Wednesday 13 June 2018

ACTOR SIVAKUMAR IN TEEN AGE





ACTOR SIVAKUMAR  IN TEEN AGE



இறைவா, அந்த நாட்களை இன்னொரு முறை தரமாட்டாயா? -நடிகர் சிவகுமார்

16 வயதில் குக்கிராமத்து இளைஞன், பட்டணம் பிரவேசம்.
1958 ஜூன் முதல் 1964 வரை கல்விக் கடன் தந்து வாழ்க்கையில் கரையேற்றிவிட்ட மாமனிதர், பொள்ளாச்சியில் சென்ட்ரல் லாட்ஜ் என்ற அசைவ உணவு விடுதி நடத்தி வந்த என் ஒன்றுவிட்ட மாமா ஆறுமுகக் கவுண்டர்.

மாதம் ரூ.85-க்கு மணியார்டர் வரும். தபால்காரருக்கு 1 ரூபாய் அன்பளிப்பு. மவுண்ட் ரோடு புகாரியில் அரைபிளேட் பிரியாணி 14 அணா (88 பைசா). டபுள் ஆம்லட் 50 பைசா. மனமும் வயிறும் நிறைந்த பிறகு மீதி ரூ. 82.50/-க்கு பட்ஜெட் போடுவேன்.

காலை சிற்றுண்டி எழும்பூர் பாந்தியன் கபேயில் ரூ.15/- முன்பணம் கட்டி சாப்பிட்ட ஒரே நபர் நான்தான். பூபதி கபே பகல் உணவு 30 கூபன் ரூ.14
இரவு உணவு மவுண்ட் ரோடு கீதா கபே மாதம் ரூ.14. விருந்தாளி வந்தால் ஒரு கூபன் காலி. மறுநாள் இரவு நீர்தான் ஆகாரம். வீட்டு வாடகை ரூ.15.

ஓவிய உபகரணங்கள் ரூ.15. மாதம் 4 சினிமா பார்க்க ரூ 3.50 பைசா. 84 பைசா டிக்கட் இன்று கிடைக்காவிட்டால் நாளை அரை மணி முன்னால் போய் க்யூவில். துவைத்த துணிகளுக்கு இஸ்திரி போட மாதம் ரூ.5. சலூன் செலவு 75 பைசா.. திருப்பதி சென்று, 7 நாள் கோயில் வாசலில், கும்பலோடு படுத்துறங்கி, குழாய் நீரை கை பம்ப்பில் அடித்து குளித்து, நேரு கபே தண்ணிச் சாம்பாரில் இட்லியை அமுக்கிச் சாப்பிட்டு ஏழுமலையான் கோயிலைச் சுற்றிய இயற்கை எழிலை ஓவியமாகத் தீட்ட பஸ் கட்டணமும் சேர்த்து ரூ.35.

இப்படி தர்மச் சத்திரங்கள், குறைந்த வாடகை ரூ. 1.50 முதல் அதிகபட்சம் ரூ.4 ஓட்டலுக்குக் கொடுத்து திருச்சி, தஞ்சை, மதுரை, கன்யாகுமரி, குற்றாலம், பாண்டி- இப்படி விடுமுறை நாட்களில் ஓவியங்கள் தீட்டச் செல்வேன்.

மகாபலிபுரம் சைக்கிளில். ஊர் கணக்குப் பிள்ளை வீட்டு வெளித்திண்ணையில் படுத்து, தெருக் குழாயில் குளித்து, மாமல்லபுரம் கபேயில் சிற்றுண்டி முடித்து 5 ரத ஓவியம், கடற்கரை கோவில்,புது லைட்ஹவுஸ் என வரைந்து முடித்து, அடைமழையில் நனைந்தவாறு 30 கி.மீ. சைக்கிள் சவாரி செய்து திருக்கழுக்குன்றம் சென்று, ஓவியங்கள் தீட்டிக் கொண்டு அங்கிருந்து செங்கல்பட்டு 30 கி.மீ, சென்னை அங்கிருந்து 42 கி.மீ.
வண்டலூர் லேலண்ட் கம்பெனி, ஆயுத பூஜைக்கு கடலை, பொரி, சில்லு தேங்காய் கொடுத்ததை வாங்கி பாக்கட்டில் போட்டுக் கொரித்தவாறு பயணித்த நாட்களை, இறைவா இன்னொரு முறை தரமாட்டாயா?
- நடிகர் சிவகுமாரின் பேஸ்புக் பக்கத்திலிருந்து...

No comments:

Post a Comment