Monday 11 June 2018

MGR AND NATARAJA PILLAI DIFFICULTY IN TAMILCINEMA






MGR AND NATARAJA PILLAI 
DIFFICULTY IN TAMILCINEMA




நண்பர், கலைஞர்களிடம் மட்டுமல்ல, எதிரிகளிடம் கூட, மரியாதையை பெற்று விடக் கூடியவர், எம்.ஜி.நடராஜ பிள்ளை. அப்படிப்பட்டவரிடம், மது அருந்துங்கள் என்று தவறான காரியத்தை செய்ய வற்புறுத்தியதுடன், 'உங்க வாழ்க்கை லட்சியம் என்ன?' என்று கேட்டேன்.

'என்னை போன்றோருக்கு எப்படிப்பட்ட லட்சியம் இருக்கணும்ன்னு நீங்க நினைக்கிறீங்க?' என்று கேட்டார், நடராஜ பிள்ளை.

இப்போது, யாராவது இதுபோன்ற கேள்வியை என்னிடம் கேட்டால், நாட்டுப்பற்று, மொழிப்பற்று மற்றும் கலைப்பற்று என்று, எதையாவது சொல்லியிருப்பேன். ஆனால், அன்று, எனக்கு, 'உங்கள் லட்சியம் என்ன?' என்று கேட்கத்தான் தெரியுமே தவிர, லட்சியம் என்ற வார்த்தைக்கு பொருள் தெரியாது.

அதனால், 'லட்சியம், கிட்சியம்ன்னு எல்லாம் கேக்காதீங்க; எனக்கு தெரியாது. உங்களோட ஆசை என்னன்னு சொல்லுங்க...'என்றேன்.
என் கேள்வியின், உட்பொருளை புரிந்து கொண்டவர், 'எனக்கும் நிறைய ஆசை இருக்குங்க தம்பி!' என்றார்.
பிடி கிடைத்து விட்டதாக மகிழ்ந்து, 'அப்ப, இந்தப் படத்தில கடைசி வரைக்கும் நடிக்கணும்ங்கிற ஆசை, உங்களுக்கு இருக்குதில்ல...' என்றேன்.


'ஆம்' என்பது போல் தலையாட்டி, 'நான், இதுக்கு முன் நடிச்ச படம் தோல்வி அடைஞ்சுடுச்சு. அதனால, இப்படத்துல நல்லா நடிச்சு, புகழடையணும்ன்னு ஆசையிருக்கு; ஆனா, அது நிறைவேறாது போல தோணுது. காந்திஜி காட்டிய வழிய, பின்பற்றும் நான், மது அருந்தினாத் தான், உயிரோட இருக்க முடியும்ங்கற நிலைமை. என்னை பார்த்து, மது அருந்தாமையை பின்பற்றிய பலருக்கு துரோகியா மாறிடறதா இல்ல, நடிகனா வாழ்ந்தான்கிறதுக்கு அடையாளம் கூட இல்லாம மறைஞ்சுடறதாங்கிற குழப்பத்தில இருக்கேன்...' என்றார்.

'நீங்க இங்க மது அருந்துவது அவங்களுக்கு எப்படி தெரியும். ஊருக்கு போனதும், உங்க இஷ்டப்படி நடந்துக்கலாமே...' என்றேன்.

'அவங்களுக்கு தெரியப் போறதில்ல... நான் இப்படி செய்தேன்னு, யாராவது சொன்னாலும் நம்பப் போறதுமில்ல. ஆனா, என் மனசு இருக்கே... அது, மதுவால் காப்பாற்றப்படும் உயிரை கொன்னுடும் போல இருக்கு...' என்றார்.

'நீங்க உயிரோடு இருந்தா தான் இந்த படத்தில், கடைசி வரையிலும், நடிக்க முடியும். இந்த படம் நல்லா ஓடினா தான், உங்களுக்கு புகழ் வரும்; அப்புறம், உங்க இஷ்டம்...' என்றேன்.

என் முதுகில், மெல்ல தட்டிக் கொடுத்து, 'ரெண்டு நாள் பொறுத்துக்குங்க தம்பி...' என்றார்.
அந்த இரண்டு நாட்களுக்குள் அவருடைய உடல் நிலை, இன்னும் மோசமாகி விட்டது.
படம் இடையில் நின்று விட்டால், இன்னொருவரை கொண்டு வந்து, மேலும் இவ்வளவு செலவு செய்து, திரும்பவும் இப்படத்தை எடுப்பாரா என்பது பெரிய கேள்வி குறி.

அப்படி, படம் எடுக்காமல் போய் விட்டால், எங்கள் கதி!
இத்தனை பிரச்னைகளையும் உணர்ந்து, எங்கள் அனைவருக்காகவும், சிறிதளவு மது அருந்த முடிவு செய்தார், நடராஜ பிள்ளை. மறுநாள், அவரை சந்தித்த போது, 'தம்பி... நீங்க ஜெயிச்சுட்டீங்க; ஆனா, என் வாழ்க்கை லட்சியத்தில் பெரிய தோல்வியை அடைஞ்சுட்டேன்...' என்றார்.

அவருக்கு தோல்வியோ, வெற்றியோ அதைப் பற்றி எனக்கென்ன! அவர் மது அருந்துவதால், உயிரோடு இருக்க போகிறார் என்ற அளவில் எனக்கு குஷி ஏற்பட்டது.படம், மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது. தட்சனாக நடித்த, நடராஜ பிள்ளையின் நடிப்பை எல்லா பத்திரிகைகளும் பாராட்டி எழுதின. 
அதே கம்பெனியார், மாயா மச்சீந்திரா என்ற அடுத்த படத்தை துவங்கினர். அதில், மச்சீந்திரா கதாபாத்திரத்திற்கு ஒப்பந்தம் ஆனார், எம்.கே.ராதா அண்ணன்.

நடராஜ பிள்ளைக்கு, சூரியகேது என்ற வில்லன் கதாபாத்திரம், ஒதுக்கப்பட்டது. வேறு வேடம் இல்லாத காரணத்தால், சூரிய கேதுவின் அண்ணனான, 'விசாலாட்ச மகாராஜா' வேடத்தை எனக்கு கொடுத்தனர். எனக்கு கொடுக்கப்பட்ட அக்கதாபாத்திரம், தோன்றும் முதல் காட்சியிலேயே, கொலை செய்யப்பட்டு, மடிந்து விடும்.
நாங்கள் படப் பிடிப்பிற்காக கோல்கட்டாவுக்கு புறப்பட்டு செல்ல, ஒரு வாரமே இருந்தது.

நடராஜ பிள்ளைக்கு, முன் பணத்தை, சென்னையிலிருந்து மணியார்டர் மூலமாக அனுப்பி வைத்தனர்.'மறுபடியும், நடராஜ பிள்ளையோடு கோல்கட்டாவிற்கு புறப்படப் போகிறேன்...' என்ற மகிழ்ச்சியோடு, குறிப்பிட்ட அந்நாளுக்காக ஆவலுடன் காத்திருந்தேன்.

மனிதன் எதிர்பார்ப்பது எல்லாம் நடந்து விட்டால், அதில் ஒருவித சுவையும் இருக்காது என்பது தானே, இயற்கையின் நியதி! முன் பணத்தை பட்டுவாடா செய்ய, நடராஜ பிள்ளை வீட்டுக்குச் சென்ற, தபால்காரர், அவரது சவத்தை தான் கண்டார்.
அவருக்காக தீர்மானிக்கப்பட்டிருந்த, சூரியகேது வேடம், எனக்கு தரப்பட்டது.

பல காலமாக, நான் கனவு கண்ட, கத்திச் சண்டை காட்சிகளில் நடிக்கும் வாய்ப்பை, அவ்வேடத்தின் மூலமாக, முதன் முதலாக பெற்றேன். அத்துடன், அக்கதாபாத்திரத்தின் மூலமாக, சினிமா துறையில், எனக்கு புது வாழ்வு பிறந்தது.

என் மீது, அன்பும், பாசமும் கொண்டிருந்த நடராஜ பிள்ளை, தம் மரணத்தின் மூலமாக, எனக்கு அந்த வாழ்வை தந்தார்.ஏழு வயதில், மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் சேர்ந்த நான், சில ஆண்டுகள் வரை, ஓரிரு உரையாடல்கள் கூட பேசுவதற்கு வாய்ப்பில்லாத, சிறு வேடங்களில் நடித்து வந்தேன்.
ஒருநாள், அதில் மாற்றம் வந்தது;

அதற்கு காரணமாக இருந்தவர், கம்பெனியின் முக்கிய நடிகரும், நடிப்பு கற்றுத்தரும் ஆசிரியருமான, காளி.என். ரத்தினம்! அவர் என்னை அழைத்து, 'உனக்கு ஏதாவது பாடம் கொடுக்கப்பட்டிருக்கிறதா?' என்று கேட்டார்.
'இல்ல...' என்றேன்.

உடனே, சிறு காகிதத்தை எடுத்தவர், மகாபாரதத்தில், விராட மன்னனின் மகன் உத்தரன் கதாபாத்திரத்திற்கான பாடத்தை எழுதிக் கொடுத்தார். ஏதோ பெரிய வசனம் என்று எண்ணி விட வேண்டாம்.
அர்ச்சுனன், உத்தரனை அழைத்து, தான் ஒளித்து வைத்திருக்கும் வில், அம்புகளை எடுத்து வரச் சொல்வான்.

உத்தரன் போய் பார்த்து, பயந்து, 'அய்யோ பாம்பு... பாம்பு...' என்று கத்துவான்.
'பயப்படாதே... போய் எடுத்து வா...' என்பான், அர்ச்சுனன்.
'ஹும்... நான் மாட்டேன்; பயமாயிருக்கு...' என்பான், உத்தரன்.
இவ்வளவு தான் பாடம்!

இதை, எனக்கு கொடுத்ததில், பாலகிருஷ்ணன் என்ற பையனுக்கு ரொம்ப பொறாமை. காரணம், எனக்கு முன்பாகவே, அவன் கம்பெனியிலிருந்தும், அவனுக்கு இன்னும் உரையாடல் பேசும் வேடம் கொடுக்கப்படவில்லையே என்ற ஆத்திரமும் இருந்தது.
நாடக கொட்டகையில், காலரியில், ஒத்திகை நடத்தி, எப்படி நடிக்க வேண்டும் என்று சொல்லி கொடுத்தார், காளி.என்.ரத்தினம்.

நாடக அரங்கேற்றம் அன்று, என் மீது பொறாமை கொண்டிருந்த பாலகிருஷ்ணன், எனக்கு உடைகள் அணிவிக்க, உதவி செய்தான்.
காளி.என்.ரத்தினத்தின் கால்களில் விழுந்து வணங்கி, மேடையில் ஏறினேன்.
















No comments:

Post a Comment