Friday 22 June 2018

THE LIVES OF SEVERAL MAHARAJAS,WIFES,AND CONCUBINES





THE LIVES OF SEVERAL 
MAHARAJAS,WIFES,AND CONCUBINES



'அகம், புறம் , அந்தப்புரம்' 



நம்மவர்க்கு எப்பொழுதுமே அந்தப்புரம் என்ற வார்த்தையில் ஒரு சிலிர்ப்பு இருக்கத்தான் செய்கிறது :) . எப்பொழுதுமே பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை தெரிந்து கொள்வதில் அனைவருக்கும் ஆர்வம் இருக்கத்தான் செய்கிறது. அவர்களும் எப்படித்தான் வாழ்ந்திருப்பார்கள் , வாழ்கிறார்கள் என்று தெரிந்துகொள்வதில் ஆர்வம்.

'அகம்,புறம், அந்தப்புரம்' - குமுதம் ரிப்போட்டரில் இரண்டு வருடங்கள் தொடராக வந்தது. எழுதியவர் முகில் . நானும் இந்த புத்தகத்தை வாங்கி கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிவிட்டாலும் இப்பொழுதான் படிக்க நேரம் கிடைத்தது. நமக்கு எப்பொழுதுமே ராஜா கதைகள் என்றாலே ஒரு ஈர்ப்பு உண்டு. பாட்டி சொல்லும் ராஜா கதைகள் வீரதீர சாகச கதைகளாகவோ அல்லது நீதிக் கதைகளாகவோ இருக்கும். பத்தாம் வகுப்பு பாடத்தில் statistics ஆகவும், அசோகர் மரம் நட்டார் , குளம் வெட்டினார் என்றும் இருக்கும். அதையும் தாண்டி ராஜாக்களை பற்றி நாம் அறிய முடிந்ததில்லை. அவர்களுக்கும் ஒரு தனிப்பட்ட வாழ்க்கை இருந்தது அதில் அவர்கள் எப்படி இருந்தார்கள் என்று பெரும்பாலும் நாம் அறிய முடிந்ததில்லை. அதை இந்த புத்தகம் தீர்த்து வைக்கிறது. இந்த புத்தகம் ஒரு ராஜாவின் அரண்மனையின் அடுப்படியிலிருந்து அனுமதி மறுக்கப்பட்ட அந்தப்புரம் வரை அனைத்துப் பகுதிகளுக்கும் நம்மை அழைத்துச் செல்கிறது.


இந்த புத்தகத்துக்கான தலைப்பை நான் நிச்சயம் பாராட்டுவேன். ஆயிரம் பக்கத்து புத்தகத்தின் உள்ளடக்கத்தை மூன்றே வார்த்தைகளில் சொல்லிவிடுகிறது 'அகம்,புறம்,அந்தப்புரம்'. அகத்துக்கும் அந்தப்புரத்துக்கும் 66% மும் புறத்துக்கு 33% மும் கச்சிதமாகக் கொண்டிருக்கிறது. புத்தகத்தின் நடை - எதார்த்தமான நடை. எளிய புரிதல் உண்டு. ரொம்பவே ஜனரஞ்சகமானது. ஆனால் சில நேரங்களில் அந்த ஜனரஞ்சகமே இது எந்த அளவிற்கு உண்மை, எவ்வளவு கற்பனை என்பதை புரிந்து கொள்வதற்கு கஷ்டமாகிறது. எனக்கு எந்த ஒரு வரலாற்றுத் தகவலும் உண்மைக்கு மிக அருகில் இருக்க வேண்டும். ஜனரஞ்சகம் என்பதற்காகக் கூட நான் அதை சமரசத்திற்கு உள்ளாக்கமாட்டேன். இந்த புத்தகத்தில் வரும் வசனங்கள் எந்த அளவிற்கு உண்மையாக இருக்க முடியும் என்று தெரியவில்லை. இருந்தாலும் வரலாற்றின் மீது சாமானியர்க்கும் ஈர்ப்பை ஏற்ப்படுத்த இது எல்லாம் தேவைப்படுகிறது.

இந்த புத்தக்கத்தைப் பற்றிப் பார்பதற்கு முன் அது நடந்த காலகட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம். இந்த புத்தகம் சமஸ்தானத்து மகாராஜாக்களைப் பற்றியது. அதாவது பிரிட்டாஷிரின் ஆட்சியின் கீழ் சுமார் 1800 முதல் 1950 வரை இருந்த மகாராஜாக்களைப் பற்றியது. இந்தியாவில் அப்பொழுது மொத்தம் 536 சமஸ்தானங்கள் இருந்தன. அவை அனைத்தும் பிரிட்டிசாருக்கு கட்டுப்பட்டே இருந்தன.

இனி புத்தகத்திலிருந்து -

நம்முடைய மகாராஜாக்களை காலையில் பள்ளி அறையிலிந்து எழுப்பி விட, அவர்களை குளிப்பாட்டி விட அவர்களுக்கு டிரஸ் மாட்டி விட இப்படி எல்லாத்திற்கும் பெண்கள். போனால் போகட்டும் என்று கால் கழுவிட மட்டும் ஆண்கள். அடுத்து சாப்பாடு, போரடித்தால் வேட்டை. இன்னும் போரடித்தால் போலோ, கிரிக்கெட்போன்ற விளையாட்டுக்கள். பிறகு மது. மாதுவிற்கு சொல்லவே வேண்டாம். சில மகாராஜாக்கள் பெண்களை கூட்டி வருவதற்கு என்றே தனி 'அமைச்சர்கள்' வைத்திருந்தார்களாம். பிறகு தூங்கச் செல்லுபோது ராகம் பாடி தூங்க வைக்க தனி ஆட்கள். நடுவில் என்றோ ஒருநாள் ஏதோ கொஞ்சம் மனசாட்சி இருந்து உறுத்தினால் மக்கள் பணி !.

இப்படித்தான் எல்லாம் மகாராஜாக்களும் வாழ்ந்திருக்கவில்லை. எல்லாரும் தனிப்பட்ட முறையில் அவர்களுடைய பழக்க வழக்கத்திற்கேற்ப வாழ்க்கை வாழ்ந்தார்கள் . மேற்சொன்ன பழக்க வழக்கத்தில் சில பேரின் பழக்க வழக்கங்கள் சில கூடும் குறையும் அல்லது அவை இல்லாமலேயே இருக்கும். ஆனால் மகாராஜாக்கள் என்றால் என்றால் மக்கள் நலன் கருதாத உல்லாச ஊதாரிகள் என்ற பொதுப் பிம்பம் மட்டும் உருவாகிவிட்டது. இந்த புத்தகத்தை படிக்கும்போது அந்த பிம்பம் ஒன்றும் தவறில்லை என்றே தோன்ற வைக்கிறது. 
File:Baroda king on great sowari*.jpg
எல்லா மகாராஜாக்களுக்கும் முதல் திருமணம் நாடு போற்ற பெற்றோரின் ஆசீர்வாதத்துடன் நடக்கும். அடுத்த ராஜாவைப் பெற்றெடுக்கப் போகும் பெண்ணல்லவா அதனால் குலம் கோத்திரம் பார்த்தே பெண் பார்த்தார்கள். அதற்கடுத்து ராஜாவின் விருப்பதிற்கேற்ப பல பெண்கள். பெரும்பாலும் ஒரே மதத்தில் ஒரே குலத்தில்தான் எடுப்பார்கள். இவர்கள் அனைவரும் ராணி அந்தஸ்துப் பெரும் பெண்கள். ஆசைநாயகிகள் தனி. இதைத் தவிர ஐரோப்பிய பெண்கள். ஆம் அன்றைய நாளில் பல ராஜாக்கள் ஐரோப்பிய பித்து பிடித்து அலைந்தார்கள்.

பல இளவரசர்கள் படித்தது ஐரோப்பாவில், அதோட பலரும் மறக்காமல் வருடத்திற்கு ஒருமுறையாவது ஐரோப்பிய டூர் போனார்கள். அங்கு அழகான பெண்களைக் கண்டதும் காதல்தான். அடுத்து திருமணம். இவர்களை எந்த ஒரு ஐரோப்பிய இளவரசிகளும் கட்டிக் கொள்ளவில்லை. இவர்கள் கட்டிக் கொண்டதெல்லாம் சாதாரண பெண்கள் . பெரும்பாலும் பாரில் பார்த்த பெண்கள் , பாரில் நடனமாடிய பெண்கள் , நாடகத்தில் நடித்த பெண்கள் இப்படி அனைத்து ஐரோப்பிய பெண்களும் சாதாரணமானவர்கள். 

பெரும்பாலான ஐரோப்பிய பெண்கள் மகாராஜாக்ககளை பணத்திற்காக மட்டுமே திருமணம் செய்திருப்பதாக தெரிகிறது. அந்தப் பெண்களுக்கு 18 ,20 வயசு இருக்கும் . நம் மகாராஜாக்களுக்கோ 40 , 50 வயது இருக்கும் . கபுர்தலா மகாராஜா ஜெகத்சிங் தன்னுடைய ஐரோப்பிய காதலி Eugine மணந்து கொண்ட போது அவருக்கு வயது 60. அப்புறம் எப்படி இருக்கும். கபூர்தலா மகாராஜா ஜெகத் சிங் கட்டிய இரண்டு ஐரோப்பிய பெண்களும் அவருக்கு துரோகம் இழைத்தனர். ஆனால் எல்லா ஐரோப்பிய பெண்களும் அப்படி இல்லை. உண்மையாகவே மகாராஜாக்களை காதலித்து அவர்களுக்கு விசுவாசமாக இருந்த பெண்களும் இருந்திருக்கத்தான் செய்கிறார்கள். இந்தூர் மகாராஜா துகொஜி ராவ் கோல்கரின் ஐரோப்பிய மனைவி நான்சி அப்படிப்பட்ட பெண்தான். அவள்தான் மற்ற மகாராணிகளையும் அவர்களின் குழந்தைகளையும் பார்த்துக் கொண்டாள். துகொஜியின் மரணப்படுக்கையில் அவருக்கு செவிலித்தாயாக இருந்து பார்த்துக்கொண்டாள். தன்னுடைய இறுதிக்காலத்திலும் தன் சொந்த நாட்டுக்குச் செல்லாமல் இந்தியாவிலேயே இருந்து 1998 இல் இறந்தார். இப்படிப்பட்ட ஐரோப்பிய பெண்களும் இருந்திற்குக்கத்தான் செய்தனர்.

மகாராஜாக்களுக்கு காதல் வந்தால் இந்தியப் பெண்ணாக இருந்தால் பெரும்பாலும் தூக்கி வந்து திருமணம் செய்து கொள்வார்கள். ஆனால் சிலமகாராஜாக்கள் தான் விரும்பிய பெண்ணை அவள் சம்மதத்துடன் கல்யாணம் செய்து கொள்ளவேண்டும் என்று ஆசை. மாகாராஜாவாக இருந்தால் என்ன , அவர் காதலித்தால் உடனே அந்தப் பெண்ணும் காதலிக்க வேண்டுமா என்ன ? . மகாராஜாக்களின் காதலை நிராகரித்த பெண்களும் உண்டு. நம்ம நபா சமஸ்தானத்தின் மகாராஜா ரிபுதாமன் சிங் அப்படிப்பட்டவர்தான். அவருக்கு ஒரு பெண்ணைப் பார்த்ததும் காதல் பீரிட்டு வந்துவிட்டது. ஆனால் அந்தப் பெண் மறுத்துவிட்டாள். நம் மகாராஜா எவ்வளவோ தூது விட்டப் பார்த்தார். அந்தப் பெண் மசியவில்லை. இவர் தொல்லை தாங்காமல் அந்தப் பெண் ஊரை விட்டு குடும்பத்துடன் ஓடப் பார்த்தபோது அவளைக் கைது செய்து சிறை வைத்துவிட்டார். பிறகு அந்த சிறைக்கு ஒரு அன்பான சிறை அதிகாரி வந்தார். அந்தப் பெண்ணை cover செய்து காதல் செய்து கல்யாணம் செய்து கொண்டார். பார்த்தால் அவர்தான் நம் நபா மகாராஜா. பெண்ணிற்கு ஆனந்த கண்ணீர். தன்னை ஒரு மகாராஜா இந்த அளவிற்கு காதலிக்கிறாரே என்று ஆனந்தம். ஆனால் மோகம் முப்பது நாள் ஆசை அறுபது நாள் என்பது போல இது கொஞ்ச காலம்தான். ஆனால் இந்த காதல் எல்லாம் சில காலம்தான். அடுத்து வேறு பெண். வேறு வேடம். வேறு நடிப்பு.


பொதுவாக இளவரசர்களின் முதல் திருமணத்திற்கு முன்பு 'அந்த' விசயத்தில் அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். ஆமாம் வருகிற பெண் காறித் துப்பிவிட்டாள் அவமானம் அல்லவா :). இதற்கு என்று அதற்கான சிறப்புப் பெண்கள் நியமிக்கப்பட்டார்கள். கபுர்தலா பட்டத்து இளவரசர் ஜெகத்சிங். ஜெகத்சிங் படு குண்டு. அவருடைய எடையைக் குறைக்க பலரும் படாதபாடுபட்டார்கள். கல்யாணத்திற்குப் பிறகு அந்த விசயத்தில் அவர் சிரமப்படுவார் என்று பல பெண்களை வைத்து சிறப்பு பயிற்சி கொடுக்கப்பட்டது :).

அழகுத் தமிழ், ஆர்ப்பரிக்கும் ஆங்கிலம், அதிரிபுதிரி கணக்கு, அலட்டிக்கொள்ளாத அறிவியல் இவற்றைத்தாண்டி மதிய உணவு முடிந்து எப்படா வீட்டிற்குப் போகலாம் என நினைக்கும் வேலையில்தான் வரலாறு வகுப்புகள் தொடங்கும், பள்ளிக்கூடத்தில் இருப்பதிலேயே பரமசாது வாத்தியார் வந்து கவணி என பாடத்தை ஆரம்பிப்பார். அவர் தொடங்கிய அடுத்த பத்தாவது நிமிடம் வரலாறு தூங்கிவிடும். வரலாற்று புத்தகங்களை தனியே படிக்கும்போதும் அப்படித்தான் நிகழும் பத்து பக்கங்களைத் தாண்டினால் ...ஆ..ஆ..ஆவ்..வ்.

பள்ளிக்கூடப் பாடம், போட்டித்தேர்வு, ஆராய்ட்சிகள் இவற்றைத் தவிர்த்து சொல்லும் விதத்தில் எளிமையாகச் சொன்னால் வரலாற்றை விட சுவாரசியமான வேறுவிசயம் எதுவும் இருக்காது. அப்படி எழுதப்பட்டு வெளிவந்த வரலாற்று புத்தகங்கள் தமிழில் மிகமிகக் குறைவு அதில் கொஞ்சம் கணத்து (1030 பக்கங்கள்) முன்னிலையில் இருக்கிறது இந்த புத்தகம் முகிலின் "அகம் புறம் அந்தப்புரம்".

இந்த புத்தகம் 1800 முதல் 1950 வரை ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் இருந்த 536 இந்திய சமஸ்தானங்கள் சிலவற்றின் வரலாற்றை விவரிக்கிறது. சமஸ்தானம் என்றால் அதற்கு இராஜா இருப்பார், ராணி இருப்பாள், மந்திரி தந்திரி இருப்பார்கள், சினிமாவில் வருவதுபோல் சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு (பக்கத்தில் சாமரம் வீசும் அழகு பெண்கள் உட்பட) நாட்டு நடப்புகளை பேசுவார்கள் சுவாரசியமாக இருக்கும். மேலும், மரம் நட்டார், குளம் வெட்டினார், அணைகள் கட்டினார், போர் புரிந்தார், எதிரிகளை வீழ்த்தினார் என அந்த இராஜாவின் புஜபலபராக்கிரம செயல்கள் நிரம்பியிருக்கும் என நினைத்து இந்த புத்தகத்தை திறந்தால் அது சமஸ்தான அரண்மனையின் அந்தப்புரத்திற்குள் நுழைகிறது. சூது, மது, மாது இவற்றோடு ஆட்டம் பாட்டம், கொண்டாட்டம், வேட்டை, தூக்கம் போர் அடித்தால் எப்போதாவது அரசாங்க வேலை பார்த்த இராஜாக்களின் அஜால் குஜால் வாழ்க்கை வரலாற்றை துவைத்தெடுக்கிறது.

மற்ற நாடுகளைப் பொருத்தவரை இந்தியா இயற்கை வளம் நிறைந்த நாடு. மாதம் மும்மாரி மழைபொழிந்து விவசாயம் செழித்து மக்கள் இயற்கையோடு அமைதியாக வாழும் வாழ்வு இங்கு எப்போதும் நிலவும். கூட குறைச்சல் இருந்தும் வழியில் கழுகுகள் பாதி பிடுங்கி தின்றது போக வரிப்பணம் ஓரளவிற்கு அரண்மனை கஜானாவில் நிரம்பியே வழியும். எல்லாம் சுபமாக நடக்க, மேலே குறிப்பிட்ட அஜால் குஜால் வாழ்க்கையை தவிர்த்து இராஜாவுக்கு வேறு என்ன வேலை இருக்கக்கூடும். அதனால் வகைவகையான மது, தினமும் இரவிற்கு புதிய பெண்கள், கச்சேரி கலைகட்ட சிட்டுக்குருவி லேகியம் முதல் கட்டெறும்பு இரத்தம் வரை தேடித்தேடி சுகபோகமாக அவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இந்த இராஜ வாழ்க்கையே பொரிகடலை வியாபாரம் செய்யவந்த ஆங்கிலேயர்களுக்கு சாதகமாக அமைந்தது. இதனைக்கொண்டு உள்ளூர் சரக்கிற்கு பதிலாக வெளிநாட்டு சரக்கு, பற்றாக்குறைக்கு வெள்ளைத்தோல் அழகிகள் என ஆங்கிலேயர்கள் ஆசைகாட்டி ஒவ்வொரு சமஸ்தானத்தையும் ஆட்டிப்படைத்தனர். விளைவு இந்தியா மூன்று நூற்றாண்டுகள் அடிமையாக இருக்க நேர்ந்தது. ஒட்டுமொத்த இந்தியாவையும் அந்தப்புரத்தில் அடகு வைத்த அந்த வரலாற்றை புட்டுபுட்டு வைக்கிறது இந்த புத்தகம்.

இதனைத் தவிர்த்து, வயலுக்கு வந்தாயா? நாற்று நட்டாயா? _ _ _ _ _ _ _ உனக்கேன் கொடுக்க வேண்டும் வரி? யாரைக் கேட்கிறாய் வரி? மாமனா? மச்சானா? என வெள்ளைக்காரர்களை எதிர்த்த இராஜாக்களின் வரலாறும், எம்.ஜி.ஆர் மாதிரி மச்சம் வைத்து தாடி ஒட்டி மாறுவேடம் போட்டுக்கொண்டு நாட்டுமக்கள் நலமா இருக்கிறார்களா? மழை பொழிகிறதா? குற்றம் குறைகள் இருக்கிறதா? என தெரிந்துக்கொண்டு பிறகு அக்கடா என நிம்மதியாகத் தூங்கிய விரல்விட்டு எண்ணக்கூடிய சமத்து இராஜாக்களின் வரலாறும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஆங்கிலேயர்களுக்கும் சமஸ்தானங்களுக்கும் இடையே இருந்த உறவு, கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம், நடைமுறைகள் மற்றும் நாட்டுமக்களின் வாழ்க்கைமுறை அவர்கள் எவ்வாறு இராஜாக்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் அடிபணிந்து நடந்தார்கள் என்ற வரலாற்றையும் அழகாக கதைபோல சாமாணியர்களும் புரிந்துக் கொள்ளும் வகையில் மிக எளிமையாக விளக்குகிறது இந்த புத்தகம். ஒருவரியில் சொல்ல வேண்டுமானால் சுதந்திரத்திற்கு முந்தைய இந்திய சமஸ்தானங்களின் 20% அகம், 20% புறம், 60% அந்தப்புற வரலாறு இந்த புத்தகம்.

எழுத்தாளர்கள் மதன், ப.ராகவன் இவர்களின் வரிசையில் வரலாற்றையும் வரலாற்றின் நாயகர்களைப் பற்றியும் அழகாக எழுதத்கூடியவர் "முகில்" அவரது படைப்பில் சாதனையாக அமைகிறது இந்த அகம் புறம் அந்தப்புரம். குமுதம் ரிப்போர்ட்டரில் தொடராக வெளிவந்த ஆயிரம் பக்கம் கொண்ட கணத்த இந்த புத்தகத்தை தூக்க சிரமப்பட்டாலும் வைக்க மனமில்லை. முழுமூச்சாக படிக்க முடியாவிட்டாலும் பக்கங்களின் நடுவே மயிலிறகை வைத்து அவ்வபோது புறட்டும்போது மெய்சிலிர்க்க வைக்கிறது. வரலாற்றை தெரிந்துகொள்ள மட்டுமில்லாமல் பொக்கிஷமாக அடுத்த தலைமுறைக்காக பாதுகாக்கப்படவும் வேண்டிய புத்தகம்.





No comments:

Post a Comment