Thursday 10 October 2019








ஒரு சினிமாப்பத்திரிக்கையின் ஆசிரியர் சௌகார் ஜானகியைப் பார்க்க அவருடைய பங்களாவுக்கு போயிருக்கிறார். நடிகை மாடியில் நின்றவாறு கேட் முன்னால் நின்ற ஒரு ஆளிடம் பேசுவது தெரிந்திருக்கிறது. திட்டிக்கொண்டிருக்கிறார் என்பது சில நொடியில் புரிந்தது.
“ Idiot, I don’t have any sympathy for you. You are a hypocrite.”
கீழே இருக்கிற ஆள் பிச்சையெடுக்கிற பாணியில் இறைஞ்சுகிறார்.

சௌகார் “ Scoundrel, Get away, Don’t get on my nerves.. I don’t want to see your face again. I wont give you a single paisa hereafter. என் முகத்தில இனி முழிக்காதே. ஓடிடு”
சகட்டுமேனிக்கு கோபத்தோடு திட்டும் சௌகார் வீட்டை விட்டு மெதுவாக அகன்று விடுகிறார் அந்த பரிதாபத்தோற்றம் கொண்ட நபர்.
சினிமா பத்திரிக்கை ஆசிரியர் மாடிக்கு போனவுடன் கேட்கிறார் “ அந்த ஆள் யாரம்மா”
சௌகார் பதில் “ He is my husband!”
.........

ஜெமினி கணேசன் தன்னுடன் ஜோடியாய் நடித்தவர்கள் பற்றி ஒரு பேட்டியில் சுவாரசியமாக சொல்லியிருந்தார்.
சௌகார் ஜானகி பற்றி: ’எனக்கும் சௌகார் ஜானகிக்கும் ஒரு ஒற்றுமை. இருவர் வாழ்விலும் ரகசியங்கள் என்பதே கிடையாது.’
ஜெமினி ஆண். ஆனால் மற்ற நடிகைகள் போல் இல்லாமல் சௌகார் ஜானகி வெளிப்படையாக இருந்தவர் என்பது அந்தக் காலத்தில் மிகவும் அபூர்வமான விஷயமல்லவா?

பொம்மை என்ற சினிமாப்பத்திரிக்கையில் இவர் சுய சரிதை தொடராக வெளி வந்திருக்கிறது.



1949ல் ஜானகி தன் மூன்று மாத கைக்குழந்தையை தூக்கிக்கொண்டு வந்து ’சௌகார்’ தெலுங்கு படத்தில் நடிக்க வர நேர்ந்ததும் அபூர்வமான நிகழ்வு தான்.



இந்தியத்திரையில் 67 வருடங்கள் தாண்டி தொடர்ந்து நடித்தவர் சௌகார் ஜானகி.
image: https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEge3AFb5ZRpTQKsgWHfnogI6apAc97kBuIV_McXXV-FQ8qViNYZcAuzROueJHU4KxWofHe5n33GfjeuuAtID4-xAA_Wd8BYWxDlQ7IHIRaj760a3JsZqA9YPhAhy9UDsB0VEz0nFFKoF2fd/s320/SOWCAR+2.jpg



சென்ற வருடம் கூட ஒரு தெலுங்கு படத்தில் நடித்திருக்கிறார்.
மூன்று வருடம் முன் ஒரு தமிழ் படத்தில்
(வானவராயன் வல்லவராயன்) நடித்திருக்கிறார். அதற்குப்பின் நான்கு தெலுங்குப் படங்கள்.


இப்படி ஒரு 65 வருடங்கள் நடித்தவர் இந்தி நடிகர் தேவ் ஆனந்த் மட்டும் தானாம். அவர் ஆண். சௌகார் ஜானகியால் இப்படியும் அவரை மிஞ்சி பெரும் சாதனை செய்ய முடிகிறது. இனி இந்த சாதனை செய்ய வாய்ப்புள்ளவர் கமல் ஹாசன். ஆனால் கமல் ஹாசன் குழந்தை நட்சத்திரமாக வந்தவர்.



தமிழ் படங்களில் சுசிலா பாடிய பாடல்களில் மாஸ்டர் பீஸ் என்றால் பாக்யலக்‌ஷ்மி(1961) படத்தில் செளகார் ஜானகிக்காக பாடிய “ மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி!” தான்.

பானுமதிக்கு தங்கையாக ஏவிஎம்மின் “ அன்னை”

சிவாஜி கணேசனுடன் பாலும் பழமும், பார்த்தால் பசி தீரும், பார் மகளே பார், புதிய பறவை, பச்சை விளக்கு,மோட்டார் சுந்தரம் பிள்ளை, உயர்ந்த மனிதன்
உயர்ந்த மனிதனில் சௌகார் ஜானகி - A very possessive wife. பணக்கார சீமாட்டி.
இப்போது ஒரு ஓடோனில் விளம்பரம் ஒன்று டி.வியில் காட்டப்படுகிறது.
“ அவங்க பாத் ரூம் பாத்தேன். நோ ஓடோனில்! ஹும்”
அந்தப்பெண் ’உயர்ந்த மனிதன்’ பட சௌகார் ஜானகி பாணியில் அப்படியே நடித்திருக்கிறார்!


புதிய பறவை “ பார்த்த ஞாபகம் இல்லையோ?” அவருடைய பேட்டி டி.வி.யில் எப்போது காட்டப்பட்டாலும் முதலில் இந்தப்பாடல் தான் காட்டுவார்கள்! அவருக்கு மிகவும் பெயர் வாங்கித்தந்த படம்.

எம்.ஜி.ஆருடன் பணம் படைத்தவன், பெற்றால் தான் பிள்ளையா, ஒளி விளக்கு
ஒளி விளக்கில் “ இறைவா! உன் மாளிகையில் எத்தனையோ ஒளி விளக்கு”

எஸ்.எஸ்.ஆருடன் குமுதம்

“ மியா மியா பூனக்குட்டி”


ஜெமினி கணேசனுடன் பாலச்சந்தர் இயக்கத்தில் நடித்த இரு கோடுகள், காவியத்தலைவி இரண்டும் சிறந்த படங்கள்.

image: https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1X4H4kcIxCJrym90oFPAslH88RMo7l3VgMRTQu-2MM7UFsgMl2GJYSVT2i4iQmpKXK8UIkUt64NRkm-TCnxKukaX-AXjE78Xk601nkCtv-EdM_2Xae-8W_l3IThSsM3A3N5y0P0POuEPE/s320/sowkar.jpg





கே.பாலச்சந்தரின் ’நீர்க்குமிழி’, ’நாணல்’ படங்களின் முக்கிய நடிகை.

சீரியஸ் நடிகை, பிழியப்பிழிய அழுது நடிப்பவர் என்ற இமேஜ் பாலச்சந்தரின் “ எதிர் நீச்சல்” படத்தில் உடைந்தே போனது. மனோரமாவுக்கு ஈடாக காமெடி தூள் கிளப்பினார்.
”அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா?”

காவியத்தலைவி, ரங்கராட்டினம் இரண்டும் சௌகாரின் சொந்தப்படங்கள். இரண்டிலும் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.

அதிக உயரமில்லாத நடிகையால் மிடுக்கு, கம்பீரம் காட்டி நடிக்கமுடியுமா? ”இரு கோடுகள்” படத்தில் கலெக்டர்.

”புன்னகை மன்னன் பூவிழிக்கண்ணன் இருவருக்காக” என்று திருத்திப் பாடி அசத்தினார்.

ஏவிஎம் ராஜனுடன் “ துணைவன்”

ரவிச்சந்திரனுடன் கூட ஜோடியாக நடித்தார் ஜானகி.
ஜெய் சங்கருடன் தான் ஜோடியாக நடித்ததில்லை.
முத்துராமனுடனும் கூட சௌகார் ஜோடியாக நடித்ததாகத் தெரியவில்லை.

அன்று நடிகைகளில் ஆங்கிலம் மிக அழகாக பேசும் திறம் பெற்றவர் சௌகார் ஜானகி.

சுய கௌரவம் மிகுதி. ’ஒளி விளக்கு’ படத்தில் டைட்டில் விஷயத்தில் தான் சீனியர் என்பதால் தன்னுடைய பெயர் தான் ஜெயலலிதா பெயருக்கு முன்னால் போடப்படவேண்டும் என பிரச்னை கிளப்பியவர்.
கமலின் ”ஹே ராம்” படத்தில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் போல தன்னை காட்டிய போது கொதித்துப்போனார்.
கறாரானவர்.
ராமண்ணாவின் ’குலக்கொழுந்து’ ஷூட்டிங் போது ஒரு வெளிப்புற படப்பிடிப்பு சம்பந்தமாக தன்னை வாஹினியில் சந்திக்க வந்த ஒரு தயாரிப்பாளரிடம் ஆணித்தரமாக சொன்னதை நான் கேட்டிருக்கிறேன்:” You cannot take me for granted. No Hogenekkal business. இங்கே பக்கத்தில எங்காயாவது ஷூட்டிங் வச்சிக்கங்க. I will never come to Hogenekkal. “

No comments:

Post a Comment