LIFE IS CHANGING
MGR
மனதை, வாழ்க்கையை எப்படியெல்லாம் மாற்றி, வேடிக்கை பார்க்கிறது காலம்
- M G R
காலையில், வழக்கத்தை விட, சற்று தாமதமாகவே எழுந்தேன். அருகில், என் அண்ணன் மற்றும் எல்லாருடைய படுக்கையும், சுருட்டி வைக்கப்ப ட்டிருந்தது. படுக்கைக்கு அருகில், தாடையில் கை வைத்து, முகட்டை பார்த்தபடி, சலனமற்ற நிலையில் உட்கார்ந்திருந்தார், என் அண்ணன். நான் எழுந்து உட்கார்ந்ததும், என்னை திரும்பி பார்த்தவர், 'நான், கேசவ அண்ணனிடம் சொல்லிடுறேன்... அவர் சென்னை வந்த பின், வாங்கின முன் பணத்தை, அவரிடம் கொடுத்துடுவோம்; அவர் கம்பெனிக்கு கொடுத்துடுவார்...' என்றார்.
'வேணாம்; கம்பெனி முதலாளி, எந்த வேடம் கொடுக்கிறாரோ, அந்த வேடத்தில் நடிக்கிறேன்...' என்றேன். என் அண்ணன் ஒன்றும் கூறவில்லை; கடைசியாக, எனக்கு என்ன வேடம் கிடைத்தது தெரியுமா?
ஹெட் - கான்ஸ்டபிள்!
இரண்டே காட்சிகள், நான்கு வார்த்தைகளுக்கு மேல், 'டயலாக்' இருக்காது; அப்படிப்பட்ட வேடத்தை ஏற்று நடிக்க, ஒப்புக் கொண்டேன்.
இந்நிலையில், பாலையா யோசனைப்படி, கண்ணன் நாயர் என்ற அந்த கதாபாத்திரத்தின் பெயரை, மஸ்தான் என்று மாற்ற வைத்து, நான் தான் அவ்வேடத்தை போட்டேன் என்பது மற்றவர்களுக்கு தெரியாதபடி, முகத்தை மறைத்து, தாடியை ஒட்டி, அந்த போலீஸ்காரர் வேடத்தில் நடித்தேன்.
ஆனால், அப்படத்தில் வேறு ஒரு காட்சியில், கதாநாயகன் வரும் போது, நான்கைந்து பேர் உட்கார்ந்து பாடுவது போலவும், அவர்கள் அனைவரும் மது அருந்தி, தம்மை மறந்த நிலையில் இருப்பது போன்றும், அவர்கள் கண்களுக்கு, தங்கள் முன் வந்த கதாநாயகனின் உருவம், ஒன்றுக்கு, நான்காக தெரிவது போலவும் காட்சியமைத்திருந்தனர்.
அந்நால்வரில் ஒருவராக, பாட்டுப் பாடி, நடித்தார், பி.ஜி.வெங்கடேசன். இவர், அப்படத்தில் ஒரு பாடலை பாடியிருந்தார். அப்பாட்டுக்காகத் தான் அக்காட்சியே!
பாக்கியுள்ள மூவரின் வேடத்திற்கு, ஆட்கள் தேவைப்பட்டது. பாலையா, தன் முகத்தை மறைத்து, தாடி, மீசையெல்லாம் ஒட்டி, தானும் ஒருவராக நடிக்க முன் வந்தார்; நல்ல ஊதியமுள்ள கதாபாத்திரத்தில் நடிப்பவர்; மேலும், காட்சி நன்றாக அமைய வேண்டும் என்பதற்காக, அவராகவே வலிய வந்து நடித்தார்; இது, அவருடைய குணத்திற்கு சிறப்பையே தந்தது; கவுரவ குறைவாக இல்லை.
இவ்வாறு, படத்தில் முக்கியமான வேடங்களில் நடிக்கிறவர்கள் முன் வந்த போது, நான் எப்படி மறுப்பது!
நானும் நடிக்க வேண்டியதாயிற்று; ஆனால், ஏற்கனவே, போலீஸ் கான்ஸ்டபிள் வேடத்திற்காக, முகத்தை மறைத்து விட்டதால், இவ்வேடத்திற்கு முகத்தை மறைக்க வழி தெரியாமல், என் சொந்த முகத்தோடு, துணை நடிகனாக, அக்காட்சியில் நடித்தேன்.
படம் முடிந்தது; ஊருக்கு புறப்பட்டோம்.
கோல்கட்டாவில், 'ஈஸ்ட் இந்தியா ஸ்டுடியோ'வில், பி.எல்.கேம்கா என்பவரால் எடுக்கப்பட்ட படம், தக் ஷயக்ஞம். இதன் இயக்குனர், ராஜா சந்திரசேகர்!
அவரிடம், என்னை அறிமுகம் செய்து, எனக்கு விஷ்ணு வேடமும் வாங்கி தந்த, எம்.கே.ராதா அண்ணன் தான்,
அதில், தட்சன் வேடத்தில் நடிப்பதாக இருந்தது; ஆனால், தவிர்க்க முடியாத காரணத்தால், அவர் அப்படத்தில் நடிக்கவில்லை. அதனால், அக்கதாபாத்திரத்திற்கு, நாகசுந்தர ராஜா என்பவர், ஒப்பந்தம் செய்யப்பட்டார். பின், ஏனோ, அவரும் சில பல காரணங்களால் விலகினார்; விலக்கப்பட்டார்.
யாராவது ஒருவர் தட்சன் வேடத்தில் நடிக்க வேண்டுமே... அதனால், மூன்றாவதாக ஒருவர் வந்தார். இவர் வருவதற்கு முன்னரே எங்கள், அனைவரின் மனதிலும் இடம் பெற்று விட்டார். காரணம்,
'பி.எஸ்.வேலு நாயருக்கு அடுத்து, நாடக மேடையில், கற்பனை திறனோடு, சூழ்நிலைக்கு ஏற்றவாறு, கதாபாத்திரங்களின் தகுதி மற்றும் நாடகத்தின் கட்டுப்கோப்பை குலைக்காமல், இலக்கண வரம்பை மீறாமல் பேசும், மக்களை மகிழ்விக்கும் திறன் படைத்த நல்ல நடிகர் அவர்...' என்று, எங்களுக்கு சொல்லப்பட்டிருந்தது.
குறிப்பிட்ட நாள், அவர் வரும் செய்தியை அறிந்து, அதிகாலையிலேயே, படப்பிடிப்புக்கு புறப்பட்டேன்.
பகலில், படப்பிடிப்பின் போது, இயக்குனர் சொன்னார்...
'எம்.ஜி. நடராஜ பிள்ளை வந்து விட்டார்...' என்று!
நான்கு முழ கதர் வேட்டி, வெள்ளை கதர் ஜிப்பா, கதர் வெஸ்ட் கோட் சகிதம் வந்தார், நடராஜ பிள்ளை.
அவர் உடம்பில், எந்த தங்க நகையும் இல்லை.
நான், கழுத்தில் செயின் போட்டிருந்தேன்; அதில், தங்க தாயத்தும் இருந்தது. அதை, நாலு பேர் பார்த்தால் தான் எனக்கு மகிழ்ச்சி;
இது எனக்கு மட்டுமல்ல; நிறைய நகைகள் அணிவதை, தங்கள் தகுதியை அறிவிக்கும் அடையாளமாக நாடக நடிகர்கள் கருதிய காலம் அது!
அப்படிப்பட்டவர்களிடையே, இப்படி எளிமையாக ஒருவர் இருக்கவே, ஆச்சரியமாக இருந்தது.
நாங்கள், கோல்கட்டாவில், தக் ஷயக்ஞம் படத்திற்கான படப் பிடிப்பில், கலந்து கொண்டிருந்த நேரம்... அது, குளிர் காலம் என்பதால் காலை, 10:00 மணி வரை, மூடு பனியும், பகலில், வெயில் அடித்தாலும், குளிர் இருக்கும். மாலையிலோ, 5:00 மணிக்கே, குளிரத் துவங்கி விடும்.
நடராஜ பிள்ளைக்கு, குளிர் ஒத்துக் கொள்ள வில்லை. காலை, 6:00 மணிக்கு எழுந்து, படப்பிடிப்பு தளத்திற்கு வந்து, ஐஸ் கட்டி போலிருக்கும் முத்து மாலைகளை, வெற்றுடம்பில் போட்டு நடிக்க ஆரம்பித்ததன் விளைவு, நெஞ்சில் கோழை கட்டி, சில நாட்களுக்குள் அது முற்றி, ரத்தமாக துப்ப துவங்கி விட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. என்ன மருந்து கொடுத்தும் பயனில்லை.
மருத்துவர்களோ, 'இன்னும் ஓரிரு வாரம் இப்படியே இருந்தால், அவரது உயிரை காப்பாற்ற முடியாது; ஆனால், ஒரே ஒரு வழி இருக்கிறது... அதை பின்பற்றினால், கோல்கட்டா படப்பிடிப்பு முடிந்து உயிரோடு ஊர் திரும்பலாம்...' என்றனர்.
அம்மருத்துவர்கள் சொன்ன மருந்து என்ன தெரியுமா... 'சாப்பிடும் வேளைகளில், குறிப்பிட்ட அளவு மது அருந்த வேண்டும்...' என்பது தான்!
ராஜா சந்திரசேகர், அவருடைய தம்பி, டி.ஆர்.ரகுநாத் மற்றும் நண்பர்களும் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், ஒரேயடியாக மறுத்து, 'நான் காங்கிரஸ்காரன்; காந்திஜியை வழிகாட்டி யாக கொண்டு, அவரது கொள்கையை சிரமேற் தாங்கி, 'குடிக்காதீர்...' என்று, மக்களுக்கு போதித்ததற்காக, ஆங்கிலேய சர்க்காரால் தடியடியும், சிறைத் தண்டனையும் பெற்ற ஆயிரக்கணக்கான தொண்டர்களை உடைய இயக்கத்தில் இருக்கிறேன். அத்தகைய இயக்கத்தின் கொள்கைக்கு மாறாக, மதுவருந்தி வாழ்வதை விட, மரணம் ஏற்படுமாயினும், அந்த பெருமை எனக்கல்ல, நடிகர்களாலும், கொண்ட லட்சியத்தில் உறுதியாக வாழ முடியும் என்ற சிறப்பு, கலைஞர்களான உங்களையல்லவா சேரும்... அதை, நாம் ஏன் இழக்க வேண்டும்...' என்றார்.
இதைக் கேட்டதும், என் கண் கலங்கியது.
மறுநாள், நடராஜ பிள்ளையை சந்தித்தேன்.
'வாங்க தம்பி உட்காருங்க...' என்று இனிமையாக வரவேற்றார்.
'அண்ணே... உங்ககிட்ட விவாதத்துக்கு வந்திருக்கேன்...' என்றவன், 'என்ன, இப்படி குடிக்க மாட்டேன்னு சொல்லிட்டீங்களே...' என்றேன் மிக சாதாரணமாக!
எப்படிப்பட்ட காரியத்தை செய்ய மறுத்துள்ளார் என்பதை அறியாமல், இப்படி சர்வ சாதரணமாக கேட்கவும், திடுக்கிட்டு, நிமிர்ந்து, என்னை உற்றுப் பார்த்தவர், பின், இருமிக் கொண்டே கனிவோடு பார்த்தார்.
நான் மீண்டும் கேட்டேன்... 'உங்களுக்கு தான் உடம்பு சரியில்லயே... கொஞ்சம் குடிச்சா என்னண்ணே...' என்று!
இந்த கேள்வியைக் கேட்ட அந்த ராமச்சந்திரனுக்கும், தமிழ்நாடு மேலவையில் பேசும் போது, 'குடிப்பதற்கு, 'பர்மிட்' கொடுக்க கூடாது; அப்படி கொடுக்காததனால் சிலர் செத்துப் போவார்களானால் போகட்டும்...' என்று சொன்ன இந்த ராமச்சந்திரனுக்கும் எவ்வளவு வேறுபாடு...
இதுதான் காலத்தின் சக்தி போலும்!
நம் மனதை, வாழ்க்கையை எப்படியெல்லாம் மாற்றி, வேடிக்கை பார்க்கிறது காலம்
No comments:
Post a Comment