Thursday 31 October 2019

MANOBALA,THE COMEDIAN OF TAMIL/TELUGU CINEMA




MANOBALA,THE COMEDIAN OF 
TAMIL/TELUGU CINEMA

“சாந்தி தியேட்டரும் சத்தியமூர்த்தி பவனும்!”

சினிமா

``என் உண்மையான பெயர் பாலசந்தர். இயக்குநர் கே.பாலசந்தரின் ஊரான நன்னிலம் அருகில் இருக்கும் மருங்கூர்தான் என்னுடைய சொந்த ஊர். ஃப்ரீலான்ஸர் பத்திரிகையாளராக ‘ஃபிலிமாலயா’ பத்திரிகையில் எழுதும்போதுதான் பாலசந்தர் என்ற பெயரை ‘மனோபாலா’ என மாற்றிக்கொண்டேன்.

கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக விகடன் தீபாவளி மலரைத் தவறாமல் வாசித்து வருபவன், இன்று அதே தீபாவளி மலருக்குப் பேட்டி அளிப்பதை, எனக்குக் கிடைத்த கெளரவமாக நினைக்கிறேன்!''-மனோபாலாவின் வார்த்தைகளில் அவ்வளவு சந்தோஷம். `ஆகாய கங்கை' முதல் `நைனா' வரை நாற்பதுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர், 900-க்கும் அதிகமான படங்களில் நடித்திருப்பவர். பத்திரிகையாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் எனப் பன்முகம் கொண்ட மனோபாலாவிடம் பேசியதிலிருந்து...


“என் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் சினிமாவில் இல்லை. ஆனால், எனக்குச் சின்ன வயதில் இருந்தே சினிமாமீது காதல். ‘சினிமாவில் சேரப்போகிறேன்’ என்றதும், வீட்டில் கடுமையான எதிர்ப்பு. அப்போது நான் பெங்களூரில் இருந்த அக்கா வீட்டில் தங்கியிருந்தேன். அங்கே குடும்பத்தினர் சேர்த்துவைத்த உண்டியல் காசுதான் அப்போது என் கண்களுக்குத் தெரிந்தது. உண்டியலை உடைத்ததில் 300 ரூபாய் தேறியது. எடுத்துக்கொண்டு ரயில் ஏறிவிட்டேன். சென்னை எனக்குப் புதுசு. சாந்தி தியேட்டர் வாசலில் உட்கார்ந்திருந்தேன். அப்போது சிவாஜி ரசிகர் மன்றத் தலைவர் ராஜசேகர்தான் என்னைப் பற்றி விசாரித்துத் தெரிந்துகொண்டார். `என்கூட வா. நான் ஓர் இடத்துல உன்னைத் தங்கவைக்கிறேன்' என்று சொல்லி சத்யமூர்த்தி பவனுக்குக் கூட்டிச் சென்று படுக்கவைத்தார். அருகில் இருந்த மிட்லேண்ட் தியேட்டரில் `அடிமைப்பெண்’ படம் ஓடிக்கொண்டிருந்தது. அதை நைட் ஷோ பார்த்துவிட்டு வெளியே வந்தபோது, கையில் காசு குறைவாக இருந்தது.

அடுத்தநாள் காலையில் சென்னையில் இருந்த அக்கா வீடு நினைவுக்கு வர... எப்படியோ அடித்துப் பிடித்து அட்ரஸ் கண்டுபிடித்தேன். அங்கே போனதும், `எப்படிடா தம்பி தனியா இங்க வந்த... வீட்டுக்குச் சொல்லலையா’ என்று அக்கா கேட்டது. `பசிக்குதுக்கா, முதல்ல சோத்தப் போடு' என்று சொல்லிச் சாப்பிட்டு முடித்த பிறகு எல்லாக் கதையையும் சொன்னேன். அதேநேரம், பெங்களூரில் என்னைத் தேட ஆரம்பித்திருந்தார்கள். நான் சென்னைக்கு வந்திருந்தது தெரிந்ததும், இங்கே வந்து தேடத் தொடங்கியிருந்தனர்.

அந்தச் சமயத்தில் என்னைப் போன்ற உருவ அமைப்புகொண்ட ஒருவர் விபத்தில் இறந்திருந்தார். அவர்தான் நான் என நினைத்துக்கொண்டு என் குடும்பத்தார் கத்திக் கதறியிருக்கின்றனர். பிறகு, அக்கா வீட்டில்தான் நான் இருக்கிறேன் என்பதைத் தெரிந்துகொண்டு அங்கே
கிளம்பிவந்தார்கள். என் சென்னைப் பயணமும் சினிமாப் பயணமும் இப்படித்தான் தொடங்கியது. பிறகு, சினிமா சார்ந்த நபர்கள் ஒவ்வொருவராகத் தேடிச் சென்றேன். அப்படித்தான் பலரின் அறிமுகம் கிடைத்தது. அப்படி நான் முதலில் சந்தித்த நபர், சிவகுமார் அண்ணன். அவரைப் பார்த்து ஆலோசனை கேட்டுத்தான் ஓவியம் படிக்க `காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸ்'ல் இன்டர்வியூவில் கலந்துகொண்டேன். அடிப்படையில் இருவருமே ஓவியர்கள் என்பதால் என்னை அறியாமல் அவருடன் நெருங்கிவிட்டேன். பிறகு, எப்படியோ நடிகனாகிவிட்டேன். ஆனால், டைரக்‌ஷன் செய்வதற்குள்தான் போதும் போதும் என்றாகிவிட்டது...” என்று சிரிக்கும் மனோபாலா ‘நடிகன்’ அனுபவத்தைச் சொல்கிறார்.

``நடிகனாக `புதிய வார்ப்புகள்’ என் முதல் படம். ஆனால், என்னை முழுநேர நடிகனாக்கிய பெருமை கே.எஸ்.ரவிக்குமாரைத்தான் சேரும். அவர்தான் `நட்புக்காக' படத்தில் நடிக்க வாய்ப்பு தந்தார். ‘இவர் வந்தால், நடந்தால், பேசினால்... என அனைத்தும் நகைச்சுவையாக இருக்கிறது’ என்று கண்டறிந்து நடிகன் வாய்ப்பை பிரகாசப்படுத்தினார். அப்படி ஆரம்பித்து இதுவரை 900 படங்களில் நடித்து முடித்துள்ளேன். இப்போது நேரடி தெலுங்குப் படங்களிலும் நடித்துக்கொண்டிருக்கிறேன். தெலுங்கில் ‘ரமணா ரெட்டி’ என்ற ஒருவர் இருந்தார். கிட்டத்தட்ட அவரைப் போன்றே நான் இருப்பதால், அங்கேயும் என்னை எளிதாக ஏற்றுக்கொண்டார்கள் என நினைக்கிறேன். அப்பப்பா... ஒவ்வொரு படத்திலும் எத்தனை அனுபவங்கள்!” என்று பழைய விஷயங்களை நினைவுகூர்ந்தவர், தொடர்ந்து நகைச்சுவை நடிகர்களைப் பற்றிப் பேசினார்.


``கவுண்டமணி, செந்தில், வடிவேலு... இன்று இவர்களைத் தாண்டி சந்தானம், சூரி, ரோபோ ஷங்கர், யோகி பாபு... என நகைச்சுவை நடிகர்களின் கொடி உயரப் பறக்கிறது. அந்த வகையில் மகிழ்ச்சி. அதேசமயம், வடிவேலு தொடர்ந்து நடிப்பதில்லை என்பதில் எனக்கு மிகப் பெரிய வருத்தம் உண்டு. வடிவேலு என்பவர் மிகப் பெரிய கலைஞன். அது நான் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. இந்த மண்ணுக்கும் மக்களுக்குமான கலைஞன். வடிவேலு என்கிற கலைஞன் உருவாகாமல் போயிருந்தால், நம் கவலைகளுக்கெல்லாம் மருந்திட யார் இருந்திருப்பார்கள்? அப்படிப்பட்ட கலைஞன் இன்று தொடர்ந்து படம் செய்யாமல் இருப்பது என்னைப் போன்று உடன் நடிப்பவர்களுக்கு மட்டுமல்ல, ரசிகர்களுக்கும் வேதனையாக இருக்கிறது. வடிவேலு தன் மனத்தடைகளை எல்லாம் உடைத்தெறிந்துவிட்டுத் திரையில் தொடர்ந்து தோன்ற வேண்டும் என்பதே என் ஆசை.

அதேபோல்தான் சந்தானம். `ஹீரோ மட்டும்தான் என்று ஒதுங்காமல் காமெடியில் மட்டுமே அவர் கவனம் செலுத்தியிருந்தால், இன்று அவர் எங்கோ போயிருப்பார். இன்றைய சூழலில் மோஸ்ட் வான்டட் நடிகர் என்றால், அது நம் யோகி பாபுதான். ஆனால், யார் வந்தாலும் போனாலும் எனக்கான இடம் எப்போதும் இருக்கிறது என்பதில் எனக்கு சந்தோஷம். என் ஒல்லி உருவம், ஸில்க்கி ஹேர்... எல்லா நகைச்சுவைக் கதாபாத்திரங்களுக்கும் பொருந்திப்போகிறது என நினைக்கிறேன். அது ஒரு வரம். இந்த ஹேர் ஸ்டைலுக்கெல்லாம் தனி ஷாட் வைக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்” என்றவரிடம், டைரக்‌ஷன் அனுபவம் பற்றிக் கேட்டோம்.

``நான் டைரக்‌ஷனுக்கு வருவதற்கு முன்னால் கமல்ஹாசன்தான் என்னை பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகக் கொண்டுபோய்ச் சேர்த்தார். அப்படித்தான் அவரிடம் உதவி இயக்குநராக 16 படங்களில் வேலை பார்த்தேன். அங்கே வேலை பார்த்த பிறகுதான் இயக்குநர் ஆனேன். நான் இயக்கிய `ஊர்க்காவலன்' படம் என் சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத படம். ரஜினி, ராதிகா இருவரும் போட்டி போட்டுக்கொண்டு நடித்திருப்பார்கள். அந்தப் படப் பாடல்களுக்கும் மிகப் பெரிய வரவேற்பு. இப்படி ஒவ்வொரு பட ஷூட்டிங்கின்போதும் ஒவ்வோர் அனுபவம். இதோ இப்போது தயாரிப்பாளராக `சதுரங்கவேட்டை-2' படத்தின் ரிலீஸுக்கான வேலைகளைச் செய்துகொண்டிருக்கிறேன்.

சினிமாவை இன்டோரில் இருந்து வெளியே கொண்டுவந்த பாரதிராஜா படங்களைப் பார்த்து வியந்தோம். பாலசந்தரின் வித்தியாசமான படங்களைக் கொண்டாடினோம், தொழில்நுட்பத்தைத் தன் கதைக்குள் கூட்டிவந்த மணிரத்னத்தைப் பாராட்டுகிறோம். இந்திப் படப் பாடல்கள் ஒலித்துக்கொண்டிருந்த தியேட்டர்களில் கிராமிய இசையை ஒலிக்கவிட்ட நம் இளையராஜாவை வாழ்நாளெல்லாம் வாழ்த்துகிறோம். அதேசமயம், ரஹ்மான் என்ற புதுப்புயலைக் கண்டறிந்தோம். இந்தப் பரபர உலகில் இவர்களைப்போல் அரிதான கலைஞர்களே காலத்தைக் கடந்தும் இங்கு தங்குகிறார்கள். அப்படி ஓர் இயக்குநர் தனக்கான தடத்தைப் பதிக்க வேண்டியது மிகமிக முக்கியம். மலரும் நினைவுகளுக்காக எதையாவது செய்துவைத்துவிட்டுப் போகவேண்டும். இவர்களுடன் ஒப்பிடுகையில், நான் குறைவாகப் பங்களித்திருந்தாலும், பங்களித்திருக்கிறேன் என்ற வகையில் சந்தோஷம்” என்றார்.

``பேய்களுக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு?'' என்று கேட்டோம். ``தமிழ்நாட்டுக்குப் பேயைத் திறந்துவிட்டதே நான்தான் என்பேன். 1985-ம் ஆண்டு `பிள்ளை நிலா' படம்தான் பக்கா பேய்ப் படம். ஒரே இரவில் அந்தக் கதையை எழுதினேன். இதுவரை 70-க்கும் மேற்பட்ட பேய்ப் படங்களில் நடித்திருக்கிறேன். இப்போது தமிழ், தெலுங்கில் தலா ஒரு பேய் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறேன். ‘சீரியலில் நடித்தால் சினிமா வாய்ப்பு கிடைக்குமா?’ என்று சிலர் கேட்கிறார்கள். நாசர் இந்தியில வெப் சீரிஸ் ஒன்றில் நடித்துக் கொண்டிருக்கிறார். மனீஷா கொய்ராலா, பிரகாஷ்ராஜ், ராதிகா ஆப்தே எனப் பலரும் வெப் சீரிஸ் செய்கிறார்கள். மீடியம் எதுவாகவும் இருக்கலாம். நடிப்பு நடிப்புதானே?! ‘மகா நடிகன்' படத்தில் சத்யராஜ் சாரைப் பார்த்துச் சொன்னதுதான், `என்னைக்கிருந்தாலும் டி.வி சீரியலுக்கு நீங்க வந்தாகணும். பஸ் நிற்குதானு பாருங்க. நின்னா உடனே ஏறிடுங்க. விட்டுட்டீங்கனா, வெறுமனே பஸ் ஸ்டாண்டுல உட்கார்ந்திருக்க வேண்டியதுதான். அடுத்த பஸ் வரவே வராது!" என்று சொல்லிச் சிரித்தபடி நமக்கு விடை கொடுத்தார்.

- வே.கிருஷ்ணவேணி,

No comments:

Post a Comment