Monday 14 October 2019

FIRST EDUCATION FROM IRULAR CASTE



FIRST EDUCATION  FROM 
IRULAR CASTE

இருளர் சமூகத்தின் முதல் ஒளி!



சாதனைகள் அவ்வளவு எளிதாக யாருக்கும் கைகூடுவதில்லை. அதுவும் ஆண்களைவிடப் பெண்களின் வெற்றி மிக அவசியம். `இந்த உலகம் ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கும்தான்’ என சமதர்மம் பேசினாலும், ஒரு பெண்ணின் வளர்ச்சி அவ்வளவு எளிதாக நடந்துவிடுவதில்லை. கல்வியில் தொடங்கி வேலைவரை ஆணின் முகம், பெண்களை மறைத்தே வைத்துவிடுகிறது. எல்லா வாய்ப்புகளை யும் கைக்கொள்ளும் பெண்களுக்கே இதுதான் நிதர்சனம். அப்படி இருக்கையில் எந்த வசதியும் இன்றி, வாய்ப்புகள் மறுக்கப்படும் இடத்திலிருந்து ஒரு பெண் சாளரம் திறந்து, காற்றின் குளிர்ச்சியை உணர்கிறாள் என்றால், அது ஒட்டுமொத்தச் சமூகத்துக்கான வெற்றி. அப்படிப்பட்ட ஒரு பெண் மாணவி ரோஜா. பழங்குடி இருளர் சமுதாயத்தின் முதல் முனைவர் பட்டம் பெறப்போகிறவர்.
திண்டிவனம் அருகே மரூர் இருளர் குடியிருப்பைச் சார்ந்த ரோஜாவின் பெற்றோர் இருவருமே செங்கல் சூளையில் கூலிவேலை செய்பவர்கள். பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு பிஹெச்.டி சேர்ந்தி ருக்கிறார் ரோஜா. டெக்னாலஜி யுகத்தில், சோஷியல் மீடியாவில் இளைஞர்கள் குடிகொண்டிருக்கும் இந்த வேளையில், இருளர் சமூகத்திலிருந்து ஒரு பெண் பள்ளிக் கல்வியை முடிப்பதெல்லாம் சாதாரண விஷயமல்ல. இன்றும் பதின்மூன்று வயதிலேயே இருளர் சமூகப் பெண்களுக்கு, கல்வி மறுக்கப்பட்டு, திருமணம் செய்துவைத்துவிடுகிறார்கள். இவற்றையெல்லாம் தகர்த்து முன் நகர்ந்திருக்கிறார் ரோஜா.
``சின்ன வயசுல வீட்ல ஒரு கல்யாணப் பத்திரிகையில் மாப்பிள்ளை பெயரின் பின்னாடி, `பிஹெச்.டி’-ன்னு போட்டிருந்ததைப் பார்த்தேன். அப்படின்னா என்னன்னுகூட எனக்குத் தெரியாது’’ என்று பேசத் தொடங்கும் இவரின் இந்த வார்த்தைகளே இருளர் சமூகப் பெண்களின் ஒற்றை சாட்சி. அவர் வாழ்க்கை யின் ஒவ்வொரு பக்கமும் நிச்சயம் நமக்கு இன்ஸ்பிரேஷன்தான்.``இப்போ பிஹெச்.டி-யிலும் தாவரங்களோட மருத்துவ குணங்கள் பத்திதான் ஆராய்ச்சி பண்ணப்போறேன்...''பள்ளிப்படிப்பே போராட்டம்தான்!
“அம்மா, அப்பா ரெண்டு பேருமே செங்கல்சூளையில் வேலை பார்க்கறாங்க. அதுவும் ஆறு மாசத்துக்கு வேற ஊர்ல தங்கி வேலை பார்க்கணும். அப்புறம் சில மாதங்கள் எங்களோட இருப்பாங்க. அதுவரைக்கும் நான் எங்க சொந்தக்காரங்க வீட்ல இருப்பேன். நான் பக்கத்து வீட்டுப் பிள்ளைங்க ஸ்கூலுக்குப் போறதைப் பார்த்துட்டு அவங்களோடவே நானும் போயிடுவேன். பள்ளியிலும் நான் ஆர்வமா இருக்குறதைப் பார்த்துச் சேர்த்துக்கிட்டாங்க. அப்படியே பத்தாவதுவரைக்கும் படிச்சிட்டேன். பத்தாம் வகுப்பில் 50 சதவிகிதத்துக்கும் குறைவான மதிப்பெண் எடுத்து பாஸ் ஆனேன். என் பள்ளிப் படிப்பை நிறுத்திட்டு, கல்யாணம் பண்ணி வெக்க என் பெற்றோர் நினைச்சாங்க. நான் படிக்க ணும்னு அடம்பிடிச்சேன். ஸ்கூல் படிப்பை முடிக்கவே இவ்வளவு போராட்டம்.
படிப்பை வெறுக்கவைத்த சாதிச் சான்றிதழ்!
ப்ளஸ் டூ முடிச்சிட்டு கல்லூரியில் சேர முயற்சி பண்ணும்போது சாதிச் சான்றிதழ் இல்லைன்னு பிரச்னை வந்துச்சு. சாதிச் சான்றிதழ் வாங்கப் போனப்போ, `உங்களைப் பார்த்தா, இருளர் சமூகம் மாதிரியே இல்லையே... எப்படி சான்றிதழ் கொடுக்க முடியும்?’னு கேட்டு அவமானப்படுத்தினாங்க. `இருளர் சமூகம்னா இப்படித்தான் இருக்கணும்னு ஏதாச்சும் இருக்கா... நான் கல்லூரியில் சேரப் போறேன்னு அதுக்கு ஏத்த மாதிரி என்னை மாத்திக்கிட்டேன். இதில் என்ன தப்பு?’ன்னு கேட்டேன். இன்னும் நிறைய அவமானப்படுத்திப் பேசினாங்க. தொடர்ந்து படிக்கிறதே கேள்விக்குறியாச்சு. அப்புறம் பேராசிரியர் கல்யாணி அய்யா உதவியோட சாதிச் சான்றிதழ் கிடைச்சுது.
விழுப்புரம் அரசுக் கல்லூரியில் பி.எஸ்ஸி தாவரவியல் படிச்சேன். அப்போ எனக்கு சுத்தமா ஆங்கிலம் வராது, தெரியாது. அதனால படிக்க ரொம்பக் கஷ்டப்பட்டேன். அரியர்ஸ் வேற வெச்சிட்டேன். அந்தச் சமயத்துல வீட்ல வேற பணக் கஷ்டம். அதனால வேலைக்குப் போகலாம்னு முடிவு பண்ணி லேப் டெக்னீஷியன் வேலையில் சேர்ந்தேன். வேலை பார்க்கும்போதும், `எனக்கு எப்படியாச்சும் மேல படிக்கணும். எம்.எஸ்ஸி படிக்கணும்’னு ஆசையா இருந்துச்சு. அப்புறம் அம்மாகிட்ட கேட்டேன். அவங்களும் சம்மதிச்சாங்க. பிறகு எம்.எஸ்ஸி சேர்ந்து, கல்லூரியிலேயே முதல் மாணவியா தேர்ச்சிபெற்றேன்.
சீக்கிரமே டாக்டர் பட்டம்!
சின்ன வயசிலிருந்தே பிஹெச்.டி பெரிய படிப்பு, நாமும் படிக்கணும்னு ஒரு கனவு இருந்துச்சு. எம்.எஸ்ஸி முடிச்சதும், அந்தக் கனவு மறுபடியும் துளிர்க்க ஆரம்பிச்சுது. கல்யாணி அய்யா, ராஜேஷ் சார் வழிகாட்டுதலோடு லயோலாவில், கடந்த ஜனவரி மாசம் பிஹெச்.டி சேர்ந்தேன். என் கல்லூரியிலும் நிறைய உதவி பண்ணினாங்க.
அப்பாவின் அறிவு
என் அப்பாவுக்கு மூலிகைகளைவெச்சு மருத்துவம் பார்க்கத் தெரியும். எங்க ஊர்ல இருக்கறவங்க அப்பாகிட்ட வந்து மருந்து வாங்கிட்டுப் போவாங்க. நம்மைச் சுத்தியிருக்கற செடி கொடிகளோட மருத்துவ குணங்களா அப்பா சொல்லிக் கேட்டிருக்கேன். அந்த ஆர்வம்தான் என்னைத் தாவரவியல் படிக்கவெச்சுது. அதுமட்டுமல்ல... நான் எங்க வீட்டு செடி, மரம், கொடிகூடல்லாம் பேசுவேன். சொன்னா நம்ப மாட்டீங்க, என் வீட்ல ஒரு மாமரம் ரொம்ப வருஷமா காய்க்காம இருந்துச்சு, அம்மா `அது ஆண் மரம். வெட்டிடலாம்’னு சொன்னாங்க. நான் வேணாம்னு சொல்லிட்டு தினமும் அந்த மரத்துக்குப் பக்கத்துல போய், `ப்ளீஸ்... ஒரே ஒரு காய் கொடு போதும்’னு கேட்பேன். நிறைய பேசுவேன். சில மாதங்கள்ல அது, பூப் பூத்துக் காய் கொடுக்க ஆரம்பிச்சுடுச்சு. மரங்களுக்கும் உயிர் இருக்கு. அதை ஆழமா நம்புறேன். இப்போ பிஹெச்.டி-யிலும் தாவரங்களோட மருத்துவ குணங்கள் பத்திதான் ஆராய்ச்சி பண்ணப் போறேன். குறிப்பா சர்க்கரைநோய்க்கு மூலிகையால் சிகிச்சை கொடுப்பது குறித்து, என் அப்பாவோட வழிகாட்டுதலின் பேரில்தான் ஆராய்ச்சிக்கான முன்னுரையே தயார் செஞ்சிருக்கேன். அவரோட அறிவு அவரோடு போகக் கூடாது.
எல்லாமே சீக்கிரம் மாறும்!
எங்க சமூகத்துல ஒரு பொண்ணு பிஹெச்.டிவரை படிக்கிறதெல்லாம் பெரிய விஷயம். என் தங்கைக்கே கல்யாணம் ஆகி, குழந்தை இருக்கு. என் உறவினர்கள் என்னைப் பத்தித் தப்பாப் பேசினாங்க. இப்போ புரிஞ்சிகிட்டு சப்போர்ட் பண்றாங்க. இப்பவும் அப்பா, அம்மா செங்கல்சூளையில கூலிகள்தான். அவங்களுக்காகக் கண்டிப்பா முனைவர் பட்டம் வாங்குவேன். இது என்னோட முடிஞ்சிடாது. என்னைப் பார்த்து, என் சமூகத்துலேயே `ரோஜா அக்கா மாதிரி படிங்க’ன்னு பெற்றோர்கள் சொல்ல ஆரம்பிச்சிருக்காங்க. `நீயெல்லாம் படிச்சு என்ன பண்ணப் போறே?’ன்னு என் காதுபடவே நிறைய பேர் பேசியிருக்காங்க. இனி அதெல்லாம் எங்களை நிறுத்தாது. இன்னும் நிறைய ரோஜாக்கள் வருவாங்க, வர வைப்பேன்’’ என்கிறார் கெத்தாக.
``ரோஜாவின் அகாடமிக் ரெக்கார்டு பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். ப்ளஸ் டூவில் ஏறக்குறைய 50 சதவிகிதம் பெற்றுத் தேர்ச்சிபெற்றவர் பி.எஸ்ஸி-யில் வகுப்பிலேயே மூன்றாம் இடம்பெற்றுத் தேர்ச்சி பெறுகிறார். அதன் பிறகு எம்.எஸ்ஸி படிக்கும்போது கல்லூரியிலேயே முதல் மாணவியாகத் தேர்ச்சி பெறுகிறார். இப்படியாக அவரின் அகாடமிக் ரெக்கார்டு கூடிக்கொண்டே போனது. அவரின் படிக்கும் ஆர்வமும் அதிகரித்தது. `பிஹெச்.டி படிக்க வேண்டும்’ என என்னிடம் கேட்டார். விழுப்புரம் கல்லூரியில் எனக்கு ஜூனியராக வேலை பார்த்தவரின் உதவியுடன் ரோஜாவுக்கு லயோலாவில் பிஹெச்.டி படிக்க முன்னுரிமை வழங்கப்பட்டது.
பொதுவாக, ஆய்வு மாணவர்களுக்கு லயோலாவில் விடுதி வழங்க மாட்டார்கள். அவரின் உதவியுடன் முதுகலை மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் விடுதி அறை ரோஜாவுக்குக் கிடைத்தது. `ரோஜா ஆராய்ச்சி மேற்கொள்ளப் போகிறார்’ என்று தெரிந்தவுடன் சிலர் தானாக முன்வந்து பண உதவி செய்தார்கள். குறிப்பாக எழுத்தாளர் அமரந்தாவின் உடன்பிறந்த சகோதரி பெரிய தொகையைக் கொடுத்து உதவினார். ராஜேஷின் நண்பர்கள் பலரும் இன்றுவரை உதவி செய்துகொண்டிருக்கிறார்கள். எனவே, இது தனி ஆளாகச் செய்ததில்லை. பலரின் உதவியுடன்தான் இது சாத்தியமானது.
இதற்கு முன்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இருளர் சமூகத்தைச் சார்ந்த சக்திவேல் என்னும் இளைஞர் பொருளாதாரத்தில் பிஹெச்.டி முடித்தார். அவருக்குப் பிறகு அந்தச் சமூகத்திலிருந்து யாரும் பிஹெச்.டி சேர்ந்ததாக எனக்குத் தெரியவில்லை. தற்போது ரோஜா பிஹெச்.டி மேற்கொள்கிறார்.
ரோஜாவுக்குப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகம். அப்பா, அம்மா செங்கல்சூளையில் வேலை செய்தாலும், தன் படிப்பை எந்தச் சூழலிலும் அவர் விட்டுக்கொடுக்க நினைத்ததேயில்லை. விழுப்புரம் கல்லூரியில் பொதுவாக சீட் கிடைப்பதே பெரிய விஷயம். அந்தக் கல்லூரியில் பி.எஸ்ஸி படித்து நல்ல மதிப்பெண்களில் ரோஜா தேர்ச்சிபெற்றதே பெரிய விஷயம்தான்.
என்னைப் பொறுத்தவரை கிராமப்புறங்களில் கஷ்டப்பட்டுப் படிக்கும் மாணவர்களையும், நகரங்களிலிருக்கும் மாணவர்களையும் ஒரே மாதிரி ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது. எம்.எஸ்ஸி-யில் கல்லூரியிலேயே முதல் மாணவியாக ரோஜா தேர்ச்சிபெற்றது எனக்குப் பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியது. எஸ்.டி மாணவர்கள் நன்றாகப் படித்தாலும், இட ஒதுக்கீட்டில் படித்து வந்துவிட்டதாகப் பலரும் சொல்கிறார்கள். அந்தப் பேச்சுகளுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் ரோஜா. ஆசிரியர், பேராசிரியர், மாணவர்கள் மத்தியில் தமிழ்வழிக் கல்வி பயிலும் மாணவர்கள் பற்றிய ஒருவித தவறான கண்ணோட்டம் உள்ளது. தமிழ்வழிப் பள்ளியில் படித்த ரோஜா, விழுப்புரம் ஆங்கிலவழிக் கல்லூரியில் நல்ல மதிப்பெண்ணுடன் தேர்ச்சிபெற்றிருக்கிறார். இனியாவது, `ஆங்கிலவழிக் கல்விதான் சிறந்தது’ என்னும் தவறான கண்ணோட்டம் மாற வேண்டும்.’’
ரோஜா பிஹெச்.டி படிப்பதற்கு முதலில் உதவிக்கரம் நீட்டியவர் ராஜேஷ். பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்க ஆலோசகர். இப்போதும் பல உதவிகளை செய்துவருபவர். அவர் சொல்கிறார்... ``
இரண்டு வருடங்களுக்கு முன்னர் இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த சிலர் அமெரிக்காவுக்குப் பாம்பு பிடிக்கச் சென்றனர். அங்கிருப்பவர்கள் இவர்களின் பாம்பு பிடிக்கும் திறமையைப் பார்த்து வியந்துவிட்டனராம். இதுபற்றி நிறைய செய்திகளும் வெளியாகின.
என் ஆசை என்னவென்றால், இருளர்கள் பாம்பு பிடிக்கச் சென்ற அதே அமெரிக்காவுக்கு ரோஜா ஆராய்ச்சியாளராகச் செல்ல வேண்டும்.’’
படங்கள்: ரித்தி மேகவதி

No comments:

Post a Comment