Wednesday 20 June 2018

NICHOLA MACHIYAVALLI ,PHILOSOPHER OF POLITICS BORN 1469 MAY 3,1527,JUNE 21





NICHOLA MACHIYAVALLI ,PHILOSOPHER OF POLITICS BORN 1469 MAY 3,1527,JUNE 21


நவீன அரசியல் சிந்தனை சிற்பி மாக்கியவெல்லி
மறைவு சூன் 21, 1527


நிக்கோலோ மாக்கியவெல்லி எனச் சுருக்கமாக அறியப்படும் நிக்கோலோ டி பர்னாடோ டெயி மாக்கியவெல்லி (Niccolò di Bernardo dei Machiavelli - மே 3, 1469 – சூன் 21, 1527) ஒரு இத்தாலிய இராசதந்திரியும், அரசியல் மெய்யியலாளரும், இசைக் கலைஞரும், கவிஞரும், நாடகாசிரியரும் ஆவார்.

மக்கியவெல்லி இத்தாலிய மறுமலர்ச்சியின் முக்கியமான ஒருவரும், புளோரன்சு குடியரசின் ஊழியருமாக இருந்தார். 1498 ஆம் ஆண்டில் சவனரோலா வெளியேற்றப்பட்டு மரணதண்டனைக்கு உள்ளானபோது, பேரவை கூடி மாக்கியவெல்லியை புளோரன்சுக் குடியரசின் இரண்டாம் காப்பகத்தின் (Chancery) செயலராகத் தெரிவு செய்தது.

இளவரசன் (The Prince) என்னும் ஒரு சிறிய ஆக்கத்துக்காகவே இவர் கூடிய பெயர் பெற்றார். இது சில வேளைகளில் உண்மையிய அரசியல் கோட்பாடு எனக் குறிப்பிடப்படுவது உண்டு. இந்த ஆக்கமும், விரிவான இன்னொரு ஆக்கமான லெவி பற்றிய சொற்பொழிவுகள் (Discourses on Livy) மற்றும் புளோரன்சின் வரலாறு (History of Florence) என்னும் ஆக்கமும் அவர் இறந்த பின்னர் 1530களிலேயே வெளியிடப்பட்டன.

ஓர் அரசன், தன் அதிகாரத்தை நிலை நாட்டவும், மேன்மேலும் பெருக்கவும், அவன் வஞ்சகம், சூழ்ச்சி, பொய்மை ஆகியவற்றை ஈவிரக்கமற்ற அடக்குமுறையுடன் இணைத்துக் கையாள வேண்டும் என்ற கொடூரமான ஆலோசனையைக் கூறியதற்காக வசைப் பெயர் எடுத்த இத்தாலிய அரசியல் தத்துவஞானி நிக்கோலா மாக்கியவெல்லி ஆவார்.

இவரை ஒரு சாரார் பழி பாவங்களுக்கு அஞ்சாத பாதகன் என்று பழித்தனர்; இன்னொரு சாரார் கூர்த்த மதி கொண்ட உலகியல் உண்மையைத் துணிவுடன் உள்ளவாறே கூறிய உலகியல்வாதி எனப் போற்றினார். எவ்வாறாயினும் தத்துவஞானிகளாலும், அரசியல் வாதிகளாலும் உன்னிப்பாகப் படிக்கப்படும் நூல்களைப் படைத்த மிகச்சில எழுத்தாளர்களுள் மாக்கிய வெல்லியும் ஒருவர் என்பதில் ஐயமில்லை.

இத்தாலியிலுள்ள பிளாரன்சில் 1469 ஆம் ஆண்டில் மாக்கியவெல்லி பிறந்தார். இவருடைய தந்தை ஒரு வழக்குரைஞர். அவர் ஓர் உயர்குடியினராயினும், செல்வ நிலையில் சீராக இருக்கவில்லை. இத்தாலிய மறுமலர்ச்சி இயக்கம் உச்சக் கட்டத்தில் இருந்தபோதி மாக்கியவெல்லி வாழ்ந்தார். அவருடைய ஆயுட்காலம் முழுவதிலும், இத்தாலி பல சிறிய சிற்றரசுகளாகப் பிளவுபடடுக் கிடந்தது.

அதே சமயம், பிரான்ஸ், ஸ்பெயின், இங்கிலாந்து போன்றவை ஒருங்கிணைந்த நாடுகளாக விளங்கின. எனவே, மாக்கியவெல்லியின் காலத்தில் இத்தாலி, பண்பாட்டில் உயர்ந்திருந்த போதிலும், இராணுவ வலிமையில் மிகவும் ஆற்றல் குன்றியிருந்ததில் வியப்பில்லை.

மாக்கியவெல்லியின் இளமைப் பருவத்தின் போது வீறார்ந்த லோரன்சோ என்ற புகழ் பெற்ற மெடிசி அரசர் பிளாரன்சை ஆண்டு வந்தார். ஆனால், 1492 ஆம் ஆண்டில் லோரன்சோ இறந்து விடவே, சில ஆண்டுகளுக்குப் பிறகு மெடிசி குடும்பத்தினர் பிளாரன்சிலிருந்து விரட்டியடிக்கப்பட்டனர். பிளாரன்ஸ் ஒரு குடியரசாகியது.

1498 ஆம் ஆண்டில் 29 வயதான மாக்கியவெல்லி பிளாரன்ஸ் குடியரசுக்காகப் பணி புரிந்தார். அக்குடியரசின் சார்பில் தூதுப் பணியாக பிரான்ஸ், ஜெர்மனி நாடுகளுக்குச் சென்று வந்தார். இத்தாலி யிலும் விரிவாகச் சுற்றுப் பயணம் செய்தார்.

பிளாரன்ஸ் குடியரசு 1512 ஆம் ஆண்டில் கவிழ்க்க ப்பட்டது. மெடிசி மரபினர் மீண்டும் ஆட்சிக்கு வந்தனர். மாக்கியவெல்லியின் அவரது பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அடுத்த ஆண்டில், புதிய மெடிசி ஆட்சியாளர்களுக்கு எதிராகச் சதி செய்ததாக அவர் கைது செய்யப்பட்டார். அவரைச் சித்திரவதை செய்தனர். எனினும், அவர் தாம் குற்றமற்றவர் என்று வலியுறுத்தினார். அதே ஆண்டில் அவர் விடுதலையடைந்தார். அதன் பின்பு, பிளாரன்சுக்கு அருகிலிருந்த சான்காசியோனோ என்ற ஒரு பண்ணையில் அவர் தனிமையில் வாழ்ந்து வந்தார்.

அடுத்த 14 ஆண்டுகளில் மாக்கியவெல்லி ஏராளமான நூல்களை எழுதினார். அவற்றுள் "இளவரசன்" (1513), டைட்டஸ் லிவியசின் முதல் பத்து ஏடுகளின் மீதான ஆய்வுரை" ஆகிய இரண்டும் மிகவும் புகழ் பெற்றவை.

"போர்க்கலை" "பிளாரன்ஸ் வரலாறு", "லா மாண்ட்ராகவோ லா" (இன்னும் நடக்கப்படும் ஒரு சிறந்த நாடகம்) ஆகியவை அவருடைய வேறு முக்கிய படைப்புகளில் குறிப்பிடத்தக்கனவாகும். இந்த நூல்கள் அனைத்திலும் அவருக்குப் பெரும்புகழ் தேடித் தந்தது. "இளவரசன்" என்ற நூலேயாகும்.

இவருடைய தத்துவ நூல்கள் அனைத்திலும் படிப்பதற்கு மிக எளிதாகவும், இனிமையாகவும் அமைந்துள்ளது. இந்நூல் மாக்கியவெல்லி திருமணமானவர். அவருக்கு ஆறு குழந்தைகள் இருந்தனர். அவர் 1527 ஆம் ஆண்டில், தமது 58 ஆம் வயதில் காலமானார்.

ஓர் அரசுத் தலைவருக்கு நடைமுறைக்கு உகந்த அறிவுரைகளைக் கூறும் ஒரு பாட நூலாக "இளவரசன்" நூலைக் கொள்ளலாம். இந்த நூலில் வலியுறுத்தப்படும் அடிப்படைக் கருத்து இதுதான்; "ஆட்சியைப் பிடிக்க விழையும் ஓர் இளவரசன், அறநெறிக் கொள்கைகளை அடியோடு புறக் கணித்து விட வேண்டும்.

அனைத்திற்கும் மேலாக, ஓர் அரசு மிகுந்த ஆயுத பலம் கொண்டதாக இருக்க வேண்டும். தன் சொந்த நாட்டுக் குடிமக்களிலிருந்து திரட்டப்பட்ட இராணுவம் மட்டுமே நம்பத் தக்கது. கூலிப் படைகளை அல்லது மற்ற அரசுகளில் படைகளை நம்பியிருக்கும் அரசு எப்போதும் ஆற்றலற்றதாகவும், ஆபத்துக்குள்ளாகக் கூடியதாகவே இருக்கும்.

இளவரசன் தன் குடி மக்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என மாக்கியவெல்லி அறிவுறுத்துகிறார். இல்லையெனில், ஆபத்துக் காலத்தில் அவனுக்குப் புகலிடம் இருக்காது. சில சமயம், ஒரு புதிய அரசன், தன் அதிகாரத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, குடிமக்கள் விரும்பாத சில செயல்களைச் செய்ய வேண்டியிருக்கும் என்பதை மாக்கியவெல்லி உணர்த்துகிறார்.

எனினும், "...........ஆட்சியைப் பிடித்ததும், ஓர் அரசன் எல்லாக் கொடுமைகளையும் உடனடியாகச் செய்து முடித்துவிட வேண்டும். அன்றாடம் நிகழும்படி செய்யலாகாது. குடிமக்களுக்கான நன்மைகளை, அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அனுபவிக்கும் வகையில், சிறிது சிறிதாக அளிக்க வேண்டும்" என்று அவர் ஆலோசனை கூறுகிறார்.

ஓர் இளவரசன் வெற்றிகரமாக ஆட்சிபுரிய வேண்டுமானால், தன்னைச் சுற்றித் திறமையும், பற்றுறுதியும் வாய்ந்த அமைச்சர்களை வைத்துக் கொள்ள வேண்டும். அதே சமயம், முகப் புகழ்ச்சி செய்பவர்களைத் தவிர்த்து ஒதுக்கி விட வேண்டும் என்று மாக்கியவெல்லி எச்சரிக்கை செய்கிறார். அதை எப்படிச் செய்ய வேண்டும் என்பதையும் அவர் கூறுகிறார். "இளவரசன்" நூலில் 17 ஆம் அத்தியாயத்தில் இளவரசன் அன்புக்குப் பாத்திரமாவது நல்லதா, அச்சத்தை விளைவிப்பது நல்லதா என்பது குறித்து மாக்கியவெல்லி விவாதிக்கிறார்:

"இதற்கு விடை இது தான். ஒருவர் அன்புக்கு ஆட்படவும் வேண்டும்; அச்சத்தை விளைவிக்கவும் வேண்டும். ஆனால், இவ்விரண்டில் எது நல்லது எனக் கேட்பின், அன்புக்கு ஆட்படுவதைவிட அச்சத்தை விளைவிப்பதே பாதுகாப்பானது. ஏனெனில், அன்பு என்பது சங்கிலித் தொடர் போன்ற கடப்பாடுகளைக் கொண்டது. மனிதர் தன்னலம் வாய்ந்தவராக இருப்பதால் அவர்களின் நோக்கங்கள் நிறைவேறியதும் அன்பும் அறுந்து போய்விடுகிறது.

ஆனால், உறுதியாகத் தண்டனை கிடைக்கும் என்ற அச்சுறுத்தல் வாயிலாக அச்ச உணர்வு என்றென்றும் நிலைபெறுகிறது".இதன் 18 ஆம் அத்தியாயம் "இளவரசர்கள் நம்பிக்கையைப் பேணுவதற்கு வழிமுறை" என்ற தலைப்புடையது. இதில் மாக்கியவெல்லி இவ்வாறு கூறுகிறார்...." நம்பிக்கையைக் காப்பாற்றுவது தமது நலனுக்கு எதிரானதாக இருக்கும் என்றால், ஒரு விவேகமுள்ள அரசன் நம்பிக்கையைக் காப்பாற்றாமல் இருத்தலே நலம்...." அவர் மேலும் சொல்கிறார்.

ஓர் இளவரசன் தன் வாக்குறுதியை நிறைவேற்றா ததற்குச் சட்டப்படியான காரணங்களைக் கொண்டே போதிய சாக்குப் போக்குகள் கூறலாம். ஏனெனில், மனிதர்கள் மிகவும் அப்பாவிகள்; அவர்களை அப்போதைய வாதங்களுக்கு அடிபணிய வைப்பது எளிது. எனவே, இரண்டகம் செய்யும் எவரும் தாம் வஞ்சிக்கப்படுவதற்கு அனுமதிக்கிறவர்களை என்றென்றும் ஏமாற்றிக் கொண்டே இருக்கலாம்; ஆகவே, மற்றவர்களின் வாக்குறுதிகளை இளவரசன் எப்பொழுதும் ஐயறவுக் கண் கொண்டு பார்க்க வேண்டும்" என்று மாக்கியவெல்லி அறிவுறுத்துகிறார்.


இந்த "இளவரசன்" நூலை "சர்வாதிகாரிகளுக்கு வழிகாட்டி" என்றும் அழைப்பதுண்டு. மாக்கியவெல்லி பொதுவாகச் சர்வாதிகாரத்தை விடக் குடியரசு முறை அரசாங்கத்தையே ஆதரித்தார் என்பது அவருடைய வாழ்க்கையிலிருந்தும், மற்ற நூல்களிலிருந்தும் தெரிகிறது. ஆனால், இத்தாலியின் அரசியல் மற்றும் இராணுவ கையாலகத்தனம் கண்டு அவர் ஆத்திரம் கொண்டார்.

நாட்டை ஒற்றுமைப்படுத்துவதற்கும், நாட்டை நாசப்படுத்தும் பல்வேறு வல்லமை வாய்ந்த ஓர் இளவரசன் தேவை என அவர் விரும்பினார். இளவரசன் நடைமுறையில் எப்போதும் சீற்றங் கொள்பவராகவும், ஈவிரக்கமற்றவராகவும் இருக்க வேண்டும் என்று மாக்கியவெல்லி வலியுறுத்தி யபோதிலும், அவர் தம் வாழ்வில் கனவியற் போக்குடையவராகவும் ஆழ்ந்த நாட்டுப் பற்று வாய்ந்தவராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

அவர் தீவிரமாகப் பரிந்துரைத்தது போல் வஞ்சனை செய்வதில் அத்துணை தேர்ந்தவராக இருக்கவில்லை.
மாக்கியவெல்லி போல் கடுமையான கண்டன த்திற்குள்ளான அரசியல் தத்துவஞானிகள் மிகச் சிலரே, நெடுங்காலமாக, அவர், "மனித உருக்கொண்ட பேய்" என்று பழிக்கப்பட்டார். வஞ்சகத்தையும், தந்திரத்தை யும் குறிப்பதற்கு அவருடைய பெயர் கையாளப்பட்டு வந்தது. மாக்கியவெல்லியின் போதனைகளை நடைமுறையில் தீவிரமாகக் கையாண்டவர்களே அவரை வன்மையாகக் கண்டித்தது வேடிக்கையாக இருந்தது. இவர்களின் கபட நாடகத்தை மாக்கிய வெல்லியே கூட கொள்கையளவில் ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார்.

அறநெறிக் காரணங்கள் காட்டி மாக்கியவெல்லி கண்டிக்கப்பட்டதைக் கொண்டு அவர் செல்வாக்குப் பெற்றிருக்கவில்லை எனக்கூறி விட முடியாது. அவர் கூறிய கருத்துகள் அவருடைய சொந்தக் கருத்துகள் அல்ல என்று ஒரு சாரார் கூறுவர். இது ஓரளவுக்கு உண்மையே. புதிய கொள்கை எதனையும் கூறவில்லை என மாக்கியவெல்லியே அடிக்கடிக் குறிப்பிட்டுள்ளார். நினைவுக் கெட்டாத மிகப் பழங்காலம் முதற்கொண்டு, மாபெரும் வெற்றி பெற்ற பல இளவரசர்கள் ஏற்கனவே வெற்றிகரமாகக் கையாண்ட உத்திகளைத்தான் தாம் உரைப்பதாக அவர் கூறினார்.

உண்மையைக் கூறின், மாக்கியவெல்லி தாம் கூறும் கருத்துகளுக்குப் பொருத்தமான எடுத்துக்காட்டுகளைப் பண்டைகால வரலாற்றிலிருந்தும், அண்மைக் கால இத்தாலிய நிகழ்ச்சிகளிலிருந்தும் காட்டுவதைக் காண்கிறோம். "இளவரசன் நூலில் மாக்கியவெல்லி யின் பாராட்டுதலைப் பெறும் சீசரே போர்ஜியா தமது தந்திரங்களை மாக்கிவெல்லியிடமிருந்து கற்றுக் கொள்ளவில்லை. மாறாக, போர்ஜியாவிடமிருந்துதான் மாக்கியவெல்லி அவற்றைக் கற்றுக் கொண்டார்.

மாக்கியவெல்லியைப் பகிரங்கமாகப் பாராட்டிய சில அரசியல் தலைவர்களில் இத்தாலியச் சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினியும் ஒருவர். இவரைத் தவிர இன்னம் ஏராளமான புகழ் பெற்ற அரசியல் தலைவ ர்கள் நூலைத் தன் தலையணைக்கு அடியில் வைத்துக் கொண்டே உறங்கினர் என்பர். ஜெர்மன் சர்வாதிகாரி ஹிட்லர், ரஷியச் சர்வாதிகாரி ஸ்டாலின் ஆகியோ ரைப் பற்றியும் இவ்வாறு கூறுவதுண்டு. எனினும் மாக்கியவெல்லியின் சாணக்கியத் தந்திரங்கள், "இளவரசன்" நூல் வெளியாவதற்கு முன்பை விடத் தற்கால அரசியலில் அதிகமாகக் கையாளப்படுகி ன்றனவா என்பதைத் தெளிவாகக் கூற இயலவில்லை.

அந்த ஒரே காரணத்திற்காகவே, இந்த நூலில் மாக்கியவெல்லிக்கு உயரிடம் அளிக்கப்படவில்லை. ஆனால், அரசியல் நடைமுறைகளில் மாக்கியவெல்லியின் பாதிப்பு தெளிவாகத் தெரியவில்லையெனினும், அரசியல் கோட்பாட்டின் மீது அவர் பெற்ற பெருஞ்செல்வாக்கினை மறுப்பதற்கில்லை. பிளேட்டோ, புனித அகஸ்டைன் போன்ற பண்டைய எழுத்தாளர்கள் அரசியலை அறிவியலுடன் அல்லது இறைமையிலுடன் இரண்டற இணைத்திருந்தார்கள்.

மாக்கியவெல்லி, வரலாற்றையும் அரசியலையும் முற்றிலும் மனித நோக்கில் விவாதித்தார்; அறநெறி நோக்கங்களை அவர் அறவே புறக்கணித்து விட்டார். அவர், "மக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?" என்ற மைய வினாவை எழுப்பவில்லை; மாறாக, "அவர்கள் உள்ளபடிக்கு எவ்வாறு நடந்து கொள்கிறார்கள்?" என்ற கேள்வியை எழுப்பினார்.

"யார் அதிகாரம் கொண்டிருக்க வேண்டும்?" என அவர் கேட்கவில்லை; மாறாக, "ஆட்கள் உள்ளபடிக்கு எவ்வாறு அதிகாரத்தைப் பெறுகிறார்கள்?" என்று அவர் வினவினார். அந்த அரசியல் கோட்பாடு முன்பைவிட இன்று மிகுந்த செயல்முறை நோக்குடன் விவாதிக்கப்பட்டு வருகிறது என்றால், அதற்கு ஓரளவுக்குக் காரணம் மாக்கியவெல்லியின் செல்வாக்கே.

நவீன அரசியல் சிந்தனையின் முக்கிய நிறுவனர்களில் ஒருவர் மாக்கியவெல்லி எனக் கருதுவது முற்றிலும் பொருத்தமேயாகும்.

No comments:

Post a Comment