
குழந்தை நட்சத்திரம் டு கதாநாயகி டு குணச்சித்திர நடிகை என மூன்று பரிமாணங்களிலும் புகழ்பெற்றவர், சுலக்ஷனா. இவரின் வெகுளித்தனமான குணம், நடிப்புப் பயணத்திலும் பிரதிபலித்திருக்கிறது. நடிகையாகவும் சிங்கிள் பேரன்ட்டாகவும் வெற்றிபெற்ற சுலக்ஷனா, தன் வெற்றிப் பயணம் குறித்துப் பேசுகிறார்.
குழந்தை நட்சத்திரம்... பிரபலங்களின் செல்லம்!
ஆந்திராவிலுள்ள ராஜமுந்திரி என் சொந்த ஊர். எனக்கு நினைவு தெரியுறதுக்குள்ளேயே சென்னைக்குக் குடியேறிட்டோம். என் தாத்தா பத்திரிகையாளரா இருந்தார். அவர் சினிமா பிரபலங்களைப் பேட்டி எடுக்கப் போறப்போ என்னையும் கூட்டிட்டுப்போவார். `காவியத் தலைவி’ படத்துல ஒரு சின்னப்பொண்ணு சரியா நடிக்கலை. அங்க ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்திட்டிருந்த என்னை நடிக்கக் கேட்டார் இயக்குநர் கே.பாலசந்தர் சார். அந்தப் படத்துல ஜெமினி கணேசன் - செளகார் ஜானகிக்கு மகளா நடிச்சேன். மூணு வயசுல தொடங்கி, தொடர்ந்து குழந்தை நட்சத்திரமா பல மொழிகளிலும் 100 படங்களுக்கு மேல் நடிச்சேன்; தெலுங்கில்தான் அதிகம் நடிச்சேன்.
என்.டி.ராம ராவ், நாகேஸ்வர ராவ் உட்பட பல பெரிய நடிகர்களின் செல்லக் குழந்தையா நடிச்சிருக்கேன். ஷூட்டிங்ல சாக்லேட், ஐஸ்க்ரீம்னு எனக்குப் பிடிச்சதெல்லாம் வாங்கிக்கொடுக்க, ரொம்ப சந்தோஷமா நடிப்பேன்.
ஏமாற்றம் டு ஹீரோயின்!
எதிர்காலத்துல ஹீரோயினாகணும்னு ஆசைப்பட்டேன். என் ஒன்பது வயசுக்கு மேல நடுத்தர வாய்ப்புகளே வந்துச்சு. அதனால் ஆறு வருஷங்கள் நடிக்காம இருந்தேன். அப்போது கிளாஸிக்கல் டான்ஸ் கத்துக்கிட்டேன். ஹீரோயினா தமிழில் அறிமுகமாக, ஒவ்வொரு கம்பெனியா வாய்ப்பு தேடினேன். நிறைய ஏமாற்றங்கள்தான் கிடைச்சது. அப்போதைய முன்னணி இயக்குநர்கள் பலரின் படங்களுக்கு, ஹீரோயின் தேர்வுக்குப் போயிருக்கேன். அங்க, `சிரி, சத்தம்போட்டுச் சிரி, அழு, நடந்து வா’ன்னு இதையேதான் செய்யச் சொல்வாங்க.
`தூறல் நின்னு போச்சு’- பாக்யராஜுடன்
`தூறல் நின்னு போச்சு’- பாக்யராஜுடன்
`இந்தப் பொண்ணுக்கு நடிக்க வரலை; டயலாக் பேசத் தெரியலை’னு யாரும் சொல்லிடக்கூடாதுன்னு இயக்குநர்கள் சொல்லிக்கொடுக்கிறதை கவனமா புரிஞ்சுகிட்டு, நடிச்சுக் காட்டுவேன். ஆனாலும், ஏதோ காரணம் சொல்லி நிராகரிச்சுடுவாங்க. வருத்தம் இருந்தாலும், நம்பிக்கையை இழக்காம இருந்தேன். இந்த நிலையில `சுபோதயம்’கிற தெலுங்குப் படத்தில் ஹீரோயினானேன். அந்தப் படத்துக்காக முதன்முதலா புடவை கட்டி நடிச்சப்போ, ஓர் அடிகூட நடக்க முடியாம தடுமாறிக் கீழே விழுவேன். இயக்குநர் கே.விஸ்வநாத் சார்தான் `நடக்க, நடிக்க'ன்னு எனக்கு நிறைய விஷயங்களைப் பக்குவமா சொல்லிக்கொடுத்தார். தேவிங்கிற என் நிஜப் பெயர்ல புகழ்பெற்ற நடிகை இருந்ததால, விஸ்வநாத் சார்தான் என் பெயரை `சுலக்ஷனா’ன்னு மாத்தினார்.
குறும்புத்தனம்... பாக்யராஜ் கொடுத்த அடி!
`சுபோதயம்’ படம் பெரிய ஹிட். அடுத்து ராஜ்குமார் சாருக்கு ஜோடியா நடிச்ச கன்னடப் படமும் பெரிய ஹிட். பிறகுதான் `தூறல் நின்னு போச்சு’ பட வாய்ப்பு வந்துச்சு. ரெண்டு படங்கள் ஹிட் கொடுத்திருந்தாலும்கூட, புது ஹீரோயின் மாதிரி எனக்கு நிறைய டெஸ்ட் வெச்சாங்க. என் வெகுளித்தனம் அந்த மங்களம் கேரக்டருக்கு சரியா இருக்கும்னு பாக்யராஜ் சார் நினைச்சார். ஆனா, தமிழ் சினிமாவில் நான் நிறைய வாய்ப்பு தேடினது, நிராகரிக்கப்பட்டது பத்தி, பல பெரிய மனிதர்கள் பாக்யராஜ் சார்கிட்ட சொல்லி, என்னைத் தேர்வு செய்ய வேண்டாம்னு சொல்லியிருக்காங்க. அப்போ பாக்யராஜ் சார் மனைவி பிரவீணா மேடம்தான், `இந்தப் பொண்ணால நல்லா நடிக்க முடியும்’னு சிபாரிசு பண்ணினாங்க. பிறகுதான், `தூறல் நின்னு போச்சு’, `டார்லிங் டார்லிங் டார்லிங்’ உட்பட மூணு படங்களுக்கு ஹீரோயினா ஒப்பந்தம் போட்டார் பாக்யராஜ் சார்.
'சிந்து பைரவி' படப்பிடிப்பில்...
'சிந்து பைரவி' படப்பிடிப்பில்...
படத்தில் நான் ஃபீல் பண்ணி அழவேண்டிய ஒரு காட்சியில எனக்கு அழுகையே வரலை. ஒருகட்டத்துல பளார்னு என் கன்னத்துல அறைவிட்டார் பாக்யராஜ் சார். அதிர்ச்சியாகி அழுதுகிட்டே நான் டயலாக் பேச டேக் ஓகே ஆகிடுச்சு. பிறகும் நீண்ட நேரம் அழுதுகிட்டே இருந்ததுடன், `நான் எதுக்கு அடி வாங்கணும்? வீட்டுக்குப் போறேன். இனி நடிக்கவே மாட்டேன்’னு சொன்னேன். பிடிச்ச தின்பண்டங்களையெல்லாம் கொடுத்து என்னைச் சமாதானம் செய்தாங்க.
நிராகரித்தவர்களின் பாராட்டு... கமல் ஜோடி!
`படத்துல நான் உனக்கு சைக்கிள் ஓட்டக் கத்துக்கொடுக்கிற மாதிரி ஒரு சீன் இருக்கு’ன்னு சொன்ன பாக்யராஜ் சார், `உனக்கு சைக்கிள் ஓட்டத் தெரியுமா?’னு கேட்டார். தெரியாதுன்னு உண்மையைச் சொன்னேன். `நான் பின்னாடி இருந்து பத்திரமா பிடிச்சுப்பேன்’னு அவர் சொன்னதை நம்பினேன். ஆனா, சொல்லிக்கொடுக்கிற மாதிரி ஆரம்பிச்சு, திடீர்னு என்னைத் தண்ணியில தள்ளி விட்டுட்டார்.
அந்தப் படத்தின் முதல் பிரதியைப் பார்த்த சினிமா பிரபலங்கள், என்னை நிராகரிச்சவங்க உட்பட பலரும் என் நடிப்பைப் பாராட்டினாங்க.
பிறகு ஒப்பந்தத்தில் இருந்து ரிலீஸ் பண்ணி, நான் நல்லா முன்னேறணும்னு வாழ்த்தினார் பாக்யராஜ் சார். அடுத்து ஒரே வருஷத்துல 12 படங்கள்ல கமிட்டானேன். பத்தாவதுக்குப் பிறகு கரஸ்ல படிச்சாலும், என்னால படிப்பில் கவனம் செலுத்த முடியலை. ஓய்வில்லாம பிஸியா நடிச்சேன். `தூங்காதே தம்பி தூங்காதே’ படத்துல கமல் சாருக்கு நான் ரெண்டாவது ஹீரோயின். என் நடிப்பு பிடிச்சுப்போய், எனக்கான காட்சிகளை அதிகப்படுத்தச் சொன்னார், கமல் சார். அதைத் தெரிஞ்சுகிட்ட ராதா, அந்தப் படத்தில் என்னைவிட சிறப்பா நடிச்சாங்க. இப்படி ஆரோக்கியமான போட்டி அப்போ இருந்துச்சு.
திடீர் கல்யாணம்... அதிகரித்த சினிமா புகழ்!
ஹீரோயினா புகழுடன் இருந்த 18 வயசுல எனக்குக் கல்யாணம் முடிவாகிடுச்சு. மறைந்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் ஐயாவின் மகன் கோபி கிருஷ்ணன் என் முன்னாள் கணவர். திடீர் திருமணம். ஆனா, முன்பு ஒப்புக்கிட்ட தேதியில நடிச்சுக்கொடுக்கலைன்னா ஷூட்டிங் பாதிக்கப்படும். எனவே,
காலை 7 மணிக்குக் கல்யாணம் முடிஞ்சதும், 10 மணிக்கு `தம்பிக்கு எந்த ஊரு’ படத்தின் ஷூட்டிங்ல கலந்துகிட்டேன். அன்னிக்குதான், சத்யராஜ் சார் என்னைப் பொண்ணு பார்க்கும் காட்சியைப் படமாக்கினாங்க. `இந்தப் பொண்ணை இன்னிக்கு இரவு தாமதமா வீட்டுக்கு அனுப்புங்க’ன்னு ரஜினி சார் படக்குழுவினர்கிட்ட விளையாட்டா சொன்னார். ஆனா, அது உண்மையாகிடுச்சு. நான் நடிக்கவேண்டிய காட்சிகளையெல்லாம் முடிச்சு, வீட்டுக்குப் போக இரவு 10 மணிக்கு மேல ஆகிடுச்சு. இப்படி ஒரு கல்யாண நாள் யாருக்காவது நடக்குமா? அதே நேரம், நான் தொடர்ந்து நடிக்கிறதுக்குப் புகுந்த வீட்டில் ஊக்கம் கொடுத்தாங்க.
`தம்பிக்கு எந்த ஊரு’ படத்துல ரஜினி சாரை ஒருதலையா காதலிப்பேன். அப்போ ஒரு முன்னணி தமிழ்ப் பத்திரிகையின் காலண்டர்ல, சினிமாவில் ஜோடி சேராத பிரபலங்களை மாதத்துக்கு ஒரு ஜோடி வீதம் போட்டோஷூட் பண்ணினாங்க. அதில், ரஜினி சாரும் நானும் ஒரு ஜோடியா இருந்தோம். `உங்ககூடதான் நான் ஜோடியா நடிக்கலை. அதுக்குள் திருமதி ஆகிட்டீங்க’ன்னு தமாஷா சொன்னார் ரஜினி சார்.
கல்யாணத்துக்குப் பிறகுதான் எனக்கு சினிமா வாய்ப்புகள் அதிகமா வந்துச்சு. `ஆயிரம் நிலவே வா’, `கெட்டிமேளம்’, `குவா குவா வாத்துகள்’, `ஜனவரி 1’, `ராஜாத்தி ரோஜாக்கிளி’னு நிறைய ஹிட் படங்கள்ல ஹீரோயினா நடிச்சேன்.
திட்டாத பாலசந்தர்... இழந்த வாய்ப்புகள்!
`கே.பாலசந்தர் சார், சரியா நடிக்கலைன்னா பயங்கரமா திட்டுவார்’னு என்னைப் பலரும் பயமுறுத்தி வெச்சிருந்தாங்க. இதனால், `சிந்து பைரவி’ படத்துல என் முதல் நாள் சீன்ல பதற்றத்தில் என்னால சரியா நடிக்க முடியலை. என்னைத் தனியா அழைச்சு, `என்னைப் பத்தி உங்ககிட்ட சொல்லி யாரோ பயமுறுத்தியிருக்காங்க. நான் உன்னை மட்டும் திட்டமாட்டேன். நீ பயமில்லாம நடி’ன்னு சொன்னார் பாலசந்தர் சார். அந்தப் படத்துக்குப் பிறகுதான் நல்ல ஆர்ட்டிஸ்ட்டுன்னு எனக்குப் பெயர் கிடைச்சது.
80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 18: நான் இப்படி இருக்கவே விரும்புகிறேன்! - நடிகை சுலக்ஷனா
`மலையாள சினிமாவுல பெரும்பாலும் பாவாடை, ரவிக்கையிலதான் ஹீரோயின்களை நடிக்க வைப்பாங்க. அந்த காஸ்ட்யூம் பார்க்க கிளாமரா இருக்கும்’னு என்கிட்ட சிலர் சொல்லியிருந்தாங்க. அதையெல்லாம் உண்மைனு நம்பி, `ஓபோல்’ உட்பட பல நல்ல பட வாய்ப்புகளை இழந்துட்டேன். ஆனாலும், கல்யாணத்துக்குப் பிறகு நிறைய மலையாளப் படங்கள்ல ஹோம்லி ரோலில் நடிச்சேன். குழந்தை நட்சத்திரமா நடிச்ச படங்களைத் தவிர்த்து, நான்கு மொழிகளில் 200 படங்களுக்கு மேல் நடிச்சிருப்பேன். அதில், 100 படங்களுக்கு மேல ஹீரோயின்.
மனோரமாவின் அட்வைஸ்... ஒன்பது வருடப் பிரிவு!
ஒருமுறை ஆச்சி மனோரமா என்கிட்ட, `நான் ஹீரோயினா நடிக்கலை. ஆனா, பலதரப்பட்ட கேரக்டர் ரோல்கள்ல நடிக்கிறேன். இது ஒருவகையில எனக்கு ப்ளஸ். என்ன ரோல் என்பதைவிட, நம்ம நடிப்புதான் மக்கள் மனசுல நிற்கணும்’னு அட்வைஸ் கொடுத்தாங்க. அதேபோல ஒருகட்டத்துல ஹீரோயின் வாய்ப்புகள் குறைஞ்சு, செகண்டு ஹீரோயின், குணச்சித்திர நடிகை, அம்மா ரோல்னு ஆனாலும் எதுக்குமே நான் வருத்தப்படலை.
இந்த நிலையில, கருத்து வேறுபாடு காரணமா, என் கல்யாண வாழ்க்கை விவாகரத்தில் முடிஞ்சது. எதிர்பார்ப்பு பொய்த்துப் போய் வாழ்க்கை கஷ்டமானது. அதுக்காக வருத்தப்பட்டாலும், அத்துடன் வாழ்க்கை முடிஞ்சுபோச்சா என்ன? சவாலா இருந்தாலும், சிங்கிள் பேரன்ட் வாழ்க்கையைத் தைரியமா எதிர்கொண்டு வாழ்ந்தேன். குழந்தைப் பருவத்துல இருந்து நடிச்சிட்டு வந்த நான், என் தனிப்பட்ட அமைதி மற்றும் என் குழந்தைகளுக்கு முழுமையா நேரம் ஒதுக்க, சினிமா துறையிலிருந்து ஒன்பது ஆண்டுகள் விலகியிருந்தேன். வருத்தமும் விரோதமும் இல்லாம பிரிஞ்சதால இப்போவரை நானும் என் முன்னாள் கணவரும் நண்பர்களாதான் இருக்கிறோம்.
பாலசந்தரால் ரீ-என்ட்ரி... வாழ்நாள் முழுக்க நடிப்பு!
என் ரெண்டு பசங்களையும் ஸ்கூல் பிக் அப், டிராப் நான்தான் செய்வேன். அதை, கே.பாலசந்தர் சாருக்குத் தெரிஞ்ச யாரோ தொடர்ந்து கவனிச்சிருக்காங்க. பாலசந்தர் சார்கிட்ட இருந்து ஒருநாள் எனக்கு அழைப்பு வந்துச்சு. `` `சிந்து பைரவி’ படத்தின் இரண்டாம் பாகமா `சஹானா’னு ஒரு சீரியலை டைரக்ட் பண்றேன். சிவகுமார், சுஹாசினி இருவரும் நடிக்க மறுத்துட்டாங்க. நீயும் நடிக்கலைன்னா, அந்த சீரியலையே நான் எடுக்க மாட்டேன். மூணு நாள் யோசிச்சுட்டு உன் முடிவைச் சொல்லு’ன்னு சொன்னார். முன்பு நடிச்சு சேர்த்து வெச்சிருந்த பணத்துல, அதுவரை வாழ்ந்தாச்சு. இனி பசங்களை நல்லபடியா படிக்கவைக்க, குடும்பத்தை நடத்தன்னு பொருளாதாரத் தேவைகள் என்னை யோசிக்கவெச்சது. மகன்களின் ஒப்புதலோடு, அந்த சீரியல்ல நடிச்சேன். பிறகு தொடந்து சினிமா, சின்னத்திரையில நடிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுச்சு. என் ரெண்டு பசங்களையும் நல்லா படிக்க வெச்சு, நல்ல நிலைக்கு ஆளாக்கினேன்.
இப்போ நடிப்பு, விருதுக்குழு உறுப்பினர் உட்பட பல வேலைகளைச் செய்றேன். எழுதவும் படிக்கவும் எனக்கு ஆறு மொழிகள் சரளமா தெரியும். எனவே, என் பல்துறை வேலைகளுக்கும் மொழித் திறமை உதவுது. `காலம் உங்க குணத்தை மட்டும் மாத்தவேயில்லை’ன்னு பலரும் சொல்வாங்க. வெகுளித்தனமான குணம் கொண்ட நான், எந்த விஷயத்தையும் ரொம்ப யோசிக்க மாட்டேன். அதனால எனக்கான வளர்ச்சியும் புகழும் குறைவாக இருக்கலாம். ஆனா, இப்படி இருக்கவே விரும்புறேன்; இதனால்தான் எனக்கு மன அமைதி கிடைக்குது.
நாயகிகள் பேசுவார்கள்!
80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 18: நான் இப்படி இருக்கவே விரும்புகிறேன்! - நடிகை சுலக்ஷனா
வில்லி ரோலில் நடிக்க ஆசையுண்டு!
கொடூரமான வில்லி ரோல்ல நடிக்கணும்னு எனக்கு ரொம்ப ஆசையுண்டு. ஆனா, `உங்க அப்பாவி முகத்தைப் பார்த்தாலே திட்டணும்கூட தோணாது’ன்னுதான் சினிமா துறையில பலரும் சொல்றாங்க. இதுவரை நடிப்புக்காக யார்கிட்டயும் நான் வாய்ப்பு கேட்டதில்லை. அதனால, எனக்குத் தொடர்ந்து கிடைச்சிட்டிருக்கிற குணச்சித்திரம் மற்றும் அப்பாவி ரோல்களிலேயே நடிச்சுக்கிட்டிருக்கேன்.
.நடிகை சுலக்சனாவை நான் மிரட்டவில்லை என்று பைனான்சியர் மாடசாமி கூறியுள்ளார்.
பல படங்களில் கதாநாயகியாக நடித்தவர் சுலக்சனா. தற்போது அம்மா வேடத்தில் சினிமாலும், டிவி சீரியல்களிலும் நடித்து வருகிறார்.
இவர் சென்னை போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமாரனிடம் கொடுத்த புகாரில் வடபழனியை சேர்ந்த மாடசாமியிடம் கடந்த ஒரு லட்சம் கடன் வாங்கினேன். இதுவரை வட்டியாக மட்டும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் கொடுத்துள்ளேன். ஆனால் மேலும் 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வட்டியாகவும், அசல் தொகையான ரூ.1 லட்சத்தையும் தர வேண்டும் என்று மிரட்டுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இதுகுறித்து விசாரணை நடத்த கமிஷனர் உத்தரவிட்டார். புகார் கூறப்பட்ட பைனான்சியர் மாடசாமி நெல்லையைச் சேர்ந்தவர். தன் மீதான புகார் குறித்து மாடசாமி நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், நடிகை சுலக்சனா தனது மகளை ஆஸ்திரேலியாவில் படிக்க வைக்க கடந்த ஜூலை மாதம் ரூ. 1 லட்சம் கடன் வாங்கினார். இதற்கு அவர் கொடுத்த செக்குகளில் வங்கிகளில் பணம் இல்லாமல் திரும்பி வந்துவிட்டன. இதனால் கடந்த 22ம் தேதி முழு பணத்தையும் கொடுத்து விடுவதாக என்னிடம் தெரிவித்தார். இதையடுத்து நான் எனது சொந்த ஊரான பாளையங்கோட்டைக்கு வந்து விட்டேன். இந்த சமயத்தில் தான் நடிகை சுலக்சனா என் மீது கந்து வட்டி கேட்பதாகவும், ரவுடி கும்பலை வைத்து மிரட்டுவதாகவும், போலீசில் புகார் செய்துள்ளார். அவர் கூறுவதை போல கந்து வட்டி வசூலிக்கவும், ரவுடிகளை விட்டு மிரட்டவும் இல்லை. இந்தப் புகாரை யாரோ தூண்டுதலின் பேரில் தான் கொடுக்கப்பட்டுள்ளது. சட்டப்படி அவரது புகாரை எதிர்கொள்வேன் என்றார்.
No comments:
Post a Comment