Saturday 12 October 2019

AMERICAN CIVIL WAR - CONFEDERATE ROBERT LEE , FOUGHT AGAINST LINCOLN








புரட்சித் தளபதி ராபர்ட் ஈ. லீ
தவறான தரப்பில் சரியான மனிதர் ராபர்ட் ஈ. லீ
BORN 1807 JANUARY 19-1870 OCTOBER 12

ஆள் என்னவோ நல்லவர்தான் ஆனால் சேர்ந்த இடம்தான் சரியில்லை என்று கேள்விப்பட்டிருப்பீர்களே! Right man in the wrong side. அது ராபர்ட் ஈ. லீ க்கு கச்சிதமாகப் பொருந்தும். 19-ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் நடந்த உள்நாட்டுப் போரில் அடிமைமுறையைக் காப்பாற்றப் போராடியவர்தான் தளபதி லீ.

ஐக்கிய அமெரிக்க நாடு 1776-ல் பிரிட்டனிடமிருந்து விடுதலை அடைந்தது. தனது அரசியலமைப்பிலேயே “அனைத்து மனிதர்களும் சமமானவர்கள்” என்று கொண்டிருந்தாலும் அந்நாட்டில் ஆப்பிரிக்காவிலிருந்து கடத்திவரப்பட்ட லட்சக்கணக்கான கறுப்பின மக்கள் அடிமைகளாக இருந்தனர். புதிய அமெரிக்கக் குடியரசு அவர்களைக் குடிமக்களாகக் கருதவில்லை. ஆனாலும் அமெரிக்காவில் அடிமைமுறையை ஒழிக்கவேண்டும் என்று குரல்கள் எழுந்தன. ஐரோப்பாவில் அடிமைமுறை ஒழிக்கப்பட்டபோது, அமெரிக்காவின் பல மாநிலங்களும் அடிமைமுறையை ஒழித்து, கறுப்பின அடிமைகளை விடுதலை செய்தன. (ஆனால் அவர்களுக்கு வாக்குரிமை கொடுக்கவில்லை.)

19-ம் நூற்றாண்டில் அமெரிக்காவின் வடபகுதியிலிருந்த பல மாநிலங்கள் அடிமைமுறையினை ஒழித்தவர்கள் பட்டியலில் சேர்ந்தன. ஆனால் அமெரிக்காவின் தென்மாநிலங்களில் ஒன்றுகூட அடிமைமுறையினை ஒழிக்க முன்வரவில்லை. அமெரிக்காவில் இருந்த அடிமைகளில் மிகப்பெரும்பான்மையானோர் தென் மாநிலங்களிலிருந்த பண்ணைகளில் தொழிலாளிகளாக வேலை செய்துவந்தனர். தென் மாநிலங்களின் பொருளாதாரம் பண்ணையடிமை முறையைப் பெரிதும் சார்ந்திருந்தது. அடிமைகளின் உழைப்பில் வாழ்ந்துகொண்டிருந்த தென்மாநில அமெரிக்கர்கள் அவர்களை விடுதலைசெய்து தங்கள் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கத் தயாராக இல்லை. இரு தரப்பும் நீண்ட விவாதத்துக்குப் பிறகு ஒரு சமரசத்துக்கு வந்தார்கள் – தென் மாநிலங்கள் அடிமைமுறையைப் பின்பற்றலாம். ஆனால் வட மாநிலங்களில் அம்முறை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டது.



ஆப்ரஹாம் லிங்கன்

இந்த சமரசம் வெகு நாள்கள் தாக்குப்பிடிக்கவில்லை. ஏனென்றால் அமெரிக்கா அப்போது மேற்கு நோக்கி வளர்ந்துகொண்டிருந்தது. சில ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய மாநிலங்கள் அமெரிக்கக் குடியரசில் இணைந்துகொண்டிருந்தன. இந்தப் புதிய மாநிலங்களில் அடிமைமுறையை அமல்படுத்துவது பற்றி இரு தரப்புக்கிடையில் மீண்டும் பிரச்னை எழுந்தது. இந்த நிலையில்தான் அடிமைமுறையை முற்றிலும் ஒழிக்கவேண்டும் என்ற கொள்கை கொண்ட ஆப்ரஹாம் லிங்கன் 1861-ல் அமெரிக்க அதிபரானார். லிங்கன் அதிபரானால் தங்கள்மீதான கட்டுப்பாடுகள் அதிகமாகும் என்று தென் மாநிலங்கள் நினைத்தன. லிங்கனைத் தங்கள் அதிபராக ஏற்றுக்கொள்ள மறுத்த தென்மாநிலங்கள், அமெரிக்க ஒன்றியத்திலிருந்து பிரிந்து போவதாக அறிவித்தன. கான்ஃபெடரசி என்ற பெயரில் புதிய நாடு ஒன்றை உருவாக்கின. அப்படிப் பிரிந்துபோக அவற்றுக்கு உரிமை இல்லை என வடமாநிலங்கள் சொன்னதால், இருதரப்புக்கும் இடையே போர் மூண்டது. இந்தப் போரில் இருதரப்பும் தங்கள் படைகளுக்குத் தலைமை தாங்க அணுகிய ஒரே ஆள் ராபர்ட் ஈ. லீ.

லீ, வர்ஜீனியா மாநிலத்தில் ராணுவப் பாரம்பரியமிக்க குடும்பத்தில் பிறந்தவர். பதினெட்டாவது வயதில் அமெரிக்காவின் புகழ்பெற்ற வெஸ்ட் பாயிண்ட் ராணுவக் கல்லூரியில் சேர்ந்தார். நான்கு ஆண்டுகளில் படிப்பை முடித்து அமெரிக்க ராணுவத்தில் பொறியியல் அதிகாரியாகச் சேர்ந்தார். அடுத்த நாற்பது ஆண்டுகளுக்கு அமெரிக்கா ஈடுபட்ட பல்வேறு போர்களில் பங்கேற்றார். படிப்படியாகப் பதவி உயர்வு பெற்றார். 1861-ல் உள்நாட்டுப் போர் மூண்டபோது லீ, ராணுவத்தில் கர்னல் பதவியில் இருந்தார். லீக்கு அடிமைமுறையைப்பற்றி அழுத்தமான கருத்துகள் கிடையாது. சமகாலத்திய அமெரிக்கர்களில் மிகப் பெரும்பாலானோர் கருதியதுபோலவே அவரும் கறுப்பர்களை வெள்ளையர்களைவிடத் தாழ்ந்தவர்கள் என்று நினைத்தார். அவர் பிறந்த வர்ஜீனியா மாநிலம், தென் மாநிலங்களில் ஒன்றாக இருந்தாலும், வட மாநிலங்களின் எல்லையில் அமைந்திருந்தது. அங்கு பண்ணைத் தோட்டங்கள் மிகக் குறைந்த அளவில்தான் இருந்தன. அந்த மாநிலத்தில் இருந்த கறுப்பின அடிமைகள், வீடுகளில்தான் வேலைக்காரர்களாகப் பணிபுரிந்தனர். பண்ணையடிமைகள் படும் கொடுமைகளை லீ நேரடியாகப் பார்த்து அறிந்திருக்கவில்லை. இதனால் அடிமைமுறையை அவர் ஆதரிக்கவில்லை என்றாலும், அது ஒழிக்கப்படவேண்டியது என்று அவர் கருதவில்லை.


கறுப்பர்களுக்கு முழு விடுதலை அளித்தால் அவர்களால் தனியாக வாழ இயலாது; வெள்ளையர்களின் வழிகாட்டுதல் அவர்களுக்கு அவசியம் என்றே லீ கருதினார். ஆனால் அதே சமயம், அடிமைமுறைக்காக நாட்டைப் பிரித்துப் புதிய நாடு உருவாக்குவதையும் அவர் விரும்பவில்லை. தென் மாநிலத்தின் அரசியல்வாதிகளைப் பற்றியும் அவருக்கு உயர்ந்த அபிப்பிராயம் கிடையாது.

கான்ஃபெடரேட் மாநிலங்கள் பிரிந்துபோனபோது வரிஜீனியா உடனடியாக அவற்றுடன் சேரவில்லை. போர் நிச்சயம் என்று முடிவானபின் இரு தரப்புகளும் அதற்கான ஆயத்தங்களைச் செய்யத்தொடங்கின. அனுபவம் வாய்ந்த படைத்தளபதிகளுக்கு இருதரப்பிலும் நல்ல கிராக்கி இருந்தது. லீயின் ராணுவ அனுபவமும் திறமையும் அவருக்கு ராணுவத் தரப்பில் நல்ல பெயரைப் பெற்றுத் தந்திருந்தன. எனவே ஆபிரகாம் லிங்கன், தங்கள் தரப்புக்கு வந்தால் வட அமெரிக்கப் படையில் பெரிய பதவி தருவதாக லீக்கு செய்தி அனுப்பினார். ஆனால் லீ பிறந்த வர்ஜீனியா அதற்குள் அமெரிக்க ஒன்றியத்திலிருந்து பிரிந்து தென் மாநிலங்களுடன் சேர்ந்துகொண்டது. போர் மூண்டால் தனது மாநிலத்துக்குப் பெரும் சேதம் உண்டாகும் என்று லீக்கு நன்றாகத் தெரியும். ஆனாலும் சொந்த மண்ணின் விசுவாசம் அவரைத் தென்மாநிலப் படையில் சேர வைத்தது. வட அமெரிக்காவைப்போல தென் மாநிலங்கள் தொழில் மயமான பகுதிகள் அல்ல. அவற்றின் படைபலமும் வடக்கின் படைபலத்தைவிடக் குறைவு.ஜெனரல் லீ

போர் தொடங்கினால் வெகுசீக்கிரம் வடஅமெரிக்கப் படைகள் கான்ஃபெடரேட் படைகளைத் தோற்கடித்துவிடும் என்று பரவலாக நம்பப்பட்டது. கான்ஃபெடரேட் படையில் சேர்ந்த லீ, தலைமைத் தளபதிகள் ஐவருள் ஒருவராக நியமிக்கப்பட்டார். மேற்கு வர்ஜீனியாவில் உள்ள படைகள் அவரது கட்டுப்பாட்டில் வந்தன. கான்ஃபெடரேட் தளபதியாக அவர் ஈடுபட்ட முதல் சண்டையே அவருக்குத் தோல்வியில் முடிந்தது. அவரது செல்வாக்கைப் பிடிக்காத அவரது உள்ளூர் எதிரிகள் அவரைப் போர்முனையிலிருந்து தண்ணியில்லாக் காட்டுக்கு மாற்றிவிட்டனர். ஆனால் வெகுவிரைவில் அவர் மீண்டும் போர்த் தளபதியாக மாறும் நிலை உருவானது. 1862-ல் வட அமெரிக்காவின் பெரும்படை ஒன்று கான்ஃபெடரசியின் தலைநகர் ரிச்மாண்டைத் தாக்க வந்தது. அப்போது ரிச்மாண்டைப் பாதுகாத்து வந்த கான்ஃபெடரேட் வடக்கு வர்ஜீனீயாப் படையின் தளபதி போரில் காயமடைந்ததால், அந்தப் பதவி லீக்குக் கிடைத்தது.

லீ தளபதியானது குறித்து தென்மாநிலங்களில் கடும் அதிருப்தி நிலவியது. அவருக்குத் தைரியமே கிடையாதென்றும், தாக்குதல் நடத்தாமல் சும்மா வெட்டியாக இருப்பாரென்றும் விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் நடந்ததோ நேர் எதிரான ஒன்று. ஒரே வருடத்தில் வட அமெரிக்கப் படைகளால் அழிக்கப்பட்டிருக்கவேண்டிய கான்ஃபெடரசியை நான்கு ஆண்டுகள் தனது போர்த்திறமையால் தாக்குப்பிடிக்க வைத்தார் லீ. முதலில் ரிச்மாண்டின் அரண் நிலைகளைப் பலப்படுத்தியபின் அதனைத் தாக்கவந்த அமெரிக்க ஒன்றியப் படையை எதிர்த்துத் தாக்கினார். சில மாதங்களில் கான்ஃபெடரசியின் கதையை முடித்துவிடலாம் என்ற இறுமாப்புடன் வந்திருந்த வட அமெரிக்கத் தளபதிகள், லீயின் அதிரடித் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் திணறினர். கான்ஃபெடரசியைத் தாக்க வந்த வட அமெரிக்கப் படைகளை விரட்டியதோடு நிற்காமல், வட மாநிலங்களின்மீது படையெடுத்தார் லீ. பாதுகாப்புப் போர் (defensive war) நடத்தினால் கான்ஃபெடரசியால் நீண்ட நாட்கள் சமாளிக்க முடியாது என்பது அவருக்குத் தெரியும். நாளாக ஆக ஆள் பலமும் ஆயுத பலமும் மிக்க அமெரிக்க ஒன்றியத்தின் பலம் கூடிக்கொண்டேதான் போகும். அதற்குள் ஒன்றியத்தின் குடிமக்களின் மன உறுதியைக் குலைத்து போர் வேண்டாம் என்ற மனநிலைக்கு அவர்களைத் தள்ளவேண்டும் என்று லீ முடிவு செய்தார். இதை நிறைவேற்ற வடக்கு வர்ஜீனியாப் படையுடன் அமெரிக்க ஒன்றியத்தின்மீது படையெடுத்தார்.

சில மாதங்களில் போர் முடிந்துவிடும், ஓடிப்போன தென் மாநிலங்கள் வாலைச் சுருட்டிக்கொண்டு மீண்டும் வந்து ஒன்றியத்தில் ஐக்கியம் ஆகிவிடுவார்கள் என்று எண்ணியிருந்த வட மாநில மக்களுக்கு லீயின் படையெடுப்பு பேரதிர்ச்சியாக இருந்தது. லீயின் முதல் படையெடுப்பு தோல்வியில் முடிவடைந்தாலும் அவர் தன் படைகளைப் பத்திரமாகக் காப்பாற்றிப் பின்வாங்கிவிட்டார். ஆனால் தனது படையெடுப்பின் தாக்கம் போர்க்களத்தைவிட ஒன்றிய மக்களின் மனத்தில்தான் அதிகமாக இருந்தது என்பதைப் புரிந்துகொண்டார். தொடர்ந்து தோல்விகள் கிடைத்தால் அவர்கள் போர் போதும் என்ற மனநிலைக்கு வந்துவிடுவார்கள் என்பதை உணர்ந்தார். எனவே அடுத்த ஆண்டு (1863) மீண்டும் வடக்கு நோக்கிப் படையெடுத்தார். அவரை எதிர்க்க அனுப்பப்பட்ட ஒன்றியப்படைகள் அனைத்தையும் முறியடித்து வேகமாக முன்னேறினார்.

லீ அளவுக்குத் திறமையுள்ள தளபதிகள் ஒன்றியப்படையில் அப்போது இல்லை. ஆனால் படை எண்ணிக்கையும் தளவாட எண்ணிக்கையும் அவர்களுக்குச் சாதகமாக இருந்தன. கெட்டிஸ்பெர்க் என்ற இடத்தில் லீயின் படையைத் தடுத்து நிறுத்தின ஒன்றியப்படைகள். மூன்று நாட்கள் பெரும் உயிர்ச்சேதத்துடன் கடும் சண்டை நடந்தது. லீயின் படை தோற்றுப் பின்வாங்கியது. அதோடு போரில் கான்ஃபெடரசி ஜெயிக்கும் கனவும் பொய்த்துப் போனது. அப்போதே கான்ஃபெடரசி சரணடைந்திருந்தால் பின் ஏற்பட்ட உயிரிழப்புகளையும் பொருட் சேதங்களையும் தவிர்த்திருக்கலாம். லீ போன்ற திறமையான தளபதி ஒன்றியப் படைகளைச் சமாளிக்கவில்லை என்றாலும், போர் சீக்கிரம் முடிந்திருக்கும். கெட்டிஸ்பெர்க் சண்டைக்குப் பிறகு கான்ஃபெடரசியின் கதையை முடிக்கவந்த ஒன்றியப் படைகளைத் தாமதப்படுத்திப் போரிட்டார் லீ. ஆனால் ஒன்றியத்தின் படைபலத்தின் முன் லீயின் திறமையை மட்டும் வைத்துக் கொண்டு கான்ஃபெடரசியால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. போதாக்குறைக்கு, லீ அளவுக்குத் திறமை வாய்ந்த கிராண்ட், ஷெர்மன் என்ற இருவர் ஒன்றியப் படைகளின் தலைமைத் தளபதிகள் ஆகிவிட்டனர்.

1864-65ல் கான்ஃபெடரசியின் படைகள் ஒன்றன்பின் ஒன்றாக அழிக்கப்பட்டு அதன் பகுதிகள் ஒன்றியப் படைகளால் கைப்பற்றப்பட்டன. போரின் இறுதிக் கட்டத்தில் வேறு வழியில்லாமல் கறுப்பின அடிமைகளுக்கு ஆயுதப்பயிற்சி அளித்து அவர்களைப் படைகளில் சேர்த்துக்கொள்ளலாமா என்று யோசிக்கத் தொடங்கினார் லீ. எப்படி இருக்கு கதை! எந்த அடிமைகள் கீழ்த்தரமானவர்கள், அவர்களுக்கு கொஞ்சம்கூட உரிமைத் தரக்கூடாது என்று கான்ஃபெடரசியை உருவாக்கி உள்நாட்டுப் போரைத் தொடங்கினார்களோ அதே அடிமைகளைக் கொண்டு கான்ஃபெடரசியைக் காக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். ஆனால் அதற்கான காலம் கடந்துவிட்டது. ஷெர்மன், கிராண்ட் இருவரின் படைகளின் தாக்குதல்களைச் சமாளிக்க முடியாமல் ஏப்ரல் 1865-ல் கான்ஃபெடரசி சரணடைந்தது. அடிமைமுறையும் ஒழிக்கப்பட்டது. கான்ஃபெடரசிக்காகப் போராடியவர்களின் குடியுரிமை ரத்து செய்யப்பட்டது. லீ நாடிழந்தவர் ஆனார். சில வருடங்கள் கழித்து அப்படி குடியுரிமை பறிக்கப்பட்டவர்களுக்கு பொது மன்னிப்பு அறிவிக்கப்பட்டபோது லீயும் அதற்கு விண்ணப்பித்தார். ஆனால் ஏனோ அவரது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 1870-ல் அவர் மரணமடைந்தபோது அவர் எந்த நாட்டின் குடிமகனும் இல்லை. அவர் இறந்து நூறாண்டுகளுக்குப் பிறகே அவரைக் கெளரவிக்கும் வகையில் அவருக்கு அமெரிக்கக் குடியுரிமை திருப்பியளிக்கப்பட்டது.

லீயின் வாழ்க்கையை மேலோட்டமாகப் பார்த்தால் இவரெல்லாம் வில்லனா என்று தோன்றும். ஆனால் அவர் யாருக்காகப் போராடினார் என்பதைப் பார்த்தால் அவரால் மானுட சமுதாயத்துக்கு எவ்வளவு பெரிய தீங்கு நேர்ந்திருக்கும் என்பது விளங்கும். கான்ஃபெடரசி ஒரு தீய அரசு என்பதில் கொஞ்சம்கூடச் சந்தேகமில்லை. அடிமைமுறையைத் தக்க வைப்பதற்காக உருவாக்கப்பட்ட தேசம் அது. தங்கள் நாட்டில் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களிலும் நாடுகளிலும் இந்த முறையைப் பரப்பவேண்டும் என்று முயன்ற நாடு அது. லீ இல்லை என்றால் ஒரே ஆண்டில் அழிக்கப்பட்டிருக்கவேண்டிய இந்தக் ‘கொடியவர்களின் கூடாரம்’ நான்காண்டுகள் பிழைத்து உள்நாட்டுப் போர் தொடர்ந்து நடந்தது. கிட்டத்தட்ட ஆறு லட்சம் உயிர்களைக் காவு வாங்கிய இந்தப் போர் நான்காண்டுகள் நடந்தற்கு லீதான் முக்கியக் காரணம். இத்தனைக்கும் அவருக்கு அடிமைமுறை மீது எந்தப் பற்றும் கிடையாது. தனது மாநிலத்தின்மீது வைத்திருந்த விசுவாசத்தால் அமெரிக்காவின் தலையெழுத்தையே மாற்றப் பார்த்தார் லீ.

உள்நாட்டுப் போர் முடிந்து லீ இறந்து பல ஆண்டுகளாகியும் அவரது நினைவை அமெரிக்கத் தென் மாநிலங்களின் இனவெறியர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். உள்நாட்டுப் போர் ஒரு சுதந்திரப் போராட்டம் என்றும், அடிமைமுறைக்காக நடத்தப்பட்டதில்லை என்றும் தென் மாநிலங்களின் ஆதரவாளர்கள் வரலாற்றைத் திரித்து எழுதிவருகிறார்கள். கான்ஃபெடரசிக்கு புனித பிம்பத்தை உண்டாக்க அவர்கள் அதிகம் பயன்படுத்தும் வாதம் – லீ போன்ற நல்லவர்கள் எல்லாம் கான்ஃபெடரசிக்காகச் சண்டையிட்டார்கள் என்பதே. இனவெறிக்கு இப்படியொரு விடுதலை வேட்கைச் சாயம் பூசியதன் விளைவுகள் இன்றுகூட அமெரிக்க சமுதாயத்தில் தெரிகின்றன. அமெரிக்காவின் தென் மாநிலங்களில் 1960-கள் வரை கறுப்பின ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டிருந்தது. இன்றுகூட ஆப்பிரிக்க அமெரிக்க அரசியல்வாதிகளால் தென் மாநிலத் தேர்தல்களில் வெற்றிபெற இயலாது. 2008-ல் பராக் ஒபாமாவே ஓரிரு தென்மாநிலங்களில் மட்டும் – அதுவும் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் – தான் ஜெயித்தார். இன்றும்கூட அடிமைமுறையின்கீழ் கறுப்பர்கள் செளகரியமாக வாழ்ந்தார்கள் என்று நம்புபவர்கள் அமெரிக்காவில் இருக்கிறார்கள். கான்ஃபெடரசி தோற்றபோதே இந்த நிலை என்றால், லீயின் முயற்சியால் அவர்கள் வென்றிருந்தால் இன்று அமெரிக்கா மற்றும் அதன் அண்டை நாடுகளின் நிலை எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.

No comments:

Post a Comment