ZHU RONGJI, CHINESE PRIME
MINISTER BORN 1928 OCTOBER 1
சூ சுங்ச்சி (Zhu Rongji, பிறப்பு: அக்டோபர் 1, 1928) சீனாவின் முக்கியத் தலைவர்களில் ஒருவர். மார்ச் 1998 இலிருந்து மார்ச் 2003 வரையிலான காலகட்டத்தில் முதலில் சீனாவின் துணைப் பிரதமராகவும் பிறகு பிரதமராகவும் இருந்தவர். கடும் நிர்வாகியாகவும் சீன பொருளாதாரச் சீர்திருத்த முயற்சிகளில் முக்கிய பங்குவகித்தவராகவும் மதிப்பிடப்படுகிறவர்.
தொடக்க காலம்
1987 இலிருந்து 1991 வரையிலான காலகட்டத்தில் ஷாங்காய் நகரத்தின் மேயராகவும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகவும் இருந்தார். இவரது பதவிக்காலங்களில் ஊழல்களால் புரையோடிப் போயிருந்த கட்சியையும் ஆட்சியையும் சுத்தப்படுத்தும் சோதனை நிறைந்த வேலைகளில் இவர் இறங்கினார். இவரது ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் சீன மக்களிடம் இவருக்கு பெரிய அளவுக்கு நற்பெயரைச் சம்பாதித்துக் கொடுத்தது. ஆனால் சீனாவின் அரசுடைமை நிறுவனங்களில் மேற்கொண்ட சீர்த்திருத்த முயற்சிகள் காரணமாகவும் அதிரடியான நடவடிக்கைகள் காரணமாகவும் இவர் மீது கடும் விமர்சனங்களும் உண்டு.
1949 அக்டோபரில் இவர் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். 1951 இல் புகழ்பெற்ற ஷிங்குவா பல்கலைக்கழகத்தில் மின் பொறியியல் துறையில் பட்டம் பெற்றார். பிறகு வடகிழக்கு சீன தொழிற்துறை துறையில் உற்பத்தித் திட்ட அலுவலகத்தில் இணைத் தலைவராக பணிபுரிந்தார்.
1952-1958 கட்டத்தில், அரசு திட்டக்குழுவில் குழு தலைவராகவும் இணை பிரிவுத்தலைவராகவும் பணியாற்றினார். மாபெரும் முன்னோக்குப் பாய்ச்சல் காலகட்டத்தில் பின்பற்ற மா சே துங்கின் கொள்கைகளை "பகுத்தறிவுக்கு ஒவ்வாத உயர் வளர்ச்சிக்" கோட்பாடுகள் என இவர் விமர்சித்தார். இதனால் வலதுசாரி என்று முத்திரைக் குத்தப்பட்டு, 1958 இல் ஊழியர் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரியுமாறு
அனுப்பப்பட்டார். 1962 இல் மன்னிப்பு பெற்றவர், பின்பு அரசு திட்டக்குழுவின் தேசிய பொருளாதார மன்றத்தில் பொறியாளராக 1969 வரை பணியாற்றினார்.
கலாச்சார புரட்சி காலத்தில், ஜூ மீண்டும் பதவிநீக்கம் செய்யப்பட்டார். 1970 இலிருந்து 1975 வரை, "அறிவு பெறுவதற்காக" மே செவன்த் கேடர் ஸ்கூலுக்கு அனுப்பப்பட்டார்.
1975 முதல் 1979 வரை, பெட்ரோலிய அமைச்சகத்தின் பைப்லைன் பீரோவால் நடத்தப்பட்ட நிறுவனம் ஒன்றில், இணை தலைமை பொறியாளராக இருந்தார். சைனீஸ் அகாடெமி ஆஃப் சோஷல் சையன்ஸஸ் அமைப்பின் கீழ் வரும் தொழில்துறை பொருளாதார பயிலகத்தில் இயக்குநராகவும் ஆனார்.
1978 இல் டெங் ஷியாவ்ப்பிங் பொருளாதார சீர்த்திருத்தங்களைத் தொடங்கிய போது, தனது கோட்பாட்டுக்கு இசைந்தவர்களை தேடினார்.அப்படித்தான் டெங் ஜூவைக் கண்டறிந்தார். சீன கம்யூனிஸ்ட் கட்சியில் ஜூவின் உறுப்பாண்மை புதுப்பிக்கப்பட்டது. "ஜூவுக்கு சொந்த கருத்துகள் உண்டு. தைரியமாக முடிவுகளை எடுக்கக்கூடியவர். பொருளாதாரம் தெரி்ந்தவர்" என்றார் டெங்.
எரிபொருள் மற்றும் சக்தி துறை அலுவலகத்தில், அரசு பொருளாதார ஆணையத்தின் கீ்ழ் ஜூ புதிய பதவி பெற்றார். 1979 முதல் 1982 வரையிலான காலத்தில், ஒன்றுபட்ட அலுவலத்தில் இணை இயக்குநராக இருந்தார். பின்பு ஆணையத்தின் உறுப்பினராக ஆனார். 1983 இல் ஆணையத்துக்கு பொறுப்பான பதவியாக இணை அமைச்சராகவும் ஆனார். பின்பு 1987 இல் ஷாங்காய் மாநகரத்தின் மேயராக நியமிக்கப்பட்டார்.
1989 -1991 காலத்தில் ஷாங்காய் மேயராக இருந்த ஜூ, புதோங் சிறப்பு பொருளாதார மண்டலத்தை உருவாக்கி, வளர்த்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். மாநகரத்தின் தொலைத்தொடர்பு, நகர கட்டுமானம், போக்குவரத்து போன்ற வளர்ச்சிப் பணிகளுக்கு இவர் எடுத்த நடவடிக்கைகள் நல்ல பலனைத் தந்தன.
1991 இல் அரசு கவுன்சிலின் துணைப் பிரதமராக ஆனார். ஷாங்காயிலிருந்து பெய்ஜிங்குக்குச் சென்றார். தொழில்துறை, வேளாண்மை, நிதி போன்றவற்றின் மீது கவனம் செலுத்தினார். அரசுடைமை நிறுவனங்களின் கடன் வலையை வெட்ட முயன்றார்.
1993 -1995 காலத்தில் கட்சியின் நிலைக்குழு உறுப்பினாராகவும் 1995 - 1998 காலத்தில் மக்கள் சீன வங்கியின் ஆளுநராகவும் கூடுதல் பொறுப்புகளை வகித்தார். இந்த காலகட்டத்தில் நிதி சீர்த்திருத்தங்களில் ஈடுபட்டார். பேரியல் பொருளாதாரக் கட்டுப்பாடுகளை கொண்டுவந்து,
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தல், அதிவேக வளர்ச்சியினால் ஏற்படும் நிலைகுலைவுகளை மட்டுப்படுத்தல் உள்ளிட்ட சவால்களை சந்தித்தார்.ஜூவின் தொடர்ச்சியான செயல்பாடுகளால் அவர் வலுவான தீவிரமான செயல்திறம் மிக்க தலைவர் என்ற பெயரைப் பெற்றார். ஊழலுக்கும் உறவுச்சார்புக்கும் எதிரான செயல்பாடுகள் அவற்றில் முக்கியமானது. அவரது செயல்பாடுகள் மிகவும் வெளிப்படையானதாக இருந்தன.
தலைவர் ஜியாங் ஜெமினும் பிரதமர் லி பெங்கும் அளித்த ஆதரவின் பக்க பலத்தில் ஜூ தீவிரமான பேரியல் பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டார். ஆரோக்கியமான நிலைபெறு வளர்ச்சிக்கு ஏற்றதான செயல்பாடுகள் அவருடையது என்று நோக்கர்கள் கருதுகிறார்கள்.
தாழ்நுட்ப நிறுவனங்களை மூடினார். பணம் தின்னும், ஆனால் பலன் அளிக்காது இருந்த அரசுடைமை நிறுவனங்கள் மீது அவரது கடும் பார்வை திரும்பியது.
பிரதமர் ஜூ
மார்ச் 17, 1998 இல் அதிபர் ஜியாங் ஜெமின் ஜூவை பிரதமராக்கினார்.
பொருளாதாரத் துறையில் 90 கள் மிகவும் கஷ்டமான காலம். நகர்ப்புறங்களில் வேலையின்மை அதிகரி்த்திருந்தது. அரசு நிர்வாகம் ஊழலால் மூழ்கிக்கிடந்தது. அந்த பதிற்றாண்டில் சீனாவின் சராசரி வளர்ச்சி விகிதம் 9.7% ஆக நிலைபெற்றிருந்ததற்கு ஜூ ஒரு முக்கிய காரண கர்த்தா. அப்போது தென்கிழக்காசிய நாடுகளில் ஏற்பட்ட நிதி நெருக்கடிகளால் ஆசிய பொருளாதாரம் நிலைகுலைந்திருந்த போதும், சீனா அந்த நெருக்கடியில் சிக்காது தப்பித்ததற்கு ஜூ எடுத்த நடவடிக்கைகள் முக்கிய காரணங்களாகும். பொதுத்துறையில் சம்பளத்தைக் கூட்டி, நுகர்வு டிமாண்டை அதிகரித்தது உள்பட அவர் எடு்த்த பல நடவடிக்கைகள் சீனாவுக்கு ஸ்திரத்தைத் தந்தது.
அரசுடைமை நிறுவனங்களை சீர்திருத்தும் பணியில்தான் ஜூவின் மிகமுக்கிய தலைமைத்துவம் வெளிப்பட்டது. பெரிய அளவில் தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பி, வேலையின்மையையும் சமூகக் குலைவையும் எதிர்கொள்வதைத் தவிர்த்து அரசுடைமை நிறுவனங்களை எப்படி சீர்திருத்தம் செய்வது என்பது ஒவ்வொரு சீன தலைவருக்குமே பெரிய தலைவலியாகத்தான் இருந்தது. ஜூ அரசுடைமை நிறுவனங்கள் பலவற்றை மூடினார். ஆனால், வேலையிழப்பவர்களின் பொருளாதார ஸ்திரத்துக்கு உதவியளிக்கக்கூடிய நிதி பாதுகாப்பு திட்டங்களை அமல்படுத்தக் கோரினார். வேலையிழப்போருக்கு வேறு வேலை கிடைப்பதற்காக சுமார் 10 கோடி நகர்ப்புற வேலைவாய்ப்புகளை புதிதாக உருவாக்கவும் வேண்டியிருந்தது. இந்த வேலையை முடிந்தவரை சிறப்பாக செய்தார் ஜூ.
அவரது செயல்பாடுகளின் தொடர்ச்சியான விளைவாக 2001 இல் உலக வர்த்தகக் கழகத்தில் சீனா இணைந்தது.
மார்ச் 2003 இல் அவரது பதவிக்காலம் முடிந்தது. ஜூவின் கீழ் துணைப் பிரதமராக பணியாற்றிய அவருடைய நெருங்கிய சகாவான வன் ஜியாபாவ் புதிய பிரதமரானார்.
மிகச்சிறப்பாக ஆங்கிலம் பேசக்கூடிய சீனத் தலைவர்களில் ஒருவர் ஜூ. மிங் வம்சத்தை நிறுவிய பேரரசர் ஹோங்வுவின் சந்ததியைச் சார்ந்தவர் அவர் என்று் சொல்லப்படுகிறது.
No comments:
Post a Comment