Tuesday, 15 October 2019

WHEN KAMARAJ IN YOUNG








காமராஜர் சிறுவனாக இருந்த போது, ..........
தெருவில் யானை போனால் போதும், அவருக்கு உற்சாகம் பிறந்து விடும். யானையின் பின், வெகு தூரம் போவார். காங்கிரஸ் இயக்கத்தில் அவருக்கு ஆர்வம் ஏற்பட்ட சமயம் அது... ஒருநாள், தன் நண்பர் தங்கப்பனுடன் சேர்ந்து பிரசாரம் கேட்டு விட்டு, அதிகாலை, ரயிலில் விருதுநகருக்கு வந்து, ஓட்டலில், காபி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது, அம்மன் கோவில் மைதானத்தில் ஒரே கூச்சல்; வெளியே வந்து பார்த்தனர். மைதானத்தில் இருந்தவர்களும், அங்கிருந்த கடைக்காரர்களும், 'கோவில் யானைக்கு மதம் பிடிச்சுருச்சு; ஓடுங்க... ஓடுங்க...' என்று அலறியபடி, தலைதெறிக்க ஓடினர்.
காமராஜரும், தங்கப்பனும் மைதானத்தை நோக்கி விரைந்தனர். அங்கே, மனித நடமாட்டம் இல்லை. இருவரும் யானையை நோக்கி, அடிமேல் அடி வைத்து முன்னேறியதைப் பார்த்த பாகன், அவர்களை அப்பால் ஓடிவிடும்படி எச்சரிக்கை செய்தார்.
உடனே, தங்கப்பனின் காதில் ஏதோ கிசுகிசுத்தார், காமராஜர். 'சரி...' என்று சொல்லி, அங்கிருந்து ஓடினார், தங்கப்பன்.
சுவர் ஓரமாக பதுங்கி நடந்தார், காமராஜர். இதற்கு இடையில், காமராஜர் எடுத்து வரச் சொன்ன பொருளை கொண்டு வந்து, அவர் கையில் கொடுத்தார், தங்கப்பன்.
அச்சமயம், யானையை அடக்க, மைதானத்திற்குள் பாய்ந்தார், பாகன்.
அதைப் பார்த்த காமராஜர், 'வேணாம்ண்ணே... அப்படியே இருங்க...' என்றபடி, தன் கையில் இருந்த, 'சத்திய சங்கிலி'யை உயர்த்தி பிடித்தார்.
மண்டபத்தில் யானையை கட்டியிருக்கும் போது, இந்த சத்திய சங்கிலி யானையின் முன் கிடக்கும். வெளியே சென்றால், அதை, தன் தும்பிக்கையில் எடுத்து கிளம்பும். யானை கவனம் இல்லாமல் இருந்தாலும், பாகன் இதில் கவனமாக இருப்பது வழக்கம்.
சங்கிலி பற்றிய நினைப்பு வராத வரை, சாதுவாக தான் இருக்கும், யானை. நினைப்பு வந்து விட்டால், உடனே, சங்கிலி அதன் தும்பிக்கைக்கு வர வேண்டும். இல்லாவிட்டால், அதற்கு கோபம் வந்துவிடும்.
யானையை பழக்கும் போதே, அதனிடம் இந்தச் சங்கிலியை கொடுத்துத் தான் பழக்குவர்.
அன்று, யானையை அதன் கட்டுத்தளத்திலிருந்து அவிழ்த்து, குளிக்க வைப்பதற்காக வெளியே கொண்டு வந்த போது, புல் குவியலுக்குள் சங்கிலி மறைந்து கிடந்தது. குளிக்கும் சந்தோஷத்தில் யானைக்கு சங்கிலி நினைப்பு வரவில்லை.
குளித்து, கரையேறியதும் யானைக்கு சங்கிலி நினைப்பு வந்து, தும்பிக்கையை தரையில் அடித்து, பிளிறி, அட்டகாசம் செய்தது. பாகன் இதை உணரவில்லை என்றதும், அது, மனம் போன போக்கில் ஓட ஆரம்பித்தது.
இளம் வயதிலிருந்தே யானையின் பின் சென்று வேடிக்கை பார்த்த காமராஜருக்கு, யானையின் தும்பிக்கையில் சங்கிலி இல்லாதிருப்பதை நொடியில் பார்த்தார். உடனே, தங்கப்பனை சங்கிலியை எடுத்து வரச் சொன்னார்.
தங்கப்பன் கொடுத்த சங்கிலியை வாங்கி, மைதானத்திற்குள் ஓடினார், காமராஜர். 20 அடிக்கு அப்பால் இருந்தபடியே, யானையின் பக்கமாக சங்கிலியை மெதுவாக வீசினார்.
தரையில் சங்கிலி விழுந்த சத்தம் கேட்டு, திரும்பியது, யானை. உடனே, சங்கிலியை தும்பிக்கையில் பற்றி எடுத்து, ஆவேசம் அடங்கி, மெதுவாக நடந்து, மண்டபத்தை அடைந்தது.


பிற்காலத்தில், விருதுநகர் அம்மன் கோவில் மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், இந்தக் கதையைக் குறிப்பிட்டு, 'யானைக்கு சத்தியக் கயிறு போன்ற சங்கிலியை எடுத்துக் கொடுத்து, அதன் மதத்தை அடக்கியவர், காமராஜர். அவர் காட்டும் வழியை பின்பற்ற, விருதுநகர் பொதுமக்கள் ஒருபோதும் தவற மாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு...' என்று கூறினார், சத்தியமூர்த்தி.
நடுத்தெரு நாராயணன்










No comments:

Post a Comment