KERALA CINEMA GAINED POPULARITY DUE TO
DIRECTION TECHNIQUE
கேரளத் திரையுலகம், வேறு தளத்திற்கு நகர்வதை ஒரு தொடர் நிகழ்வாகவே நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. 80களில் மலையாளத் திரைப்படம் பார்ப்பவன் என்றால் கேவலமாகப் பார்த்த நிலை போய், இன்று நல்ல திரைப்படம் என்றால் அங்கிருந்துதான் சாத்தியம் என்ற நிலைக்கு உயர்ந்திருக்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன் வந்த உஸ்தாத் ஹோட்டல், இந்தியன் ருபி, டயமண்ட் நெக்லேஸ், 22 ஃபீமேல் கோட்டயம் போன்றவை ஒரு வகை என்றால் தற்போது வந்திருக்கும் மகேஷிண்டே பிரதிகரம், கம்மாட்டி பாடம், ஒழிவு திவசத்தே கழி, அங்கமாலி டயரீஸ் எல்லாம் வேறு விதம்.
அதிலும் ஒழிவு திவசத்தே களி மாதிரி ஒரு படம் இந்தியத் திரையுலகில் சாத்தியமாவெனத் தெரியவில்லை. நண்பர்கள் சிலர் ஒரு தேர்தல் விடுமுறையன்று ஒரு பிக்னிக் போவதும் அங்கு நடைபெறும் சம்பவங்களே திரைப்படம். எவரும் தொழில் முறை நடிகர்கள் அல்ல. மிக மெதுவாக நகரும் திரைக்கதை உச்சம் பெற்று அதிர்ச்சிகுள்ளாக்குகிறது.
மகேஷிண்ட பிரதிகரம் ஒரு சாதாரண பழிவாங்கும் கதை. அதற்காக கதாநாயகன் பறந்து பறந்து தாக்குவதெல்லாம் இல்லை. அத்தகைய கதாநாயகத்தனங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட எளிய மனிதன். ஒரு ரப்பர் செருப்பு அவன் வாழ்க்கையில் எந்த்தகைய மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதே கதை.
கம்மாட்டி பாடம், கொச்சின் நகரில் வானுயர் அடுக்கு மாளிகைகள் கட்ட, புறநகரில் பல்லாண்டுகளாக வசித்துவந்த மக்களை இடம் பெயர்த்தலைப் பற்றிப் பேசுவது. துல்கர் போன்ற ஓரிருவரைத் தவிர பிறர் புதியவர்கள்.
அங்கமாலி டயரிஸில் திரைப்படம் ஒரு சிறுநகர மக்களின் வாழ்வைப் பிரதிபலிப்பது. அவர்களது உணவு, உறவு திருவிழாக் கொண்டாட்டங்கள்தான் முக்கிய அம்சங்கள். நடிகர்கள், கதை எல்லாம் இரண்டாம் பட்சம்தான்.
“நல்ல கதை மட்டும் கிடைத்தால் எனக்கிருக்கும் திறமைக்கு தமிழ்த்திரையுலகையே தூக்கி நிறுத்திவிடுவேன்” என மார்தட்டும் இயக்குனர்களும், அவர்களது இணை, துணை இயக்குனர்களும், எதிர்காலத்தில் இம்மாதிரியே அறை(ரை)கூவல் விடப்போகும் மற்றவர்களும் கண்டிப்பாகப் பார்க்க வேண்டியவை இந்நான்கு திரைப்படங்கள்.
சரி தமிழில் சமீபத்தில் நல்ல திரைப்படமே வரவில்லையா? என்றால் வந்திருக்கிறது, ஆனால் முழுமையானவையாக இல்லை. 8 தோட்டாக்கள், அதே கண்கள், குற்றம் 23, குற்றமே தண்டனை, துருவங்கள் பதினாறு எல்லாம் நல்ல திரைப்படங்களாக வந்திருக்க வேண்டியவை. முழுமையடையாமல் போனதற்கு
1. தேவையற்ற இடங்களில் பாட்டு – 8 தோட்டாக்கள்
2. தேவையற்ற நகைச்சுவை – அதே கண்கள்
3. பாத்திர வார்ப்புகளில் கவனமின்மை – போலீஸ் ஆட்கள் அடர்த்லையுடன் வருவது.
4. கச்சிதமில்லாத படத்தொகுப்பு – படம் தொய்வடைவது
5. பொருத்தமில்லாத பின்னணி இசை – அதிக சத்தம்
கதை இறுதியானதும், திரைக்கதை எழுதி அதை நான்கைந்து பிரதிகள் எடுத்து, நண்பர்களல்லாத, கறாராக விமர்சிக்கக்கூடிய சிலரிடம் கொடுத்து, மாற்றங்களை ஏற்றுக் கொண்டு அதைக் காய்தல் உவத்தல் இன்றிச் செயல்படுத்தும் மனப்பக்குவம் கைகூடாதவரை தமிழ்த்திரையுலகில் நல்ல படம் சாத்தியமே இல்லை.
No comments:
Post a Comment