Tuesday 8 October 2019

REGIMENT REVOLT OR REVOLUTION IN INDIA






இந்தியாவில் ராணுவ புரட்சி ஏற்படும் வாய்ப்பு உண்டா? 
லெஃப்டினெண்ட் ஜெனரல் எம்.எஸ் பன்னா 
(ஓய்வு) முன்னாள் ராணுவ அதிகாரி


ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே தலைநகர் ஹராரேவில் தனது வீட்டில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார். அங்கு ராணுவம் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது


இதற்கு முன் துருக்கி மற்றும் வெனிசுவேலாவில் ராணுவப் புரட்சிகள் நடைபெற்றுள்ளன.

பாகிஸ்தான் விடுதலை அடைந்த சில நாட்களிலேயே தொடங்கிய ராணுவப் புரட்சி அந்நாட்டில் பலமுறை தொடர்ந்துள்ளது. ஆனால் ஆஃப்ரிக்கா, லத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளைப் போன்றே இந்தியாவும் இதுவரை ராணுவப் புரட்சியை சந்தித்ததில்லை.

இந்தியாவின் ஜனநாயக அமைப்புகள் மிகவும் வலுவாக உள்ளதால், ராணுவம் ஆட்சியை கைப்பற்றுவது சாத்தியமல்ல.


இதற்கு முக்கிய காரணம் இந்திய ராணுவத்தை உருவாக்கிய ஆங்கிலேயர்கள், மேற்கத்திய நாடுகளில் இருப்பதைப் போன்றே இந்திய ராணுவத்தின் அடிப்படையை கட்டமைத்துள்ளனர்.

மேற்கத்திய ஜனநாயக நாடுகளில் ராணுவப் புரட்சி எதுவும் ஏற்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், இந்திய ராணுவத்தில் 1857ஆம் ஆண்டு ஏற்பட்ட கலகத்திற்கு பிறகு, இந்திய ராணுவம் புனரமைக்கப்பட்டது. இந்தியா முழுவதிலுமிருந்து ராணுவத்திற்கு ஆள் எடுக்கப்பட்டனர்.


ராணுவத்தின் படைப்பிரிவுகள் சாதி அடிப்படையில் உருவாக்கப்பட்டாலும், ஆங்கிலேய-இந்திய பாணியிலான பயிற்சியும், நியதிகளுமே பின்பற்றப்பட்டன.

கட்டுப்பாடான ராணுவம்

இந்திய ராணுவத்தின் கட்டுக்கோப்புக்கு முக்கிய காரணம் இதுவே. 1914ஆம் ஆண்டு முதல் உலகப் போர் வரை இந்திய ராணுவத்தில் வேறு எந்தவித கிளர்ச்சியும் ஏற்படாமல் கட்டுக்கோப்பாக நிர்வகிக்கப்பட்டது.

ஆனால், அந்த காலகட்டத்தில் நாட்டில் பல்வேறு ராஜியங்களும் தன்னாட்சி அதிகாரம் கொண்டிருந்த அரசுகளும் இருந்ததால், ஒற்றுமை குறைந்தது. ராணுவத்திலும் பிராந்திய மற்றும் சாதி அடிப்படையிலும் ரெஜிமெண்டுகள் இருந்தன.


முதல் உலகப்போரில் பங்கேற்ற இந்திய ராணுவத்தினர்
இரண்டாம் உலகப் போர் சமயத்தில் சுதந்திர இந்தியாவுக்கான ராணுவம் உருவாக்குவதற்கான முயற்சிகள் மீண்டும் மேற்கொள்ளப்பட்டன. அப்போது 12 முதல் 20 ஆயிரம் வீரர்கள் மட்டுமே இந்திய தேசிய ராணுவத்தில் (ஐ.என்.ஏ) சேர்ந்தனர்.

எதிரிகளின் பிடியில் இந்திய தேசிய ராணுவத்தின் 40 முதல் 50 ஆயிரம் இந்திய வீரர்கள் இருந்தனர். அந்த சமயத்திலும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை.

1946ஆம் ஆண்டு, பாம்பேயில் ராணுவ கிளர்ச்சி ஏற்பட்டது ஒரு விதிவிலக்கான சம்பவம் என்றாலும் அதுவும் கடற்படைக்கு எதிரான கலகமாகவே பார்க்கப்பட்டது. ஏனெனில் கிளர்ச்சியில் பங்கேற்ற பத்தாயிரம் பேரும் கடற்படையை சேர்ந்தவர்கள். அந்த சமயம் இந்திய ராணுவத்தின் மொத்த எண்ணிக்கை சுமார் 25 லட்சமாக இருந்தது.

அது இரண்டாம் உலகப்போர் நடந்த சமயம் என்பதும், இந்திய விடுதலைப்போர் உச்சத்தில் இருந்த சமயம் அது என்பதும் இந்த பாம்பே கிளர்ச்சியின் பின்னணியில் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டிய ஒன்று. ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்த ராணுவத்தில் பணிபுரிந்தவர்களுக்கும் சுதந்திர தாகம் ஏற்பட்டது இயற்கையானதே.



கடற்படையில் ஏற்பட்ட கிளர்ச்சியின் தாக்கம் பல இடங்களில் எதிரொலித்தபோதிலும், ஒட்டுமொத்தமாக இந்திய ராணுவம் கட்டுக்கோப்பாகவே இருந்தது.

சிக்கலான சந்தர்பங்கள்

1984ஆம் ஆண்டிலும் இதுபோன்ற ஒரு சிக்கலான சூழலை சந்திக்க நேர்ந்தது. பஞ்சாப் பொற்கோயிலில் எடுக்கப்பட்ட 'ப்ளூ ஸ்டார்' நடவடிக்கைக்கு எதிராக சீக்கிய படைப்பிரிவில் எதிர்ப்பு கிளம்பியது.

ஆனால் பிற படைப்பிரிவுகள் ஒற்றுமையாக இருந்ததால் அந்த எதிர்ப்பு, மேகமூட்டமாய் கலைந்துவிட்டது. அறுபதுகளில், ராணுவத் தளபதி சாம் மானெக்ஷாவிற்கும் அப்போதைய அரசாங்கத்திற்கும் இடையில் கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்பட்டாலும், அதுவும் பெரிதாக உருவெடுக்கவில்லை.

உண்மையில், இந்தியாவில் முதல் இடைக்கால அரசு உருவானபோது, அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு இந்திய ராணுவத்தை ஜனநாயக அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.

முதலில், அவர் 'தலைமை தளபதி' (கமாண்டர் இன் சீஃப்) என்ற பதவியை முடிவுக்கு கொண்டுவந்தார். ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் ஆங்கிலேயே அதிகாரிகள் இந்த பதவியில் இருந்தனர். பிறகு ஜெனரல் கரியப்பா இந்த பதவியில் நியமிக்கப்பட்டார்.

ராணுவம் நவீனமயமாக்கப்படும்போது, ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைகளின் முக்கியத்துவம் சமமாக இருக்கும் என்பதால் முப்படைகளுக்கும் தனித்தனி தளபதிகள் நியமிக்கப்பட்டனர்.

இவர்கள் மூவரும், தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சரின் கீழ் செயல்படுவார்கள்.

ஜனநாயக அரசு மட்டுமே உச்ச அதிகாரம் பெற்றது

அந்த சமயத்தில் டெல்லி தீன்மூர்த்தி பவனம்தான் முப்படைகளின் தளபதியின் இல்லமாக இருந்தது. ராணுவத்தின் முதல் காமண்டர் இன் சீஃப்பாக இருந்த கரியப்பாவும் தீன்மூர்த்தி பவனில் வசித்தார்.

அந்த பதவி நீக்கப்பட்டபிறகு, பிரதமர் ஜவஹர்லால் நேரு, தீன்மூர்த்தி பவனத்திற்கு தனது இல்லத்தை மாற்றிக்கொண்டார்.


நேருவை வரவேற்கும் ஜென்ரல் கரியப்பா
நாட்டின் ஜனநாயக அரசே மிகவும் உயர்ந்த சக்தியாக இருக்கும் என்ற செய்தியை இந்த நடவடிக்கைகள் தெள்ளத் தெளிவாகவும், உறுதியாகவும் பறைசாற்றின.

ஜெனரல் கரியப்பா அரசின் பொருளாதார கொள்கைகளை ஒருமுறை விமர்சித்தபோது, சிவில் விவகாரத்தில் தலையிடவேண்டாம் என்று அவருக்கு நேரு கடிதம் எழுதினார். மேலும் கரியப்பாவை நேரில் சந்தித்தபோதும் ராணுவ தளபதியின் எல்லைகளை அவரிடம் அறிவுறுத்தினார் பிரதமர் ஜவஹர்லால் நேரு.

உண்மையில், இந்தியாவில் ஜனநாயகத்தின் அஸ்திவாரங்களில் ராணுவமும் ஒரு அங்கமாக மாறிவிட்டது. பின்னர், தேர்தல் ஆணையம், ரிசர்வ் வங்கி போன்ற ஜனநாயக அமைப்புகள் ஜனநாயகத்தின் அஸ்திவாரத்தை பலப்படுத்தின.

இதன்பிறகு, பாகிஸ்தானில் நடப்பது போன்ற ராணுவ புரட்சி என்ற பேராபத்து இந்தியாவில் முடிவுக்கு வந்துவிட்டது என்றே கூறலாம். 1958இல் பாகிஸ்தானில் ராணுவ புரட்சி ஏற்பட்டது. அதே காலகட்டத்தில் ஆஃப்ரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளிலும் ராணுவ புரட்சிகள் ஏற்பட்டன.

இந்திய ஜனநாயகம் தனது சுயவலிமையில் நிலைபெற்றதால் ராணுவ புரட்சி என்ற ஆபத்து இந்தியாவை எப்போதுமே அண்டாது. அதில் இந்திய ராணுவத்தில் அரசியல் கலக்காமல் இருப்பது மற்றும் ஜென்ரல் கரியப்பாவின் இயல்பு மிக முக்கிய பங்காற்றியது என்றே கூறலாம்.


பிறிதொரு சமயம் ராணுவம் தொடர்பாக ஏற்பட்ட ஒரு சர்ச்சைக்கு காரணமானார் ஜெனரல் சாம் மானெக் ஷா. டெல்லியில் நடைபெற்ற ஒரு ஆர்ப்பாட்டத்தின்போது, விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க ஒரு படைப்பிரிவை பயன்படுத்தினார் அவர்.

இது தொடர்பாக எழுந்த விமர்சனங்களுக்கு உரிய பதிலளித்த அவர், இதில் அச்சப்பட ஏதுமில்லை என்றும், இதுவொரு ராணுவ புரட்சிக்கான முயற்சி அல்ல என்றும் தெளிவுபடுத்தினார்.

இந்திய ராணுவத்தில் ஏழு கட்டளையகங்கள் (commands) உள்ளன. ஒரே நேரத்தில் ஏழு கட்டளையகங்களுக்கும் ஒரு ஜெனரல் உத்தரவிடுவது நடைமுறையில் சாத்தியமற்றது.

காலம் மாறுகிறது, ஜென்ரல் வி.கே. சிங் ஓய்வு பெற்ற பின்னர் அரசியலுக்கு வருகிறார், தற்போதைய அரசில் அமைச்சராக பதவிவகிக்கும் அவர் முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்திற்கு சவால் விடுத்தார், அது தொடர்பான ஒரு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.



ராணுவ புரட்சி என்றால் என்ன?

டெல்லியை நோக்கி சில ராணுவத் துருப்புக்கள் வருவதாக ஆங்கில நாளேடு இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி முன்பு வெளியிட்டது, ஆனால், அதுவும் ராணுவ புரட்சி போன்ற நடவடிக்கை இல்லை.

அந்த நேரத்தில் சில குழப்பங்கள் எழுந்ததாக கூறப்பட்டாலும், ராணுவ துருப்புக்கள் உடனடியாக திரும்பிச் செல்ல உத்தரவிடப்பட்டது.ராணுவ புரட்சி எப்போது ஏற்படும்? நாட்டில் உறுதியற்ற தன்மை நிலவினால் ராணுவ புரட்சிக்கான வாய்ப்பு ஏற்படும். அரசியல் மோதல் உச்சத்தில் இருக்கும்போதும், ஜனநாயக அமைப்புகள் பலவீனமடைந்த நிலையிலும், நாட்டில் குழப்பமான சூழ்நிலை நிலவினாலும் ராணுவ புரட்சி ஏற்படலாம்.


இதுபோன்ற நிலைமை இந்தியாவில் எப்போதுமே ஏற்பட்டதில்லை. இந்திரா காந்தி நாட்டில் எமர்ஜென்சியை அமல்படுத்திய காலத்தில்கூட அரசியலில் இருந்து ராணுவம் விலகியே இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

முப்படைகளின் தளபதிகளும் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியுடன் எமர்ஜென்சி பற்றி விவாதித்திருக்க வேண்டும் என்ற விமர்சனங்களும் எழுந்தன.இருந்தபோதிலும் அதுபோன்ற இக்கட்டான சூழலிலும் இந்திய ராணுவம் அரசியலில் இருந்து விலகியே இருந்தது.ஏனென்றால், அடிப்படையில் ஒழுங்குமுறைக் கொள்கைகளால் ஒன்றிணைக்கப் பட்டிருக்கும் இந்திய ராணுவம், சிவில் நிர்வாகத்தில் தலையீடு செய்யாத அளவு கட்டமைக்கப்பட்டிருக்கிறது. எனவே இந்தியாவில் ராணுவ புரட்சி ஏற்படும் சாத்தியம் அசாத்தியமானது.

No comments:

Post a Comment