Saturday, 19 October 2019

ADITYA CHOLAN 871-907 TOMB NEAR KALAHASTHI







ADITYA CHOLAN  871-907 
TOMB NEAR KALAHASTHI

ஆதித்த சோழன் பள்ளிப்படை க்கான பட முடிவு


ஒவ்வொரு கல்லிலும் வரிசை எண்ணைக் குறிப்பிட்டு உபானம் (அதிஷ்டானம்) முதல் பிரஸ்தாரம் (entablature) வரை அடித்தளத்தை வலிவாக்கி  விமானச் சுவர்களின் கருங்கற்களை பிரித்து அடுக்கிக் கட்டுமானம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. குமுதப்படையில் நான்கு புறமும் காணப்பட்ட அரிய கல்வெட்டுகளின்மேல் சிமென்ட் காரை அப்பியிருந்தது. அருகில் அமைந்துள்ள ஸ்ரீ காமாட்சி அம்பாள் சன்னதி, பிற்காலத்தில் இக்கோவிலுடன் இணைக்கப்பட்டிருக்கலாம். அம்பாள் சன்னதியில் தினசரி பூசைகள் இடற்பாடின்றி நடந்து வந்தன.

பொக்கிசம்பாளம்

ஸ்ரீ காளஹஸ்தி நகருக்கு அருகே 15.6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பொக்கிசம்பாளம். இவ்வூரிலிருந்து ஸ்ரீ காளஹஸ்தி நகருக்குப் பேரூந்து மற்றும் ஷேர் ஆட்டோக்கள் சென்று வருகின்றன. இவ்வூர் இராயசீமா பகுதியில் அமைந்துள்ளது. இவ்வூரின் அமைவிடம் 13° 42′ 16.9956” N அட்சரேகை 79° 39′ 23.4932” E தீர்க்கரேகை ஆகும். கடல் மட்டத்திலிருந்து இதன் உயரம் 68 மீ. ஆகும். இவ்வூரின் மக்கள் தொகை 837 (ஆண்கள் 613 பெண்கள் 224) ஆகும்.

ஸ்ரீ காமாட்சி சமேத கோதண்டராமேஸ்வர சுவாமி கோவில்

கிழக்குப் பார்த்தவாறு அமைந்த ஸ்ரீ காமாட்சி சமேத கோதண்டராமேஸ்வர சுவாமி கோவில் வளாகம் பொக்கசம்பாளம் ஊரின் நடுவே அமைந்துள்ளது. கோவிலைச் சுற்றிக் குடியிருப்புகள் அமைந்துள்ளன. இக்கோவிலில் எந்தவிதமான சிக்கலான வடிவமைப்புகள் எதுவும் இல்லை. இக்கோவில் சோழ வழித்தோன்றல்களால் விரிவாக்கப்படவுமில்லை. கட்டடக்கலைக் கூறுகள் சோழர்களின் கலைப்பாணியைப் பிரதிபலிக்கின்றன. விசாலமான இக்கோவில் வளாகம் செவ்வக வடிவச் சுற்று மதிற்சுவர் சூழ அகன்ற பிரகாரங்களுடன் காணப்படுகிறது. மூன்று நிலைகளுடன் கூடிய இராஜகோபுரம், பலிபீடம், நந்தி மண்டபம், கொடிமரம் எல்லாம் ஒரே நேர் கோட்டில் கச்சிதமாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.  எளிய கவர்ச்சிமிக்க சுதை உருவங்கள் கோபுரத்தை அலங்கரிக்கின்றன. இங்கு சோழர்பாணி துவாரபாலர்களைக் காண இயலவில்லை. நுணுக்கமாக செதுக்கப்பட்ட நந்தி சிவலிங்கத்தை நோக்கியவாறு அமர்த்தி வைக்கப்பட்டுள்ளது.

மூலவரின் விமானம் அளவில் சிறியதாகவும் சதுரவடிவிலும் அமைந்து கருவறையையும், அர்த்தமண்டபத்தையும் பெற்றுள்ளது. உபானம் முதல் பிரஸ்தாரம் வரையிலான உறுப்புகள் கருங்கல்லால் கட்டப்பட்டுள்ளன. சிகரம் உள்ளிட்ட மேற்கட்டுமானம்  செங்கல் மற்றும் சுண்ணாம்புக் காரையில் கட்டப்பட்டு மீண்டும் கருங்கல் சிகரமாக மாற்றப்பட்டுள்ளது. அன்று நான் கண்ட விமானத்தில் சிகரம் இல்லை. சீரமைப்பு பணி நடைபெற்றதால் சிகரம் புதிதாக எழுப்பப்படவிருந்தது. இரண்டு மீட்டர் அளவுள்ள சதுரக் கருவறையில் சிவலிங்கம் சுமார் 4 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கருவறையை ஒட்டி அர்த்தமண்டபம் அமைந்துள்ளது.

விமானத்தின் அடித்தளம் எளிய பாதபந்த அதிஷ்டானம் பெற்றுள்ளது. உபபீடம், உபானம், ஜகதி, திரிபட்டைக் குமுதம், கோட்டங்களின் கீழே சிலம்புக் குமுதம் ஆகிய கூறுகளைப் பெற்றுள்ளது.  சிலம்புக் குமுதத்திற்கு மேல் உள்ள வரியில் புடைப்புடன் சிங்கமுக உருவ வரிசை காணப்படுகிறது.

வெளிச்சுவர் மூன்று பத்திகளாகப் பிரிக்கப்பட்டு அரைத்தூண்களால் வரம்பு கட்டப்பட்டுள்ளது. மூலைகளில் கர்ண பத்தி என்னும் கர்ண பத்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நடுவில் சாலபத்தி என்னும் சாலபத்திரங்களில் ஒன்று அல்லது அதற்கு  மேற்பட்ட சாலகோட்டங்கள் சிறிது பிதுக்கத்துடன் அமைக்கப்பட்டுள்ளன. என்றாலும் இந்தச் சாலகோட்டங்கள் தெய்வ உருவங்கள் நிறுவும் அளவிற்குப் போதிய ஆழம் இல்லை. தற்போதைய சாலகோட்ட தெய்வங்கள் பிற்காலத்தில் நிறுவப்பட்டிருக்கலாம். அன்று சாலகோட்டங்களில் தெய்வங்களைக் காண முடியவில்லை.

ஸ்ரீ காமாட்சி அம்மன் மூலவர் சன்னதிக்கு இடப்புறம் தனிக்கருவரையில் கிழக்கு நோக்கியவாறு காட்சி தருகிறார்கள். நவக்கிரக மேடை ஒரு புறம் அமைந்துள்ளது. இந்த அம்மன் மற்றும் நவக்கிரக சன்னதிகள்  பிற்காலத்தில் இணைக்கப்பட்டிருக்கலாம்.

முதலாம் ஆதித்த சோழன் (கி.பி. 871-907)

விஜயாலயனின் மகனான முதலாம் ஆதித்த சோழன் (கி.பி. 871-907) தன் தகப்பன் காலத்திலேயே இளவரசனாகப் பொறுப்பேற்றுக் கொண்டு, திருப்புறம்பியப் போரில் வெற்றிகளைக் குவித்தவர்.   அபராஜிதவர்ம பல்லவனைத் தோற்கடித்துத் தொண்டைமண்டலத்தைக் கைப்பற்றினார். அதனால் அவர் “தொண்டை நாடு பாவிய சோழன்” என்று பட்டம் பூண்டார். கொங்குமண்டலத்தையும் இவர் கைப்பற்றினார். அங்கிருந்து ஏராளமான பொன் கொண்டு வந்து தில்லை நடராஜப் பெருமான் கோயிலுக்குப் பொன் வேய்ந்தார். இவருடைய ஆட்சியில் சோழர்களின் ஆட்சி பரப்பு விரிந்தது. இவருக்கு இளங்கோப்பிச்சி, திருபுவனமாதேவி என இரு மனைவியர்களும், முதலாம் பராந்தக சோழன் (கி.பி. 907 – 955), கன்னர தேவன் (இராஷ்டிரகூட மன்னன் மூன்றாம் கிருஷ்ணன் (கிபி 939 – 967) என இரண்டு புதல்வர்களும் இருந்தனர்.

இவர் சைவசமயத்தை சார்ந்திருந்தார். இவருடைய காலத்தில் பல சிவன் கோவில்கள் கட்டப்பட்டன. காவிரியாறு தொடங்கும் சஹ்ய மலையிலிருந்து பூம்புகார் வரையிலும் காவிரியின் இருகரையிலும் நூற்றுக்கும் மேற்பட்ட சிவன் கோவில்களைக் கட்டியதாக சுந்தரச் சோழனின் அன்பில் செப்பேடு குறிப்பிடுகிறது. இவரது காலத்தில் தான் பல செங்கற் கோவில்கள் கற்றளியாக மாற்றியமைக்கப்பட்டன. .ஸ்ரீரங்கபட்டிணம் அரங்கநாதர் கோவிலைக் கட்டுவதற்கு இவர் ஆற்றிய பங்களிப்பைப் பற்றிக் கல்வெட்டுகள் பேசுகின்றன. திருவாரூர் கோவிலுக்கு அதிக மானியங்களை வழங்கியுள்ளார். திருக்கட்டளை சுந்தரேஸ்வரர் கோவில் இவர் காலத்தில் கட்டப்பட்டது. இவர் சைவ சமயத்தவர் என்றாலும் மிகுந்த மதச் சகிப்புத் தன்மை கொண்டிருந்தார். மக்கள் அச்சமின்றி தாங்கள் விரும்பிய கடவுளை வழிபட்டார்கள்.

இலகுலீச பாசுபதம்

கி.பி. 5-6 -ஆம் நூற்றாண்டுகளில் இலகுலீச பாசுபதம் செல்வாக்குப்பெற்றது. காயாவரோஹன அல்லது காயாரோகணம் என்ற பெயரில் நாகபட்டினம், கும்பகோணம், காஞ்சிபுரம் போன்ற தலங்களில் பாசபத நெறியில் தோன்றிய கோவில்கள் காரோணம் என்று பெயர் பெற்றன. தமிழகத்தில் உள்ள 60க்கும் மேற்பட்ட, பாசுபத சமயப்பிரிவைச் சேர்ந்த, மடங்களான காளாமுக மடம், கபாலிக மடம், வீரசைவ மடம், கோளகி மடம் ஆகிய மடங்கள் இருந்துள்ளமை பற்றித் தமிழகத்தில் லகுலீச பாசுபதம் என்னும் நூல் விவரிக்கிறது. பாசுபத மடத்தலைவர்களின் இயற்பெயர்களுடன் பட்டர், பட்டாரகர் போன்ற ஈற்றொட்டுகளை இணைத்தும் ஈசான ஆச்சார்யா, சைவ மாமுனி போன்ற பொதுப்பெயர்களாலும்  அழைக்கப்பட்டுள்ளனர். சைவர்கள் குரு ஒருவரிடம் தீட்சை பெறவேண்டும் என்ற சைவக் கோட்பாடுகளுக்கேற்ப சோழ மன்னர்கள் அரசவையில் வட நாட்டு சைவ அந்தணர்களான ஈசான பண்டிதர், சர்வசிவ பண்டிதர், பவன பிடாரன் போன்றோர் அரச குருக்களாக விளங்கினார்கள். இந்த ராஜகுருக்கள் ராடதேசம், கெளடதேசம் போன்ற பகுதிகளிலிருந்து வந்தவர்கள். ஈசான பண்டிதரது மகன் ஈச்வர சிவர் என்ற சோமேஸ்வரர் மூன்றாம் குலோத்துங்கனுக்கு ராஜகுருவாக விளங்கினார்.

திருவொற்றியூர், இலகுலீச பாசுபதத்தின் மையமாகத் திகழ்ந்துள்ளது. சர்வசிவ பண்டிதரின் முன்னிலையில் திருவொற்றியூர் கோயில் கற்றளியாகக் கட்டப் பட்டது. வாகிஸ்வர பண்டிதர் மற்றும் சதுராண பண்டிதர் ஆகியோரின் கட்டுப்பாட்டில் இக்கோவில் மடம் திகழ்ந்துள்ளது. கி.பி. 13-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் திருச்சி திருவானைக்காவில் பாசுபத கிரஹஸ்த மடம், இயங்கியுள்ளது.

பள்ளிப்படைக் கோவில்கள்

பாசுபத மகாவிரதிகள் மற்றும் பண்டிதர்களின் கட்டுப்பாட்டில் சோழர்களின் கோவில்கள், குறிப்பாக பள்ளிப்படைக் கோவில்கள், இருந்துள்ளன. மாகேஸ்வர பெருந்தரிசனத்தார் என்பவர் பாசுபத சைவ மார்க்கத்தை சார்ந்த மாவிரதிகளாவர். இறந்துபோன சோழ அரசர்களின் நினைவாக எழுப்பப்பட்ட பள்ளிப்படைக் கோவில்களில் பூசைக்கும் நிருவாகத்துக்கும் மகாவிரதிகளான பாசுபத மதகுருக்கள் அமர்த்தப்பட்டனர். இவர்களே இந்தப் பள்ளிப்படைகளையும், நிர்வாகித்தனர். பள்ளிப்படைக் கோவில்கள் பற்றிப் பேராசிரியர் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி கூறியுள்ள கருத்து இங்கு குறிப்பிடத்தக்கது.

“ஆதித்தீஸ்வரா தொண்டமாநாட்டில், முதலாம் பரந்தகனால் அவரது தந்தைக்குப் பள்ளிப்படையாக எழுப்பப்பட்டது; அரிஞ்சிகை ஈஸ்வரா மேல்பாடியில் முதலாம் இராஜராஜனால், ஆற்றூரில் மரணமடைந்த அரிஞ்சய சோழனை நினைவூட்டுவதற்காகக் கட்டப்பட்டது; இராமநாதன் கோயிலில் உள்ள பஞ்சவன்மாதேவீஸ்வரா முதலாம் இராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது. இவையெல்லாம் கவனத்தைக் கவர்கிற எடுத்துக்காட்டுகளாகும்.” ஆதாரம்: பேராசிரியர். கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி எழுதிய சோழர்கள்

பள்ளிப்படை (sepulchral shrine) என்றால் சோழ அரசனின் அஸ்தியின் மேல் எழுப்பப்படும் சிவாலயம் என்று பார்த்தோம்.  வழக்கமாகத் துறவிகள், ஞானிகள், மற்றும் முனிவர்களுக்கு,  அந்திமக் கிரியைகளுக்குப்பின் இவர்களுடைய அஸ்தியின் மேல் ஈமக் (funerary) கோவில்களை அமைப்பதுண்டு. ஏறத்தாழ 16 பள்ளிப்படைக் கோவில்கள் சுட்டிக் காட்டப்பட்டாலும், மூன்றே பள்ளிப்படைக் கோவிகளில் மட்டுமே, இக்கோவில்களின்  சுவர் அல்லது அடித்தளத்தில் காணப்படும் கல்வெட்டுகளின் அடிப்படையில், பள்ளிப்படைக் கோவில்கள்தான் என்று அறிஞர்கள் அடையாளம் கண்டுள்ளார்கள்.

ஆதித்தீஸ்வரா கோவில் இராஜகேசரி முதலாம் ஆதித்த சோழனின் அஸ்தியின் மீது முதலாம் பாரந்தக சோழன் தொண்டமாநாட்டில் எடுப்பித்த பள்ளிப்படைக் கோவிலாகும். இது போல மேல்பாடி அரிஞ்சிகை ஈஸ்வரம் என்னும் பள்ளிப்படைக் கோவில் ஆற்றூர் என்னுமிடத்தில் இறந்த முதலாம் பாரந்தக சோழனின் மகனான அரிஞ்சய சோழனுக்கு (கி.பி. 956-957) முதலாம் இராஜராஜ சோழனால் எழுப்பப்பட்டது. பஞ்சவன்மாதேவி பள்ளிப்படைக் கோவில் இராமநாதன் கோவிலில் (பட்டீஸ்வரத்தில்) மாமன்னர் முதலாம் இராஜராஜனின் ஐந்தாவது மனைவியான பஞ்சவன்மதேவிக்கு முதலாம் இராஜேந்திர சோழனால் எழுப்பப்பட்டது. லகுலிச பாசுபத மதப்பிரிவினர் சோழர்கள் காலத்தில் (10 மற்றும் 11 ஆம் நூற்றாண்டுகளில்) மயானத்தில் பள்ளிப்படைக் கோவிலை அமைத்துள்ளார்கள்.

கம்பவர்மன் காலத்துப் பள்ளிப்படை ஒன்று உண்டு. அஃது இராசாதித்தன் என்ற தலைவன் தன் தந்தையான பிருதிவி கங்கராயன் என்பவன் இறந்த இடத்தில் எழுப்பிய சமாதி கொண்ட கோவிலாகும். பத்தாம் நூற்றாண்டில் பாண்டிய நாட்டின் பகுதியை ஆட்சி செய்த வீரபாண்டியன் தனது சகோதரன் சுந்தரபாண்டியன் நினைவாக எழுப்பிய பள்ளிபடைக் கோவில் சுந்தரபாண்டிய ஈஸ்வரம் என்ற பெயரில் பள்ளிமடம் என்ற இடத்தில் அமைந்துள்ளது.

திருப்புறம்பியப் போரில் மரணமடைந்த கங்க மன்னன் பிரதிவீபதியின நினைவைப் போற்றும் விதமாக சோழப் பேரரசன் முதலாம் பராந்தகன் காலத்தில் திருப்புறம்பியத்தில் பள்ளிப்படை கோவிலொன்று எழுப்பப்பட்டது. கோனேரிராஜபுரத்தில் கண்டராதித்த சோழரின் பிராட்டி செம்பியன் மகாதேவியார் தனது கணவரின் பெயரில் திருக்கற்றளி ஒன்றை எடுப்பிய செய்தியை இவ்வூரிலுள்ள சாசனம் ஒன்று பதிவு செய்துள்ளது.

மீதியுள்ள 13 பள்ளிபடைக் கோவில்களை (1) அடையாளம் காணமுடியவில்லை; அல்லது (2) அறிஞர்கள் மத்தியில் பள்ளிப்படையை அடையாளம் காண்பது குறித்த ஆதாரங்கள் பற்றி ஒத்த கருத்துக்கள் நிலவவில்லை. சோழர்களின் பள்ளிப்படையில் உள்ள இக்கல்வெட்டுகள் சோழ அரசன் அல்லது அரசியைத் துதித்து இவர்களின் மரணத்தை நினைவுகூருகின்றன. இறந்த அரசன் அல்லது அரசிக்கு பள்ளிப்படைக் கோவில் எடுப்பிக்கும் சடங்கு மற்றும் இக்கோவில்களை பெருமைப்படுத்துதல் அல்லது வழிபடுதல் போன்ற சடங்குகள் சோழர்களின் காலத்திற்குப்பின் புழக்கத்தில் இல்லை. பள்ளிப்படை பற்றி இந்து கோவில் ஆகமங்கள் எந்தவிதமான விதிகளையும்  நிர்ணயிக்கவில்லை.

பள்ளிப்படைக்கோயில்கள் மக்களால் போற்றப்படவில்லை. சில அழிந்தே போயிருக்கவேண்டும். பள்ளிப்படைக்கோயில்களில் காணப்படும் கல்வெட்டுகளின் எண்ணிக்கையும் குறைவே.

கல்வெட்டு

பிற்காலச் சோழர்கள் காலத்தில் ஸ்ரீ காளஹஸ்தி, தொண்டைமண்டலம் (ஜெயம்கொண்ட சோழமண்டலம்), திருவேங்கட கோட்டம், பெரும்பாணப்பாடி நாடு ஆற்றூர் வருவாய் பிரிவில் அடங்கிய  ஊராக இருந்து வந்துள்ளது. இவ்வூர் வடபகுதி ஜெயம்கொண்ட சோழமண்டலத்தின் கஜானாவாகவும் திகழ்ந்துள்ளது. இதன் காரணமாகவே இவ்வூருக்கு பொக்கிஷம்பாளையம் என்ற பெயர் வந்ததாகத் தெரிகிறது.  வசூலிக்கப்பட்ட வரியை வாங்கிச் செல்வதற்கு இங்கு வந்த முதலாம் ஆதித்த சோழன் காய்ச்சல் கண்டு கி.பி. 907 ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் கேட்டை நட்சத்திரத்தன்று இறந்துவிட்டான். ஆதித்த சோழனின்  நினைவாக அவனது அஸ்தியின் மீது முதலாம் பராந்தக சோழனால் எழுப்பப்பட்டதுதான் இந்த கோதண்டராமேஸ்வரம் என்னும் ஆதித்தேஸ்வரம் என்ற பள்ளிப்படைக் கோவிலாகும்.

கோண்டராமேஸ்வர சுவாமி கோவில் மூலவர் விமானத்தின் திரிபட்ட குமுதப்படையில் முதலாம் பராந்தக சோழனின் விரிவான 34 ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.  (South Indian Inscriptions Vol. VIII, No. 529 (A.R. No. 230 of 1903).

ஸ்வஸ்திஸ்ரீ மதிரை கொணட கோப்பரகேசரி பன்மற்கு யாண்டு முப்பத்துனாலாவது திருவெங்கடகொட்டத்து ஆற்றூர்னாட்டு தொண்டைமான் பெராற்றூர் ஸபையோமு[ம்] நகரத்தொமும் பள்ளிப்படை வாமிஸ்வரத்து  மடாரர் ஸ்ரீ கோதண்டராமிஸ்வரமாகிய ஆதிதெஸ்வரக்ரஹத்து ஆள்வாருக்கு (மூலவர்) புரட்டாசித்திங்கள் திருக்கெட்டை (கேட்டை) முதல் எதி ரெழு நாளுந் திருநக்ஷத்திரமாகிய திருச்சதையத்த்தன் றுந் திரு உத்ஸவஞ்  செய்வதற்கும் போஜனத்துக்கும் பள்ளிபடை வாமிஸ்வரத்து மடாரர்  தொண்டைமான்  பெராற்றூர் ஸபையோமு[ம்] நகரத்தொமும் வழி           இய____ஞ் செய்வதாக எங்கள் வழி வைத்த பொன் கட்டு வெட்டிச் சூடு[க்]க[டு]த்து திப்பொக்கி ஊர்க்கற்செ[ம்]மை முதல் நூற்றைங்  கழஞ்சும் வாமிஸ்வரவணிக னென்னும் பூண்டும் __னால் நிறைத்தளவு தூநெல் நாலாயிரக் காடியும் இன்நெல் நாலாயிரக்காடிக்கும் ஆ[ண்]டுவரை ஐங்காற் பலிசையால் வந்த நெல் ஆயிரக்காடி யிந்நெல் ஆயிரக்காடிக்குந் திருவிழாவெடுக்கும் ஏழுநாளும் நிசதிப்படி ஸ்ரீமஹாவ்ரதிகளுள்ளிட்ட ஆறுசமயத்துத்தவஸ்விகளும்  ஆக இருநூற்றுவரும் ஸ்மரணர் முன்நூற்றுவருமாக  அஞ்னூற்றுவரும் பக்தராயின பலசமை[ய] அஞ்னூற்று வருமாக ஆயிரவர்க்கும் பத்தெ[ட்டுக்கு]த்தல் மெய்யாலரிசி நாடுரியாக நிசத மரிசி  முப்பத்தெழு காடி ஐந்தூம்பாக  ஏழுநாளும் ஊட்டி[ச்] செலவுபெறுமரிசி  இருநூற் றறுபத்திருகாடி ஐந்தூம்[பி]னால் ஐந்திரண்டு வண்ண நெல்லாக்கி அறுநூற் றைம்பத்தாறு காடி இருதூம் பிருநாழியும் திருவிழாப்

2  போதுந் தே[வர்க்கு] திருவமிர்தரிசி நசி[தி] . . . ழியாத எழுநாளைக்கு இருகாடி அறு றூம்பு நாழியுந் தீர்த்தத்து நாளால் திருக்காளத்தி ஆள்வார்க்குப் பெருந் திருவமிர்த்துக்கு கரிக்குந் தயிர்க்கும் [நெ]ய்க்கும் உள்ளிட்டு நாற்காடி ஒரு [தூ]ம்பி[ரு] நாழியும் சாலைக்குக் கறிக்கு நிசதி இருகாடியாக நெற் பதினாறு காடியும் மோர்க்கு நெல் நிசதி பதிநைங்காடியாக எழுபத்தெழு காடியும் உப்புக்கு நிசதி  நெல்லு ஒரு காடியாக ஏழுகாடியும் புளிப்பழவடை எ . க்கு நெல்லு ஏழுகாடியும் இலை இடுவானுக்கு நெல்லு ஏழுகாடியும் நீராட்டுவானுக்கு நெல்லு பதின்காடியும் கலமிடுங் குசவனுக்கு நெல் முப்பதின் காடியும் __________ கறிக்கு கொள்ளு நிசதி இருகாடிக்கு நெல் முக்காடியாக ஏழுநாளைக்கும் நெல்லு இருபத்தொருகாடியும்  பூவிடு மாலைக்காரனுக்கு ஏழு காடியும் இப்படி பந்மாகேஸ்வரக் கண்காணியொடு நின்[றி]வ்வழிவு  கணக்கறுத்து குடு[க்க] கடவ இவ்வூர் மாதேஸ்வரனுக்கு நெல்லு  இருபதின்காடியும் சாலைக்களந்த வரிசியிலெய் இவனுக்கு நிசத மரிசி நானாழியும் திருச்சுண்ணத்துக்கு மஞ்சளுக்கு நெல்லு இருகாடி ஒன்பதின் றூம்பு முன்னாழியும் ஆக நெல் எண்ணூற்றெழுபத்துமுக்காடி நீக்கி நின்ற நெல் நூற் றிருபத்தேழு காடியால்ப் பொன் முக்கழஞ்செ மூன்று மஞ்சாடியுங் குன்றியும் பொன் னூற்றைங் கழஞ்சினாலும் ஆண்டுவரை பலிசையால் வந்த பொன் பதின்முக் கழஞ்செ அரைக்காலும் ஆகப்பொன் பதினாறு கழஞ்செ ஆறுமஞ்சாடியில் நிசதிப்படி உண்ணும் ஆயிரவர்க்கும் ஏழுநாளைக்கும் உண்ண . . . . ண்காடி இருதூம்பு ஆழாக்கு [இ]ந்திரவிழாவினுக்குமாக விளக்[கினுக்கு] [நெ]ய் மேல்படி நாளைக்கு [நாற்காடி] எழுதூம்ப முன்னாழி முழாகை அழாக்குமாக நெய் பதின்முக்காடிக்கு . . . . .றுகழ . . . .டு மாணிகள் பதின்ம  . . . . ழஞ்செ காலும் பலகாயத்துக்கு வெறுங்காய் பதினாயிரத்துக்கு கழஞ்சும் வெறுவி-

3. லைப் பற்று  முன்னூற்றுக்கு கழஞ்சரையுந் கண் . . . . . . [ரு] கழஞ்சும் அரங்கழிவு சொன்றுடனுன்றிசக்குந் தச்சனுக்கு . . . . . . ஸபையார் கூத்தடினார்க்கும் பாடினார்க்குமாக பூஜைனைக்கு முக்கழஞ் . . . . . .ன் பதினாறு கழ . . . . . னகவுமிப்பொன்னு . . . . . . . . வத் செலுத்துவொமாகவு மிவ்வழி விப்பரிக் வழுவாமெய் இவ்வாதித்தீஸ்வரக்ரகத் திருக்கும் மஹாவ்ரதிகளும் காவிரிபாக்கத்து திருபன்றீஸ்வரத்துப் பிரதிவிடங்கக் கணப்பெருமக்களும் பந்மாகேஸ்வரக் கண்காணியும் இம்மூன்று திறத்தாரும் எங்களைத் தாங்கள் வெண்டிக் கொ[ச்செ]யது இயன்றும் செலுத்துவிக்கப்பெறுவீராகவும் மிப்படி இத்தரும __________ வத் வைத்தமையி லிப்படி வழுவின நான்று அன்றான்கொவினுக்குநூற்றுகழஞ்சு பொன் தண்டமும்பட்டு இத்ய __ மி[ப்ப]டி  வழுவாமெ செலுத்துவோமாகவு மித்திருவிழாச்  சுட்டிப் பணிசெய்மக்களுக்குச் சொற்றால் வந்த அழிவெல்லா மிவ்வேழாயிரவரி __மெய் செலவுபெறுவதாகவு மிப்பரிசொட்டிச் செலுத்துவோமாகவுப் பள்ளிப்படையுடைய வாமீஸ்வரபண்டிதமடாரர் க்கு ஒப்புக்குடுத்தொம் தொண்டைமான்பெராற்றூர் ஸபையோமும் நகரத்தொமும் இத்தர்மத்துக்கு சுஹித[ம] நினைத்தார்  __ மையிடை குமரி இடை எழுநூற்றுக் காததிலுஞ் செய்தார் செ[ய்]த  பாவத்துப் படுவார்  இத்தர்மத்தை வழுவாமெ(ச்) செலுத்தி ரக்ஷித்தார் ________ பெறுவார்.

கழஞ்சு = ஒரு கழஞ்சு 5.4 கிராம்; இரண்டு குன்றிமணி என்பது ஒரு மஞ்சாடி. 10 மஞ்சாடி கொண்டது ஒரு கழஞ்சு ஆகும். கழஞ்சு என்பது தற்போதைய எடையில் 5.4 கிராம் ஆக கணக்கிடப்பட்டது.
காடி = தானியத்தின் முகத்தலளவுள் ஒன்று. நெல் முதலியவற்றை அளக்கப் பயன்பட்டது.
பலிசை = வட்டி: கோயில் கருவூலத்தில் குறிப்பிட்ட பணம் செலுத்தி, அதில் வரும் பொலிசை (வட்டி) யிலிருந்து அரிசி, நெய், தயிர், உப்பு, கறி(காய்), இன்னும் பல பொருட்கள் வாங்குவதற்கு பயன்படுத்தி கொள்வதாகக் கல்வெட்டில் பதிவு செய்துள்ளனர்.
ஊரோம், சபையோம் நகரத்தோம் என்ற சொற்கள் பொதுவாக ஊர் நிர்வாகத்தைக் குறிப்பிடுகிறது.
மகாசபை, பெருங்குறி மகாசபை ஆகிய சபைகள் பிரமதேயம் எனப்படும் அந்தணக் குடியிருப்புகளை நிர்வாகித்தனர்.
ஊரோம் என்ற சொல் வேளாளர் குடியிருக்கும் ஊர்களை நிர்வாகித்தனர். நகரத்தோம் என்ற சொல் வணிகர்கள் குடியிருக்கும் நகரங்களை நிர்வாகித்தனர்.
நிசதி = தவறாது ஒவ்வொரு நாளும்
ஸ்ரீமஹாவ்ரதி=மகாவிரத சமயத்தைச்சார்ந்த சைவத்துறவியர்
ஸ்மரணர் = துறவியர்
ஆறுசமயத்துத்தவஸ்வி = சைவ சமயத்தில் இருந்த ஆறு உட்பிரிவுகளாகும். பண்டைய நூல்கள் கூறும் அகச் சமயம் ஆறு: சைவம், பாசுபதம், காளாமுகம், மஹாவிரதம், வாமம், பைரவம் என்று இந்த உட்பிரிவுகளைக் கூறுகிறார்கள்.
பந்மாகேஸ்வரக் கண்காணி = (பள்ளிப்படைக்) கோவிலில் நிவந்தங்களைக் கண்காணிக்கும் நிர்வாகிகள்.
தன்மம் = தருமம். தன்மத்தை தொடர்ந்து நிறைவேற்றுவதாக கோவில் நிர்வாகத்தைச் சேர்ந்த பன்மாகேசுவரர் கண்காணித்து காப்பாற்றுவதாக  உறுதியளிக்கிறார்கள்.
காவிரிபாக்கத்து திருபன்றீஸ்வரத்துப் பிரதிவிடங்கக் கணப்பெருமக்கள் = காவிரிப்பாக்கத்து கோயில் பெருமக்கள்.

ஆதித்த சோழன் பிறந்த நட்சத்திரம் சதயம் ஆகும். எனவே சதய நட்சதிரத்து நாளிலும் ஒரு விழா எடுக்க வகை செய்யப்பட்டிருந்தது. கி.பி. 940 ஆம் ஆண்டு இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஆதித்தன் மறைந்த கேட்டை (18 ஆவது நட்சத்திரம் முதல்) ஆதித்தன் பிறந்த சதயம் (24 ஆவது நட்சத்திரம் வரை) ஏழு நாட்கள். ஸ்ரீ கோதண்டராமீஸ்வரமாகிய ஆதித்தீஸ்வரத்து மூலவருக்கு புரட்டாசி மாதம் (தமிழ்) கேட்டை நட்சத்திரம் தொடங்கி  சதய நட்சத்திரம் வரை திருவிழா எடுப்பதற்கும் ஏழு நாட்களுக்கு உணவு அளிப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியை முதலாம் பராந்தகனின் கல்வெட்டு பதிவு செய்துள்ளது. இக்கல்வெட்டு இந்த ஏழு நாள் விழாவை, தேவர்களின் தலைவனும், இடி மற்றும் மழையின் கடவுளுமான, இந்திரனுக்கு அர்ப்பணிக்குமாறு அறிவுறுத்துகிறது.

விளம்பி ஆண்டு புரட்டாசி மாதம் 1 ஆம் தேதி (17 – 9 – 2018) அன்று கேட்டை நட்சத்திர தினம் ஆகும். அதாவது 1078 ஆம் ஆண்டு நினைவு தினம். இன்று புரட்டாசி மாதம் 7 ஆம் தேதி (23 – 9 – 2018) அன்று சதய நட்சத்திர தினம் ஆகும். முதலாம் ஆதித்தனின் பிறந்தநாள் ஆகும்.

மகாவிரதி வாகிஸ்வர பட்டாரர் என்பவர் மேற்பர்வையிலிருந்த இக்கோவிலில் இந்திரவிழா எடுப்பதற்கான செலவினங்களுக்காக 105 கழஞ்சு (ஒரு கழஞ்சு 5.4 கிராம்) பொன்னையும் 4000 காடி (தூணி) நெல்லையும் வைப்பு நிதியாக (Deposit fund) கோவில் கருவூலத்தில் செலுத்தி அதில் வரும் பொலிசைக்காக (வட்டி) 1000 காடி நெல்லை கோவிலுக்கு அளிக்க வேண்டும்  என்பது ஏற்பாடு. இவ்வாறு வட்டியாகப் பெறப்பட்ட நெல்லிலிருந்து ஏழு நாள் விழாவில் ஒவ்வொரு நாளும் ஆயிரம் பேருக்கு உணவளிக்க வேண்டும் என்பது இக்கல்வெட்டு நடைமுறைப்படுத்திய செயல்முறை.

உணவளிக்கத் தகுதியான ஆயிரம்பேர் யார் யார்? பக்தர்களான பல சமயத்து அந்நூற்றவர் ஆயிரம் பேரில் 500 பேர் அனைத்து சமயங்களைச் சேர்ந்த அடியார்களாக இருக்கவேண்டும். ஸ்ரீமஹாவ்ரதிகளுள்ளிட்ட ஆறுசமயத்துத்தவஸ்விகளும் மகாவிரதிகள் உள்ளிட்ட ஆறு சமயத்துத் தபஸ்விகள் 200 பேர் இருக்க வேண்டும். சைவ சமயத்தில் இருந்த ஆறு உட்பிரிவுகளாகும். பண்டைய நூல்கள் கூறும் அகச் சமயம் ஆறு: சைவம், பாசுபதம், காளாமுகம், மஹாவிரதம், வாமம், பைரவம் என்று இந்த உட்பிரிவுகளைக் கூறுகிறார்கள். ஸ்மரணர் முன்நூற்றுவருமாக துறவு பூண்டஅந்தணர்கள் 300 பேர். இச்சொல்லை அடிப்படையாகக் கொண்டு உருவான சொல் சமணம்.

இந்திர விழாவிற்காக போலிசையாகப் பெறப்பட்ட நெல்லில் இருந்து உண்பதற்கு இலை இடுவான், நீராட்டுவான், கலமிடும் குசவன், பூவிடும் மாலைக்காரன், விறகிடுவான் ஆகியோருக்கு நெல் அளந்து கொடுத்தனர். இவர்கள் மட்டுமின்றி இக்கோவிலில் இருந்த பாடசாலைக்குக் கூட ஒவ்வொரு ஆண்டும் நெல் வழங்கப்பட்டது. இக்கல்வெட்டு காட்டும் மிக முக்கியமான செய்தி இக்கோவிலில் ஒரு அரங்கம் இருந்துள்ளது. இந்திரவிழாவை முன்னிட்டு கூத்து, நாட்டியங்கள் மற்றும் நாடகங்கள் இவ்வரங்கில் நடத்தப்பட்டன. இங்கு கூத்து நிகழ்த்தியோருக்கும் பாடகர்களுக்கும் பலிசையிலிருந்து நெல் வழங்கப்பட்டது. அரங்கத்தில் ஏற்பட்ட பழுதினை வேண்டும்போது சரிசெய்வதற்கு நியமிக்கப்பட்ட தச்சனுக்கும் நெல் வழங்கப்பட்டது.

இந்தத் தன்மத்தை பள்ளிப்படைக் கோவிலில் இருந்த மகாவிரதிகளும், பந்மாகேஸ்வரக் கண்காணியும், காவிரிப்பாக்கத்து கோவில் பெருமக்களும் காத்துத் தருமாறு கல்வெட்டு அறிவுறுத்துகிறது.

இந்திர விழா

இந்திர விழா என்பது இந்திரனை சிறப்பித்துப் போற்றும் வண்ணம் தமிழகத்தில் எடுக்கப்பட்ட விழாவாகும். இந்திர வழிபாடும் இந்திரனுக்கு விழா எடுக்கும் வழக்கமும் சங்க காலத்திலேயே இருந்துள்ளதை சங்க இலக்கியமான ஐங்குறுநூறு குறிப்பிடுகிறது.”தூங்கெயிலெறிந்த தொடித்தோள் செம்பியன்” என்ற சோழ மன்னன் இந்திர விழாவைத் தொடங்கினான் என்றும் இந்தக் காதல் விழா தான் காமன் விழா என்றும் குறிப்பிடுவர். சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் இந்திர விழா மிகவும் சிறப்பான இடத்தைப் பெறுகிறது. மணிமேகலை விழாவறை காதையில் இந்திர விழா தொடங்கிய முறையை அறிந்து கொள்ள முடிகிறது. புகார் நகரில் இந்திர விழாவினை ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் பௌர்ணமி நாளில் தொடங்கி ,இருபத்தெட்டு நாட்கள் சிறப்பாகக் கொண்டாடும் மரபு இருந்துள்ளது. மதுரையிலும் இந்திரவிழா, வில்விழா என்ற பெயரில் கொண்டாடப்பட்டதாக சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. “கொண்டலொடு புகுந்து கோமகன் கூடல் வெங்கண் நெடுவேள் வில்விழாக் காணும் பங்குனி முயக்கத்துப் பனியர சியாண்டுளன்” (சிலப்பதிகாரம். மதுரை: ஊர்காண்: 110 – 111.) இந்தக் கல்வெட்டில் ஆதித்தனின் நினைவைப் போற்றும் வண்ணம், ஆதித்தீசுரத்து ஆழ்வாருக்கு புரட்டாசி மாதம் கேட்டையில் தொடங்கி சதயம் வரையிலான ஏழு நாட்களுக்கு இந்திர விழாவாகக் கொண்டாட அறிவுறுத்தியது   சற்று வியப்பாக உள்ளது.

No comments:

Post a Comment