INDIAN EDUCATION - VERY SIMPLE AND
NO VALUE IN LIFE
மெக்காலே பாடத்திட்டம் சரியில்லை .புதிய பாடமுறையை புகுத்துவோம் என்று ஐரோப்பிய ,பாணியிலான கல்வி முறையை இந்தியாவில் புகுத்தினோம் .அதாவது எது முக்கியமோ அதை மட்டுமே கேள்வி கேட்பது ,படிப்பது என்று .
டிவியில் இருந்து நம்ம அண்ணாச்சி இன்ஜினியரிங் மாணவியிடம் கேள்வி கேட்கிறார் .சோளம் ,மக்காசோளம் எப்படி விளைகிறது
நான்காவது வருடம் படிக்கும் அந்த மாணவி சொல்கிறார்
- சோளம் செடியில் முளைக்கும் .மக்காசோளம் மரத்தில் முளைக்கும் என்று .
இந்திய கல்வி அமைப்பின் வரலாற்றை பொறுத்தவரை சுதந்திரத்திற்கு முன் பின் என இருவேறு கூறுகளைக் கொண்டது. முந்தையது குலக் கல்வியும், ஆங்கில ஏகாதிபத்தியமும், நிலபிரபுத்துவமும் கலந்த கலவை. பிந்தையது அரசு அதிகாரமும் முதலாளித்துவமும், கல்வி மேட்டினமையும் கலந்த கலவை. ஆக இது இரண்டுமே ஒன்றுடன் ஒன்று வலிமையாக பின்னிப் பிணைக்கப்பட்டது. எளிதில் பிரிக்க முடியாதது. ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாதது. இது இந்தியாவில் எல்லா மூளைகளிலும் நீக்கமற நிறைந்திருக்கும் மிகவும் மோசமான கொள்கை.குறிப்பாக இந்தியாவில் வாழும் அடித்தட்டு மற்றும் விளிம்பு நிலை மக்களையும், முஸ்லிம் சிறுபான்மையினரையும் கல்வி கற்பதிலிருந்து முற்றிலுமாக ஒதுக்கியது. இது கடந்து வந்த பாதையை நாம் உற்று நோக்கினால் விளங்கும்.
இந்தியக்கல்வி : சுதந்திரத்திற்கு முன்..
சுதந்திரத்திற்கு முன்னர் இந்தியக் கல்வியை பொறுத்தவரை குலக்கல்வியே மேலோங்கி இருந்தது. குறிப்பாக மனிதன் அவனுடைய நிறம் மற்றும் செய்யும் தொழிலை வைத்தே அவனுடைய கல்வி கற்கும் உரிமை நிர்ணயிக்கப்பட்டது. அதாவது வானவியல், கணிதவியல், சட்டம் முதலிய பிரிவுகளை உயர் பிரிவினரும் வரவு செலவு கணக்குகளை வாணிபத்தில் ஈடுபடும் பிரிவினரும், எண்ணறிவு, எழுத்தறிவு போன்றவை பிற்படுத்தப்பட்ட பிரிவினரும் எடுத்துக் கொள்ள தாழ்த்தப்பட்ட விளிம்பு நிலை மக்களுக்கு கல்வி முற்றிலுமாக மறுக்கப்பட்டது.
இதற்கு எதிராக உருவானதுதான் “மெக்காலே கல்வி” இதன் மூலம் விடியல் கிடைத்து விடும் என்று நம்பிய இந்திய பன்முகச் சமூகம் இன்று வரை அதே மொழி ஆதிக்கத்தாலும் வர்க்க பேதத்தாலும், மத துவேஷத்தாலும் கட்டமைக்கப்பட்டு வருகிறது.
அதற்கு சாட்சியாக 1835 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 இல் இந்திய கல்வி முறை குறித்து மெக்காலே அவர்கள் பிரிட்டிஷ் பாரளுமன்றத்தில் அளித்த அறிக்கையில் : -
“இந்திய மாணவர்களுக்கு எந்த மொழியில் பாடங்கள் போதிக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்யும் அதிகாரம் நம்மிடம் இருக்கையில், எந்த ஒரு பாடத்திலும் நமது ஆங்கில மொழியுடன் ஒப்பிடும் அருகதையுள்ள புத்தகங்கள் இல்லாத நிலையில் எதுவுமே இல்லாத மொழிகளில் நாம் பாடம் நடத்துவதா?” என அப்பட்டமாக தனது மொழி மேட்டிமைத்தனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுதான் பன்மொழி பேசும் இந்தியாவின் மீது நடத்தப்பட்ட மொழி ஆதிக்கத்திற்கான தொடக்கப் புள்ளி!.
மெக்காலே கல்வி முறையில் குலக் கல்வி ஒழிந்தது. வர்க்க பேதம் தீர்ந்தது என்று நினைத்த போது புதிதாக மொழி ஆதிக்கம் முளைத்தது, ஆங்கில மேலாதிக்கம் தழைத்தது. இது முன்னதை விட அதிக சேதாரத்தை விளைத்தது. காலனி ஆதிக்கத்தின் போது இந்தியாவின் தொழில் துறை பற்றி ஆய்வு செய்த “டேவிட் இளிங் ஸ்மித்” மற்றும் ‘வில்லியம்ஸன்’ என்னும் ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆய்வாளார்கள் 1750 இல் இந்தியா பண்ட உற்பத்தியில் 25% பங்கு வகித்தது. ஆனால் காலனிய ஆட்சி நடந்த 1900 ஆம் ஆண்டு வெறும் 2 % ஆக குறைந்தது என்று நிறுவினார். அதேபோல் 1809 முதல் – 1813 வரை 30% ஆக இருந்த வேலை வாய்ப்பு 1900 இல் 8.5% ஆக குறைந்து போனது என்று தனது ஆய்வில் நிரூபித்திருக்கிறார்.
இத்தகைய அவலங்களுக்கு மத்தியில் 1911 இல் கோபால கிருஷ்ண கோகலே அவர்கள் பம்பாய் மாகாண சட்டசபையில் தொடக்க கல்விக்கான மசோதா ஒன்றை கொண்டுவந்தார். இந்த மசோதா பதினான்கு வயது வரை உள்ள பிள்ளைகளுக்கு கட்டாயக் கல்விக்கான மசோதா ஆகும் . இந்த மசோதாவை நிலப்புரபுக்களும், பண்ணையார்களும் மூர்க்கத்தனமாக எதிர்த்து நிறைவேறாமல் தடுத்தனர்.
இதற்கான காரணம் வினவியபோது பிள்ளைகள் எல்லோரும் பள்ளிக்கு சென்று விட்டால் மாடு மேய்ப்பதற்கும், வயல் வேலை செய்வதற்கும் ஆட்களுக்கு எங்கே போவது என்ற பதிலே கிடைத்தது. இந்த அவலங்கள் இன்று வரை தொடரவே செய்கிறது. அன்று வர்க்க பேதத்தாலும், சாதிய அடுக்குகளாலும் கல்வியிலிருந்து புறக்கணிக்கப்பட்டது சமூகம்,
இன்று பொருளாதாரத்தாலும், மதிப்பெண் கல்வி முறையாலும் இந்திய விளிம்பு நிலை மற்றும் சிறுபான்மை சமூகங்கள் கல்வி கற்பதிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டும் புறக்கணிக்கப்பட்டும் வருகிறது.
இந்தியக் கல்வி : சுதந்திரத்திற்குப் பின் : -
இந்தியர்கள் அனைவரையும் எழுத்தறிவு கொண்டவர்களாக உருவாக்க வேண்டும் என்கிற விவாதமும் திட்டமும் இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு மூன்றாண்டுகளுக்கு முன்பே தொடங்கியது. 1944 ஆம் ஆண்டு “சார்ஜெண்ட் திட்டம்” கொண்டு வரப்பட்டு அதன் மூலம் 1984 க்குள் அனைவரையும் படிக்க வைத்து விடலாம் என்கிற கருத்து ஆங்கிலேயே ஆட்சியாளர்களிடத்தில் இருந்தது. இதற்க்கு 40 ஆண்டுகள் என்பது மிகவும் அதிகம் அதற்குள்ளாகவே எல்லோரையும் படிக்கவைக்க முடியும் என்கிற கருத்தை “சுதந்திர போராட்டத் தலைவர்கள்” அப்போதைய ஆங்கில அரசை வலியுறுத்தியதாக வரலாறு கூறுகிறது.
இவ்வாறு தொடங்கிய இந்தியக் கல்வியின் வளர்ச்சி ஆட்சியாளர்களின் சுய நலத்தாலும், கல்வியை வணிகமாக பார்க்கத் தொடங்கியதாலும் கல்விக்காக அமைக்கப்பட்ட ஆய்வுக் குழுக்களின் அறிக்கைகள் காகிதத்தில் ஏற்றப்பட்ட அச்சாக மட்டுமே தூசு படிந்து நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் தேங்கிக் கிடக்கின்றன.
தமிழகத்தைப் பொறுத்தவரை இன்று நடைமுறையில் இருக்கும் “சமச்சீர் கல்வி” ஓரளவேணும் ஆறுதல் தரக்கூடிய விஷயம் என்றாலும் கூட அது கடந்து வந்த பாதை மிகவும் கடுமையானது.
தமிழக ஆட்சியாளார்களின் ஏற்றத் தாழ்வுகள் அற்ற சமச்சீரான கல்வி வழங்குவோம் என்ற வாக்குறுதியின் பேரில் பேராசிரியர் ச.முத்துக் குமரன் அவர்களின் தலைமையின் கீழ் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு பல்வேறு ஆய்வுகளை நடத்தி 04.07.2007 அன்று ஆய்வறிக்கையை வழங்கியது. இந்த அறிக்கையின் பிரதான நோக்கம் “சமச்சீர் கல்வி” என்றாலும் கூட இந்தக் குழு பல்வேறு அம்சங்களை பரிந்துறை செய்தது.
அவற்றில் முக்கியமானவை.
1.வகுப்பறை கற்பித்தலை இன்று தேர்வு முறையே தீர்மானிக்கும் நிலையை மாற்றிட, பொதுத் தேர்வுகளில் பெருமளவு சீர்திருத்தம் கொண்டு வரவேண்டும். பள்ளிகளில் வகுப்பிற்கு வகுப்பு தேர்ச்சி என்பது தொடர் மதிப்பீடு மூலமாக நிர்ணயிக்கப்பட வேண்டும்.
2. கல்வித் துறை நிர்வாகம் சீர்திருத்தப்பட வேண்டும். தொலைவு முறை கண்கானிப்புக்கு மாறாக அதிகாரப்பரவல் முறை மூலமாக கல்வித்துறையின் செயல்பாடுகள் அமைதல் வேண்டும் என்பனவாகும்.
பேராசிரியர் ச.முத்துக்குமரன் அவர்களின் குழு அளித்த அறிக்கையில் இரண்டை மட்டுமே மேற்கோள் காட்டியுள்ளேன். ஏனெனில் இன்று தனியார் பள்ளிகள் புற்றீசல் போல பெருகுவதற்கு இரண்டு காரணங்கள் முக்கிய காரணியாக உள்ளது. அவை 1.உயர்ந்த மதிப்பெண் பெறுவது. 2. அரசுப் பள்ளியின் நிர்வாக் சீர்கேடாகும்
தமிழகத்தைப் பொறுத்தவரை மிகவும் பிரதானமானது மாநிலக் கல்வி முறையின் கீழ் இயங்கும் அரசுப் பள்ளிகள் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகள் ஆகும். அரசு பள்ளிகளைப் பொறுத்தவரை ஒன்றிய, மாவட்ட நிர்வாகத்தின் கீழ் இருந்ததை முற்றிலுமாக விடுவிக்கப்பட்டு 1981 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மாநில அரசின் நேரடி பொறுப்பிற்கு மாற்றப்பட்டது.
1980களில் 34 ஆக இருந்த தனியார் மெட்ரிக் பள்ளி படிப்படியாக வளர்ந்து இன்று 4000 மேற்பட்ட பள்ளிகளாக பல்கிப்பெருகியுள்ளன. இதற்கான காரணம் 1980 இல் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட “புதிய கல்விக் கொள்கை” பின்னர் 1990 களில் இந்தியாவில் நுழைந்த உலகமயமாக்கல் முற்றிலும் உள்வாங்கப்பட்டு இதற்குப் பின்னர்தான் இந்தியக் கல்வியின் பார்வை முற்றிலுமாக மாறியது.
பள்ளிக் கல்வியின் நிலை இப்படி இருக்கையில் உயர்கல்வியின் நிலையோ மிகவும் மோசமாக தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டது. உதாரணத்திற்கு தமிழகத்தில் பொறியியல் கல்லூரியை பொறுத்தவரை அரசாங்கம் வெறும் 6 கல்லூரிகளை மட்டுமே நடத்தும் போது, தனியார் முதலாளிகளின் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கையோ 498.
அதேபோன்று கடைநிலை மற்றும் அடித்தட்டு மக்கள் மிகவும் சிரமத்தோடு உயர்கல்வி கற்கின்ற அரசு கலை அறிவியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 133. ஆனால் தன்னாட்சி பெற்ற கல்லூரிகளின் எண்ணிக்கை 438 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தின் நிலை இப்படியிருக்கையில் இந்தியாவின் நிலையோ முற்றிலுமாக தனியார் முதலாளிகளிடம் தாரை வார்க்கப்பட்டுள்ளது. சுதந்திரம் அடைந்தபோது 26 பல்கலைக் கழகங்களும், 695 கல்லூரிகளும் இருந்தன. ஆனால் இன்று 700 பல்கலைக் கழகங்களும் 35,539 கல்லூரிகளும் உள்ளன. இவற்றில் 30,000 க்கும் மேற்பட்டவை தனியார் சுயநிதி கல்லூரிகள்.
இப்படியாக சிறியதும் பெரியதுமாக இந்தியக் கல்வி தனியார்களிடம் தாரை வார்க்கப்பட்டுள்ளது.இதற்கான அனுமதி அரசும் ஆட்சியாளர்களும் வழங்கினாலும், சில நேரங்களில் அரசுகள் இயற்றும் சமூக நீதிக்கான சட்டங்களும், திட்டங்களும் ஏட்டளவில் கூட மேற்கூறிய தனியார் கல்வி நிறுவனங்களில் பின்பற்றப்படாது. இதை தட்டிக்கேட்க வேண்டிய அரசுகள் ஏனோ கண்டும் காணாமல் இருக்கிறது.
கல்வியாளார் வே. வசந்தி தேவி அவர்களின் வரிகளை மேற்கோள் காட்டி கட்டுரையை நிறைவு செய்கிறேன். “இந்தியாவில் யார் அரசு அமைப்பது என்பதை மக்கள் முடிவு செய்கிறார்கள். அந்த அரசு என்ன செய்ய வேண்டும் என்பதை ஆதிக்க சக்திகள் முடிவு செய்கின்றன.”
பா செ சிராஜுத்தீன்
கல்வி வளர்ச்சி
ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அதன் கல்வி மேம்பாடு அடிப்படையில் அமைந்துள்ளது. இந்திய கல்வி ஆங்கிலேய காலனி ஆட்சியில் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக உருவாக்கப்பட்டதாகும். ஆங்கிலேயர் ஆட்சியை விரிவுபடுத்திய கால கட்டத்தில் கல்வி என்பது மொழியைப் பயில்வதாகவே இருந்தது. இக்கல்வி முறையைச் சுதந்திர இந்தியாவின் வளர்ச்சித் தேவைகளுக்கு ஏற்ப மறு சீரமைப்பு செய்ய வேண்டியதாயிற்து. கல்வி என்பது தேசத்தின் சமூக, பொருளாதார, அரசியல் மாற்றத்தினை ஏற்படுத்தும் கருவி எனக் கருதப்பட்டது. தேச ஒருமைப்பாட்டு, சமூக நீதி, சமய சார்பின்மை, சமதர்மப் பொருளாதாரம், மனித வளங்களைப் பயன்படுத்துதல், உணவு உற்பத்தியில் தன்னிறைவு, தொழில் மயமாக்கல், அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி, அனைவருக்கும் தரமான கல்வி போன்ற உயர்ந்த குறிக்கோள்கள் உருவாக்கப்பட்டன. எனவே கல்வி முறையில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வருவதற்காக கல்விக் குழுக்கள் அமைக்கப்பட்டன.
இதன்படி 1948 ல் டாக்டர் ராதாகிருஷ்ணன் கமிஷன் அமைக்கப்பட்டது. 1952-ல் A. லெட்சுமணசுவாமி முதலியார் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. 1964-ல் C.S. கோத்தாரி என்பவர் தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது. 1968-ல் தேசிய கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டது.
அனைவருக்கும் ஆரம்பக்கல்வி
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மூலம் 14 வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும் கட்டாய இலவசக்கல்வி அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 1950 முதல் 1985 வரை ஏராளமாகப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. இதில் 14 வயதுக்கு உட்பட்ட அனைவரும் பள்ளியில் சேர்க்கப்பட்டு இடைநிறுத்தம் இன்றி கல்வியைத் தொடர தரமான கல்வித் திட்டம் உருவாக்கப்பட்டது.
கரும்பலகைத் திட்டம்
தொடக்கப்பள்ளியின் அடிப்படைத் தேவைகளைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு பள்ளிக்கும் இரண்டு பெரிய வகுப்புகள், கரும்பலகைகள், பொம்மைகள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள், தேசப்படங்கள், விலங்கியல் படங்கள் மற்றும் பிற கற்பித்தல் பொருட்கள் கொடுக்கப்பட்டன. இவற்றோடு முறைசாரக் கல்விக்கான புதிய திட்டமும், அதை முன் கொண்டு செல்வதற்கான வழிகாட்டுதலும் மதிப்பீட்டு முறையும் அறிவிக்கப்பட்டன.
இடைநிலைக் கல்வி
1983 ல் உயர்நிலை, இடைநிலை, துவக்கப்பள்ளி 12:5 என்ற விகிதத்தில் இருந்தது. எனவே தேவையான இடங்களில் துவக்க மற்றும் இடைநிலைப்பள்ளிகள் தொடங்கப்பட்டன. நவோதயாப் பள்ளிகள் நாடெங்கும் எல்லா மாவட்டத்திலும் நிறுவப்பட வேண்டுமென நோக்கம் உருவானது. தற்போது தமிழ்நாடு தவிர 28 மாநிலங்களில் 446 பள்ளிகள் இயங்கி வருகின்றன. கிராமப்புற குழந்தைகள் தங்கும் விடுதியுடன் கூடிய பள்ளிகள் இவை. இங்கு இரு பாலரும் பயில்கின்றனர். பெண் குழந்தைகளுக்கு மூன்றில் ஒரு பங்கு இடம் ஒதுக்கப்படுகின்றது. நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கிராமபுர, திறன் மிகு மாணவர்களை இனம் கண்டு அவர்களுக்கு உயர்ந்த கல்வி வழங்குவது இதன் நோக்கமாகும்.
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (NCERT)
1961-செப்டம்பர் 1-ல் நிறுவப்பட்ட இந்நிறுவனம் கல்வி அமைச்சகத்துக்கு உதவவும், பரிந்துரை செய்யவும் ஏற்படுத்தப்பட்டது. பள்ளி - பாடத்திட்டங்கள், ஆசிரியரின் பயிற்சி இவற்றை ஆராய்ந்து தேவைக்கேற்ப மாற்றங்கள் செய்து மேம்பாட்டுக்கு வழி வகுப்பதே இதன் இலட்சியம். மண்டலக் கல்விக் கல்லூரிகள் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் கல்வி நிலையம், காஷ்மீர், புவனேஸ்வர், போபால் மற்றும் மைசூர் ஆகிய இடங்களில் இக்கல்லூரிகளை நிறுவியுள்ளது. ஆசிரியர் சேவைக்கு முன் பயிற்சி மற்றும் பின் பயிற்சிகளை இவை நடத்துகின்றன. கோடைகால பயிற்சி, மற்றும் அஞ்சல் வழி மூலம், பயிற்சி பெறாமல் பணியில் இருக்கும் ஆசிரியருக்குப் பயிற்சி அளிப்பது இதன் முக்கிய நோக்கமாகும். மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 1952-ல் இந்திய அரசின் கல்வித் தீர்மானம் உருவானது. இதன் மூலம் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகள், மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் பாடத்திட்டத்தை அமுல்படுத்தியுள்ளன. இதில் ஹிந்தி போதனையும், ஹிந்தி கற்கவும் வசதி உள்ளது. கேந்திரிய வித்யாலயா அல்லது மத்திய பள்ளிகள் பாதுகாப்புத்துறை உட்பட மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரியும் அலுவலர்கள் நாடெங்கும் எந்த இடத்திற்கும் பணிமாற்றம் செய்யப்படும் நிலை உள்ளதால் அவர்களுடைய குழந்தைகள் எவ்வித பாதிப்பும் இல்லாமல் இடைநிலைக் கல்வியைத் தொடர இப்பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டன. இன்று நமது நாட்டில் 874 கேந்திரிய வித்யாலங்கள் உள்ளன.
திறந்த வெளிப் பள்ளி (Open School)
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தால் (CBSE) 1979-ல் நாட்டின் தொலைவிடங்களில் உள்ளோர் நலனுக்காக இது தொடங்கப்பட்டது. இது தொலை தூரக்கல்வி முறையைப் பின்பற்றி இடைநிலைக் கல்வி அளிக்கிறது. இங்கு பாடங்களைத் தபால் மூலம் அனுப்புதல், நேரடி வகுப்புகள். தொலைக்காட்சி வகுப்புகள் மூலம் பயிற்சி (B) C BSE பாடத்திட்டத்தின்படி தேர்வு நடத்தி சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.
பல்கலைக்கழகங்கள் (Universities)
நிகர் நிலைப்பல்கலைக்கழகங்கள் மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள் உட்பட 259 பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவை தவிர நிகர் நிலைப்பல்கலைக்கழகத் தகுதியுடன் 49 நிறுவனங்கள் உள்ளன. இந்தியாவில் 11089 கல்லூரிகளும், 74.18 லட்சம் மாணவர்களும், 3.42 லட்சம் பல்கலைக் கழக ஆசிரியர்களும் உள்ளனர். 1953 ல் நாடாளுமன்றச் சட்டத்தால் பல்கலைக்கழக மானியக்குழு நிறுவப்பட்டது. பல தன்னாட்சிக் கல்லூரிகள் பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அஞ்சல் வழிக் கல்வி பல பல்கலைக்கழகங்கள் 1962-ஆம் ஆண்டு முதல் அஞ்சல் வழிக்கல்வியை நடத்தி வருகின்றன. இன்று 60-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களால் இவைநடத்தப்படுகின்றன. இவை திறந்தவெளிப் பல்கலைக்கழகங்களாகச் செயல்படுகின்றன.
இந்திய தொழில் நுட்ப நிறுவனங்கள் (IT)
பொறியியல் மற்றும் பண்பாட்டு விஞ்ஞானத்தில் சிறந்து விளங்கும் நிறுவனங்கள் I.I.T. எனப்படும் இந்தியத் தொழில் நுட்ப நிறுவனங்கள் ஆகும். இவை கோரக்பூர், மும்பை, சென்னை, கான்பூர், பெங்களூர் மற்றும் டில்லியில் அமைந்துள்ளது.
கல்விச் சலுகைகள்
எல்லா மாநிலங்களிலும் ஆரம்பக் கல்வி முதல் மேல்நிலைக்கல்வி வரை இலவசமாக வழங்கப்படுகின்றது. மேல்நிலைக்கல்வி வரை பேருந்து மற்றும் புகை வண்டியில் பள்ளிக்கு இலவசமாக சென்று வர அனுமதி வழங்குகிறது. மேல்நிலைக்கல்வி வரை பிற்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடி குழந்தைகளுக்கு உணவு, இருப்பிடம், கல்வி இலவசமாக வழங்குகிறது. அத்துடன் அரசு மானியமும் வழங்குகிறது. இதைத் தவிர தொடக்க, இடைநிலை, உயர்நிலை, மேல்நிலைக் கல்வி வரை தகுதி உள்ளவர்களுக்கு உதவிச் சம்பளம் வழங்கப்படுகிறது. வளர்ந்து வரும் நாடுகளில் கல்வித் துறையில் இந்தியா விரைந்து முன்னேறும் நாடாக உள்ளது.
ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி பயிற்சி இயக்ககம், சென்னை
No comments:
Post a Comment