Friday 18 October 2019

STORY IS HERO -KAJAL AGARWAL


“கதைதான் ஹீரோ!” - காஜல் அகர்வால்




``மொழிப் பிரச்னை தீர்ந்துவிட்டதா?''

``நான் மும்பைப் பொண்ணு. இந்திதான் தெரியும். வீட்டுலகூட இந்தியிலதான் பேசுவோம். தமிழ், தெலுங்கு மாதிரியான எனக்குத் தெரியாத மொழிகள்ல காட்சியைப் புரிஞ்சுகிட்டு நடிக்கிறது சிரமமா இருந்தது. ஆனா, இப்போ தயாராகிட்டேன். புதுசா ஏதாவது கத்துக்கிறது ரொம்ப சவாலான காரியம்தான். அந்தச் சவாலை ஏத்துக்கிட்டா மட்டும்தான் நாம மத்தவங்களைவிட ஸ்பெஷலா இருக்க முடியும். இங்கே வந்து நடிக்கும்போது இந்த ஊர், கலாசாரம், உணவு, லைஃப் ஸ்டைல், டிரஸ்ஸிங்னு எல்லாத்தையும் கத்துக்க முடியுது. ஊருக்கு ஊர் இது வித்தியாசப்படுறதால எனக்கு ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு. மும்பையில இல்லாம தமிழ்நாடு, ஹைதராபாத்னு அதிகமா இருக்கிறதனால எனக்கே தெரியாமல் நான் தென்னிந்தியப் பொண்ணா மாறிட்டேன்.’’

``சிரஞ்சீவி, விஜய், அஜித் எனப் பெரிய ஹீரோக்களுடனும் நடிக்கிறீர்கள். அதேசமயம், இளம் ஹீரோக்களுடனும் நடிக்கிறீர்கள். இது உங்கள் சினிமா வாழ்க்கையை பாதிக்கும் என்று நினைத்ததுண்டா?''

``என்னைப் பொறுத்தவரை கதைதான் ஹீரோ. கதையும் அதுல எனக்கான ரோலும் பிடிச்சிருந்தால் மட்டுமே நான் நடிக்க சம்மதிப்பேன். பெரிய ஹீரோ படம், சின்ன ஹீரோ படம்னு பார்க்குறது எனக்குப் பிடிக்காது. பெரிய படத்துல சும்மா பொம்மை மாதிரி வர்றதைவிட சின்னப் படத்துல நடிக்க ஸ்கோப் இருந்தால் நான் சின்னப் படத்தைத்தான் தேர்ந்தெடுப்பேன். பெரிய படத்துல சூப்பர் கேரக்டரா அமைஞ்சா அது எனக்கு போனஸ். சிரஞ்சீவி சார் மாதிரியான ஹீரோக்கள்கூட நடிக்கும்போது அவங்க அனுபவத்திலிருந்து நிறைய கத்துக்கலாம். அதேபோல சினிமாவுல ஜெயிக்கணும்கிற வெறி, வளர்ந்து வர்ற ஹீரோக்களிடம் அதிகமா இருக்கும். அதனால அவங்ககூட நடிக்கிற அனுபவம் நிறைய கத்துக்கொடுக்குது. `காஜல் நல்ல நடிகை'ங்கிற இமேஜைத் தவிர, வேறெந்த இமேஜையும் நான் வெச்சுக்க விரும்பலை.’’

``உங்கள் இன்ஸ்டாகிராமில் நிறைய ஃபிட்னெஸ் வீடியோக்களைப் பதிவிடுகிறீர்கள். உங்கள் ஃபிட்னெஸ் ரகசியம் என்ன?''

``ஃபிட்னெஸ் ரகசியம்னு ஒண்ணுமில்லை. பழங்களும் காய்கறிகளும் அதிகம் சாப்பிடுவேன். சிக்கன், மட்டன் உணவுகளை எடுத்துக்க மாட்டேன். புரோட்டீனுக்காக மீன் சாப்பிடுவேன். தவிர நல்ல தூக்கம் இருக்கணும். அதுவே நமக்குப் புத்துணர்ச்சியைக் கொடுத்திடும். எனக்கு ஜிம் வொர்க் அவுட்டைத் தாண்டி யோகா, தியானம் மாதிரி விஷயங்கள்ல அதிக ஆர்வம் உண்டு. ஃபிட்னெஸ்ங்கிறது உடம்பைக் கட்டுக்கோப்பா வெச்சுக்கிறது மட்டுமல்ல, அதுல மனசு சம்பந்தப்பட்ட விஷயங்களும் அடங்கியிருக்கு. எந்த ஸ்ட்ரெஸ்ஸும் குழப்பமும் இல்லாமல் மனசை ஃப்ரீயா வெச்சுக்கிட்டு நம்ம தினசரி வேலையைச் சரியா செஞ்சாலே நம்ம உடம்பு ஆரோக்யமா இருக்கும்.’’

“கதைதான் ஹீரோ!” - காஜல் அகர்வால்
``சினிமாவில் உங்கள் நண்பர்கள் யார்?''

``எனக்கு சமந்தா, தமன்னா, ரகுல்னு எல்லாரும் நல்ல பழக்கம். அதேபோல நான் நடிக்கிற எல்லா ஹீரோக்கள்கூடவும் நல்லாப் பேசுவேன். ஆனா, என் ஃபிரெண்ட்ஸ் என்கூட ஸ்கூல்ல படிச்சவங்கதான். அவங்ககூடதான் என் சந்தோஷம், சோகம், கொண்டாட்டம் எல்லாமே.’’

``சினிமாவில் ஹீரோயின்களின் காலம் மிகவும் குறைவு என்று சொல்வார்கள். இதை நீங்க எப்படிப் பார்க்கிறீர்கள்?''

``நான் ஒரு விஷயம் பண்ணும்போது, அது வொர்க்கவுட் ஆகலைனா என்ன பண்றதுன்னு ஒரு பேக்கப் பிளான் வெச்சிருப்பேன். ஆனா, இந்தத் துறையைப் பொறுத்தவரை நம்ம கரியரை ஸ்மார்ட்டா பிளான் பண்ணிக்கணும். மக்களுக்கு நம்ம உழைப்பு, நடிப்பு பிடிக்கணும். அதுக்குக் கொஞ்சம் அதிர்ஷ்டம் தேவை. நம்மை முதல்ல நல்லாப் புரிஞ்சுக்கிட்டு, அதுக்குத் தகுந்த மாதிரி நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிச்சா நிச்சயம் வொர்க்கவுட் ஆகும். இதுல எங்கேயாவது மிஸ்ஸானால் கிராஃப் கீழே போயிடும். அடுத்த படங்கள் கமிட் பண்ண முடியாது. ஸோ, சினிமாவுக்குள்ள வர்றதைவிட அதுல ரொம்ப நாளைக்கு நிலைச்சு நிக்கிறது கஷ்டம். அது ஹீரோயினுக்கு மட்டுமல்ல, ஹீரோக்களுக்கும்தான்.’’

``பயோபிக் படங்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்... யாருடைய பயோபிக்கில் நடிக்க ஆசை?''

``சாதனையாளர்களைப் பத்தி நிறைய இடத்துல பதிவாகியிருந்தாலும், எல்லாத்தையும் ஒரு படத்துல கொண்டு வரும்போது அதுக்கான ரீச் அதிகமா இருக்கு. அதனால பயோபிக் படங்கள் நமக்குத் தேவைதான். அரசியல்வாதியுடைய பயோபிக் அல்லது விளையாட்டு வீராங்கனையுடைய பயோபிக்கில் நடிக்கணும்னு ஆசை. காரணம், எனக்கு அரசியல் தெரியாது; நான் ஸ்போர்ட்ஸ் ப்ளேயரும் இல்லை. அதனால இந்த மாதிரி பயோபிக்ல நடிக்கிறது எனக்கு நானே கொடுத்துக்குற சவால். அதேபோல, இன்னொருத்தரா வாழ்றது ரொம்ப சிரமம். அதனால, எனக்கு அந்த மாதிரி பயோபிக் வாய்ப்பு வந்தால் நிச்சயம் அதைத் தவிர்க்காமல் நடிப்பேன்.’’



``ஃபேன் கேர்ள் மொமன்ட்?''

``எனக்கு டென்னிஸ்ல ஆர்வம் அதிகம். ரோஜர் ஃபெடரர், செரினா வில்லியம்ஸ் இவங்க ரெண்டு பேரையும் ரொம்பப் பிடிக்கும். அவங்களை மீட் பணணினது ஃபேன் கேர்ள் மொமன்ட்டா இருந்தது. அதேபோல நான் சச்சின் டெண்டுல்கரின் தீவிர ரசிகை. அவர்கூட எடுத்த போட்டோவை பத்திரமாவெச்சிருக்கேன். சினிமாவுல சிரஞ்சீவி சாரையும் கமல் சாரையும் முதல்ல பார்க்கும்போது ஒரு ரசிகையா அவங்க பக்கத்துல நின்னேன்.’’

``காஜலைப் பற்றி இதுவரை எந்தக் கிசுகிசுவும் வந்ததில்லையே... என்ன ரகசியம்?''

``ரகசியம் எதுவும் இல்லை. ஷூட்டிங் முடிஞ்சவுடனேயே நேரா ரூமுக்குப் போய் சாப்பிட்டுட்டுத் தூங்கிடுவேன். எனக்கு ரொம்பக் குறைவான நண்பர்கள்தான் இருக்காங்க. சினிமாவுல இருக்கிற யார்கூடவும் டின்னர், பார்ட்டின்னு போக மாட்டேன். பார்ட்டின்னு போனா மும்பையில இருக்கிற என் ஸ்கூல், காலேஜ் ஃபிரண்ட்ஸ்கூடத்தான். கிசுகிசு வராமல் இருக்கிறது நல்ல விஷயம்தானே?’’

``தமிழில் விஜய், அஜித் என்று எல்லா நட்சத்திரங்களுடனும் நடித்துவிட்டீர்கள். இப்போது கமல் ஹாசனுடன் நடித்துக்கொண்டிருக்கிறீர்கள். அடுத்து என்ன?''

``சூப்பர் ஸ்டார்கூட நடிக்கணும். அவர் மட்டும்தான் பாக்கி.’’

``உங்கள் பொழுதுபோக்கு என்ன?''

``ஃப்ரீயா இருந்தால் சமைக்கிறது ரொம்பப் பிடிக்கும். குறிப்பா, ஸ்மூத்திஸ், பஞ்சாபி உணவுகள் நல்லா சமைப்பேன். அப்புறம், ஸ்கை டைவிங், ஸ்கூபா டைவிங் மாதிரியான அட்வெஞ்சர் விளையாட்டு ரொம்பப் பிடிக்கும். எனக்கா தோணுச்சுன்னா புக்ஸ் படிப்பேன்.’’

``திருமணம் எப்போது?''

``இவங்களைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா நல்லாருக்கும்னு நினைக்கிற மாதிரி யாரையும் சந்திக்கலை. அப்படியான நபரைச் சந்திச்சிட்டா சீக்கிரமே கல்யாணம் பண்ணிருவேன்.’’






No comments:

Post a Comment