Sunday 10 June 2018

ALEXANDER THE GREAT BORN JULY 20,356 B.C - 323 ,JUNE 10





ALEXANDER THE GREAT 
BORN JULY 20,356 B.C - 323 ,JUNE 10


பேரரசன் அலெக்சாந்தர் அல்லது மகா அலெக்சாண்டர் (Alexander the Great, கிரேக்கம்: Αλέξανδρος ο Μέγας அல்லது Μέγας Aλέξανδρος,[1] Megas Alexandros; சூலை 20, கிமு 356 - சூன் 10/ 11, கிமு 323), கிரேக்கத்தின்[2][3] பகுதியான மக்கெடோனின் பேரரசர் (கிமு 336–323). மக்கெடோனின் மூன்றாம் அலெக்சாண்டர் எனவும் இவர் அழைக்கப்படுகிறார். உலக வரலாற்றில் பெரும் வெற்றிகளைப் பெற்ற இராணுவத் தலைவர்களில் ஒருவராகப் போற்றப்படுகிறார். இவர் ஈடுபட்ட எந்தப் போரிலும் தோல்வியடைந்ததில்லை எனவும் சொல்லப்படுகிறது. இவரது காலத்தில் பண்டைய கிரேக்கர்களுக்குத் தெரிந்த உலகின் பெரும் பகுதியைக் கைப்பற்றி ஆண்டார்.

அலெக்சாந்தர் அவரது தந்தை இரண்டாம் பிலிப் இறந்த பின்னர் மக்கெடோனின் மன்னனாக முடிசூடிக்கொண்டார். பிலிப் மன்னன் பண்டைய கிரேக்கப் பெருநிலப்பரப்பைச் சேர்ந்த பல நகரங்களை மக்கெடோனிய ஆட்சியின் கீழ் ஒன்றிணைத்தார். அலெக்சாந்தர் கிரேக்கத்தின் தெற்குப்பகுதி நகரங்களை முறியடித்து அவைகளை மக்கெடோனிய ஆட்சியின் கீழ் இணைத்தார். பின்னர் கிழக்குப் பகுதியில் அக்கீமனிட் பாரசிகப் பேரரசைக் கைப்பற்றினார். இவர் அனதோலியா, சிரியா, பினீசியா, காசா, எகிப்து, பாரசீகம், பாக்திரியா, மெசொப்பொத்தேமியா ஆகிய நாடுகளைக் கைப்பற்றியது மட்டுமல்லாமல், தனது பேரரசின் எல்லைகளை இந்தியாவின் பஞ்சாப் வரை நீட்டியிருந்தார்.

இறப்பதற்கு முன்பே, அரேபியக் குடாநாட்டுக்குள் தனது வணிக நடவடிக்கைகளையும், படை நடவடிக்கைகளையும் விரிவாக்குவதற்குத் திட்டமிட்டிருந்தார். இதன் பின்னர் மேற்கே கார்த்தேஜ், ரோம், ஐபீரியக் குடாநாடு ஆகியவற்றை நோக்கிச் செல்லவும் அவரிடம் திட்டம் இருந்தது. அலெக்சாந்தர் பல வெளிநாட்டவர்களைத் தனது படையில் சேர்த்திருந்தார். இதனால் சில அறிஞர்கள் இவர் இணைப்புக் கொள்கையைக் கடைப்பிடித்தார் என்றனர். தனது படை வீரர்களையும், பிற நாட்டுப் பெண்களை மணம் செய்யுமாறு ஊக்கப்படுத்தினார். அவரும் கூட இரண்டு வெளிநாட்டு இளவரசிகளை மணம் செய்தார்.

பன்னிரண்டு ஆண்டுகாலத் தொடர்ச்சியான படை நடவடிக்கைகளுக்குப் பின்னர் அலெக்சாந்தர் காலமானார். இவரது இறப்புக்கான காரணம் தெளிவில்லை. மலேரியா, நஞ்சூட்டல், தைபோய்ட்டுக் காய்ச்சல், வைரஸ் தொற்று போன்ற ஏதாவது ஒன்றால் அல்லது அளவு மீறிய குடிப்பழக்கத்தால் இறந்திருக்கக்கூடும் என நம்பப்படுகிறது. அலெக்சாந்தரின் விரிவாக்கங்களும், மரபுரிமைப் பேறுகளும் (legacy) அவர் இறந்து பலகாலங்களின் பின்னரும் நிலைத்திருந்ததுடன், தொலைதூர இடங்களிலும், கிரேக்கக் குடியேற்றங்களும், அதன் பண்பாட்டுச் செல்வாக்கும் பல நூற்றாண்டுகள் நீடிப்பதற்கு உதவின. இக்காலம் ஹெலெனிய காலம் எனப்படுவதுடன், இது கிரேக்கம், மையக்கிழக்கு, இந்தியா ஆகியவற்றின் ஒரு கலப்புப் பண்பாடாக விளங்கியது.


தொடக்க காலம்
வம்சாவழி மற்றும் குழந்தைப்பருவம்

அலெக்சாண்டர் பண்டைய கிரேக்க நாட்காட்டியின் மாதமான ஹெகடோம்பியன் மாதத்தில் ஆறாம் நாள் (தற்போதைய நாட்காட்டியில் தோராயமாக கிமு 356 ஆம் ஆண்டு சூலை மாதம் 6 ஆம் நாள்) அன்று பண்டைய கிரேக்கப் பேரரசின் மக்கெடோனின் தலைநகர் பெல்லாவில் அவரது தந்தை இரண்டாம் பிலிப்பின் நான்காம் மனைவி ஒலிம்பியாசுக்கும் பிலிப்புக்கும் மகனாக பிறந்தார். இவரது தாயார் ஒலிம்பியாசின் தந்தை எபிராஸ் நாட்டின் அரசர் நியாப்டோலேமஸ் ஆவார். இவரது தந்தை இரண்டாம் பிலிப்பிற்கு ற்கு ஏழு அல்லது எட்டு மனைவிகள் இருந்த போதிலும் இவரது தாயார் ஒலிம்பியாஸ் மூலம் மட்டுமே சட்டப்பூர்வ வாரிசு உண்டு. பண்டைய கிரேக்க வரலாற்றாசிரியர் புளூட்டாக்கின் கூற்றுப்படி அலெக்சாண்டரை சுற்றிலும் அவரது குடும்பத்தில் பல்வேறு சகாப்தம் படைத்த மாவீரர்கள் இருந்துள்ளனர் என்று தெரியவருகிறது. அலெக்சாண்டரின் இளமைப்பருவத்தில் அவர் ஒரு செவிலியரால் வளர்க்கப்பட்டார். அலெக்சாண்டரும் பிற்காலத்தில் அவரது படையினை வியூகம் வகுக்கும் க்ளைடஸ் தி ப்ளாக் என்னும் பதவியில் அமர்ந்த அவரது சகோதரியுமான லனைகியும் இவர்களது தாயான ஒலிம்பியாசின் உறவினாரான லியோநிடாஸ் என்பவரிடம் கட்டுபாடான கல்விமுறையில் பயின்றனர். அலெக்சாண்டர் மக்கெடோனியானின் மென்மையான இளைஞனாக வளர்ந்தார். யாழிசை மீட்டுவதிலும், படிப்பதிலும், போர்க்கலையிலும், வேட்டையாடுவதிலும் வல்லவராகத் திகழ்ந்தார்.

அலெக்ஸாண்டர் பத்தாவது வயதில் இருந்தபொழுது தேச்சாலி என்னுமிடத்தில் இருந்து வந்த ஒரு வணிகர் அவரது தந்தையிடம் ஒரு குதிரையை விற்க முனைந்தார். அப்போது அந்தக் குதிரை மிகவும் முரட்டுத்தனமாக யாருக்கும் அடங்காமல் இருப்பதை உணர்ந்து அவரது தந்தை பிலிப் அதை வாங்காமல் வெளியில் அனுப்ப நினைத்தார். அந்த தருணத்தில் அங்கிருந்த அலெக்சாண்டர் அந்த குதிரையானது தனது சொந்த நிழலை பார்த்தே மிரட்சி அடைவதை கண்டறிந்தார். அதோடு அந்த குதிரையை தானே பழக்கப்படுத்தி கொள்வதாகவும் தெரிவித்தார். சொன்னதைப்போல அதை அடக்கி பழக்கப்படுத்தியும் காட்டினார். புளூட்டாக் இதை தனது குறிப்பில் மிக விரிவாக புகழ்ந்து குறிப்பிடுகிறார். அரசர் பிலிப் தனது மகனாகிய அலெக்சாண்டரிடம், "மகனே நீ கண்டிப்பாக இந்த உலகத்தையே வெல்லப்போகிறாய், உன்னை பொருத்தமட்டில் மக்கெடோன் மிகச்சிறியது," என்று கூறினதாக புளூட்டாக் விளக்குகிறார். அதோடு அந்த குதிரையை அலெக்சாண்டருக்கே பரிசாக அளித்தார்.

அலெக்சாண்டர் அந்த குதிரைக்கு பூசிஃபலாஸ் (ox-head) என்று பெயரிட்டார். அந்த பூசிஃபலாஸ் என்கிற குதிரை தான் மாவீரன் அலெக்சாண்டரை இந்திய துணைக்கண்டம் வரை போர்களினூடே சுமந்து வந்தது. பிற்காலத்தில் வயோதிகம் (தனது 30ஆம் வயதில்) காரணமாக அந்த குதிரை இறந்த பின்னர் அதன் நினைவாக ஒரு நகரத்திற்கு அலெக்சாண்டர் பூசிஃபலா (Bucephala) என்று பெயரிட்டார்.

இளமைப்பருவமும் கல்வியும்

மாவீரன் அலெக்ஸாண்டருக்கு அரிஸ்டாட்டில் கல்வி போதித்தல்
அலெக்சாண்டரின் 13 ஆம் வயதின் ஆரம்பத்தில் அவரது தந்தை அவருக்கு கல்வி போதிக்க ஐசோக்ரேட்ஸ், ஸ்பீயூசிபஸ் போன்ற மிகச்சிறந்த அறிஞர்களை நியமித்தார். அவர்களுக்கு பின்னராக இரண்டாம் பிலிப் மன்னர் அரிஸ்டாட்டிலைக் கல்வி போதிக்க நியமித்தார். கல்வி போதிப்பதற்காக மைசாவில் இருந்த நிம்பஸ் கோயிலை வகுப்பறையாக கொடுத்தார். அலெக்சாண்டர் கல்விகற்று திரும்பும் தருணத்தில் அவரது ஆசிரியரான அரிஸ்டாட்டிலின் சொந்த நகரான தன்னால் அழிக்கப்பட்ட ஸ்டாகிரா-வை மீண்டும் நிர்மாணித்து தருவதென ஒப்புக்கொண்டார். மேலும் அங்கு மக்களை குடியேற செய்து அங்கிருந்து அடிமைகளாக பிரிக்கபட்ட மக்களை விடுவிப்பதாகவும் உறுதியளித்தார்.

மைசா கோயிலானது டாலேமி, ஹேஃபைசன் மற்றும் காசந்தர் போன்ற இடங்களை போலவே இதுவும் அலெக்சாண்டரும் மற்றும் மாக்கெடோனியானின் மேன்மக்கள் வகுப்பினரின் குழந்தைகளும் பயிலும் வாரிய பள்ளி போலானது. அவருடன் பயின்ற பல மாணவர்கள் பிற்காலத்தில் அலெக்சாண்டரின் உற்ற நண்பர்களாகவும் நம்பிக்கைக்குரிய அரசு அதிகாரிகளாகவும் திகழ்ந்தனர். மேலும் சிலர் துணைவராகவும் இருந்ததாக அறியப்படுகிறது. அரிஸ்டாட்டில் அலெக்சாண்டருக்கும் அவரது தோழர்கள் அனைவருக்கும் மருத்துவம், தத்துவம், நன்னெறி, மதம், தருக்கம், மற்றும் கலை போன்றவற்றை பயிற்றுவித்தார். அரிஸ்டாட்டிலின் போதனையில் அலெக்சாண்டர் அவரை சுற்றியுள்ள திசைகள் அனைத்திலும் உள்ள நாடுகளை அறிவது போன்ற பாடங்களில் மேம்பட்டிருந்தார். குறிப்பாக அரிஸ்டாட்டில் அலெக்சாண்டரை திசையனைத்திலும் உள்ள நாடுகளை பற்றிய கல்விதனை போதித்து வல்லுனராக மாற்றினார். அந்த அறிவே பின்னாளில் அலெக்சாண்டரை உலகம் முழுமையையும் சுற்றிவந்து வெற்றிகொள்ள வழிவகுத்தது.

இரண்டாம் பிலிப்பின் வாரிசு
மாக்கெடோனின் ஆட்சியாளராகவும் எழுச்சியும்

இரண்டாம் ஃப்லிப், அலெக்ஸாண்டரின் தந்தை
தனது 16 ஆம் வயதில் தனது கல்வியை அரிஸ்டாட்டிலிடம் பயின்று முடித்தார் அலெக்சாண்டர். பய்சான்டியான் உடனான மன்னர் பிலிப்பின் வாரிசு போட்டியில் வெற்றிபெற்ற அலெக்சாண்டர் வெளிப்படையான ஒரே வாரிசாக அறிவிக்கப்பட்டார். பிலிப் இல்லாத காலகட்டங்களில் திரேசிய நாட்டினர் மாக்கெடோனின் மீது படையெடுத்தனர். அலெக்சாண்டர் உடனே அதற்குத் தக்க பதிலடி கொடுத்தார். அவர்களை தனது எல்லையில் இருந்து ஓட ஓட விரட்டியடித்தார். பின்னர் கிரேக்கத்தில் குடியேற்ற ஆதிக்கத்தை விதைத்தார். அது மட்டுமல்லாது அலெக்சாண்ட்ரோபோலிஸ் என்கிற நகரையும் நிர்மாணித்தார்.

பின்னர் பிலிப் திரும்பி வந்ததும் அலெக்சாண்டரை ஒரு சிறு படைக்குத் தலைமையாக நியமித்து அனுப்பி தெற்கு திரேசை கைப்பற்றி வரப் பணித்தார். கிரேக்கத்தின் பெரிந்தஸ் நகரத்திற்கு எதிரான போரில் அலெக்சாண்டர் தனது தந்தையின் உயிரை காப்பாற்றினார். இதை தொடர்ந்து கிரேக்கத்தில் நடந்த பல போர்களில் தனது தந்தையின் வழிகாட்டுதலின் பேரில் நிறைய வெற்றிகளை ஈட்டினார்.

பின்னாளில் சில காலம் கழித்து கி.மு.338 ல் அலெக்சாண்டரின் படைகளும் அவரது தந்தை இரண்டாம் பிலிப்பின் படைகளும் இணைந்தன. மேலும் அவை தெற்கு தெர்மொபைலியா வழியாக வலம் வந்தன. பின்னர் தேபான் காரிசன் கூட்டத்திடம் வெற்றியை ஈட்டிய பின்னர் தேபெஸ் மற்றும் ஏதென்சிலிருந்து சிலநாள் பயண தூரத்திலிருந்த ஏலாடிய நகரை வெற்றி பெற்றனர். பின்னர் டிமொஸ்திநீசால் ஆளப்பட்ட ஏதென்சு, தேபெசு மாக்கெடோனியாவை வெல்ல முயன்றனர். அதேநேரம் ஃபிலிப்பும், ஏதென்சும் தேபெஸ் மீது முகாமிட்டு வெல்ல முயன்றனர். ஆனால் இந்தப் போட்டியில் ஏதென்ஸ் வென்றது. பின்னர் ஃபிலிப் அம்பிச்ஸா நோக்கி சென்றார்.

ஃபிலிப் தெற்கு நோக்கி சென்ற பொழுது அவரது எதிரிகள் கேரோனிய பகுதியில் அவரை சுற்றி வழிமறித்து தாக்கினர். அப்பொழுது நடந்த சண்டையில் அலெக்ஸாண்டர் வலது புறமிருந்த படையையும் அவரது தந்தை இடப்புறமிருந்த படையையும் திறம்பட வழிநடத்தி நம்பிக்கைக்குரிய தளபதிகளின் துணையுடன் அந்த போரில் வெற்றி கண்டனர்.

கேரோனிய போரில் வென்ற பிறகு ஃபிலிப்-ம் அலெக்ஸாண்டரும் எதிர்ப்பில்லாத பெலோபோன்நீஸ்-ஐ வென்றனர். பின்னர் அவர்கள் ஸ்பார்ட்டாவை அடையும் வரைக்கும் அடுத்திருந்த அனைத்து நகரங்களனைதிலும் அவர்களுக்கு வரவேற்பே கிடைத்தது. ஸ்பார்ட்டாவை தவிர்த்து தான் வெற்றி பெற்ற அனைத்து நகரங்களையும் இணைத்து ஹெல்லேனிக் கூட்டாட்சியை ஏற்படுத்தினார் ஃபிலிப். பின்னன் அதற்கு ஹெகேமொன் கூட்டமைப்பு என பெயரிட்டார். மேலும் அந்த கூட்டமைப்பை பாரசீக சாம்ராஜ்யத்தின் மீது படையெடுக்க பணித்தார்.

நாடு கடத்தலும் திரும்புதலும்
பெல்லா நாட்டிற்கே திரும்பிய ஃப்லிப் அந்த நாட்டில் கிளியோபாட்ரா யூரிடைஸ் என்ற பெண்ணை மணந்துகொண்டார். இந்த திருமணத்தின் மூலம் ஃப்லிப்பின் வாரிசு என்கிற அலெக்ஸாண்டரின் நிலைமை கீழிறங்கியது, ஏனென்றால் அலெக்ஸாண்டரின் தாயார் பெல்லாவை சேர்ந்தவரல்லர். இதன் மூலம் கிளியோபாட்ராவிற்கு பிறக்கும் குழந்தையோ அல்லது அவரது உறவில் நெருங்கிய ஆணோ தான் அரியணை ஏற முடியும் என்கிற நிலை உருவானது. இவ்வாறிருக்கையில் ஃப்லிப்பின் உறவினரும் அவரின் படைத்தளபதியுமான அட்டாலூஸ் திருமண விருந்தின் பொழுது மதுபோதையில் சட்டபடியான நீராடி வாரிசுக்கே அரியணை என்று பிரார்த்தனை செய்தார்.

இந்த பிரச்சனை பெரிதாகி வெடித்த பொழுது சதிகாரர்களினால் அலெக்ஸாண்டருக்கு தொல்லைகள் பெருகின அப்பொழுது இளவரசானாக இருந்த அலெக்ஸாண்டர் தனது தாயாருட மாசிடோனை விட்டு வெளியேறினார். தாயை மொலோசியன்ஸ் நாட்டின் தலைகரான டோடோனாவில் இருந்த அவரது சகோதரரான மன்னர் எபிரசின் முதலாம் அலெக்ஸாண்டர் வீட்டில் விட்டுவிட்டு தனது பயணத்தை தொடர்ந்தார். தனது பயணத்தில் அவர் இலிரியன் அரசரிடம் சென்று தஞ்சம் புகுந்தார், அலெக்ஸாண்டர் சில வருடங்களுக்கு முன்னர் அலெக்ஸாண்டரின் படையினரால் தோற்க்கடிக்கப்பட்ட இலிரியன் மன்னர் அகதியாக அலெக்ஸாண்டர் வந்திருந்த போதும் அவரை ஒரு விருந்தாளியாகவே பாவித்து நடத்தினார். இந்த நேரத்தில் அனைத்து ராணுவ பயிற்சியிலும் தேர்ச்சி பெற்ற தனது மகனை மீட்க மன்னர் ஃப்லிப் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதற்கிடையில் அலெக்ஸாண்டருடைய குடும்ப நண்பரான டிமரட்டஸ்-கோரிந்தியான் என்பவற்றின் முயற்சியால் அலெக்ஸாண்டர் ஆறு மாதங்கள் கழித்து மீண்டும் மாசிடோனியாவிற்கு வந்தார்.

பின்வந்த வருடங்களில் பாரசீகத்தின் காரியாவின் ஆளுநர் அலெக்ஸாண்டரின் சகோதரர் ஃப்லிப் அரிடியாசுக்கு அவரது மகளை மணமுடித்து கொடுக்க முன்வந்தார். இது அலெக்ஸாண்டர் மற்றும் அவரது தாயார் ஒலிம்பியாஸுக்கும் அலெக்ஸாண்டரின் நண்பர்களுக்கும் மன்னர் இரண்டாம் ஃப்லிப் தனது மற்றொரு மகானான அரிடியாசை தனக்கு அடுத்தபடியான அரியணைக்கான வாரிசாக கருதுவது போல தோன்றியது. இதனால் ஒரு தூது மூலம் இந்த திருமண ஏற்பாட்டை அலெக்ஸாண்டர் தடை செய்ய நினைத்தார். அந்த பெண்ணை அரிடியாசுக்கு பதிலாக தானே மணமுடித்து கொள்ள முயற்சித்தார். இதையறிந்த மன்னர் இரண்டாம் ஃப்லிப் இளவரசன் அலெக்ஸாண்டரை காரியா ஆளுநரின் மகளை கவர நினைத்த செயலுக்காக கண்டித்தார். மேலும் அலெக்ஸாண்டருக்கு இதைவிட சிறந்த ஒரு இடத்தில் பெண்ணை மனைவியாக்க நினைப்பதாக கூறினார். இந்த விளைவில் அலெக்ஸாண்டரின் நான்கு நண்பர்களை (ஹர்பளுஸ், நியர்சுஸ், டாலமி, மற்றும் எரிகையுஸ்) மன்னர் நாடுகடத்தினார்.

மாசிடோனின் மன்னனாக
வாரிசாக ஏற்றல்

கி.மு.336ல் மாசிடோன் சாம்ராஜ்யம்
கி.மு.336-ல் ஏகே'யில் ஒலிம்பியாஸின் சகோதரர் எபிரசின் முதலாம் அலெக்ஸாண்டரின் மகள் கிளியோபட்ராவின் திருமணத்தின் பொழுது மன்னர் இரண்டாம் ஃபிலிப் அவரது பாதுகாவல தலைவனால் (பாசநியாஸ்) கொலைசெய்யப்பட்டார். பின்னர் தப்பிசெல்ல முற்பட்ட பொழுது அவரும் மற்றும் அலெக்ஸாண்டரின் இறந்து துணைவர்களும் (பெர்டிக்காஸ் மற்றும் லியோனாடஸ்) அவருடன் சேர்த்து காவலர்களால் பிடித்து கொல்லப்பட்டனர். இதன்பின்னர் அலெக்ஸாண்டர் தனது 20 ஆம் வயதில் மன்னனாக அரியணை ஏறினார்.

வலிமையின் ஒருங்கிணைப்பு
அரியணைக்கு தன்னுடன் போட்டியிட்ட அனைவரையும் வென்று தனி ஒருவராக மகத்தான ஆட்சியை அலெக்ஸாண்டர் துவக்கினார். இதில் தனது உறவினர் நான்காம் அமைண்டாஸ்-ஐ அலெக்ஸாண்டர் இழந்தார். மேலும் லின்செஸ்டிஸ் எல்லைக்கு உட்பட்ட இரு மாசிடோனியன் இளவரசர்களையும் இழக்க நேரிட்டது. மேலும் அலெக்ஸாண்டர் ஒலிம்பியாஸின் துணையுடன் கிளியோபாட்ரா, அட்டாலஸ், மற்றும் பலரை இந்த போட்டியில் கொன்று தீர்த்தார்.

மன்னர் ஃபிலிப்பின் மரணச்செய்தி தேபெஸ், ஏதென்ஸ், தேசாலி, மற்றும் திரேசிய பழங்குடிகள் மேலும் வடக்கு மாசிடோன் ஆகிய இடங்களில் பெரும் கிளர்ச்சியை உண்டாக்கியது. இந்த கிளர்ச்சியை கேள்விப்பட்ட அலெக்ஸாண்டர் உடனுக்குடன் பதில் நடவடிக்கைகளை மேற்கொண்டார். தந்திரமும் செயல்திறனும் ஒருங்கே இணைத்து செயல்பட்ட அலெக்ஸாண்டர் 3000 குதிரைப்படையை கொண்டு தேசாலி நோக்கி பயணித்தார். அப்பொழுது ஒலிம்பஸ் மலைகளுக்கும் ஒஸ்ஸா மலைகளுக்கும் இடையில் த்ரேசியன் படைகளால் சூழபட்டார். அப்பொழுது அலெக்ஸாண்டர் தனது படைகளை ஒஸ்ஸா மலைகளின் மீதாக கடந்து செல்ல ஆணையிட்டார். மறுநாள் காலை திரேசிய படைகள் விழித்தெழுந்த பொழுது தாம் சுற்றி வளைத்த அலெக்ஸாண்டரின் படைகள் தற்பொழுது தங்களை சுற்றி வலைத்திருப்பதை உணர்ந்தனர். பின்னர் அவர்களது குதிரைப்படையையும் தனது குதிரைப்படையுடன் இணைத்துக்கொண்டு அங்கிருந்து பிலோபோநீஸ் நோக்கி பயணித்தார்.

வழியில் தெர்மொபைலியில் முகமிட்ட அலெக்ஸாண்டர் அங்கிருந்த அம்பிக்டையோனிக் கூட்டமைப்பிற்கு தலைவராக அங்கீகாரம் செய்யப்பெற்றார். பின்னர் கோரிந்த் நோக்கி முன்னேறினார். ஏதேன்ஸும் அலெக்ஸாண்டருடன் அமைதியாக பணிந்தது. அலெக்ஸாண்டரும் பழங்குடியினரை மன்னித்தார். அலெக்ஸாண்டரின் சரித்திரத்தில் புகழ் வாய்ந்த சைனிக் டியோஜெனிஸ் உடனான போர் அலெக்ஸாண்டர் கோரிந்தில் தங்கியிருந்த பொழுது தான் நிகழ்ந்தது. அந்த போரில் வென்ற அலெக்ஸாண்டர் டியோஜெனிஸிடம் உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்ட பொழுது தந்ததுவ வாதிகள் அலெக்ஸாண்டரிடம் ஏளனமாக பதில் கூறினர். நீங்கள் கொஞ்சம் தள்ளி நிற்க வேண்டும் எங்கள் மீது சூரியனின் ஒளி படவில்லை என்று கூறினர். இந்த பதில் அலெக்ஸாண்டரை பிரமிக்க வைத்தது. அதற்க்கு பதிலாக அலெக்ஸாண்டர் அவர்களிடம் நான் அலெக்ஸாண்டராக இல்லாமலிருந்தால் நான் ஒரு டியோஜெனிஸாகத்தான் இருக்க விரும்புகிறேன் என்று கூறினார். அலெக்ஸாண்டருக்கு கோரிந்தில் தான் அவர் தந்தை ஃபிலிப்பை போன்று முன்னின்று நடத்தும் தலைவர் என்று பொருள் படும் HEGEMON என்ற பட்டம் சூட்டப்பட்டது. மேலும் இதன் பின் தான் த்ரேசியர்களின் போர் மற்றும் பாரசீக போர் போன்றவை அலெக்ஸாண்டரால் நிகழ்த்தபெற்றன.

பால்கன் குடா போர்கள்

ஆசியாவின் மீது போர்தொடுத்து செல்லும் முன்பாக அலெக்ஸாண்டர் தனது வடக்கு மாகாண எல்லைகளை வலுப்படுத்த எண்ணினார். கி.மு.335 வசந்த காலத்தின் பொழுது இவர் பல்வேறு படையெடுப்புகளை நிகழ்த்தினார். ஆம்பிபோலிஸில் இருந்து கிளம்பி கிழக்கு நோக்கி பயணித்து சுதந்திர த்ரேசியா'வை ஹேமுஸ் மலையிலும், ட்ரீபள்ளி, லைகிநூஸ் ஆற்றின் அருகில் டானூப்-ஐயும், கேடே பழங்குடிகளை கடற்கரை போரிலும் வென்றார். பின்னர் க்ளிடுஸில் இல்லிரியா மன்னர், மற்றும் டாலண்டியின் க்ளுகியாஸ் போன்றவர்கள் கிளப்பிய எழுச்சியை போரில் அடக்கினார். அவர்களை போரில் தங்களது படைகளுடன் புறமுதுகிட்டு ஓடசெய்தார். இந்த வெற்றிகளின் மூலம் அலெக்ஸாண்டர் வடக்கு எல்லைப்பகுதிகளில் ஈடு இணையற்ற பலம்கொண்ட பாதுகாப்பை நிறுவினார்.

அலெக்ஸாண்டர் வடக்கில் போர் புரிந்து கொண்டிருந்த சமயத்தில் தேபேஸும், ஏதேன்ஸும் மீண்டு ஒருமுறை கிளர்ச்சியை விதைத்தனர். அலெக்ஸாண்டர் உடனே தெர்க்குக் நோக்கி விரைந்து தேபேஸுடன் போரிட்டு வென்றார். இந்த போரில் தேபேஸின் தாக்குதல் சொல்லிகொள்ளும்படியாக இல்லை. மேலும் அந்த தேசத்தை அலெக்ஸாண்டர் துண்டாடினர். தேபேஸின் இந்த முடிவில் பயந்து போன ஏதென்ஸ் கிரீஸை விட்டு பின்வாங்கி ஓடியது. இதனால் கிரீஸில் தற்காலிகமாக அமைதி நிலைநாட்டப்பட்டது. பின்னர் ஆன்டிபெட்டர்-ஐ ஆட்சிபொறுப்பில் அமர்த்திவிட்டு அலெக்ஸாண்டர் ஆசியா நோக்கி பயணிக்க ஆரம்பித்தார்.

பாரசீகப் பேரரசில் வெற்றிகள்
சின்னாசியா

அலெக்ஸாண்டரின் சாம்ராஜ்யமும் அவர் போரிட்ட வழித்தடங்களும்
கி.மு.334 ல் தோராயமாக 48,100 காலாட்படை வீரர்களுடனும், 6,100 குதிரைப்படை வீரர்களுடனும் 120 கப்பல்களில் 38,000 கப்பற்படை வீரர்களுடனும் மாசிடோனில் இருந்து பல்வேறு கிரேக்க மாநிலங்களின் வழியாக அலெக்ஸாண்டரின் படையானது ஹெல்லஸ்போன்ட்-ஐ கடந்தது.

பிரமாண்ட படையுடன் த்ரஸ், பையோனியா, மற்றும் இல்லிரியாவுடன் இணைந்து பாரசீகம் வழியாக ஆசிய மண்ணில் அலெக்ஸாண்டர் தனது ஆளுமையை ஊன்றினார்.

மேலும் ஆசியாவை கடவுளின் பரிசாகவும் கருதினார். இதுவே அலெக்ஸாண்டருக்கு போர் மீதிருந்த நாட்டத்தை விளக்குகிறது. பாரசீகத்தின் க்ராநிகஸ்-ஸில் பெற்ற முதல் வெற்றிக்கு பிறகு ஹளிகர்நாஸ்ஸஸ்-ஸில் அலெக்ஸாண்டர் பாரசீக மாகாணங்களின் சரணடைவை ஏற்றுக்கொண்டார். அலெக்ஸாண்டரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அடா-விடம் காரியா அரசின் ஆட்சிபொறுப்பை ஒப்படைத்தார்.

ஹளிகர்நாஸ்ஸஸ்-ஸில் இருந்து அலெக்ஸாண்டர் மலைநாடான லிசியா மற்றும் பம்பிலியா வழியாக பயணித்தார். கண்ணில்பட்ட நாடுகள அனைத்தையும் வெற்றி கொண்டார். பாரசீக கடற்படைத்தளங்கள் அனைத்தையும் அழித்தொழித்தார். பம்பிலியா-விலிருந்து கடலோரங்களை வென்ற பின்பு நிலபகுதிகள் நோக்கி வேகமாக முன்னேறினார்.

லிவன்ட் மற்றும் சிரியா

போம்பெயில் உள்ள இஸூஸ் போர் நிகழ்வை காட்டும் மொசைக் முறையில் வரையப்பட்ட அலெக்ஸாண்டரின் ஓவியம்
ஆசியாவின் குளிகால போர்தொடர்களை மேற்கொண்ட பின்பு அலெக்ஸாண்டரின் படை சிலிசியன் வாயில் வழியாக கி.மு.333-ல் கடந்து சென்று பாரசீகத்தின் பிரதான படைகளான மூன்றாம் டாரியஸ்-ன் படைகளை நவம்பர் மாதத்தில் இஸ்சுஸ் போரில் வெற்றிபெற்றார்.

இந்த போரில் டாரியஸ் தனது மனைவியுடனும் இறந்து மகள்களுடனும் புறமுதுகிட்டு பின்வாங்கியதால் அவரது படைகள் சின்னாபின்னபடுத்தபட்டன. இதனால் டாரியஸ் தனது தாய் சிசிகம்பிஸையும், மேலும் தனது அளவற்ற செல்வங்களையும் இழக்க நேரிட்டது.
இதன்பின்னர் அலெக்ஸாண்டர் சிரியாவை நோக்கி முன்னேறினார்.

அதில் பெரும்பாலான லிவன்ட் கடற்கரை அரசுகளையும் வென்றார். பின் கி.மு.332-ல் நெடிய போருக்கு பின் டைர்-ஐயும் வென்றார். பின்னர் போரில் பிடிபட்ட போய்க்கைதிகளை கொன்று அவர்களது மனைவி குழந்தைகளை அடிமை வியாபாரிகளிடம் விற்றார்.

எகிப்து

பாரிசின் லூவர் அருங்காட்சியகத்திலுள்ள பண்டைய எகிப்த்தின் எழுத்துமுறையான ஹைரோக்ளிப்ஸில் தோராயமாக கி.மு.330ல் எழுதப்பட்ட (வலமிருந்து இடமாக) அலெக்ஸாண்டரின் பெயர்.
அலெக்ஸாண்டர் டைரை கைப்பற்றிய பின்பு அவரது வழியில் காஜாவை தவிர இடைப்பட்ட அனைத்து எகிப்திய அரசுகளனைத்தையும் சுலபமாக வென்றார். வலிமையாக செரிவூட்டபட்டிருந்த காஜா குன்றுகளின் மீது கட்டபட்டிருந்த நகரமாகும்.

அதை வெல்ல அலெக்ஸாண்டர் கடுமையாக போராட வேண்டி இருந்தது. மூன்று வெற்றிகரமான திடீர் தாக்குதல்களுக்கு பின்பு அதன் வலிமை குன்றி காஜா வீழ்ந்தது. இந்த போருக்கு முன்பு அலெக்ஸாண்டருக்கு இப்போரில் ஏற்பட்டதை போல கடுமையான காயம் ஏற்பட்டதில்லை. அதேபோல ஜெருசலேம் அலெக்ஸாண்டரிடம் போரிடாமலேயே பணிந்து சரணடைந்தது.

கி.மு.332-ல் அலெக்ஸாண்டர் எகிப்தில் நுழைந்தார். அங்கு அலெக்ஸாண்டரை விடுதலையளிக்க வந்த ஒரு போராளியாக தான் மதித்தனர். அங்கு அவர் தன்னை பிரபஞ்சத்தின் தலைவராக உணர்ந்தார். கடவுளின் மகனாக பாவித்தனர். இதற்கு பின்பு தான் அலெக்ஸாண்டர் அடிக்கடி கடவுள் சியுசு-அம்மோன்-ஐ தனது தந்தையாக சுட்டிக்காட்டினார். மற்றும் தான் மேம்பட்ட உருவம் பொறித்த நாணயங்களையும் வெளியிடலானார்.

இவர் எகிப்தில் தங்கி இருந்த பொழுது எகிப்தில் எழுப்பப்பட்ட அலெக்ஸாண்ட்ரியா-வை நிறுவினார். அதுவே இவரது மறைவிற்கு பிறகு டோலேமைக் சாம்ராஜ்யத்தின் தலைமையாக பிற்காலத்தில் இருந்தது.

அசிரியா மற்றும் பாபிலோனியா
கி.மு.331-ல் அலெக்ஸாண்டர் எகிப்தை விட்டு வெளியேறி கிழக்கு நோக்கி மெசபடோமியா நோக்கி பயணித்தார் (தற்போதைய வடக்கு ஈராக்). அங்கு குகமேலா-வில் நடந்த போரில் மீண்டும் டாரியஸை வீழ்த்தினார். அந்த போரிலும் போர்க்களத்திலிருந்து டாரியஸ் மீண்டும் புறமுதுகிட்டு ஓடினார்.

இந்த முறை அலெக்ஸாண்டர் டாரியஸை அரபெல்லா மலைத்தொடர் வரை துரத்திசென்றார். இங்கு குகமேலாவில் நடந்த சண்டையே இவர்களிருவருக்கிடையே நடந்த கடைசிப்போராகும். அலெக்ஸாண்டர் பாபிலோனை கைப்பற்றிய பொழுது டாரியஸ் அந்த போரிலிருந்து தப்பித்து எக்பட்டானா மலைத்தொடர்களை கடந்து ஓடினார்.

பாரசீகம்
பாபிலோனில் இருந்து அசீமேனிட்-ன் தலைநகரங்களில் ஒன்றான அலெக்ஸாண்டர் சூசா-விற்கு சென்றார். அங்கு பெரும் செல்வங்களை தனதாக்கினார். இவரது படையின் பெரும்பகுதியை பாரசீகத்தின் பிரபல தலைமையிடமான பேர்ஸ்போலிஸ்-ஸுக்கு அனுப்பினார்.

அலெக்ஸாண்டரே தானே தலைமையேற்று அந்த பயணத்திற்கான படைப்பிரிவுகளை தேர்ந்தெடுத்தார். மேலும் அந்த நகரையும் அங்கிருந்த கருவூலத்தையும் சூறாவளியை போன்று கவர்ந்தெடுத்தார். அவர் பேர்ஸ்போலிஸ்-ஸில் நுழைந்த பின்பு அவரது படையினரை அந்த நகரில் பலநாட்கள் கொள்ளையிட அனுமதித்தார். அலெக்ஸாண்டர் பேர்ஸ்போலிஸ் நகரில் ஐந்து மாதங்கள் தங்கினார்.

அங்கு அவர் தங்கியிருந்த பொழுது கிழக்கு சேர்சேஷ் மாளிகையும் அந்த நகரும் தீ விபத்தில் சாம்பலான பின்ம்பு அங்கிருந்து வெளியேறினார். இந்த தீ விபத்திற்கு மதுவிருந்து மாளிகையில் ஏற்பட்ட விபத்து காரணமென்றும், இரண்டாம் பாரசீக போரின் பொழுது ஏதென்ஸின் அக்ரோபோலிஸ் எரிக்கப்பட்டதற்கு பழிவாங்கும் நிகழ்வென்றும் இரு வேறு காரணங்கள் நிலவின.

பேரரசின் வீழ்ச்சியும் கிழக்கும்

இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் உள்ள சிங்க முகம் தரித்த கிரீடம் அணிந்த அலெக்ஸாண்டர் உருவம் பதித்த வெள்ளி நாணயம்
அலெக்ஸாண்டர் டாரியஸை முதலில் மீதியாவில் இருந்தும் பின்னர் பார்த்தியாவில் இருந்தும் விரட்டியடித்தார்.

அதன் பின்னர் அந்த பாரசீக மன்னன் பெஸ்சுஸ் என்கிற ராஜியத்தினரால் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டான். அவர்கள் பின்னர் தாங்கள் கொண்டு சென்று கொலைசெய்த நபர் தான் டாரியஸ் மன்னன் என்று அறிவித்தனர்.

பின்னலில் அலெக்ஸாண்டருடன் மத்திய ஆசியாவில் குரில்லா போரிட்டு பின்வாங்கிய ஐந்தாம் அர்தஷெர்ஷெஸ் தான் பெஸ்சுஸ் ராஜ்யத்தின் மன்னன் ஆவார். அலெக்ஸாண்டர் டாரியஸை எரித்தார் அவனது இறுதி சடங்கை அசீமேனிட் வாரிசுகளை செய்ய அனுமதித்தார். டாரியஸ் இறந்த வேளையில் அசீமேனிட் அரியணைக்கு தனது பெயரை சூட்டியிருந்தான். இதுவே அதற்குப் பின்பு அந்த அரியணை ஏறிய அனைவரின் வீழ்ச்சிக்கு காரணம் என அசீமேனிடை ஆண்டவர்கள் கருதினர்.

அலெக்ஸாண்டர் இல்லாத வேளையில் மாசிடோன்
ஆன்டிபெட்டர்-ஐ ஆட்சி பொறுப்பில் அமர்த்திவிட்டு ஆசியாவில் வெகுகாலம் அலெக்ஸாண்டர் தங்கிவிட்ட்மையால் இரண்டாம் ஃப்லிப்பின் பழைய காவலர்கள் மாசிடோனின் ஆட்சிக் கட்டிலை ஆன்டிபெட்டரிடம் இருந்து பறித்தனர். அலெக்ஸாண்டர் தேபெஸ் நாட்டிலிருந்தும் வெளியேறியமையால் அங்கும் மீண்டும் கிரீஸின் ஆதிக்கம் பெற்றது.

மாறாக ஸ்பார்டா-வின் அரசன் மூன்றாம் அகிஸ் ஆன்டிபெட்டர்-ஐ மெகாலோபோலிஸ் போரில் வென்று கொலைசெய்தான். ஆன்டிபெட்டர் இதை ஸ்பார்டா அரசன் அலெக்ஸாண்டருக்கு அளித்த தண்டனையாக குறிப்பிட்டார். மேலும் அவ்வேளையில் ஆன்டிபெட்ட'ருக்கும் அலெக்ஸாண்டரின் தாயார் ஒலிம்பியாஸுக்கும் இடையே மனக்கசப்பும் இருந்தது.

ஒருவர் மீது ஒருவர் அலெக்ஸாண்டரிடம் இதை புகராகவே அளித்திருந்தனர். மொத்தத்தில் கிரேக்கம் அலெக்ஸாண்டர் இல்லாத வேளையில் மிகவும் சுதந்திரமாக அமைதியாக பழையபடிக்கே திரும்பியிருந்தது. அவர் வென்ற நாடுகளில் பலவற்றை அலெக்ஸாண்டரே விரும்பி திரும்ப போகட்டும் என்று விட்டிருந்தார்.

இந்த வேளையில் அவருடன் இருந்த பல வீரர்கள் மிகுந்த சோர்வில் இருந்தனர். இருந்தாலும் அலெக்ஸாண்டரின் கட்டளைக்கு பணிந்து தொடர்ந்து மாசிடோனியாவிலிருந்து அவருடன் பயணித்திருந்தனர். நீண்ட பயணமும் இடையறாத போர்களும் அவர்களை மிகுந்த சோர்வில் தள்ளியிருந்தது.

அவர்களில் விரும்பிய பலரை திரும்ப ரோம் நகருக்கே அனுப்பியும் வைத்தார். லட்சிய தாகம் கொண்டிருந்தவர்களை மட்டுமே தன்னுடன் வைத்துக்கொண்டார்.

இந்தியப் படையெடுப்பு

ஆந்த்ரே காஸ்டைன்(1898-1899) வரைந்த ஹைதாஸ்பேஸ்-ஸில் படையின் சிறுகுழுக்கள் போரிடும் காட்சி
இந்திய துணைக்கண்டத்தில் அலெக்ஸாண்டரின் படையெடுப்பு
ஸ்பிடமெனிஸ்-ஸின் மரணத்திற்கு பின்பும், ரோக்ஷனா (பாக்டரியான் இனத்தின் ரோஷனக்) உடனான மரணத்தினாலும் அலெக்ஸாண்டர் இந்திய துணைக்கண்டத்தின் பக்கம் கவனம் செலுத்தினார். காந்தார (தற்போதைய வடக்கு பாகிஸ்தான்) நாட்டின் குழுக்களின் தலைவரும் முன்னாள் ஆளுநருமானவரின் அழைப்பின் பெயரில் அலெக்ஸாண்டர் அங்கு பயணித்தார்.

இண்டஸ் முதல் ஹைடஸ்பஸ் வரை விரிந்திருந்த அப்போதைய டக்ஸ்ஸில்லா ராஜ்யத்தின் அரசர் ஒம்பிஸ், சில மலைவாசி குழுக்கள், மற்றும் ஆஸ்பஸியோய், அஸ்ஸாகேநோயி போன்றவர்கள் அலெக்ஸாண்டரின் நண்பரிடம் பணிய மறுத்தனர்.

கி.மு.327/326-ஆம் ஆண்டின் குளிர்காலங்களில் அலெக்ஸாண்டர் தானே தலைமையேற்று அந்த மலைவாசி குழுக்களுடன் போர் புரிந்தார். குனார் சமவெளியில் ஆஸ்பஸியோய், சுவாத் மற்றும் புநர் சமவெளியில் அஸ்ஸாகேநோயி போன்றோரிடம் சண்டையிட்டார். இவற்றிலெல்லாம் அலெக்ஸாண்டர் எளிதில் வென்ற பொழுதிலும் அவரது தோளில் ஆஸ்பஸியோய்-உடன் சண்டையிட்ட பொழுது காயம் பெரிதானது.

பலம் வாய்ந்த அஸ்ஸாகேநோயி-யிடம் போரிட்ட அலெக்ஸாண்டர் ஓரா மற்றும் ஒர்நோஸ் போன்ற கோட்டைகளில் பெரும் ரத்தவெள்ள சண்டைக்கு பின்பே வெற்றியை ஈட்ட முடிந்தது. அப்பொழுது நடந்த சண்டையில் அலெக்ஸாண்டரின் கணுக்காலில் பலத்த காயம் உண்டானது.

கியூரிடஸ்-ஸின் கூற்றுப்படி அலெக்ஸாண்டர் மாஸ்ஸாகாவை முற்றிலும் அழிக்காவிட்டாலும் ஓரா-வில் ஏற்படுத்தியதை போன்றே பெரும் சேதத்தை உண்டு பண்ணினார் என்று அறிய முடிகிறது. மாஸ்ஸாகா-வின் துயர முடிவினால் அங்கிருந்த பெரும்பாலோர் வெளியேறினர். தொடர்ந்து நெருக்கமாக சண்டையிட்ட அலெக்ஸாண்டர் அந்த மலைக்கோட்டைகளை இரத்தம் தோய்ந்த நான்கு நாள் சண்டைக்கு பிறகு வென்றார்.

இதன் பிறகு அலெக்ஸாண்டர் சிந்து நதியை கடந்து வந்து, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போரில் பஞ்சாப் பகுதியை ஆண்டு வந்த இந்திய மன்னன் போரஸை வென்றார். அதுவரை யானைப்படையையே பார்த்திராத அலெக்ஸாண்டரின் படைகள் முதல் முறையாக யானைப்படையை பார்த்ததில் பிரமித்து பயந்து முதல் முறையாக பின்னோக்கி அடியெடுத்து வைத்தனர். ஹைடஸ்பேஸ்-ஸில் கி.மு.326-ல் நடந்த இந்த போர்களில் ஆச்சர்யம் அடைந்த அலெக்ஸாண்டர் மன்னர் போரஸின் வீரத்தை கண்டு பிரமித்து போரஸிடம் நட்பு பாராட்டினார்.

மேலும் போரஸையே அவன் அதுவரை ஆண்டு வந்த பகுதிகளுக்கு சத்ரப் எனப்படும் பொறுப்பாளியாக நியமித்து அதுவரை அவனது ஆளுகைக்குட்படாத பகுதிகளையும் அவனது கட்டுபாட்டில் கொடுத்தார். கிரீஸில் இருந்து வெகுதூரத்தில் இந்த நிலப்பகுதிகள் தன்னால் கவனித்துக்கொள்ள முடியாத படியால் இந்த பகுதியில் இருந்த பெரும் பகுதியை போரஸின் ஆளுகையின் கீழ் தனது பிரதிநிதியாக நியமித்து கௌரவப்படுத்தினார்.

ஹைடஸ்பேஸ் ஆற்றின் இரு கரைகளிலும் இரு நகரங்களை அலெக்ஸாண்டர் நிர்மாணித்தார் அவற்றில் ஒன்றிற்கு இத்தருணத்தில் இறந்த தனது குதிரையின் நினைவாக பூசிஃபலா என்று பெயரிட்டார். மற்றொரு நகரத்தின் பெயர் நிசிய(வெற்றி) அதுவே தற்போதைய பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தின் மாங் பகுதி.


இந்திய துணைக்கண்டத்தில் அலெக்ஸாண்டரின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகள்
அலெக்ஸாண்டர் படையில் ராணுவப்புரட்சி
போரஸ் மன்னனின் சாம்ராஜ்யத்திற்கு கிழக்கே இருந்த மகத நாட்டின் நந்தர் அரசும் வங்காளத்தின் கங்கரிடை அரசும் அலெக்ஸாண்டரின் மாபெரும் படைகள் அடுத்தது கிழக்கு நோக்கி தங்களை தான் குறிவைக்கும் என்று பயந்தன.

அதே சமயம் ஹைபசிஸ் ஆற்றின் கரையில் அலெக்ஸாண்டரின் படையில் உட்பூசல் வெடித்தது. தொடர்ந்து அவர்கள் கிழக்கு நோக்கி பயணிக்க தயாராக இல்லை. இந்த ஆறு தான் அலெக்ஸாண்டரின் கிழக்கு திசையின் எல்லையாக இருந்தது. அதே சமயம் லட்சிய வேட்கை தணிந்து சோர்ந்திருந்த மாசீடோனிய படையினர் அங்கேயே தங்கினர்.

இதன் காரணமாக அலெக்ஸாண்டர் அவர்களை கங்கை ஆற்றையும் கடக்க வேண்டும் என்று கட்டாயமாக கூறிய பொழுது அலெக்ஸாண்டரை கடுமையாக வெறுத்தனர். மேலும் இந்த ஆற்றை கடக்கையில் வெகுவானோர் இறக்க நேரிடும் என்றும் மறுகரையில் கண்டேரி மற்றும் ப்ரேசி போன்ற அரசர்களிடம் எண்பதாயிரம் எண்ணிக்கை கொண்ட குதிரைப்படையும், இரண்டு லட்சம் காலாட்படை வீரர்களும், எட்டு ஆயிரம் தேர்ப்படையும், மேலும் ஆறாயிரம் யானைப்படையும் கொண்ட மிகப்பெரிய படையணிகள் இருப்பதாலும் மேற்கொண்டு நகர கண்டிப்பாக மறுத்துவிட்டனர்.

ஆகிலும் அலெக்ஸாண்டர் மேற்கொண்டு முன்னேற வீரர்களை தயார் படுத்தலானார். ஆனால் அவரது தளபதி கொயேநூஸ் அலெக்ஸாண்டருடன் வாக்குவாதம் செய்து அவரது எண்ணத்தை மாற்றினார். அந்த தளபதி அலெக்ஸாண்டரிடம் நமது படை வீரர்கள் தங்களது பெற்றோரையும், மனைவியரையும், குழந்தைகளையும் விட்டு பிரிந்து வந்து பல வருடங்கள் ஆகிறதென்றும், அவர்களுக்கு வாழ்வில் மிச்சமுள்ள நாட்களை அமைதியாக செலவிட அனுமதிக்க வேண்டுமென்றும். அனைவரையும் தாயகம் திரும்ப அனுமதிக்க வேண்டுமென்றும் விவாதித்தார். ஒருவழியாக அலெக்ஸாண்டர் தெற்கு நோக்கி திரும்ப சம்மதித்தார். மீண்டும் சிந்து நதி கடந்து வழியில் மல்லி மலைவாழ் (தற்போதைய முல்தான்) மக்களையும் மேலும் சில இந்திய பழங்குடியினரையும் எதிர்கொண்டார்.

அலெக்ஸாண்டர் தனது படையின் பெரும்பகுதியை தனது தளபதி கிராடேராஸ் தலைமையில் கார்மேனியாவிற்கு (தற்போதைய தெற்கு ஈரான்) அனுப்பிவைத்தார். மற்றும் தனது கடற்படை தொகுதியை பாரசீக குடா பகுதிகளுக்கு தனது கடற்ப்படை அதிகாரி நியர்சுஸ் தலைமையில் அனுப்பினர். மீதமுள்ள படையினரை தானே தலைமை ஏற்று தெற்கு நோக்கி கடுமையான கேட்ரோசியன் பாலை நிலம் வழியாக வழிநடத்தி பாரசீகம் சென்றார். வழியில் அவர் கி.மு.324'ல் சூசா-வை அடைந்த பொழுது இதற்க்கு முன்பு எப்பொழுதும் இல்லாத அளவு தனது படையின் பெரும்பகுதியை அந்த பாலை நிலத்தின் கொடுமைக்கு பலியாக இழந்திருந்தார்.

பாரசீகத்தில் அந்திம காலங்களில் அலெக்ஸாண்டர்

அலெக்ஸாண்டர் (இடது) மற்றும் ஹெபெஷன் (வலது)
இவர் இல்லாத காலகட்டங்களில் இவர் ஆட்சி பொறுப்பில் அமர்த்திய பல சர்வாதிகார ஆளுநர்களும் சத்ரப்'களும் எல்லை மீறிய செயல்களில் ஈடுபட்டதை அலெக்ஸாண்டர் கண்டறிந்தார் இதன் காரணமாக அவர்களில் பலரை கொன்றார். மேலும் அவரது வீரர்களுக்கு கடன் வழங்கினார்.

மேலும் இவர் க்ராடேருஸ் தலைமையில் வாலிபம் கடந்த பலவீனமான வீரனாக மாசீடோன்-க்கு திரும்புவதாக அறிவித்தார். இவரது படையினர் அந்த கூற்றை தவறாக புரிந்துகொண்டு ஒபிஸ் நகரில் கழகத்தில் ஈடுபட்டனர். பாரசீகத்தின் இறையாண்மையை மதிக்க தவறினர். மூன்று நாட்களுக்கு பின்னும் அடங்காத கழகத்தினால் வெறுப்புற்ற அலெக்ஸாண்டர் மசீடோனியர்களால் அளிக்கப்பட்ட அலகுகளையே பாரசீகத்தில் பின்பற்றலாம் என்று அறிவித்தார்.

இதன் பின் தவறை உணர்ந்த மாசீடோனியர்கள் மன்னிப்பு கோரினர். அலெக்ஸாண்டரும் மன்னித்தார். அதற்காக அவரளித்த விருந்தில் பல்லாயிரகணக்கனோர் ஒன்றாக உணவருந்தி களித்தனர். பாரசீகத்தினருக்கும் மாசீடோனியர்களுக்கும் இடையில் சமாதானம் உண்டுபண்ணும் முயற்சியாக பாரசீகத்தின் குலத்திலிருந்து ஒருவரை அலெக்ஸாண்டர் மணந்துகொண்டார்.

எக்பட்டானா-விற்கு திரும்பிய பின்பு அலெக்ஸாண்டர் பாரசீகத்தின் கருவூலத்தை மீட்டெடுத்தார். இவரது நெருங்கிய ரகசிய தோழனான ஹெபெஷன் மர்மமான முறையில் இறந்தார். அவர் உடல்நலமின்றி இறந்தாலும் நஞ்சூட்டப்பட்டு கொல்லப்பட்டதாகவும் சான்றுகள் இருந்தமையால் அலெக்ஸாண்டர் மிகவும் மனம் வெதும்பினார். அலெக்ஸாண்டர் ஹெபெஷனின் மரணத்தினால் குலைந்து போனார்.

மேலும் துணைவனும் தோழனுமான ஹெபெஷனின் ஈமசடங்கிற்கு பாபிலோனில் மிக்க பொருட்செலவில் ஏற்பாடுகள் செய்ய கட்டளையிட்டார். இதன் பின்னர் மீண்டும் ஒரு பெரிய அளவிலான போர்த்தொடருக்கு அலெக்ஸாண்டர் திட்டம் தீட்டினார். ஆனால் அவற்றை எல்லாம் ஆரம்பிக்கும் முன்பே அவர் மரணித்தார்.

மரணம்
கி.மு.323-ல் ஜூன் 10 அல்லது 11 ஆம் நாளில் தனது 32 ஆவது வயதில் அலெக்ஸாண்டர் பாபிலோனிலுள்ள இரண்டாம் நெபுகன்ட்நேசர் மாளிகையில் உயிர்நீத்தார். இருப்பினும் இவரது மரண தேதியின் மீது இன்றும் கூட நிறைய விவாதங்கள் நிகழ்ந்துகொண்டு தான் இருக்கிறன.

அலெக்ஸாண்டரின் சொந்த உறவுமுறைகள்
அலெக்ஸாண்டருடைய வாழ்வில் பெரும்பாலான காலங்கள் அவரது தோழனும், ரகசிய துணையும், மெய்க்காப்பாளனும், தளபதியுமான, ஹெபெஷன் உடன் தான் கழிந்தன. ஹெபெஷனின் மரணம் அலெக்ஸாண்டரை தனது அந்திம காலத்திற்கு இட்டுசென்றது. இந்த நிகழ்வே அவரது அந்திம காலங்களில் அவரை உடல்நல குறைவிற்கும், மனநல சிதைவிற்கும் உண்டாக்கியது.

அலெக்ஸாண்டர் இருமுறை திருமணம் செய்து கொண்டார். ரோக்ஷனா (பாக்டரியான் மேன்குடியினரின் மகள்), மற்றும் பாரசீக அரசன் மூன்றாம் டாரியஸின் மகள் இரண்டாம் ஸ்டாடீரா ஆகியோரை மணந்தார். அதே போல அவருக்கு இரு ஆண் குழந்தைகள் இருந்தனர். ரோக்ஷனா மூலமாக நேரடி சட்டபூர்வ வாரிசாக மாசீடோனின் நான்காம் அலெக்ஸாண்டர்-உம், பர்ஷைன் மூலமாக மாசீடோனின் ஹெரகில்ஸ். மேலும் அவர் தனது ஒரு மகவை ரோக்ஷனா பாபிலோனில் இருந்த பொழுது கவனமின்மையால் இழந்தார். அலெக்ஸாண்டரின் பாலீர்ப்பு பற்றி நிறைய கருத்து விவாதங்கள் தொடர்ந்துகொண்டு தான் இருக்கின்றன. எந்த ஒரு பண்டைய குறிப்பிலும் அலெக்ஸாண்டரை ஓரின சேர்க்கையாளர் என்றோ ஹெபெஷன் உடனான உறவு காமம் கலந்த உறவு என்றோ குறிப்பிடபடவில்லை. அதே சமயம் ஆயிலியன் தனது எழுத்துகளில் அலெக்ஸாண்டரின் ட்ராய் பிரவேசத்தின் பொழு நிகழ்ந்த நிகழ்வினை பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
அலெக்ஸாண்டர் அக்கீலியஸின் சிலைக்கும் ஹெபெஷன் பேட்ரோகுலஸின் சிலைக்கும் மாலை அணிவித்தார்கள்


கி.மு.324-ல் அலெக்ஸாண்டருக்கும் பர்ஷைன்-க்கும் இடையில் நிகழ்ந்த திருமணத்தில் மணமக்கள் இருவரும் மண அலங்காரத்தில் இருப்பதில் விளக்கும் சுவரோவியம், போம்பெய்.
இதை தவிர வேறு எந்த வித கொச்சை குறிப்புகளும் பண்டைய கிரேக்க பண்பாடு பற்றிய குறிப்புகளில் காணப்படவில்லை. ஆனாலும் இந்த வார்த்தைக்கு காமம் கலந்த அர்த்தம் மட்டுமே கொள்ளப்படும் என்கிற கட்டாயமும் இல்லை. ஒருவேளை அலெக்ஸாண்டர் இருபாலீர்ப்பும் கொண்டிருக்க வாய்ப்புண்டு. அது அவரது காலகட்டங்களில் கிரேக்க கலாசாரத்தில் தவறானதுமில்லை

மேலும் அவர் தனது அந்திமகாலம் நெருங்கும் தருவாய் வரைக்கும் தனக்கென்று ஒரு வாரிசை உருவாக்கவில்லை. மேலும் அலெக்ஸாண்டரின் பெண்தேடும் படலம் அவரது தந்தையாரின் பெண் தேடலை விட மிக பிரமாண்டமானது என்று ஆக்டேன் கருத்துகளை முன்வைக்கிறார். மனைவியரை தவிர அலெக்ஸாண்டருக்கு நிறைய பெண் தொடர்புகள் உண்டு. மேலும் அலெக்ஸாண்டர் தனக்கென பாரசீக மன்னர்களின் வழக்கத்தின் படி அந்தப்புரங்கள் அமைத்து அதில் எண்ணற்ற பெண்களை நிறைத்திருந்தார். ஆனால் அவர்களிடத்தில் வெகு அரிதாக தான் பொழுதினை கழித்தார். அலெக்ஸாண்டர் இந்த சிற்றின்ப விஷயத்தில் மிகுந்த தன்னடக்கத்துடன் வாழ்ந்தார். இருந்த போதிலும் ப்ளுடர்ச் அலெக்ஸாண்டர் ரோக்ஷனாவிடம் மதிமயங்கியதாக குறிப்பிடுகிறார். அவளிடத்தில் மட்டும் காதலை கொடுத்ததாகவும் குடிப்பிடுகிறார். கிரீனும் இதையே வழிமொழிகிறார், அலெக்ஸாண்டர் தன்னை தத்தெடுத்த காரியாவின் அடா மற்றும் அலெக்ஸாண்டரின் மரணசெய்தி கேட்டதும் துக்கத்தில் உயிர்நீத்த டாரியஸின் தாயார் சிஸிகம்பிஸ் முதற்கொண்டு பல பெண்களுடன் நட்பு கொண்டிருந்தார் என்று குறிப்பிடுகிறார்.

அலெக்சாண்டருக்குப் பின்

தியாடோச்சி எனும் வாரிசுரிமைப் போருக்குப் பின்னர் செலூக்கியப் பேரரசு, தாலமைக் பேரரசு, சசாண்டர், ஆண்டிகோணஸ், லிசிமச்சூஸ் என ஐந்தாக பிளவு பட்ட அலெக்சாண்டரின் கிரேக்கப் பேரரசின் பகுதிகள்
முதன்மை கட்டுரை: தியாடோச்சி
அலெக்சாண்டரின் மறைவிற்குப் பின் நான்காம் அலெக்சாண்டர் கிரேக்கப் பேரரசை 13 ஆண்டுகள் ஆண்டார். 

கி மு 311இல் நடந்த முதல் வாரிசுரிமைப் போரின் முடிவில் அலெக்சாண்டரின் நண்பரும், படைத்தலைவருமான செலூக்கஸ் நிக்காத்தர் கிரேக்கப் பேரரசின் மேற்காசியா பகுதிகளுக்கு கி மு 305இல் மன்னராக முடிசூட்டுக்கொண்டார். வட ஆப்பிரிக்கா பகுதிகளுக்கு தாலமி சோத்தர் எனும் கிரேக்கப் படைத்தலைவர் மன்னராக கி மு 305இல் முடிசூட்டிக் கொண்டு ஆண்டார். 

பின்னர் அலெக்சாண்டரின் வேறு படைத்தலைவர்களான லிசிமச்சூஸ், ஆண்டிகோணஸ் மற்றும் சசாண்டர் ஆகியவர்கள் கிரேக்கப் பேரரசின் சில பகுதிகளை கைப்பற்றி ஆண்டனர்.

இதனையும் காண்க
போரஸ்
மாசிடோனியா
ஹெலனிய காலம்
வாரிசுரிமைப் போர்
செலூக்கியப் பேரரசு
தாலமைக் பேரரசு
சசாண்டர்
ஆண்டிகோணஸ்
லிசிமச்சூஸ்
கிரேக்க பாக்திரியா பேரரசு
இந்தோ கிரேக்க நாடு








No comments:

Post a Comment