Tuesday 19 June 2018

PITHA MAGAN - REAL STORY OF A MAN, LIVING IN CEMETERY








PITHA MAGAN - REAL STORY OF 
                     A MAN, LIVING IN CEMETERY


பிதாமகன் திரைப்படம் இவருடைய வாழ்க்கையை 
அடிப்படையாய் கொண்டது



ஆயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து பிணங்கள் எரிந்து கொண்டே யிருக்கும் சுடுகாடு என்பார்கள் மதுரை தத்தனேரி சுடுகாட்டை. மின் மயானம் இருந்தாலும்கூட, சடங்கு, சம்பிரதாயங்களில் அதிக நாட்டமுள்ள வர்கள், பாரம்பரிய முறைப்படியே ‘காரியம்’ செய்ய விரும்புவதால், ஐம்பது சதவீத உடல்கள் இன்னமும் இங்கு பழைய முறைப்படியே எரியூட்டப்படுகின்றன. 24 மணி நேரமும் இயங்கும் இந்தச் சுடுகாட்டிற்காக, மதுரை மாநகராட்சி 3 ஷிஃப்ட்டாக பணியாளர்களை பணியமர்த்தியுள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

இவர்களுக்கு மத்தியில், கோயில் களுக்கு காளைகளை நேர்ந்து விடுவதைப் போல இந்தச் சுடுகாட்டிற் கென்றே நேர்ந்துவிடப்பட்டிருக்கிறார் ஒருவர். 50 வயதுக்குரிய தோற்றம். கருத்த உருவம். கண்கள், மூக்கைத் தவிர முகத்தை முழுக்க ஆக்கிரமித் திருக்கும் கருகரு தாடி. அழுக்குச் சட்டை. உடலில் அங்குலம் தப்பாத காயத்தழும்புகள். திடீரென பார்த்தால் பெரியவர்களும் மிரண்டுபோகும் தோற் றம். இத்தனை அடையாளங்களுடன், கோடை விடுமுறைக்கு பாட்டி வீட்டுக்கு வந்த பள்ளிச் சிறுவனைப் போல தத்தனேரி சுடுகாட்டில் ஜாலியாகச் சுற்றிக்கொண்டிருக்கிறார் இந்த மனிதர்.

குரங்கை கல்லால் அடிச்சதால்...

மயானத்தின் மூத்த ஊழியர்களிடம் இந்த மனிதரைப் பற்றி பேச்சுக்கொடுத் தோம். “சார், பிறக்கும்போதே இவன் கொஞ்சம் வித்தியாசமான உருவத்துல இருந்திருக்கான். கேட்டா, இவன் கர்ப்பத்துல இருக்கும்போது அவங்க அப்பா, குரங்கை கல்லால் அடிச்சதாக வும் அதனால்தான் இப்படியொரு பையன் பிறந்ததாகவும் நம்ப முடியாத ஒரு கதையச் சொல்றாங்க.
வளர வளர இவனுக்கு முகத் தோற்றம் விகாரமாகிக்கிட்டே போன தால, ஏரியாப் பசங்க யாரும் இவனோட சேரலை;

வீட்லயும் எங்கிட்டாவது போய்த்தொலை என்று விரட்டிட்டாங்க.
வீட்லருந்து நடக்கிற தூரம்கிறதால இங்க வந்துட்டான். சமாதியிலயும், பிணம் எரிக்கிற இடத்துலயும், செத்த வங்க ஞாபகார்த்தமா யாராச்சும் படையல் போடுவாங்க. நாய், காக்காய் களை வெரட்டிட்டு படையலை எடுத்துச் சாப்பிடுவான். பிணத்து மேல போடுற மாலையை எடுத்து ஆடுகளுக்குத் தின்னக்கொடுப்பான். எங்க வேலைக் கும் ஒத்தாசையா இருப்பான். அதனால நாங்களும் சாப்பிடுறதுக்கு ஏதாவது கொடுப்போம்.
ஃபுல் கட்டு கட்டிக்குவான்

சுடுகாட்டுல சோனை சாமி, சுடுகாட்டுக் காளி கோயில் இருக்கு. ரொம்ப துடியான சாமிங்கிறதால வெள்ளி செவ்வாய்க் கிழமைகள்ல பொங்கல் வைக்க யாராச்சும் வருவாங்க. அவங்க போடுற அன்னதானம் தான் இவனுக்கு விருந்து. மறுநாளைக்கும் சேர்த்து சாப்பிடுறது மாதிரி ஃபுல் கட்டு கட்டிக்குவான். அப்ப இவனப் பார்த்து பரிதாபப்பட்டு காசு கொடுக்கிறவங்களும் இருக்காங்க.” என்றார்கள் மயான ஊழியர்கள்.

அவர்களில் ஒரு ஊழியர் “இவம் பேரு கரிக்கோல்ராஜ். எங்க சாதி கெடையாது. பார்க்கத்தான் வயசான வனாத் தெரியுது. வயசு நாற்பதுக் குள்ளதான் இருக்கும். இவனோட பொறந்தவங்க எல்லாம் குடும்பம் குழந்தைங்கன்னு நல்லாயிருக்காங்க. இவனத்தான் கண்டுக்காம விட்டுட் டாங்க. திடீர்னு இவனுக்கு உடம்புல புண்ணு புண்ணா வரும். மீன் செதில் மாதிரி உதிர ஆரம்பிக்கும். சுடுகாட்டுச் சாம்பல், கோயில் மஞ்சளைப் பூசியே புண்ணைப் பூராம் அவனே ஆத்திக்கிடுவான்.

இயக்குநர் பாலா உதவி

சினிமா இயக்குநர் பாலா தன்னுடைய அப்பா இறந்தபோது சுடுகாட்டிற்கு வந்திருந்தார். அப்போது இவனுக்குப் பண உதவி செஞ்சார். அதேமாதிரி நடிகர் ஜே.கே.ரித்தீஷ், மலையாள குள்ள நடிகர் பக்ரூ உள்ளிட்டவங்களும் உதவி செஞ்சாங்க. இவன் கையில காசு இருக்குன்னு தெரிஞ்சா, கூடப் பொறந்தவங்க அதை வாங்கிக்க வந்தி டுவாங்க.இவனும் சிரிச்சிக்கிட்டே கொடுத்தி டுவான். சாப்பாடு வாங்கத் தவிர பணம் எதுக்குமே உதவாதுன்னு நினைச்சுக்குவான் போல.100 ரூபாய்க்கு மேல எந்த நோட்டுக் கும் அவனுக்கு மதிப்பு தெரியாது. அதுக்கான தேவையும் கெடையாது. அவன் போட்டிருக்கிற துணிமணி கூட மத்தவங்க வாங்கிக்கொடுத்தது தான்.

இவனோட நடை, உடை, மூர்க்கத் தனம் எல்லாம் ‘பிதாமகன்’ படத்து விக்ரமை அப்படியே ஞாபகப்படுத்தும். அதனால இவனை எல்லாரும் சித்தன்னு தான் கூப்பிடுவாங்க. ஆள் ரொம்ப சாதுதான். ஆனா, வம்பிழுத்தால் பிடிக்காது. ஒருதடவை சின்னப்பசங்க கல்லெடுத்து அடிச்சாங்க, கோவத்துல சுடுகாட்டு நின்ன ஆம்புலன்ஸ் கண்ணாடியப் பூராம் உடைச்சிட்டாப்ல” என்று சொன்னார்.

சரக்க ஊத்திவிட்டு...
கரிக்கோல்ராஜிடம் பேசினோம். நாம் என்ன சொல்கிறோம் என்பதை புரிந்துகொள்கிறார். ஆனால், அவருக் குப் பேச முடியவில்லையா அல்லது அதிகம் பேச விரும்பவில்லையா என்று தெரியவில்லை. மவுன மாகவே இருக்கிறார். “குழந்தையாக இருக்குறப்ப நல்லா பேசித்திரிந்த பையன்தான்.

சுடுகாட்டுக்கு வந்த பிறகு பேச்சு குறைஞ்சி போச்சு. போதாதுக்கு, சுடுகாட்டுல உட்கார்ந்து தண்ணியடிக்கிற பசங்க வேற இவனுக்கும் ஊத்திவிட்டு ஊத்திவிட்டு ஒரு மாதிரி ஆக்கிட்டாங்க. பேச்சு எங்க போச்சுன்னே தெரியலை” என்கிறார்கள் கரிக்கோல்ராஜை நீண்ட நாட்களாக கவனித்து வருபவர்கள்.

‘‘தொடர்ந்து 35 ஆண்டாக சுடுகாட்டி லேயே உண்டு, அங்கேயே படுத்து உறங்கும் இந்த சித்தன் பிணம் எரிப் பதில் கெட்டிக்காரன். பிணத்தைப் பார்த்தே, எத்தனை கிலோ விறகு தேவை என்று துல்லியமாகச் சொல்லிடு வான். மாரடைப்பால் இறந்தவர்கள் உடலில் கொழுப்பு நிறைய இருக்கும் என்பதாகவும் அதனால் விறகை குறைத்துக் கொள்ளலாம் என்றும் நோயில் இழுபட்டுச் செத்தவர்களின் உடலில் கொழுப்பே இருக்காது, அதனால் விறகை அதிகம் வைத்துக் கொள்ளலாம் என்றும் தன் அனுபவ ‘லாஜிக்’ ஒன்றைச் சொல்லுவான்’’ என்று சித்தனை மெச்சுகிறார்கள் மயான ஊழியர்கள்.

“ஏம்ணே உங்களுக்குப் பணம் சம்பாதிக்கணும், கல்யாணம் பண்ணிக் கணும்னு ஆசையே இல்லையா?” என்று கேட்டால் முத்து படத்தில் வருகிற ஜமீன்தார் ரஜினிகாந்த் சாயலில் சத்தமாகச் சிரிக்கிறார் சித்தன்!

No comments:

Post a Comment