Thursday 21 June 2018

A VILLAGE STORY







A VILLAGE STORY

ஆராரோ ஆரிராரோ 
ஆராரோ ஆரிராரோ 
ஏன் அழுதே ஏன் அழுதே 
உன் ஏலம்பூ வாயாலே 
நான் பாலோ பசிச்சழுதேன் 
பால் பசுவோ கேட்டழுதேன் 
கொண்டுவந்த பால் பசுவோ 
கொம்பு ரெண்டும் தங்க நிறம்!

அந்தத் தாய் பாடியவுடன் அந்த வெயிலுக்கு அவ்வளவு சுகமாக இருந்தது. மத்தியான வெயிலுக்கு அத்தி மரத்தில் அடைந்திருந்த பறவைகள் அந்தத் தாய் பாடிய பாடலைக் கேட்டு மரத்தை விட்டுப் பறந்து ஒரு சுற்று சுற்றிவந்து மீண்டும் மரத்தின் இலைகளின் மறைவில் அமர்ந்தன.

இவர்கள் வாய்க்கால் தண்ணியில் குளித்துவிட்டுத் தக்காளிப் பழத்தோடு பச்சை மிளகாய், உப்பு சேர்த்துப் பிசைந்து மோருக்குள் கிடந்த சோற்றை எடுத்துத் தக்காளிப் பழச் சாற்றில் தொட்டுச் சாப்பிடுகையில் அமிர்தமாக இனித்தது. தோட்டக்காரன் எல்லோருக்கும் இளநியை வெட்டிக் கொடுக்க, அதை வாங்கிக் குடித்த போது அவர்களின் உச்சந்தலைவரை குளிர்ந்தது.

உண்டியலில் போடுவதற்காக அவர்கள் கொடுத்த காணிக்கையை வாங்கிக்கொண்டு, “போயிட்டு வாரோம்” என்று சொல்லிவிட்டு அத்தி மரத்தடி வந்தார்கள். சிவப்பு உருண்டைகளாக அத்தி பழம் நிலம் தூந்துக் கிடந்தது. அத்திப் பழத்தைப் பெறக்கி சும்மாட்டு துணியில் முடிந்துகொண்டார்கள். முத்தையாதான் எல்லோருக்கும் வெற்றிலை எடுத்துக் கொடுத்தான். பிறகு எல்லோருடைய வெற்றிலை நுனியிலும் சிறிது, கிள்ளித் தன் வெற்றிலையோடு சேர்த்துப் போட்டுக் கொண்டான்.

அப்படிக் கிள்ளாவிட்டால் வெற்றிலை கொடுத்தவருக்கும் அதை வாங்கியவருக்கும் சண்டை வந்து விடுமாம்.

மனம் கரைக்கும் கானம்

இப்போது பொழுது கொஞ்சமாக மேற்கே சாய்ந்திருந்ததோடு கஞ்சி கலயத்தின் சுமையும் கொஞ்சம் குறைந்திருந்தது. ஒவ்வொருவரிடமிருந்தும் வெற்றிலையும் புகையிலையும் மணந்து அவர்களுக்கு உற்சாகமூட்டியது. “ம்.. பொக்குன்னு நடங்க. இருட்டமின்ன கோயிலுக்குப் போயி சேரணும்: என்றார் ராமசாமி.

“சும்மாவே ஊமக் கோட்டான் கணக்கா நடக்காதீக. ஏதாச்சிலும் ஒரு பாட்டு பாடுங்க” என்று முத்தைய சொல்ல, தனம் பாடினாள்.

மஞ்சள் அரைக்கையில 
மதிலேறி பாத்த மச்சான் 
என்ன பொடி தூவினீக 
எனக்கு இழுத்தரைக்க முடியலயே 
கன்னங் கருத்த மச்சான் 
கட்டழகு கொண்ட மச்சான் 
கையப் புடிக்காதீக 
என் கரு வளவி சேதமாகும் 
கூந்தப் பனையோரம் 
குயிலிருந்து கூவையில 
நாகமணிச் சோலையோரம் 
நானிருந்து வாடுதேனே

என்று பாடச் சங்கனி, “போதுமத்தா. அந்த மானைக்கு உன் பாட்டை நிப்பாட்டு. ஊருல இருக்கக் களுதையெல்லாம் இங்கெதேன் ஓடியாருது” என்றாள் எரிச்சலோடு.

தனம் முகம் வாடி நின்றாள். “பாரு மச்சான் எம் பாட்டு நல்லா இருந்ததா, இல்லையா?” என்று ராமசாமியிடம் நியாயம் கேட்டாள். “அருமையா இருந்துச்சாக்கும். போன வருசம் சித்திரப் பொங்கலுக்கு நம்ம ஊருக்கு வில்லடிக்க வந்தாளே நாகசோதி அவ கொரலு கணக்கா இருந்துச்சி” என்றதும் சங்கினிக்கு இன்னும் எரிச்சல் அதிகமானது.

“ஆமாமாமா” என்றவள் ராமசாமியிடம், “எண்ணே பகல்ல வெளியே வரப் பயந்துக்கிட்டு மரப் பொந்துக்குள்ளே ஒளிஞ்சிக்கிட்டு இருக்குமே ஆந்தை, அதோட விவரம் என்னன்னு தெரியுமா உனக்கு?” என்று கேட்க ராமசாமிக்கு பாட்டைப் பாடவிடாமல் நிப்பாட்டிவிட்டாளே என்று சங்கினி மீது கோபமாக வந்தது.

“நீதேன் சொல்லு” என்றான் வித்தேட்டியாக.

“அந்த ஆந்தை சொல்லுச்சாம். மயிலும் குயிலும் என்ன அழகு! இந்த மாடப் புறா என்ன அழகு? மூணு நாள் காய்ச்சலுக்கு என் மொகறதான் வீங்கியிருக்கு. மத்தபடி என் அழகுக்கு என்ன கொறச்சல்னு கேட்டுச்சாம்”

“இப்ப எதுக்காவ அதைச் சொல்லுதே”

“இல்ல.. இவ கொரலுக்கும் நாகசோதி கொரலுக்கும் ஒண்ணா எடை போடுதயே. ஏணி வச்சாலும் அந்தக் கொரலுக்கு இவ கொரல் எட்டுமா?”

“அதெல்லாம் எட்டும். இவ பாட்டுக்குக் குடை மடிக்க, சலங்கை கோக்க ரெண்டு ஆளும் இருந்தா இவ பாட்டுக்கு என்ன குறை? உனக்குப் பாட எடுக்கன்னு தெரியாட்டாலும் அடுத்தவுகளை நல்லா குறை சொல்லக் கத்து வச்சிருக்கே” என்றவன் தனத்திடம், “ஏன் தனம். இப்ப நீ பாடுனியே அந்தப் பாட்டு என்ன நெனைச்சிதானே பாடுனே?” என்று கேட்டவுடன், “நீ இப்போ செமத்தியா அடி வாங்கப் போறே” என்று சொல்லிக்கொண்டே கீழே கிடந்த செம்மண் கட்டி ஒன்றை எடுத்துத் தனம் ராமசாமி மீது வீச, தனம் ஓட, “இந்தா தனம். உன் மொகறைக்கு என் அண்ணன் காணலயாக்கும்?” என்று அவள் பின்னால் சங்கினி ஓடினாள். சற்றுத் தூரத்திலிருந்த மூங்கில் காடு புல்லாங்குழல் வாசித்தது.

கட்டுரையாளர், எழுத்தாளர். தொடர்புக்கு: arunskr@gmail.com




        










No comments:

Post a Comment