Thursday 14 June 2018

THE STORY OF BLACK BEARD ,THE PIRATES BORN 1680 - 1718 NOVEMBER 22





THE STORY OF BLACK BEARD ,THE PIRATES 
BORN 1680 - 1718 NOVEMBER 22

பிரபல கடல் கொள்ளைக்காரன் கறுந்தாடி

பொதுவாக திருடர்கள், கொள்ளைக்காரர்கள் என சட்டத்தை மீறுவோர் மீது மக்களுக்கு ஒரு இனம்புரியாத கவர்ச்சி உள்ளது. அதிலும் கடல் கொள்ளையர்கள் என்றால் ஒரு அலாதிப் பிரியம் தான். கடற் கொள்ளையர் என்றவுடன் நம்மில் பலருக்கும் உடனே நினைவுக்கு வரும் உருவம் –

தோளில் கிளி, ஒரு கண்ணை மறைக்கும் கண்பட்டை, ஒரு மரக்கட்டைக் காலுடன் கூடிய கருப்பு தாடிக்காரர். இன்னும் கொஞ்சம் யோசித்தால் மண்டையோடும் எலும்புகளும் கொண்ட கறுப்பு கொள்ளையர் கொடியும் பாய்மரக் கப்பல்களும், புதையல் பெட்டிகளும் நினைவுக்கு வரும்.

இந்த பொது பிம்பம் உருவாக பதினேழு மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டுகளில் கரிபீயன் கடலைக் கலங்கடித்துக் கொண்டிருந்த பல கொள்ளையர்களே காரணம். இவர்களது கதைகளே காலங்காலமாக கதைகளிலும், திரைப்படங்களிலும் வந்து கடற்கொள்ளையர்கள் மீது மக்களின் மனதில் ஆர்வத்தை ஏற்படுத்திவிட்டன. .

என்ன தான் கேட்பதற்கு கவர்ச்சியாக இருந்தாலும் கடற்கொள்ளையர்கள் சட்டத்தை மீறிய திருடர்களே. வர்த்தகர்களுக்கு பெரும் தொந்தரவாக இருந்தவர்களே. இந்த வில்லன்களுள் மிகப் பரவலாக அறியப்படும் வில்லன் கறுந்தாடி எனப்படும் எட்வர்ட் டீச். கடற் கொள்ளையர் பொது பிம்பத்துக்கு கறுப்பு தாடியை இரவல் கொடுத்தவர் இவரே.

பதினேழு-பதினெட்டாம் நூற்றாண்டுகள் வரலாற்றா ளர்களால் கடல் கொள்ளையின் பொற்காலம் (Golden Age of Piracy) என்றழைக்க ப்படுகிறது. அமெரிக்க கண்டம் கண்டுபிடிக்கப்பட்ட இருநூறு ஆண்டுகளுக்குள் ஐரோப்பிய நாடுகள் அங்கே பல காலனிகளை உருவாக்கி தங்கள் மக்களை குடியேற்றின.

பெரும் பரப்பளவில் பண்ணைகளும் தோட்டங்களும் உருவாக்கப்பட்டு பருத்தி, கரும்பு ஆகியவை பயிரிடப்பட்டன. பதினேழாம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியில் இங்கிலாந்து, ஃபிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுகல் போன்ற அனைத்து முன்னணி ஐரோப்பிய நாடுகளுக்கும் அமெரிக்காவில் காலனிகள் இருந்தன. காலனிகளுக்கும் ஐரோப்பாவுக்கும் நடுவே அட்லாண்டிக் கடல் இருந்தது.

அதைக் கடப்பதற்கு அதிவேகமான கப்பலென்றாலும் குறைந்த பட்சம் சில வாரங்களாவது ஆகும். காலனிகளுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையே வர்த்தகம் வருடந்தோறும் பெருகி வந்ததால், கப்பல்களுக்கும் மாலுமிகளுக்கும் பெரும் கிராக்கி ஏற்பட்டது. கப்பல் வாழ்க்கை என்பது சாதாரண மானதல்ல.

ஒவ்வொரு பிரயாணமும் மாதக் கணக்கில் நீடிக்கும். உயிருடன் திரும்பி வருவோம் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. ஊதியமோ மிகக் குறைவு. அதுவும் சரியாக வழங்கப்படுவது சந்தேகமே. கப்பல்களின் மேலதிகாரிகள் ஊழலுக்குப் பேர் போனவர்கள். மாலுமிகளின் சம்பளத்தைத் திருடுவது, அவர்களுக்கான உணவை, உடைகளை வாங்குவதில் ஊழல் என பலவகைகளிலும் தங்கள் கைவரிசையைக் காட்டி வந்தனர்.

பெரும்பாலும் படிப்பறிவில்லாதவர்களாக இருந்த மாலுமிகளால் இதை எதிர்த்து எதுவும் செய்ய முடியவில்லை. எதிர்த்துப் பேசினால் சாட்டையடி விழும், வாரக்கணக்கில் இருட்டறையில் அடைத்து வைக்கப்படுவார்கள், அல்லது பட்டினி போடப்ப டுவார்கள். பல சமயங்களில் சிறு குற்றங்களுக்குக் கூட தூக்கில் போட்டு விடுவார்கள். பெரும்பாலான மாலுமிகள் கடுமையான கப்பல் வாழ்க்கையிலிருந்து தப்பிக்க வாய்ப்புகளை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் ஒரு அளவுக்கு மேல் கொடுமைகளைத் தாங்க முடியாதல்லவா. அதுதான் நடந்தது

இங்கும். பல கப்பல்களில் மாலுமி புரட்சிகள் வெடித்தன. மாலுமிகள் தங்கள் மேலதிகாரிகளைக் கொன்று கப்பல்களைக் கைப்பற்றினர்.

புரட்சிக்குப் பின் அவர்களால் தாய்நாடு திரும்ப முடியாது. திரும்பினால் தூக்கு தான். கொள்ளையராக மாறுவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. கடுமையான மாலுமி வாழ்க்கையைவிட கொள்ளையர் வாழ்க்கை அவர்களுக்கு எளிதாகத் தெரிந்தது. இப்படித்தான் பல புதிய கொள்ளையர் கூட்டங்கள் உருவாகின.

இப்படி மாலுமியாக இருந்து கொள்ளையரானவர் தான் எட்வார்ட் டீச்.

ஐந்துக்கும் பத்துக்கும் கொள்ளையடிக்கும் கூட்டத்தில் இருந்த டீச், புகழ்பெற்ற கொள்ளையர் கேப்டனான பெஞ்சமின் ஹார்னிகோல்டின் சீடனாக ஆன பின்னர் பெரிய அளவில் கொள்ளையடிக்கத் தொடங்கினார். அமெரிக்க கண்டத்திலிருந்து ஐரோப்பாவுக்கு புதையல்களை கொண்டு சென்ற ஸ்பானிஷ் கப்பல்களைக் கொள்ளையடித்து பெரும் பொருள் சேர்த்த ஹார்னிகோல்டு, கொள்ளையர்களுக்கென தனியே ஒரு தளம் வேண்டுமென்று விரும்பினார்.

இதற்காக கரிபியன் தீவுகளில் ஒன்றான பஹாமாசின் தலைநகர் நசாவுவைக் கைப்பற்றினார். இந்த தளத்தைப் பயன்படுத்திக் கொண்ட கொள்ளையர் கூட்டமைப்பு முன்னை விட அதிகமான முனைப்புடன் கொள்ளைத் தொழிலில் இறங்கினர். விரைவில் குருவை மிஞ்சிய சிஷ்யனாக மாறிவிட்டார் கறுந்தாடி. ஹார்னிகோல்ட் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர், தேசப்பற்றால் பிரிட்டிஷ் கப்பல்களைத் தாக்குவதில்லை என்ற கொள்கை கொண்டிருந்தார். ஆனால் அவரது சீடர்களோ கொள்ளையர்கள் நமக்கு தேசமாவது பற்றாவது என்று அவரை கேப்டன் பதவியிலிருந்து இறக்கி விட்டனர்.

அவரது இடத்திற்கு 1717ம் ஆண்டு கறுந்தாடி வந்தார்.
கொள்ளையர் கேப்டனான பின்னர் கறுந்தாடியின் கொள்ளைத் தாக்குதல்கள் அதிகரித்தன. அதுவரை சின்னச் சின்ன வணிகக் கப்பல்களை மட்டும் தாக்கி கொள்ளையடித்து வந்த அவரது கூட்டம், பெரும் போர்க்கப்பல்களைத் துணிந்து தாக்கத் தொடங்கியது. லா கன்கார்ட் என்ற பிரெஞ்சு ஆயுதமேந்திய சரக்குக் கப்பலைக் கைப்பற்றிய கறுந்தாடி அதனைத் தனது கொள்ளைக் கூட்டத்துக்கு தலைமைக் கப்பலாக்கிக் கொண்டார்.

குயின் ஆனிஸ் ரிவெஞ்ச் (Queen Anne’s Revenge) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட இக்கப்பல்தான் அதுவரை கடற்கொள்ளையர்கள் பயன்படுத்திய கப்பல்களுள் மிகவும் பலம் வாய்ந்தது. அதிகமான பீரங்கிகளும் திறமையான கேப்டனும் இருந்ததால் குயின் ஆனி வருகிறது என்ற செய்தியைக் கேட்டாலே வணிகக் கப்பல் கேப்டன்களுக்கு குலை நடுங்கும் நிலை உருவானது. கறுந்தாடியின் புகழ் பிற கொள்ளையர்கள் மத்தியிலும் வேகமாகப் பரவியதால், பல கொள்ளையர்கள் தேடி வந்து அவரது கூட்டத்தில் இணைந்து கொண்டனர்.

கறுந்தாடியின் கூட்டத்தில் உறுப்பினர் என்ற கெளரவம் (!) கிடைத்தாலும் அவரது கூட்டத்தினர் அடிக்கடி வெற்றிகரமாகக் கொள்ளையடிப்பதால் சீக்கிரம் பணக்காரர்களாகி விடலாம் என்ற எண்ணமே பிற கொள்ளையர்களைக் கறுந்தாடியின் பக்கம் ஈர்த்தது.
விரைவில் கறுந்தாடியின் கொள்ளைக் கூட்டம் 150 பேர் கொண்டதாகப் பெருகியது. அனைவரையும் ஒரே கப்பலில் வைத்திருக்க முடியாதென்பதை உணர்ந்த கறுந்தாடி, தான் கைப்பற்றிய இரு கப்பல்களைக் கொள்ளைக் கப்பல்களாகத் தயார் செய்து தன் கூட்டத்தினிடம் கொடுத்தார்.

இதனால் ஒரு கப்பலுக்கு கேப்டனாக இருந்த அவர் மூன்று கப்பல்களுக்கு கமடோராகி (கடற்படை தளபதி) விட்டார். இக்காலகட்டத்தில் தான் அவருக்கு கறுந்தாடி என்ற பெயர் பிரபலமானது. அதுவரை எட்வர்ட் டீச் அல்லது எட்வர்ட் தாச் என்றே அறியப்பட்டு வந்த அவர், தன்னைக் காண்பவர் பயப்படும் வண்ணம் தனது தோற்றத்தை மாற்றிக் கொண்டார். நீண்ட கறுந்தாடி, தோளின் குறுக்கே பல கைத்துப்பாக்கிகள் அடங்கிய தோல் பட்டை, பெரிய தொப்பி, நீண்ட அங்கி என தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டார். அவரது பெயரும் “கறுந்தாடி” என்றாகிப் போனது.

1718ம் ஆண்டு கறுந்தாடியின் கொள்ளைத் தாக்குதல்கள் மேலும் அதிகரித்தன. கரிபியன் கடலில் ஒரு குறுகிய பகுதியில் மட்டும் கொள்ளையடித்து வந்த அவர் அந்த ஆண்டு அப்பகுதியிலிருந்த பிற ஐரோப்பிய காலனிகளிலும் தன் கைவரிசையைக் காட்டத் தொடங்கினார். கறுந்தாடியின் சாகசங்கள் பிற கொள்ளையர்களுக்கும் தைரியமளித்து அவர்களும் தங்கள் கைவரிசையைப் பல இடங்களில் காட்டத் தொடங்கினர். ஹார்னிகோல்டு நசாவுவில் உருவாக்கியிருந்த கொள்ளையர் தளம், ஒரு குடியரசைப் போன்று செயல்படத் தொடங்கியது.

கொள்ளையர்கள் தங்களுக்குள் ஒரு கூட்டமைப்பை உருவாக்கி ஒன்றிணைந்து செயல்படத் தொடங்கினர்.
கொள்ளையர் தொந்திரவால் வடஅமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே நடைபெற்ற கடல்வழிப் போக்குவரத்து முழுதும் துண்டிக்கப்பட்டது. ஐரோப்பியரின் அமெரிக்க பேரரசுகள் ஆட்டம் கண்டன. அமெரிக்க காலனியாளர்கள் கொள்ளையரிடமிருந்து தங்களைக் காப்பாற்றுமாறு இங்கிலாந்தின் முதலாம் ஜார்ஜ் மன்னரிடம் முறையிடத் தொடங்கினர்

மன்னரும் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து கொண்டார். கொள்ளையரின் கொட்டத்தை அடக்க வேண்டுமெனில் முதலில் பஹாமாஸ் தீவுகளைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டுமென அவரது அமைச்சர்கள் வலியுறுத்தினர். எனவே பஹாமாசுக்கு ஒரு புதிய ஆளுனரை நியமித்து அவரைப் படைபலத்துடன் கரிபியனுக்கு அனுப்பி வைத்தனர். வூடஸ் ரோஜர்ஸ் என்ற அந்த தளபதி ஒரு கப்பல் படையுடன் கொள்ளையரை ஒழிக்க இங்கிலாந்தி லிருந்து கரிபியன் தீவுகளுக்கு கிளம்பினார். ரோஜர்ஸ் கரிபியன் தீவுகளை நெருங்கிக் கொண்டிருந்த போது கறுந்தாடியின் கொள்ளைப் படை தங்கள் தொழில் வாழ்க்கையின் உச்சகட்ட சாதனையை நிகழ்த்திக் கொண்டிருந்தது.

இதுநாள் வரை கரிபியன் பகுதியிலிருந்த ஐரோப்பிய காலனிகளை மட்டும் கொள்ளையடித்து வந்த கறுந்தாடிக்கு வட அமெரிக்கப் பகுதிகளில் ஏன் கொள்ளையடிக்கக் கூடாது என்ற எண்ணம் வந்தது. அதுவரை யாரும் கொள்ளையடிக்காத பகுதியென்ப தால் அங்கு பாதுகாப்புக்கு கடற்படை கப்பல்கள் ஏதும் இல்லை. எனவே 1718ம் ஆண்டு மே மாதம் அமெரிக்கக் காலனியான தெற்கு கரோலினாவின் தலைநகர் சார்லஸ்டன் துறைமுகத்தைத் தாக்கினார் கறுந்தாடி.

ஒரு கொள்ளையர் கூட்டம் தைரியமாக ஒரு பெரிய நகரை நேரடியாகத் தாக்குவது அதுவே முதல் முறை. சார்லஸ்டன் துறைமுக வாயிலில் தன் கப்பல்படையை நிறுத்திய கறுந்தாடி, அங்கு வந்த பல கப்பல்களைக் கைப்பற்றி அதன் பயணிகளை சிறைபிடித்தார். தனக்கு வேண்டிய சில மருந்துகளை உடனடியாக அனுப்பா விட்டால் பிணைக்கைதிகளைக் கொன்றுவிடுவதாக சார்லஸ்டன் ஆளுனரை மிரட்டினார். சில நாட்கள் இந்த முற்றுகை நீடித்தது, பின்னர் மருந்துகளைப் பெற்றுக் கொண்டு கைதிகளை விட்டுவிட்டார்.

அவர் நினைத்திருந்தால் சார்லஸ்டனை தரைமட்டமாக்கியிருக்கலாம். ஆனால் வெறும் சில மருந்துகளுக்காக ஏன் இப்படியொரு தாக்குதலை நடத்தினார் என்பது மர்மமாகவே உள்ளது.
வட அமெரிக்காவிலிருந்து திரும்பிய கறுந்தாடிக்கு ரோஜர்சின் படை நசாவுவை நோக்கிச் செல்லும் செய்தி கிட்டியது. அதனை சமாளித்துப் போரிட முடியாது என்று முடிவு செய்த அவர் தற்காலிகமாக கொள்ளைத் தொழிலிலிருந்த் ஓய்வு பெற முடிவு செய்தார்.

அமெரிக்கவின் வட கரோலினா மாநிலத்தின் ஆளுனருக்கு லஞ்சம் கொடுத்து அங்கு குடியேறினார். அதற்காக வேண்டுமென்றே தனது குயின் ஆனி கப்பலை தரைதட்டச் செய்தார்.

சில மாதங்கள் அமைதியாக வடக்கு கரோலினாவில் காலம் கடத்தினார். இந்நேரத்தில் ரோஜர்சின் கப்பற்படை நசாவு தீவினை அடைந்து அங்கிருந்த கொள்ளையர்களை அடித்து விரட்டியது. பல கொள்ளையர் தலைவர்கள் கைப்பற்றப்பட்டு தூக்கிலிடப்பட்டனர். அவர்களுக்கு நேர்ந்த கதியிலிருந்து புத்திசாலித்தனமாக கறுந்தாடி தப்பி விட்டாலும் அவரால் நிலத்தில் அமைதியாக வாழ முடியவில்லை. மீண்டும் கொள்ளைத் தொழிலுக்குத் திரும்ப வேண்டுமென்ற ஆசை எழுந்தது.

சில மாதங்களுக்குப் பின்னர் வட கரோலினா கடற்கரைப் பகுதிகளில் தன் கைவரிசையைக் காட்டத் தொடங்கினார். நசாவுவிலிருந்து தப்பி வந்திருந்த வேறு சில கொள்ளையர் கேப்டன்களும் அவருடன் இணைந்து கொண்டனர். ஆனால் இம்முறை காலனிய ஆட்சியாளர்கள் விழிப்புடன் இருந்தனர். வட கரோலினா வுக்கு பக்கத்து மாநிலமான விர்ஜீனியாவின் ஆளுனர், கறுந்தாடி மீண்டும் கொள்ளைத் தொழிலில் இறங்கியதைக் கேட்டவுடன், கறுந்தாடியை ஒழிக்க உடனடியாக ஒரு கடற்படை யைத் தயார் செய்தார். இப்படை லெப்டினண்ட் மேனார்ட் தலைமையில் கறுந்தாடியின் கப்பல்கள் நிறுத்தப்பட்டிருந்த இடத்தை ரகசியமாக அணுகியது.

கறுந்தாடியின் கப்பலின் மேற்தளத்தில், கறுந்தாடியின் கூட்டத்துக்கும் மேனார்டின் படைவீரர்களுக்கு மிடையே கடும் சண்டை நிகழ்ந்தது. ஆவேசத்துடன் கறுந்தாடி போராடினாலும் இறுதியில் மேனார்டின் வீரர்கள் அவரைத் தீர்த்துக் கட்டினர். அவரது தலை துண்டிக்கப்பட்டு மேனார்டின் கப்பல் பாய்மரத்தில் கட்டித் தொங்கவிடப்பட்டது.

கறுந்தாடி இறந்து சில வருடங்களில் பிற கொள்ளையர் தலைவர்களும் பிடிபட்டனர். கடற்கொள்ளையின் பொற்காலமும் முடிவுக்கு வந்தது. ஆனால் மரணத்துக்குப் பின்னரும் கறுந்தாடியின் புகழ் இன்றும் உலகம் முழுவதும் பரவிக்கிடக்கிறது.

கடற் கொள்ளையர் என்றாலே கறுந்தாடியின் உருவம் நினைவுக்கு வருமளவுக்கு இன்றை நிலை உள்ளது. நிஜ வாழ்வில் கரிபியன் கடற்பகுதியைக் கலங்கடித்தவர், இப்போது கதைகள் திரைப்படங்கள் மூலமாக உலகையே கலக்கிக் கொண்டிருக்கிறார்.





Blackbeard, byname of Edward Teach, Teach also spelled Thatch or Thack, (born c. 1680, Bristol?, England—died November 22, 1718, Ocracoke Island, North Carolina [U.S.]), one of history’s most famous pirates, who became an imposing figure in American folklore.

Little is known of Blackbeard’s early life, and his origins have been left to speculation. He has been widely identified as Edward Teach (or several variations thereof, including Thatch and Thack), though pirate custom at the time was to use a pseudonym when engaging in acts of piracy, and his true name will probably never be known. Thought to have been active as a privateer for the British during the War of the Spanish Succession (1701–13), Blackbeard was first heard of as a pirate late in 1716. The following year he converted a captured French merchantman into a 40-gun warship, Queen Anne’s Revenge, and soon became notorious for outrages along the Virginia and Carolina coasts and in the Caribbean Sea. In 1718 Blackbeard established his base in a North Carolina inlet, forcibly collected tolls from shipping in Pamlico Sound, and made a prize-sharing agreemenT agreement with Charles Eden, governor of the North Carolina colony. At the request of Carolina planters, the lieutenant governor of Virginia, Alexander Spotswood, dispatched a British naval force under Lieutenant Robert Maynard, who, after a hard fight, succeeded in killing Blackbeard. The pirate’s body was decapitated, and his head was affixed to the end of the bowsprit of his ship.

Apart from the luxuriant black beard which earned him his nickname, the most prominent aspect of the Blackbeard legend is his great buried treasure, which has never been found and probably never existed. The wreck of the Queen Anne’s Revenge, however, was discovered off the coast of North Carolina by divers in the mid-1990s. Hundreds of artifacts were recovered from the site in the following decades, including navigational devices, cannons, and a sword hilt.
.






.





No comments:

Post a Comment