Friday 25 October 2019

PAGAL NILAVU AND MANI RATNAM





PAGAL NILAVU AND MANI RATNAM


மணிரத்னம் இயக்கிய துவக்க காலத் திரைப்படங்களுள் ஒன்று - பகல் நிலவு. 'நாயகன் திரைப்படத்திற்கு முன்னோடி. காட்ஃபாதரை மணி லேசாக சற்று முயன்று பாா்த்தார் என்று கூட சொல்லலாம்.

நான் கவனித்தவரை வில்லன் பாத்திரத்தை இயன்ற அளவில் இயல்பாக சித்தரிக்க முயன்ற முதல் திரைப்படம் என்று 'பகல் நிலவை'த்தான் சொல்லுவேன்.
அதுவரை விநோதமான உடையலங்காரத்தோடும் தலையலங்காரத்தோடும் 'கபாலி, மாயாண்டி' என்ற பெயர்களில் உள்ள கைகட்டிய அடியாட்களோடும், பின்னர் வரும் சண்டைக்காட்சியில் கலைந்து விழப் போகிற அட்டைப்பெட்டிகளும், டிரம்களும் அடுக்கி வைக்கப்பட்டிருக்கிற குடோன்களில், அல்லது அடர்த்தியான வண்ணங்களுடன் கூடிய அலங்கார மாளிகையில் 'டீல் ஓகே' என்றவுடன் எவனோ பயங்கரமாக சிரிக்க.. 'கச்சத் தீவில் கை வெச்சு பாரு' என்று முக்கல் முனகல் குரலில் பெரும்பாலும் ஜானகியுடன் இரவல் குரலுடன் ஜெயமாலினியோ, அனுராதாவோ சிக்கனமான ஜிகினா உடையில் ஆடிவர, அவர்களை விவகாரமான கோணங்களில் காமிரா கவர..

இப்படியாக அபத்தமாக, கருப்பு -வெள்ளையாக சித்தரிக்கப்பட்டுக் கொண்டிருந்த வில்லன் பாத்திரத்தை, அவன் இச்சமூகத்தில் நம்மிடையே கண்ணியமான தோற்றத்தில் வாழ்கிறவன்தான்தான் என்கிற பிம்பத்தை மணிரத்னம் உருவாக்கினார். என் நினைவு சரியாக இருக்குமென்றால் சத்யராஜ் பயபக்தியுடன் சாமி கும்பிடும் காட்சிதான் அவருடைய அறிமுகக் காட்சியே. வில்லன் ஆத்திகவாதியாக இருக்கக்கூடாதா? 
*
ஆனால் நான் குறிப்பிட வந்தது, பகல்நிலவு திரைப்படத்தின் ஒரு பாடலைப் பற்றி. மற்ற பாடல்கள் எல்லாம் போதுமான அளவு புகழ்பெற்றன என்றாலும் அதில் வரும் 'வாராயோ.. வான்மதி' என்கிற பாடலை இன்னமும் எவர் நினைவு வைத்திருக்கப் போகிறார்கள் என வியக்கிறேன். நீண்ட காலமாகவே இந்தப் பாடலை பாடியவர் எவர் என்பதை அறியாமல் இருந்தேன்.
சில ஆண்டுகளுக்கு முன்பு தற்செயலாக தேடிய போதுதான் இதைப் பாடியவர் 'ரமேஷ்' என்று அறிந்தேன். ஆனால் இதைத் தவிர இவரைப் பற்றி வேறெந்த தகவலும் இல்லை. இது தவிர வேறு பாடல் ஏதேனும் பாடியிருக்கிறாரா என்பதுவும். இதைப் போலவே இதில் வரும் பாடகியும். உஷா சீனிவாசன் என்பவரைப் பற்றியும் எந்த தகவலும் தெரியவில்லை.
ஒரு திறமையான பாடகருக்கேற்ற எந்த குரல் வளமும் ரமேஷூக்கு இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் அதற்காக முயற்சிப்பவர் குளியலறையில் தீவிரமாக பயிற்சி எடுப்பது போன்ற இயல்புத்தனம் இருக்கிறது. சாதாரணக் குரலாக இருந்தாலும் அதில் ஏதோவொரு வசீகரம் இருக்கிறது. அதனாலேயே இந்தப் பாடலை நான் அடிக்கடி கேட்பதுண்டு.
*
இந்தப் பாடல் என் நினைவில் நீங்காமல் தங்கியிருப்பதற்கு இன்னொரு பிரத்யேகக் காரணமும் உண்டு. +2 கல்வியின் போது பாட்டுப் போட்டியில் என் வகுப்பு மாணவன் ஒருவன் இந்தப் பாடலைப் பாடினான். ஏறத்தாழ அசல் குரலில் இருந்த அந்த உருக்கமும் குழைவும் அப்படியே அவனுடைய பாட்டிலும் எதிரொலித்தது. அதுவரை அவனிடம் அத்தனை பழக்கம் இல்லாமலிருந்தது. பாடல் நிகழ்ச்சிக்குப் பிறகு நானாக வலியச் சென்று அவனுடைய நண்பனானேன். பள்ளிப் படிப்பு முடித்து தொடர்பு அறுந்து சில ஆண்டுகள் கழித்த சமயங்களில் இவன் இசை நிகழ்ச்சிகளில் பாடும் பாடகனாயிருப்பானோ என்று நானாக நினைத்துக் கொள்வேன்.
ஆனால் இவனைச் சமீபமாக பார்ததது, சரவணபவன் ஹோட்டல் ஒன்றில் சூப்பர்வைசராக. சற்று வருத்தமாக இருந்ததது. அந்தப் பாடல் போட்டியை அவனுக்கு நினைவுப்படுத்தினேன். 'இன்னுமாடா அதையெல்லாம் ஞாபகம் வெச்சிருக்கே" என்றான்.
ஒரிஜினல் பாடலை பாடிய ரமேஷ்ஷை காலம் எங்கோ நிறுத்தியிருக்கிறதோ என்று உள்ளூற நெருடலாயிருக்கிறது.
சுரேஷ் கண்ணன்
Shared publicly

No comments:

Post a Comment