Friday 15 June 2018

SEVEN MARRIAGES ,ONE BETROTHED KALYANA RANI RELEASED AT UDUMALPET








SEVEN MARRIAGES ,ONE BETROTHED 
KALYANA RANI RELEASED AT UDUMALPET


புகார் கொடுக்க யாரும் முன்வராததால் 7 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி விடுவிப்பு

தாராபுரம் : தாராபுரம், திருப்பூர், உடுமலை உள்ளிட்ட பகுதிகளில் ஏழு பேரை திருமணம் செய்து ஏமாற்றியதாக பிடிபட்ட பெண் குறித்து மேலும் சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர் தங்களை ஏமாற்றியதாக யாரும் புகார் தர முன்வராததால் போலீசார் அந்த பெண்ணை விடுவித்தனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த கோணப்பன்சாலை கிராமத்தை சேர்ந்த நடராஜ் மகன் செல்வகுமார்(32). இவருக்கும், திண்டுக்கல் மாவட்டம் போதுபட்டி கிராமத்தில் வசித்த பவித்ரா (25) என்பவருக்கும் கடந்த ஆண்டு அக்டோபரில் திருமணம் நடந்தது. இந்நிலையில், கடந்த மாதம் பவித்ரா 15 சவரன் நகைகளுடன் மாயமானார். இதுபற்றி தாராபுரம் போலீசில் செல்வகுமார் புகார் செய்தார். போலீசார் பவித்ராவை தேடிவந்த நிலையில், பவித்ரா வேறொரு நபருடன் உடுமலையில் வசிப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, செல்வகுமாருடன், மாறுவேடத்தில் போலீசார் உடுமலை சென்று கண்காணித்தனர்.

நேற்று முன்தினம் உடுமலை பஸ் ஸ்டாண்டில் பல்லடம் செல்லும் பஸ்சில் பவித்ரா ஏறி அமர்ந்ததை செல்வகுமார் அடையாளம் காட்டினார். உடனே பஸ்சில் ஏறிய போலீசார், பவித்ராவை கீழே இறங்குமாறு கூறினர். அப்போது கடைசி சீட்டில் இருந்த ஒருவர், ‘என் மனைவிய எதுக்கு கூப்பிடுறிங்க?’ என போலீசிடம் கேட்டார். கூடவே, பவித்ராவின் பக்கத்து சீட்டில் இருந்த ஒருவர் ‘நான்தான் இந்த பொண்ணை கட்டிக்கப்போறேன், என்ன தவறு செய்தார்?’ என கேள்வி எழுப்பினார். இதைக்கேட்டு போலீசாரும், செல்வகுமாரும் அதிர்ச்சி அடைந்தனர். மூவரையும் தாராபுரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரித்தனர். பவித்ரா கூறிய தகவலை கேட்டு போலீசாருக்கு மயக்கம் வராத குறைதான். பஸ்சில் கடைசி சீட்டில் இருந்தவர் பவித்ராவின் முதல் கணவர் கர்ணன் (35) என்பதும், பக்கத்து சீட்டில் இருந்தவர் பவித்ராவுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட கனகராஜ்(42) என்பதும் தெரியவந்தது.

பவித்ராவின் உண்மையான பெயர் மாரியம்மாள். பல்லடம் அறிவொளி நகரைச் சேர்ந்த செல்வராஜ்-பழனியம்மாள் தம்பதியின் ஒரே மகள். திருமணமாகாத இளைஞர்களை குறிவைத்து திருமணம் செய்துகொண்டு, சில மாதங்கள் குடும்பம் நடத்திவிட்டு, கிடைத்த நகை, பணத்துடன் தலைமறைவாவதை தொழிலாக செய்து வந்துள்ளார். இதன்படி, மாலதி, பவித்ரா, ஏஞ்சலின் என பல்வேறு பெயர்களில் 7 இளைஞர்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளதும், முதல் கணவர் கர்ணன் மூலமாக 2 குழந்தை உள்ளதும் தெரியவந்தது. மாரியம்மாளின் கல்யாண மோசடிகளுக்கு கணவர் கர்ணனும் உடந்தையாக இருந்துள்ளார். ஏதாவது ஊருக்கு சென்று கணவன், குழந்தைகளுடன் வாடகைக்கு வீடு பிடித்து தங்குவது, அங்கிருந்தபடியே புரோக்கர் மூலம் திருமண மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

7வது கணவர் செல்வகுமார் கூறுகையில், புரோக்கர் ஏற்பாட்டின் பேரில் பழனி அருகே ஒரு கிராமத்து கோயிலில் பவித்ராவை பார்த்து திருமணத்துக்கு ஒப்புதல் அளித்தேன். பவித்ராவின் தோழி என கூறிக்கொண்டு ஒரு பெண்ணும் இருந்தார். பல இடங்களில் பெண் பார்த்தும் ஜாதகத்தில் ஏதாவது ஒரு குறை இருந்ததால் திருமணம் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. புரோக்கருக்கு மட்டும் ரூ.2.5 லட்சம் செலவழித்துள்ளேன். கடைசியாக பவித்ராவுடன் எல்லா ஜாதகமும் பொருந்தி வந்ததால் ஒப்புக்கொண்டேன்.ஆனால், அதை போலியாக தயார் செய்துள்ளனர். பவித்ராவுக்கு இதற்கு முன் பல பேருடன் திருமணம் நடந்தது பற்றி இப்போதுதான் தெரியும். அதிர்ச்சியாக உள்ளது. அவருக்கு 15 பவுன் நகை போட்டுள்ளேன். அதை பெற்றுத்தர வேண்டும் என்றார்.

பவித்ரா உடனடியாக 15 பவுன் நகையை செல்வகுமாரிடம் கொடுத்தார். இதையடுத்து, செல்வகுமார் நகையை வாங்கி கொண்டு பவித்ரா மீது கொடுத்த புகாரை திரும்ப பெற்று கொண்டு சென்றுவிட்டார். பவித்ராவின் மற்ற கணவர்கள் பற்றிய விவரம் தெரியவில்லை. அவர்கள் யாரும் புகார் அளிக்காததால் பவித்ராவிடமும், முதல் கணவர் கர்ணனிடமும் போலீசார் எழுதி வாங்கி கொண்டனர். பின்னர், போலீஸ் விசாரணைக்கு அழைத்தால் தான் எப்போது வேண்டுமானாலும் வரத் தயார் என்றும், இனி இதுபோல யாரையும் ஏமாற்றி திருமணம் செய்ய மாட்டேன் என்றும் உறுதி மொழி அளித்த பின் பவித்ரா என்ற மாரியம்மாள் விடுவிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

கல்யாண ராணியிடம் ஏமாந்த விஷயத்தில் புகார் தர அவரது மாஜி கணவர்கள் யாரும் முன் வராத காரணத்தால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை. இந்த திருமண மோசடிக்கு தாராபுரம், உடுமலை, பழனி, திருப்பூர் பகுதிகளைச் சேர்ந்த திருமண புரோக்கர்கள் 9 பேர் உதவி செய்துள்ளனர். இவர்களது விவரம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

என்னோட அனுப்பி வையுங்க... 8வதாக நிச்சயிக்கப்பட்ட 43 வயது நபர் கெஞ்சல்

கல்யாண ராணியின் வலையில் 8வதாக சிக்கியவர்தான் கனகராஜ். மாலதி என்ற பெயரில் இவரிடம் அவர் அறிமுகம் ஆகியுள்ளார். கனகராஜுக்கு 43 வயதாகியும் திருமணம் நடக்காததால் இந்த பெண்ணை பற்றி விசாரிக்காமல் திருமணத்திற்கு சம்மதித்துள்ளார். உடுமலையில் ஒரு வீட்டில் வைத்துதான் நிச்சயம் நடந்துள்ளது. அப்போது, பவித்ராவுக்கு கனகராஜ் பட்டுப்புடவை எடுத்து கொடுத்துள்ளார். போலீசார் பவித்ராவை பிடித்து அவரது பல திருமணங்களை அம்பலப்படுத்தியபிறகும் கூட, கனகராஜ் ‘பரவாயில்லை சார், எனக்கு திருமணம் நடந்தால் போதும்’ என போலீசாரிடம் கூலாக கூறியபடி அந்த பெண்ணை தன்னுடன் அனுப்பும்படி கெஞ்சியுள்ளார். ஆனால், அவரை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

No comments:

Post a Comment