Saturday 23 June 2018

THE BIRTTH OF TAMIL SONGS





THE BIRTTH OF TAMIL SONGS




எப்போதும் தாமதமாக வரும் கவியரசு கண்ணதாசன், இந்தப் படத்துக்கு மட்டும் சீக்கிரமாக வந்துவிட்டாராம். ஆனால் எம்எஸ்வி வரவில்லை. முந்தைய நாள் நள்ளிரவு வரை நடந்து பாடல் பதிவுகளால் களைப்பில் அயர்ந்து தூங்கிவிட்டாராம் எம்எஸ்வி. விஷயம் தெரிந்த கண்ணதாசன், ஒரு தாளில் இப்படி எழுதி வைத்துவிட்டுப் போய்விட்டாராம்.

அவனுக்கென்ன தூங்கிவிட்டான் 
அகப்பட்டவன் நானல்லவோ...

இந்த வரிகள் அருமையாக இருந்ததால், அதையே படத்தில் எம்ஜிஆர் பாடும் சோகப் பாடலுக்கு பல்லவியாக எடுத்துக் கொண்டு, மீதி வரிகளைத் தரும்படி கேட்டு கவிஞரை குளிர்வித்தாராம் எம்எஸ்வி.










"விழியே கதை எழுது, கண்ணீரில் எழுதாதே.. மஞ்சள் வானம்.. தென்றல் காற்று.. உனக்காகவே நான் வாழ்கிறேன்..!"



எம்ஜிஆரும் கண்ணதாசனும் மனஸ்தாபம் காரணமாக இணைந்து பணியாற்றுவதைத் தவிர்த்து வந்த நேரமது. அப்போதுதான் எம்ஜிஆர் - ஸ்ரீதர் கூட்டணியில் உரிமைக்குரல் உருவாகிறது. அந்தப் படத்தில் ஒரு அற்புதமான காதல் பாடல் வேண்டும். வேறு கவிஞர்களை வைத்து எழுதிய பாடல்களில் அவ்வளவாக திருப்தியில்லை எம்ஜிஆருக்கு. உடனே எம்எஸ்வி, அடுத்த நாள் வேறு பாடலுடன் வருவதாகக் கூறிச் சென்றவர் கவிஞரை அழைத்தார்.

கவிஞர் முதலில் தயங்கினாலும், தான் பார்த்துக் கொள்வதாகக் கூறி, அழைத்து பாடல் எழுதி வாங்கிவிட்டார். இயக்குநர் ஸ்ரீதருக்கும் பிடித்துவிட்டது. இனி எம்ஜிஆரிடம் காட்டி உண்மையைச் சொல்ல வேண்டும். முதலில் பாடலை எம்ஜிஆரிடம் காட்டினார்

எம்எஸ்வி. பாடலைப் படித்ததும் எம்ஜிஆர் முகத்தில் பரம திருப்தி. 'இப்படி அவரால் மட்டும்தானே எழுத முடியும்?' என்று சொல்லிக் கொண்டே எம்எஸ்வியைப் பார்க்க, 'ஆமாண்ணே.. இது கவிஞர் எழுதியதுதான்... நீங்க கோவிச்சிக்க மாட்டீங்கன்ற நம்பிக்கையில எழுதச் சொன்னேன்.. இனி உங்க அபிப்பிராயம்," என்றாராம். "நல்லாருக்கு.. இந்தப் பாடலே அந்த சூழலுக்கு சரியா இருக்கும் என்று கூறி அனுமதித்தாராம்.

இது அன்றைக்குப் பெரிய விஷயம். காரணம் எம்ஜிஆர் சினிமாவின் அசைக்க முடியாத சக்தியாகத் திகழ்ந்தார். அவர் விருப்பத்துக்கு மாறாக ஒரு விஷயத்தைச் செய்து, பின் அதற்காக அவரிடம் பாராட்டும் பெற்றது எம்எஸ்வியாகத்தான் இருக்கும் என்பார்கள். காரணம், கண்ணதாசனின் அதி அற்புதமான தமிழ். எம்ஜிஆர் மயங்கிய அந்த பாடல் வரிகள்...,

"விழியே கதை எழுது, கண்ணீரில் எழுதாதே.. மஞ்சள் வானம்.. தென்றல் காற்று.. உனக்காகவே நான் வாழ்கிறேன்..!"







காதலித்து மணந்த முதல் மனைவியைப் விபத்தில் பறிகொடுத்து விட்டு (சந்தர்ப்ப சூழ்நிலையால் அவள் இறந்துவிட்டதாக நினைத்து) பற்றற்ற வாழ்க்கை வாழும் ஒரு புற்று நோய் டாக்டர். தன்னை வளர்த்து ஆளாக்கியவர்களுக்கு செலுத்தும் நன்றிக்கடனாக (விருப்பமில்லாமல்) செய்து கொண்ட இரண்டாவது திருமணத்தில் மனம் ஈடுபடாத வாழ்க்கை. அவளோடு ஏற்ப்பட்ட வாக்குவாதத்தால் விபத்து நேர்ந்து கண்களையும் இழந்து தவிக்க, அசந்தர்ப்பமாக முதல் மனைவியே அவருக்கு நர்ஸாக வர, இரண்டாவது மனைவியோடு தன் கணவர் விரும்பாத வாழ்க்கை வாழ்வது அறிந்து அவரை அவள் பால் திருப்ப எடுக்கும் முயற்சியின் ஒரு கட்டமாக, உடல் நலமில்லாத அவரை வாக்கிங் அழைத்துப்போகும்போது அவர் மனம் மாற்றம் ஏற்பட பாட, அதற்கு மறுப்பு தெரிவித்து கணவர் பாடும் பாடல்…

இதுதான் சிச்சுவேஷன் இதற்கு பாடல் எழுதுங்கள்’ – இயக்குநர் பீம்சிங் ஒரே மூச்சில் சொல்லி முடித்தார். பல்லவிக்காக மெல்லிசை மன்னரும் மூன்று ட்யூன்கள் போட்டு காண்பித்தார். அதில் ஒன்று பிடித்துப் போக, பல்லவிக்காக வரிகளை யோசித்துக்கொண்டிருந்த கண்ணதாசன், தன் உதவியாளர் பஞ்சு அருணாசலத்திடம் “டேய் பஞ்சு, காரில் என் ஃபைல் இருக்குல்ல? அதை எடுத்துகிட்டு வா” என்றார்.

பஞ்சுவும் ஃபைலுடன் வந்தார். அதைப் புரட்டி, ஒரு தாளை எடுத்த கவிஞர் “இந்த வரிகளைப் பாருங்கள், கண்ணனைப் பற்றி நான் எழுதிய பாடல். இதில் ‘அவன்’ என்பதை அவள் என்று மாற்றிப் பாருங்கள். விசு போட்ட சந்தத்துக்கும் நீங்க சொன்ன சிச்சுவேஷனுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன்” என்றார். பீம்சிங் பாடலை வாங்கிப் பார்த்தார். பாடல் இப்படி இருந்தது.

என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல் என்று நீ கேட்கிறாய்
நான் ‘அவன்’ பேரை தினம் பாடும் குயிலல்லவா
என் பாடல் ‘அவன்’ தந்த மொழியல்லவா
இதில் அவன் என்று வந்த இடங்களை அவள் என்று மாற்றி விஸ்வநாதன், தன் மெட்டோடு பாட, வாவ்! கனகச்சிதமாக பொருந்தியது. எல்லோரும் ஆச்சரியத்தில் உறைந்து போனார்கள். மெல்லிசை மன்னர் துள்ளி குதித்தார் “எப்படி கவிஞரய்யா இது…?” என்று.

சொற்களை மாற்றிய பின் பாடலின் தன்மை அப்படியே மாறிப் போனது. கடவுளைப் பற்றி கவிஞர் எழுதிய பாடல், இரண்டாவது மனைவியோடு சேர்ந்து வாழும்படி நர்சாக வந்த முதல் மனைவி அட்வைஸ் செய்ய, அவர் அதை மறுப்பதாக அமைந்தது.

என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல் என்று நீ கேட்கிறாய்
நான் ‘அவள்’ பேரை தினம் பாடும் குயிலல்லவா
என்பாடல் ‘அவள்’ தந்த மொழியல்லவா
தொடர்ந்து கவிஞர்

என்றும் சிலையான உன் தெய்வம் பேசாதய்யா
சருகான மலர் மீண்டும் மலராதய்யா
என்று வரிகளை அடுக்கினார்.

பாடல் தயார். மறூநாள் ரிக்கார்டிங். விஸ்வநாதன்-ராமமூர்த்தி குழுவினர் தயார் நிலையில் இருந்தார்கள், சுசீலாவும் வந்து தன் போர்ஷன்களை பாடிப் பார்க்க துவங்கிவிட்டார். ஆனால்டிஎம்எஸ் வரவில்லை. சிறிது நேரம் கழித்து அவரிடமிருந்து ஃபோன் வர, பீம்சிங் தான் பேசினார்.

“என்ன் சௌந்தர்ராஜன்… குரல் ஒரு மாதிரியாக இருக்கு?”

“அதைச் சொல்லத்தான் ஃபோன் செய்தேன். நேற்று இரவு முதல் ஜலதோஷம். அதனால் இன்னைக்கு ரிக்கார்டிங்கை கேன்ஸல் செஞ்சுடுங்க. இரண்டு நாள் கழித்து வச்சுக்கலாம்”.

(இப்போ மாதிரி ட்ராக் சிஸ்டம் எல்லாம் அப்போது கிடையாது. பாடகர்கள், இசைக் குழுவினர் எல்லோரும் ஒரே நேரத்தில் அமர்ந்து பாடலை ரிக்கார்டிங் செய்து முடிக்க வேண்டும். ஒருவர் தவறு செய்தாலும் அத்தனை பேரும் மீண்டும் வாசிக்க வேண்டும். இப்போது டூயட் பாடல் என்றால் அனுராதா ஸ்ரீராம் தன்னுடைய போர்ஷனை பாடி விட்டு போய்விடுவார். தன்னோடு உடன் பாடுவது எஸ்.பி.பி.யா, மனோவா, அல்லது திப்புவா என்பது கேஸட் வெளியான பின்புதான் அவருக்கே தெரியும்)

பீம்சிங் கேட்டார்…. “உங்களுக்கு ஜலதோஷம் மட்டும் தானா? அல்லது ஜுரம் ஏதாவது அடிக்கிறதா?”

“இல்லீங்க வெறும் ஜலதோஷம் மட்டும்தான்”

“அப்படீன்னா உடனே புறப்பட்டு ரிக்கார்டிங் தியேட்டருக்கு வாங்க. நீங்க இப்போ பேசுகிற குரல்தான் இந்தப் பாடலுக்கு வேண்டும்” என்றார் பீம்சிங்.

டிஎம்எஸ்ஸும் வந்து விட்டார். “அப்படி என்னென்னே இன்று என்னுடைய குரலில் விசேஷம்?” என்று கேட்க, இயக்குநர் சொன்னார் “இந்தக் காட்சியில் சிவாஜி உடல்நிலை சரியில்லாதவராக இருக்கிறார். அதோடு வாக்கிங் போகும்போது மழையிலும் நனைந்து விடுகிறார். அதனால் இந்தக் காட்சிக்கு இப்போதுள்ள் உங்கள் ஜலதோஷக்குரல் கச்சிதமாக பொருந்தும்” என்றார். டிஎம்எஸ் ஒத்திகை பார்த்து விட்டு ரிக்கார்டிங்குக்கு தயாரானார். அப்போது விஸ்வநாதன் அவர்கள் ” அண்ணே…, மூக்கை உறிஞ்சுவது, தும்மல் போடுவது எல்லாத்தையும் ரிக்கார்டிங் துவங்கும் முன்னர் பண்ணிக்குங்க. இடையில் பண்ணிடாதீங்க.” என்றார்.

அதற்கு பீம்சிங் “பரவாயில்லை, அப்படியே தும்மல் வந்தாலும் போடுங்க. படத்தில் சிவாஜி சாரையும் தும்ம வைத்து எடுக்கிறேன்” 


சொல்ல அனைவரும் சிரித்தனர். நல்லவேளையாக பாடல் முடியும் வரை டிஎம்எஸ் அவர்கள் தும்மல் எதுவும் போடவில்லை. இப்போதும் கூட அப்பாடலைக் கேட்கும்போது, டி.எம்.எஸ்ஸின் ஜலதோஷக்குரல் நமக்கு நன்றாக தெரியும்.








“கண்ணே கலைமானே!” என்ற பாடல் தன் தந்தை தன்னை நினைவில் வைத்துதான் எழுதினார் என்று கலைவாணன் பிற்காலத்தில் அவனுக்கு நெருங்கியவர்களிடம் பலமுறை கூறி மகிழ்ந்திருக்கிறான் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.தன் சகோதரன் கலைவாணனின் நினைவுகளை கண்ணதாசனின் இன்னொரு தாரத்தின் (புலவர் வள்ளியம்மை) செல்வப் புதல்வியான விசாலி கண்ணதாசன் கூறுவதைக் கேளுங்கள்:

“அவன் சாகக்கூடிய வயசில்ல. எமனுக்கு இது தெரியல. ரத்த உறவுன்னு இருந்த ஒன்னும் போச்சு. கலை அண்ணா இருந்திருந்தா சினிமாவில் பெரும் இயக்குநரா வந்திருப்பான்” தன்மீது அளவில்லாத அன்பைப் பொழிந்த அன்புச் சகோதரனை இழந்தபோது இந்தச் சகோதரியின் மனம் எந்தளவுக்கு பாடுபட்டிருக்கும் என்பதை நம்மால் உணர முடிகின்றது. தகப்பனின் அன்பை முழுமையாக அனுபவிக்க கொடுத்து வைக்காதவர் விசாலி என்றுதான் சொல்ல வேண்டும்.. கவிஞர் மரணிக்கையில் விசாலிக்கு கருத்து தெரியாத பருவம். அப்போது அவருக்கு வெறும் நான்கு வயதுதான்.

‘’அப்பாவோட மற்ற பதினான்கு பிள்ளைகளில் கலைவாணன் அண்ணாதான் என் கூட ஒட்டினான். மற்ற யாரும் என்கூட ஒட்டல”என்கிறார் விசாலி கண்ணதாசன்.
“கண்ணே கலை மானே” பாட்டில் “கலை” என்று வருகிறது. அதனால் இது அப்பா எனக்காக எழுதிய பாட்டு என்று கலைவாணன் ஒருமுறை தன் சகோதரிகளிடம் வாதம் புரிய, அவர்கள் அதை “இல்லை” என்று மறுக்க அதை உறுதிப்படுத்த நேராகவே சென்று தன் தந்தையிடம் சந்தேகம் கேட்டிருக்கிறான்.

இன்னொருமுறை கலைவாணன் தன் தந்தையிடம் ஓடிச்சென்று அவரைக் கட்டிப்பிடித்து

“அப்பா.. நீங்க எல்லாரைப் பத்தியும் பாட்டு எழுதுறீங்க. என்னைப் பத்தியும் பாட்டு எழுதுங்கப்பா”
என்று செல்லமாக கேட்டிருக்கிறான். கவியரசரின் நகைச்சுவை உணர்வுக்கும், சமயோசித புத்திக்கும் அளவே கிடையாது. உடனே குறும்புத்தனமாக பதில் சொல்லியிருக்கிறார்.
“உன்னைப் பத்தி ஏற்கனவே எழுத்திட்டேனடா…” என்று கவிஞர் சொல்ல கலைவாணனுக்கு ஒரே ஆச்சரியம். “சொல்லுங்கப்பா..” என்று மீண்டும் அவர் தோளைப் பிடித்து உலுக்க
“ஏன் பிறந்தாய் மகனே! ஏன் பிறந்தாயோ? பாட்டை உனக்காகத்தானே எழுதினேன்” என்றாராம் அந்த கவிராஜன் சிரித்துக் கொண்டே..
இந்த பதிலைக்கேட்ட மற்ற குழந்தைகளும் முண்டியடித்து அவர் மடிமேல் தவழ்ந்து
“அப்ப எங்களைப் பத்தியெல்லாம் ஒண்ணும் எழுதலையா..?” என்று சிணுங்கி இருக்கிறார்கள்.
கவிச்சக்கரவர்த்திக்கு பேச சொல்லியா கொடுக்க வேண்டும்?
“அதுவும் எழுதி விட்டேனே..…!” என்றாராம். “அது என்ன பாட்டு?” என்று பிள்ளைகள் ஆர்வத்துடன் வினவ..
ஒரே ஒரு ஊரிலே
ஒரே ஒரு ராஜா 
ஒரே ஒரு ராஜாவுக்கு 
ஒரே ஒரு ராணி
ஒரே ஒரு ராணி பெற்றால்
ஒன்பது பிள்ளை அந்த 
ஒன்பதிலே ஒன்றுகூட 
உருப்படியில்லை.. 
உருப்படியில்லை “
என்று பாடி முடித்துவிட்டு, “இதையெல்லாம் உங்களை மனசுலே வச்சுத்தான் எழுதினேன்” என்று பிள்ளைகளை கலாய்த்தாராம்.
பாவம் பிள்ளைகள். இந்த பதிலை அவர்கள் எதிர்ப்பார்க்கவில்லை. மறுபடியும் செல்லமாக சிணுங்கிக் கொண்டு ஓடி விட்டன. 
கண்ணதாசனுக்குள்ளே கவிஞர்களுக்கே உரித்தான குசும்பு சற்று அதிகமாகவே குடிகொண்டிருந்தது


பெருமளவு சம்பாதித்துக் கொண்டிருந்த வேலையிலும் கடனில் மூழ்கி கண்ணதாசன் தன் குழந்தைகளுக்கு தீபாவளியன்று புதுத்துணிமணி, பாட்டாசுகள் வாங்கிக் கொடுக்க முடியாத நிலையில் கண்ணீர்கூட வடித்திருக்கிறாராம்.கண்ணதாசன் சில சமயம் இரவில் தாமதமாக வீடு திரும்புவார். சில பிள்ளைகள் முழித்துக்கொண்டு அவருக்காக காத்திருப்பார்கள். ஜாலியான மூடு வந்துவிட்டால் தனது அம்பாஸிடர் காரை எடுத்துக் கொண்டு மவுண்ட்ரோடிலுள்ள புகாரி அல்லது பிலால் ஓட்டலிலிருந்து வகைவகையான அசைவ உணவு பார்சல் கொண்டுவந்து வீட்டில் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவார்கள். இறால், நண்டு, முயல்கறி, மான்கறி எல்லாமே விரும்பிச் சாப்பிடுவார்.
“பறப்பதில் ஏரோப்பிளேனும், ஓடுவதில் ரயிலும் மட்டும்தான் நான் சாப்பிடாதது” என்று நகைச்சுவையாகச் சொன்னதை ஒரு பத்திரிக்கை பேட்டியின்போது காந்தி கண்ணதாசன் குறிப்பிட்டிருக்கிறார்.“குழந்தைகளுக்கு இடையே வித்தியாசம் வரக்கூடாது என்பதற்காக எல்லோருக்கும் யூனிஃபார்ம் மாதிரி ஒரே கலரில் ட்ரவுசர், சட்டை, பாவடை வாங்கித் தருவார்” என்று தன் தந்தை பற்றிய சுவையான நினைவுகளைப் பகிர்கிறார் காந்தி கண்ணதாசன்.














No comments:

Post a Comment