HOW TO MOVE WITH NEIGHBOURS
108ஐ தாண்டி, உதவப் போகும்,
109 இவர்கள் தாம். அண்டை வீட்டார்
அண்டை வீட்டார், மிக நல்லவர்களாக அமைவதற்கு, நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
அடுத்த வீட்டுக்காரர்களுடனான உறவு, உளுத்துப் போவது ஏன் தெரியுமா... பெரும்பாலும், எடுத்த எடுப்பிலேயே, அவர்களுடன், புகார் தொனியில் பேசுவதுதான்.
'இவ்வளவு சத்தமா, 'டிவி' வெக்குறீங்களே...
மனுஷன் குடியிருக்கிறதா, வேண்டாமா...' என்று ஆரம்பிக்கிற அறிமுகம், எப்படி சுமூகமான உறவுக்கு, வழி வகுக்கும்!
'உங்க மரத்து இலையெல்லாம், எங்க வீட்டுல... உங்க மழை தண்ணியை, ஏன் எங்க வீட்டுக்குள்ள விடுறீங்க... சட்டம் என்ன சொல்லுது தெரியுமா...
எனக்கு வந்த அழைப்பை, பத்து நாட்கள் வச்சுருந்து, இப்ப திருமணம் முடிந்த பின் குடுக்கிறதா...
என் வீட்டு மாங்காயை, நீங்க எப்படி பறிக்கலாம்...' என்று ஆரம்பித்து,
நாய் பிரச்னை,
மாட்டுப் பிரச்னை என்பன போன்ற மனக்குறைகள் மற்றும் குமுறல்களை, எடுத்த எடுப்பில் கோபதாபங்களை கொட்டக் கூடாது.
முதலில், சுமூகமான அறிமுகம் தேவை!
'நான், உங்க பக்கத்து வீட்டுக்காரன்; புதுசா வீடு கட்டி வந்திருக்கீங்க அல்லது புதுசா வாடகைக்கு வந்திருக்கீங்க போல... உங்களை, தெரிஞ்சு வச்சுக்கலாம்ன்னு வந்தேன்...' என்று, நாம் முதலில் அவர்கள் உள்ளத்தில் புகுந்து விட வேண்டும்.
'ஏதாச்சும் உதவி வேணும்ன்னா கேளுங்க...
பால்காரர்,
சலவை செய்றவர்,
செய்தித்தாள் போடுறவர்,
வீட்டு வேலைக்கு ஆளுன்னு என்ன உதவின்னாலும் கேளுங்க...
அப்புறம் பக்கத்து வீட்டுக்காரங்கன்னு நாங்க எதுக்கு இருக்கோம்...' என்று சகஜமாக பேசி விட வேண்டும்.
அப்புறம் தான், நம் புகார் பட்டியலை நீட்ட வேண்டும்.
'டிவி சத்தத்தை கொஞ்சம் குறைச்சுக்கலாமே... புள்ளைங்க படிக்குதுங்க...' என, ஆரம்பிக்க வேண்டும்.
ஆம்; தொனியை, தோரணையை அவசியம் மாற்றி விட வேண்டும். '
உங்க வீட்டு மரத்தோட இலைக, எங்க வீட்டுல விழுது; நீங்க சம்மதிச்சீங்கன்னா, அந்த கிளைகளை, கொஞ்சம் குறைச்சு விட்டுடறேன்...' என்று, விளக்கெண்ணெய் பாணியில், ஒவ்வொன்றாக சீட்டாட்டத்தில் சீட்டு இறக்குவது போல, இறக்க வேண்டும்.
நம்ப மாட்டீர்கள்...
எல்லாவற்றிற்கும் சாதகமான பதில் வரும்.
மாறாக, எடுத்த எடுப்பிலேயே, போர் குணம் கொள்வதால், உறவு கெடுவதோடு, வேலைகளும், நமக்கு சாதகமாக ஆவதில்லை.
'அது சரிங்க... ஏற்கனவே உறவு கெட்டுப் போய், சீரழிஞ்சு கிடக்கு; அதுக்கு, வழி சொல்லுங்க...' என்பவர்களுக்கும், கைவசம் இருக்கு சரக்கு!
பங்காளியோடு கூட சண்டை இருக்கலாம்; பக்கத்து வீட்டுக்காரர்களோட இருக்கவே கூடாது. காரணம், பங்காளிகளை நல்லது, கெட்டதுகளின் போது தான் பார்க்க முடியும். இவர்கள் அப்படி அல்ல; விடிஞ்சா, எந்திரிச்சா, இவர்களோடு தான்!
அதனால், பெருந்தன்மையுடன், அவர்கள் வீடு புகுந்து, 'நடந்தது எதையும் மனசில வச்சுக்காதீங்க; நமக்கு, நாம ஒருத்தருக்கொருத்தர் உதவியா இருந்துக்கிட்டா தானே... ஏதும் பிரச்னைன்னா, சமாளிக்க முடியும்...' என்று, இறங்கிப் போய் விட வேண்டும்.
இதற்கு தயக்கமாக இருந்தால், இருவருக்கும் பொதுவான ஒருவர் கிடைப்பார். அவரையே நல்லெண்ண தூதுவராக்கி விட வேண்டும். சரியான ஆளாக கிடைத்தால், இருவரையும் கட்டியே போட்டு விடுவார். எனவே, தேர்வு முக்கியம்!
இயற்கையின் சீற்றம், தீராப் பிரச்னை, சமூக கலவரம், தடை சட்டங்கள், மோசமான உடல் நலக் குறைவு, மின் தடங்கள், பொது பிரச்னை மற்றும் திருடர் பிரச்னை என்று, எதிர்பாராதவை ஏதும் ஏற்படுவதாக கொள்வோம். எங்கிருந்தோ, யாரோ ஆபத்வான்கள் வந்து நமக்கு உதவப் போவது இல்லை;
வானத்திலிருந்து யாரும் குதிக்கப் போவதும் இல்லை.
இத்தகைய தருணங்களில், அண்டை வீட்டார் உதவுவது போல் எவரும் உதவ மாட்டார்கள். 108ஐ தாண்டி, உதவப் போகும், 109 இவர்கள் தாம். ஆக, அண்டை வீட்டார் என்றும் நமக்கு வேண்டும் என்கிற எண்ணம் ஒன்று போதும்!
No comments:
Post a Comment