LARISSA WATERS ,
AUSTRALIA MINISTER FILED AMENDMENTS
WHILE FEEDING BREAST MILK
BORN 1977 FEBRUARY 8
தாய்ப்பால் அளித்தபடி மசோதா தாக்கல் செய்த அமைச்சர்! தாய்மைத் தருணம்
தாய்ப்பால்
பொது இடங்களிலும், பேருந்துகளிலும் எத்தனையோ அம்மாக்கள் பசியால் அழும் தங்களின் குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டமுடியாமல் தவிப்பதைப் பார்த்திருக்கிறோம். அதை தர்மசங்கடமாக அவர்கள் நினைப்பதற்குக் காரணம், பொது இடங்களில் தாய்ப்பால் புகட்டுவதை இந்தச் சமூகம் அநாகரிகமாகப் பார்க்கும் மனோபாவம்தான். நம் நாட்டில் மட்டுமல்ல, மேலை நாடுகளிலும் இதுவே நிலை. இத்தகைய மனோபாவம் ஆண்களிடம் மட்டும் இருப்பதில்லை; பெண்களிடமும் இருக்கிறது. ஆனால், இந்த மனப்போக்கை உடைக்கும் விதமாக அமைந்திருக்கிறது ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் நடந்த ஒரு சம்பவம்.
ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில், லரிசா வாட்டர்ஸ் (Larissa Waters) என்ற பெண் அமைச்சர், நுரையீரல் பிரச்னையால் பாதிக்கப்படும் நிலக்கரி தொழிலாளர்கள் பற்றியும், அவர்களுக்கான தீர்வுகள் தொடர்பாகவும் மசோதாவைத் தாக்கல்செய்தவாறே, தனது மூன்று மாத குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டியது, சமூகவலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. இதனை சிலர் பாராட்டியும், சிலர் விமர்சித்தும் கருத்துகளைத் தெரிவித்தனர். மேலும் சிலர் வாட்டர்ஸை ‘ட்ரோல்’ செய்தனர். ஆனால் அவற்றையெல்லாம் வாட்டர்ஸ் கண்டுகொள்ளவில்லை. மேலும், ஒரு மசோதாவைத் தாக்கல் செய்தவாறே ஒரு பெண் அமைச்சர் தனது குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டியது, வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது.
கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு முன், வாட்டர்ஸ் இருக்கும் ‘கிரின்ஸ்’ கட்சியைச் சேர்ந்த பெண் அமைச்சர் சாரா-ஹான்சன் -யங், தனது குழந்தையுடன் நாடாளுமன்றத்துக்குச் சென்றபோது அனுமதிக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து, பெண் அமைச்சர்கள் தங்களின் குழந்தையை நாடாளுமன்றத்துக்கு அழைத்துவருவது குறித்து பல்வேறு விவாதங்கள் நடத்தப்பட்டன. அதுவரை நாடாளுமன்ற வளாகத்தில் குழந்தைகளை அழைத்துவரத் தடை விதித்திருந்த ஆஸ்திரேலிய நாடாளுமன்றம், 2016ம் ஆண்டு பெண் அமைச்சர்கள் தங்களின் குழந்தைகளை அழைந்துவர அனுமதி அளித்தது.
வாட்டர்ஸ் தனது மூன்று மாதப் பெண் குழந்தை அலியா ஜாய் கெட்ஸை நாடாளுமன்றத்துக்குக் கடந்த மே மாதத்திலிருந்தே தூக்கிவருகிறார். ''நாடாளுமன்றத்தில் தாய்ப்பால் அருந்தும் முதல் குழந்தை என் மகள் என்பதைப் பெருமையாகக் கூறிக்கொள்கிறேன்” என்றும் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், லரிசா வாட்டர்ஸ் மசோதா தாக்கல் செய்த பின்பு தனது டிவிட்டர் பக்கத்தில், “நாடாளுமன்றத்தில் ஒரு மசோதாவைத் தாக்கல் செய்தேன், தாய்ப்பால் கொடுத்தவாறே! என் மகளை ஆசீர்வதியுங்கள்” என நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருந்தார். மேலும், இந்தச் சம்பவம் குறித்து அவர் கூறுகையில், “நாடாளுமன்றத்தில் நிறையப் பெண்கள் இருக்கவேண்டும். அப்போதுதான் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதெல்லாம் ஒரு செய்தியாகாமலிருக்கும்” என்று தெரிவித்தார்.
இதேபோல், சில மாதங்களுக்கு முன், ஐஸ்லண்ட்டைச் சேர்ந்த ஒரு பெண் அமைச்சரும், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தனது குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டியவாறு, தான் தாக்கல் செய்த மசோதாவுக்கு ஆதரவாகப் பேசியது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment