Sunday, 2 August 2020

TIRUPUR LEGEND HISTORY



TIRUPUR LEGEND HISTORY 


திருப்பூர் நகரைப் பற்றிய என் நினைவுகள் 1980-களின் நடுவில் இருந்து தொடங்குகின்றன. அதன் புழுதியும் காற்றும் சிறிய சாலைகளும் நெரிசல் இல்லாத பேருந்து மற்றும் இருப்பூர்தி நிலையங்களும் என் நினைவில் வந்து போகின்றன.

திருப்பூர் -  பின்னலாடைப் பொன்னகரம்!
உலகின் எல்லா அழகிய நகருக்கும் உள்ளதுபோலவே, இங்கே நகரின் நடுவகிடாக மேற்குத் தொடர்ச்சி மலையின் வெள்ளியங்கிரி மலைச்சிகரத்தில் தோன்றிப் பெருகும் நொய்யல் ஆறு குறுகுறுத்து ஓடிக்கொண்டிக்கும். மாட்டு வண்டிகளும் மிதிவண்டிகளும் மிகுந்து திரியும். தென்படும் மாந்தர்கள் வேட்டி - சட்டை அணிந்திருப்பர். திரையரங்குகள் அப்போதே அதிகம் இருந்தன. முச்சந்திதோறும் திரைப்படச் சுவரொட்டிகள் வண்ணங்களில் மின்னும். ஒரு தொழில் நகராக அது விரியும் முன், சுற்றுப்புறக் கிராமங்களின் விவசாய விளைபொருள்களுக்குச் சிறு சந்தையாகவே இந்த நகர் விளங்கிற்று. சுற்றியுள்ள எல்லாக் கிராமங்களுக்கும் இங்கிருந்து பேருந்துகள் சென்று வந்தன. அவற்றிலிருந்து இறங்கும் கிராமத்தவர்கள் நகருக்குள் நிறைந்திருப்பர். அவர்களின் உரையாடல்களில் கொங்கு தமிழ் நடனமிடும். பின்னாளில் இந்த ஊரை உலகத் தொழிலக வரைபடத்தில் இடம்பெறச் செய்யவிருக்கின்ற பின்னாலாடைத் தொழில், அப்போதே தன் முதல் முன்னெடுப்பைத் தொடங்கியிருந்தது. திருப்பூரின் வரலாறு ஆங்கிலேயே ஆட்சியில் இருந்தே நிகழ்வுகளால் நிறைந்திருக்கிறது.

கொடிகாத்த குமரன் என்னும் விடுதலைப் போராட்ட வீரர், இந்த ஊருக்குத் தேசிய அளவில் ஓர் அறிமுகத்தைப் பெற்றுத் தந்தார். 1932-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் உப்புக்கு வரி விதித்த ஆங்கிலேயரின் கொடுங்கோல் ஆட்சியைக் கண்டித்து நடந்த சட்ட மறுப்பு ஊர்வலத்தில் பங்கேற்ற குமரன், காவல் நிலையத்துக்கு எதிரே காவலர்களின் முரட்டுத் தடியடிக்குப் பலியாகி மண்டை எலும்புகள் சிதற உயிர்நீத்தார். அந்தச் செய்தி தேசம் எங்கும் பரவி உணர்ச்சிக்கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அந்தக் காலத்தில் காந்தியடிகள் இந்த ஊருக்கு மூன்று முறை வருகை தந்திருக்கிறார். திருப்பூரில் தங்கியிருந்தபோதுதான் வட்டமேசை மாநாட்டில் பங்கு பெறுவதற்கான ஆங்கிலேய அரசின் அழைப்பு வந்தது.

20-ம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்திலேயே இங்கு பஞ்சாலைகள் நிறைந்திருந்தன. ஆங்கிலேயர் ஆட்சியில், 'தென் இந்தியாவின் மான்செஸ்டர்’ என்று அழைக்கப்பட்ட கோயம்புத்தூ¬ரச் சுற்றியிருந்த பகுதிகள் பருத்தி விளைச்சலுக்குப் பெயர்பெற்றிருந்தன. பருத்திக் கொள்முதலுக்காக இங்கே வந்த வட இந்தியர்கள் பஞ்சாலைகளையும் நிறுவினர். பருத்தியைப் பஞ்சாகப் பதப்படுத்தி நூற்கும் தொழில் இங்கே முதன்முறையாக நிலைகொண்டது.

திருப்பூர் -  பின்னலாடைப் பொன்னகரம்!
மேற்குத் தொடர்ச்சி மலைகள், குமரி மாவட்டத்தில் இருந்து மகாராஷ்டிரம் வரை நீண்டு சென்றாலும் கோவைக்கும் பாலக்காடுக்கும் இடையில் உள்ள பகுதியில் மலை தணிந்து ஒரு துண்டாக விடுபட்டு நிற்கிறது. அதுதான் பாலக்காடு கணவாய். அதன் வழியாகத்தான் கேரளத்துக்கும் தமிழகத்துக்குமான முக்கியப் போக்குவரத்து நிகழ்கிறது. அந்தக் கணவாய் வழியாக தென்மேற்குப் பருவக் காற்று, குப்பியின் முனை வழியே சீறும் காற்றைப்போல் கொங்கு மாவட்டங்களுக்குள் விசிறியடிக்கிறது. அந்தக் காற்று தரும் நிரந்தர ஈரப்பதமே இந்தப் பகுதிகளில் நூற்புத் தொழில் சிறக்க ஏதுவாயிற்று. பஞ்சில் இருந்து நூல் நூற்கையில் பஞ்சிழைகள் ஒவ்வொன்றும் நுண்ணியதாகப் பிரியும். இதமான ஈரப்பத வளிநிலை நிலவினால்தான் அந்தச் செயல் சிறப்பாக நடக்கும். இதுதான் இந்தப் பகுதிகளில் ஆடைத்தொழில் சிறக்க முதன்மைக் காரணம். இயற்கையின் கருணை இல்லாமல் எந்தத் தொழிலையும் வளர்த்தெடுக்க முடியாது என்பதற்கான மகத்தான சான்றுதான் கொங்குப் பகுதிகளில் வளர்ந்த ஆடைத்தொழில்.


பஞ்சுப் பொதிகளின் கொள்முதல் நகராக இருந்த திருப்பூரில் அதைப் பதப்படுத்தும் தொழிற்கூடங்கள், நூற்பாலைகள் என்று தோன்றத் தொடங்கின. அடுத்த நிலையான ஆடை நெசவும் தோன்ற வேண்டும்தானே? அதுவே நிகழ்ந்தது. மேற்கு மாவட்டங்களில் துணி நெசவுத் தொழில் முதலில் கைத்தறியில் இருந்து தொடங்குகிறது.

திருப்பூரில் கைத்தறி ஆடை நெசவின் வரலாறு காந்தி தொடங்கிவைத்த கதர் இயக்கத்தோடு தொடர்புடையது. 'தேசத்தின் கதராடைத் தலைநகரம்’ என்று கூறத்தக்க அளவில் இங்கே கதர் நெசவு கொடிகட்டிப் பறந்திருக்கிறது. காந்தி ஆசிரமம் என்னும் முன்மாதிரியில் இந்த நகரைச் சுற்றிலும் பல்வேறு இடங்களில் பெரும் நிலப்பரப்பில் சர்வோதயா கதர்த்தொழில் வளாகங்கள் இன்றும் இயங்கிவருகின்றன. ஏழ்மை தலை விரித்தாடிய ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பணியின்றி வாடும் மக்களை ஈடேற்ற, அவர்களைச் சுயதொழிலில் ஈடுபடுத்தும் பொருட்டு ஏற்பட்ட இயக்கம் அது.

திருப்பூர் -  பின்னலாடைப் பொன்னகரம்!
திருப்பூரில் பஞ்சாலைகள், நூற்பாலைகள், நெசவாலைகள் என்று வழக்கமான பாட்டையில் சென்று கொண்டிருந்த தொழில், பின்னலாடை என்ற புதுவகைமைக்குள் நுழைந்தது. வழக்கமான நெசவு என்பது கூட்டல் குறியைப்போல் இரண்டு இழைகளை ஊடும் பாவுமாக அமைத்து நெய்வது. நாம் அணிகின்ற மேல் சட்டைத் துணிகள் அந்த வகை. பின்னலாடை என்பது படுகிடை செங்குத்து என்று கூட்டல் குறியைப்போல் நெய்யாமல் பெருக்கல் குறியைப்போல் பாம்புகள் ஒன்றோடு ஒன்று பின்னுவதைப்போல் பின்னி நெய்வதாகும். பின்னலாடைகள் மீள் விசையுடையவை; நெகிழ்ந்து கொடுப்பவை. அதனால்தான் உள்ளாடைகளுக்குப் பின்னலாடைகள் பயன்படுத்தப்படுகின்றன. குழந்தைக்குப் பின்னலாடையை அணிவித்தால், அது உறுத்தலை உணராது. விளையாட்டில் பின்னலாடை அணிந்துகொண்டால், உடல் திறன் தடைபடாது. குளிர்ப் பகுதிகளில் அணிய நமக்கு வேண்டிய அடர்த்தியோடு பின்னலாடையை (ஸ்வெட்டர்) உருவாக்க முடியும். இத்தகைய பயன்பாடுகள்தாம் இந்தத் தொழிலை மேலே மேலே அழைத்துச் சென்றன.

காதர் என்னும் தொழில் முனைவோர்தான் திருப்பூருக்கு முதன்முதலாக வெளிநாட்டில் இருந்து ஒரு பின்னாலாடை நூற்பு எந்திரத்தை வரவழைத்திருக்கிறார். அவரிடம் இருந்து தொடங்கி பின்னாலாடை நூற்கும் தொழில் இந்த நகரில் கொஞ்சம் கொஞ்சமாகப் பரவியது. வட இந்தியர்கள் பலரும் இங்கே நூற்றவற்றை வாங்கிச் சென்றனர். நற்பேறாக திருப்பூருக்குச் சிறிய இருப்பூர்தி நிலையம் ஒன்றும் இருந்தது. வணிகர்கள் குவியத் தொடங்கினர். இருப்பூர்தி நிலையத்தைச் சுற்றிலும் தங்கும் விடுதிகள் முளைத்தன. இவை யாவும் நாடு சுதந்திரம் பெற்ற முதல் 20 ஆண்டுகளில் நிகழ்ந்தவை.

பின்னலாடையைத் தைப்புடையாகத் தைத்து உருவாக்க வேண்டும் என்றால், இடையே சில பதப்படுத்தும் செயல்கள் நிகழ வேண்டும். நூற்ற துணியை நன்கு சலவைசெய்ய வேண்டும். உரிய வேதி உப்புகளைப் பயன்படுத்தித் துவைத்து அலசினால்தான் நாம் கடைத்துணியில் பார்க்கிறோமே, அந்த வெண்மை கிடைக்கும். அதற்காக ஊரைச் சுற்றிலும் சலவைப் பட்டறைகள் தோன்றின. தோட்டப் பகுதிகளில் சலவைக்கூடங்கள் அமைத்து கிணற்றுத் தண்ணீரை இறைத்து நிரப்பினார்கள். துணி உருளைகளைப் பெற்றுச் சென்று நீச்சல் குளங்களைப் போன்ற தொட்டியில் வேதிப் பொருள்களோடு ஊறவைத்து வெளுத்துக் காயவைப்பதுதான் சலவைப் பட்டறையில் நிகழும் தொழில். நான் சிறுவனாக இருந்தபோது துணிகளை ஊறவைக்கும் தொட்டியில் இருந்த தண்ணீரில் குதித்துத்தான் நீச்சலே பழகினேன். நகருக்குள் உள்ள பின்னலாடை நூற்பகத்தில் இருந்து, சலவைப் பட்டறைக்குத் துணி உருளைகளை ஏற்றிச் செல்லும் மாட்டு வண்டிகளே அன்றைய திருப்பூரின் அடையாளம். மாட்டு வண்டிகள் சந்தன நிறத்தில் வண்ணம் பூசப்பட்டிருக்கும். 'தேவி ப்ளீச்சிங் கம்பெனி;’ 'முருகன் ப்ளீச்சிங் பிராசஸ்’ என்று வண்டிகளின் பக்கவாட்டில் எழுதியிருப்பார்கள்.

வெள்ளைத் துணிகளுக்குச் சலவையிட்டால்போதும்; ஆனால், வண்ணத் துணிகள் சந்தையில் பரவிய நேரம் அது. அந்தப் போட்டியைச் சமாளிப்பதற்காகத் தோன்றியவைதாம் சாயப் பட்டறைகள். சலவைக்கு வேதி உப்புகளைப் பயன்படுத்தியதைப்போல், துணிக்குச் சாயம் ஏற்ற வாயில் நுழையாத பெயருடைய சாய வேதிகள் பயன்படுத்தப்பட்டன. சாயப் பட்டறைகள் தலையாய உபதொழிலாக உருவெடுத்தன. ஏக்கர் கணக்கான நிலத்தில் கொதிகலன்கள், பதக்கலன்கள் என சாயப்பட்டறைகள் நிறுவப்பட்டன. உலகுக்குத் தேவைப்பட்ட நிற வகைமைகள் என்னென்னவோ, அவற்றை அப்படியே துணிகளில் ஏற்றிக் காண்பித்தார்கள். திருப்பூரின் வண்ணமயமான பின்னலாடைகள், பன்னாட்டு ஆடைக் கண்காட்சிகளில் வர்த்தகர்களை விழி விரியச் செய்தன. அவர்கள் திருப்பூரை நோக்கிப் படையெடுத்தார்கள். இந்தப் புள்ளியில் இருந்து திருப்பூரின் ஏற்றுமதி உலகம் தன் பயணத்தைத் தொடங்கியது.

திருப்பூர் -  பின்னலாடைப் பொன்னகரம்!
ஏற்றுமதி என்ற திசையில் இந்த நகரம் அந்நியச் செலாவணியை ஈட்டத் தொடங்கியதும் இங்கு நிகழ்ந்த மாற்றங்கள் ஒவ்வொன்றும் தனி ரகம். திருப்பூரில் தொலைபேசி வைத்திருந்தால் போதும்; தொழில் தொடங்கிச் சாதிக்கலாம் என்ற நிலைமை ஏற்பட்டது. நிறுவனங்களின் கதவுகள்தோறும், மின்கம்பங்கள்தோறும், 'வேலைக்கு ஆள்கள் தேவை’ என்ற அட்டைகள் தொங்கின. தமிழகத்தில் இருந்து அணி அணியாக திருப்பூரை நோக்கி மக்கள் கிளம்பினர். பேருந்தைவிட்டு இறங்கியதும் ஒரு வேலைக்குச் சென்று பணியாற்றலாம் என்ற நிலைமை திருப்பூரில் மட்டும்தான் தோன்றியது.

முதன்மையாக திருப்பூரின் ஏற்றுமதி அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளைச் சார்ந்திருக்கிறது. அங்கு எல்லாம் கைவிடப்பட்ட சாயமேற்று முறைகள் மூன்றாம் உலக நாடுகளை நோக்கித் திருப்பப்பட்டன என்பது தாமதமாகத்தான் புரிந்தது. வெளியேறிய கழிவு நீர் பள்ளத்தை நோக்கிப் பாய்ந்தோடி நகரின் நடுமத்தியில் ஓடிய நொய்யலாற்றுப் படுகையைப் பாழ்படுத்தியது. இவை எல்லாம் இவ்வாறு நடந்துகொண்டிருப்பது அரசாங்கத்துக்குத் தெரிந்தே இருந்தாலும் தடுக்கவோ, மாற்றுத் திட்டங்கள் முன்வைக்கப்படவோ இல்லை.  

கோவை மாவட்டத்தில் பல்லடம் தாலுக்காவில் இடம்பெற்றிருந்த திருப்பூர், ஒரே குதிப்பில் மாவட்டத் தலைநகர் ஆனது. கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சிக்கு அடுத்த வரிசையில் நகராட்சியாக இருந்த திருப்பூர் நகரம், மாநகராட்சியானது. திருப்பூர் என்னும் ஒரே சட்டமன்றத் தொகுதி திருப்பூர் வடக்கு, தெற்கு என்று இரண்டாகப் பிரிவுபட்டது. கோவை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்டிருந்தது; பின் தனி நாடாளுமன்றத் தொகுதியும் ஆனது.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 18 இருந்த காலத்தில் வேரூன்றத் தொடங்கிய ஏற்றுமதித் தொழில், அமெரிக்க டாலரின் மதிப்பு பெருகியதற்கு நிகராகவே வளர்ந்து வந்திருக்கிறது. உணவுக்கு அடுத்தபடியான மனிதத் தேவை உடைதான். அதை ஆக்கித் தரும் தொழிலில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட நகரம் திருப்பூர் என்பதால், அதன் எதிர்காலம் ஒளிமயமாகத்தான் இருக்கும் என்று நம்பலாம்!

படங்கள் உதவி: ஆர்.வி.ஸ்டுடியோ

.

No comments:

Post a Comment