KUMARI RUKMANI , ACTRESS OF 1940`S
BORN 1929 APRIL 19 - 2007 SEPTEMBER 4
குமாரி ருக்மணி (ஏப்ரல் 19, 1929[1] - செப்டம்பர் 4, 2007)[2] என்பவர் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகையாவார்
குடும்பம்
ருக்மணி தமிழகத்தின் தஞ்சை மாவட்டம் மெலட்டூரை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் நடிகை நுங்கம்பாக்கம் ஜானகியின் மகளும், நடிகை லட்சுமியின் தாயாரும், நடிகை ஐஸ்வர்யாவின் பாட்டியும் ஆவார். இவரது கணவர் பெயர் ஒய். வி. ராவ் பின்னர் இருவரும் பிரிந்துவிட்டனர்.
திரைப்பட நடிகையாதல்
மும்பையில் ஹரிச்சந்திரா திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்துவந்தவேளையில். லோகிதாசன் வேடத்துக்குப் பொருத்தமான சிறுவன் கிடைக்கவில்லை. அப்போது டி. பி. ராஜலட்சுமி தங்கியிருந்த விடுதியின் பக்கத்து அறையில் தங்கி இருந்தவரின் அழகான பெண் குழந்தையைக் கண்டு அக்குழந்தையின் பெற்றோரிடம் பேசி திரைப்படத்தில் லோகிதாசனாக நடிக்கவைத்தனர். இந்த ஹரிச்சந்திரா திரைப்படத்தில குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்தான் குமாரி ருக்மணி. குமாரி ருக்மணிக்கு டி.பி. ராஜலட்சுமியுடன் தொடர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ‘ஜலஜா’ என்னும் படம் வழியாக இந்தித் திரைப்படத்திலும் அறிமுகமானார். அம்மா ஜானகியும் ருக்மணியும் சேர்ந்து ‘பாக்யலீலா’ படத்தில் நடித்தார்கள்.[3]
நடித்த பிறபடங்கள்
டி. ஆர். மகாலிங்கத்துக்கு இணையாக பூலோக ரம்பை, ஸ்ரீ வள்ளி போன்ற திரைப்படங்களில் நடித்தார்.[4]
1946 இல் வெளியான லவங்கி திரைப்படம். இந்தப் படத்தில் நாயகனாக நடித்த இயக்குநர் ஒய். வி. ராவுடன் குமாரி ருக்மணிக்கு காதல் திருமணம் நடந்தது.
1947 இல் வெளியான பங்கஜவல்லி திரைப்படத்தில் கிருஷ்ணனாக ஆண் வேடத்தில் நடித்தார்.[5]
ஸ்ரீராம் ஜோடியாக நடித்த முல்லைவனம் திரைப்படம், குமாரி ருக்மணி கதாநாயகியாக நடித்த கடைசிப் படம்.
கப்பலோட்டிய தமிழன் படத்தில் சிவாஜி கணேசனின் மனைவியாக நடித்தார் ருக்மணி.
1961 தொடங்கி 1975 வரையில் பல திரைப்படங்களில் அன்னை வேடங்களில் நடித்தார்.
ருக்மணி– வயது-81- பிரபல தமிழ் நடிகை. ஏ,வி,மெய்யப்பச்செட்டியார் இயக்கிய ஸ்ரீ வள்ளி படத்தில் ரி.ஆர்.மகாலிங்கத்தின் ஜோடியாக நடித்தவர். இப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமானது. சிந்தாமணி, லவங்கி, முல்லைவனம், கப்பலோட்டிய தமிழன் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். கப்பலோட்டிய தமிழன் படத்தில் சிவாஜிகணேசனின் மனைவியாக நடித்தார். பின்னாளில் வா ராஜா வா போன்ற பல படங்களில் குணச்சித்திர பாத்திரங்களில் நடித்தார். இவரது கணவர் பிரபல இயக்குநர் மற்றும் நடிகர் ஒய்.வி.ராவ். பிரபல சங்கீத மேதை எம்.எஸ்.சுப்புலட்சுமி நடித்த சாவித்திரி படத்தில் ஒய்.வி.ராவ் தான் கதாநாயகனாக நடித்திருந்தார். எம்.கே.தியாயாஜபாகவதர் நடித்த சிந்தாமணி படத்தை இயக்கியவரும் ஒய்.வி.ராவ் தான். அந்த படத்தில் ருக்மணி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். லவங்கி என்ற படத்தில் ஒய்.வி.ராவும் ருக்மணியும் ஜோடியாக நடித்தார்கள். அதன் பின் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். இவரது மகள் தான் பிரபல நடிகை லட்சுமி. ஒரு வருடமாக உடல் நலக்குறைவாக தனது மகள் லட்சுமியின் வீட்டிலிருந்த ருக்மணி தனது 81-ஆவது வயதில் 04.09.2007 அன்று அவரது விட்டிலேயே மரணடைந்தார்.
சிறப்பு கட்டுரைகள்முகப்பு >மகளிர் >சிறப்பு கட்டுரைகள்செல்லுலாய்ட் பெண்கள்
2018-04-09@ 14:28:10
Advertisement: 16:39
VDO.AI
நன்றி குங்குமம் தோழி
குட்டி நட்சத்திரம் முதல் குமாரியாகவே இறுதி வரை… குமாரி ருக்மணி
நம் இந்திய சினிமாவைப் பொறுத்தவரை வாரிசுகளாக நடிகர், நடிகைகளின் மகன்களும் மகள்களும் திரையில் கோலோச்சி வந்திருக்கிறார்கள். பிரபலம் என்றாலும் சிறு சிறு வேடங்களில் தலைகாட்டியவர்கள் என்றாலும் இரு தரப்புக்குமே அது பொருந்தும். சொல்லப் போனால் பிரபலமாக இருந்தவர்களின் வாரிசுகள் பிரபலமானது ஒருபுறம் என்றால், சிறு வேடம் கட்டி நடித்தவர்களின் வாரிசுகளும் பெரிய நிலையை எட்டிப் பிடித்த உதாரணங்கள் நம் திரையுலகில் ஏராளம் உண்டு. அப்படி ஒரு வாரிசு நடிகையாகத்தான் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமானார் குமாரி ருக்மணி. 1935ல் இவர் குழந்தை நட்சத்திரமாகத் தமிழ்த் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர்.
ருக்மணியின் தாயார் பாலாமணி அம்மாள் என்ற நுங்கம்பாக்கம் ஜானகி ஒரு நடன நடிகை. அப்போதைய படங்களில் குழு நடனங்கள் இல்லாத திரைப்படங்களே இல்லை எனலாம்; அந்த அளவுக்குப் பெண்கள் நாட்டியத்தால் திரையை அதிர வைத்தார்கள். இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால், துணை நடிகை அல்லது எக்ஸ்ட்ரா ஆகவும் திரைப்படங்களில் வந்து போனார்கள். திரையுலகின் ஆரம்ப காலங்களில் அதாவது 1930களில் பெரும்பாலான திரைப்படங்கள் கல்கத்தா நகரில் உள்ள ஸ்டுடியோக்களில் படமாக்கப்பட்டு வந்தன.
வங்காளத்தின் பிரபலமான ஸ்டுடியோக்களில் ஒன்று பயனீயர் ஸ்டுடியோ. சென்னையி லிருந்து நடிக, நடிகையரைப் பட்டாள மாகத் திரட்டிக் கொண்டு போய், மாதக் கணக்கில் அங்கேயே தங்கியிருந்து படங்கள் உருவாக்கப்பட்டுக் கொண்டிருந்த காலம். ‘சீதா வனவாசம்’ என்ற படத்துக்காக அப்படி நடிக்கச் சென்றார் நுங்கம்பாக்கம் ஜானகி. பல மாதங்கள் வெளி மாநிலத்தில் நடிப்புத் தொழிலின் பொருட்டு ‘ஸ்டுடியோ வாசம்’ செய்ய வேண்டியிருந்ததால் தன் சின்னஞ்சிறு மகள் ருக்மணியையும் அழைத்துச் செல்ல வேண்டிய நிலைமை. தாயார் படப்பிடிப்பில் மூழ்கியிருக்க, சுட்டித்தனமும் குழந்தைகளுக்கே உரிய குறும்புத்தனமும் நிறைந்திருந்த துறுதுறுப்பான சிறுமி ருக்மணி ஸ்டுடியோ வலம் வந்து அங்கிருந்தவர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துக் கொண்டிருந்தாள்.
அப்போது அங்கு படப்பிடிப்புக்காகச் சென்றிருந்த ‘சினிமா ராணி’ என்று பின்னாட்களில் அழைக்கப்பட்ட டி.பி.ராஜலட்சுமியின் பார்வையிலும் அந்தச் சுட்டிப்பெண் தென்பட்டாள். அந்தச் சமயத்தில் ‘அரிச்சந்திரா’ படத்தில் லோகிதாசனாக நடிக்க வைப்பதற்கு ஒரு சிறுவனைத் தேடிக் கொண்டிருந்தார் இயக்குநர் எஸ்.வின்சென்ட். அந்தச் செய்தி ராஜலட்சுமியின் காதுகளையும் எட்டியது. அவர் பார்வையில் பட்ட குட்டிப்பெண் ருக்மணியின் நினைவு வர ‘சினிமா ராணி’ அந்தக் குழந்தையையே பரிந்துரைத்தார்.
இயக்குநரும் ‘சினிமாவில் நடிக்கிறியா?’ என்று குழந்தையிடம் நேரடியாகக் கேட்க குழந்தை விளையாட்டுத்தனமாக அதைக் காதில் வாங்காமல் ஓடினாள். பின்னர் அம்மாவின் ஒப்புதலுடன் லோகிதாசனாக அரிதாரம் பூசி அவதாரம் எடுத்தாள். புராண - இதிகாசப் படங்களின் காலம் என்பதால் அதையடுத்து உடனேயே ‘மாயா பஜார்’ (சாவித்திரி 50களில் நடித்த படம் அல்ல, அதற்கும் முந்தைய படம்) படத்திலும் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது பேபி ருக்மணிக்கு. தமிழ்த் திரையுலகுக்கு ஒரு குட்டி நட்சத்திரம் கிடைத்தார்.
மோதிரக் கையால் வாங்கிய குட்டு
தமிழ் சினிமா செக்கு மாட்டுத் தடம் போல ஒரே பாதையில் சுற்றிக் கொண்டிருந்த நிலைமையை சற்றே மாற்றி, புராண இதிகாசங்களிலிருந்து கொஞ்சம் விலகி, சமூக சீர்திருத்தக் கருத்துகளுக்கும் பெண்ணுரிமை சார்ந்த கருத்துகளுக்கும் அடி எடுத்துக் கொடுத்து தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்துவதற்கு முயற்சி செய்தவர்களுள் முதன்மையானவர் இயக்குநர் கே.சுப்பிரமணியம். வேறு சில நண்பர்கள், தயாரிப்பாளர்களின் ஒத்துழைப்புடன் ‘மோஷன் பிக்சர் புரொட்யூசர்ஸ் கம்பைன்ஸ்’ என்னும் பெயரில் சொந்த ஸ்டுடியோவைத் துவங்கி, படங்களை எடுக்க ஆரம்பித்தார். அப்படி அவர் ஆரம்பித்து வைத்த படம் ‘பால யோகினி’.
முதன்மைக் கதாபாத்திரத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பேபி சரோஜா (கே.சுப்பிரமணியத்தின் தமையனார் கே.விஸ்வநாதனின் மகள்) ஒரே படத்தின் மூலம் பெரும் புகழ் பெற்று உச்சம் தொட்டாள். 1937ல் வெளியான இப்படத்தில் பேபி சரோஜாவுடன் பேபி ருக்மணியும் இணைந்து நடித்தாள். இரு பேபிகளும் நடிப்பது கண்டு மக்கள் மூக்கின் மேல் விரல் வைத்து அதிசயித்தார்கள். பெரும்பாலும் இப்படத்தில் குழந்தைகளே நடித்திருந்தார்கள். இப்படத்தில் நடித்த அனுபவம் பற்றி குமாரி ருக்மணி சொல்லும்போது, படப்பிடிப்பு என்ற எண்ணமே வராத அளவுக்கு, பள்ளிக்கூடம் போய் வந்த உணர்வு எழுந்ததாகவே குறிப்பிட்டிருக்கிறார்.
குழந்தைகளே அதிகமாக இருந்ததால் இயக்குநர் கே.சுப்பிரமணியமும் அவர்கள் மீது அதிகம் கவனம் செலுத்தியிருக்கிறார். இதனால், அவர் மனைவியும் நடிகையுமான எஸ்.டி. சுப்புலட்சுமி தன்னைக் கவனிக்கவில்லை என்று செல்லமாகக் கோபித்துக் கொண்டதாகவும் தகவல்கள் உண்டு. மிகப் பெரும் வெற்றி பெற்ற இப்படத்தில் ஜொலித்த பேபி சரோஜாவின் புகழ் வெளிச்சத்தில் பேபி ருக்மணி சற்றே மங்கிப் போனாள். ஆனாலும், படம் ருக்மணிக்கும் பெயர் பெற்றுக் கொடுத்தது. தொடர்ச்சியான வாய்ப்புகளையும் வாரித் தந்தது. பேபி ருக்மணி ஆண்டுக்கு ஒரு படம் என தன் திரையுலக வாழ்க்கையில் முன்னேறிக் கொண்டிருந்தார். சுப்பிரமணியத்தின் அறிமுகங்கள் எவரும் சோடை போனதில்லை. அவ்வாறே ருக்மணியும் தன் சினிமா பயணத்தைத் தொடர்ந்தாள். குழந்தை நட்சத்திரமாக 40 படங்களில் நடித்திருக்கிறார்.
பேபிகள் எத்தனை பேபியடி!
1938ம் ஆண்டில் ‘வாலிபர் சங்கம்’ படத்தில் மற்றொரு பேபி நடிகையான கமலாவுடன் இணைந்து (இவரே பின்னாளில் குமாரி கமலா) பேபி ருக்மணி நடனமாடினார். இப்படத்தைக் குறிப்பிட்டுச் சொல்லுவதற்கு இது ஒரு பத்திரிகையாளரின் படம் என்பதும் ஒரு காரணம். ‘சினிமா சாட்டை’ பத்திரிகையின் ஆசிரியர் ஏ.என். கல்யாண சுந்தரம், கதை வசனம் பாடல்கள் எழுதி, இயக்கிய படம் இது. இதே ஆண்டில், பேபி ருக்மணியும் அவர் தாயார் நுங்கம்பாக்கம் ஜானகியும் இணைந்து ‘பாக்ய லீலா’ என்ற படத்தில் நடித்திருக்கிறார்கள். அந்தக் கால துணிச்சல் மிக்க ஸ்டன்ட் நடிகையாக அறியப்பட்ட கே.டி.ருக்மணி அப்படத்தின் நாயகி.
உலகப்போர் என்னும் அச்சுறுத்தல்
1939ல் பேபி ருக்மணி ‘குமாரி’ ருக்மணியாகி ‘பக்த குமணன்’ படத்தின் கதாநாயகியும் ஆனார். ஆனால், இந்தப் படம் குறித்து தகவல்கள் அதிகம் இல்லை. 1940ல் ‘ஜெய் பாரத்’ என்று ஒரு படம். படத்தின் தலைப்பே முழக்கமாக இருக்கிறது. ஆங்கிலேயர் ஆளுகைக்கு உட்பட்டிருந்த இந்தியாவில் இப்படியான தலைப்பில் படம் வெளியானதென்றால் நிச்சயம் அது சமூகப் படமாகவோ நாட்டின் விடுதலையை வலியுறுத்துகிற படமாகவோ இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது. இப்படத்திலும் குமாரி ருக்மணியும் பேபி கமலாவும் இணைந்து நடித்திருக்கிறார்கள்.
இதற்கிடையே இரண்டாம் உலகப்போர் வந்து தொலைந்ததால் கச்சா ஃபிலிம் தட்டுப்பாடு ஏற்பட்டதுடன், எந்த நேரமும் மதராஸ் நகரின் மீது குண்டு விழலாம் என்ற அச்ச உணர்வும் எழுந்ததால் படங்களின் எண்ணிக்கை குறைந்து போனது. ஏறக்குறைய சென்னை நகரம் முழுதுமே வெறிச்சோடியது. இங்கிருந்தவர்கள் செங்கல்பட்டு மற்றும் பல ஊர்களுக்கும் குடியேறினார்கள். வசதி படைத்த தயாரிப்பாளர்கள் ஒரு சிலர் மட்டும் நகரிலேயே தங்கியிருந்தார்கள். படத்தின் நீளத்தைக் குறைத்து குறைவான மணி நேரங்கள் ஓடக் கூடிய படங்களைத் தயாரித்து அளித்தார்கள்.
சகலகலாவல்லவர் அளித்த நடனப் பயிற்சி
1941ல் ‘ரிஷ்ய சிருங்கர்’ படத்தில் சிறு பாத்திரம், உடன் நடித்தவர்கள் அந்தக் கால சகலகலா வல்லவராக அறியப்பட்ட ரஞ்சன், வசுந்தரா தேவி, எஸ்.பாலச்சந்தர் போன்றவர்கள். 1942ல் ‘பக்த நாரதர்’ என்ற படத்திலும் ரஞ்சன் கதாநாயகன், அவருடன் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு ருக்மணிக்குக் கிடைத்தது. இப்படத்தில் ருக்மணிக்கு ஒரு மயில் டான்ஸ் ஆடும் வாய்ப்பு. நடன இயக்குநர் பயிற்சி அளித்திருந்தபோதும், ரஞ்சன் கூடுதல் அக்கறையுடனும் கவனத்துடனும் ருக்மணிக்கு நடனப் பயிற்சி அளித்திருக்கிறார். ரஞ்சன் மிக நளினமாக பெண் போல் நடனம் ஆடக் கூடியவர். அதனாலேயே இப்படத்தில் குமாரி ருக்மணி ஆடிய மயில் நடனம் அதிக கவனம் பெற்றதுடன், படத்திலும் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக அமைந்தது.
ஸ்ரீவள்ளியின் நாயகியாக….
இப்படத்துக்குப் பின்னர் படங்கள் அதிகம் இல்லாததால் நடன நிகழ்ச்சிகள், நாடகங்களில் கலந்து கொண்டு நடனம் மற்றும் நடிப்பைத் தொடர்ந்தார் ருக்மணி. அப்படியான ஒரு நடன நிகழ்ச்சி அவர் வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. ஏ.வி.மெய்யப்பச் செட்டியார் அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். அவர் அப்போதுதான் சில திரைப்படங்கள் தயாரித்தும் இயக்கியும் தொழிலை நன்றாகக் கற்றுக்கொண்டிருந்தார். துறுதுறுப்பும் துடிப்பும் நிறைந்த இளம் பெண்ணான ருக்மணியை மேடையில் பார்த்ததும் செட்டியாருக்குப் பிடித்துப் போய் விட்டது. பேசும் கண்களும், நடனத் திறமையும் ஒருங்கிணைந்த இப்பெண்ணே தன் அடுத்தத் தயாரிப்பான ‘வள்ளி’ படத்தின் நாயகி என முடிவும் செய்துவிட்டார்.
திரைக் கலைஞர்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்வதில் வல்லவராக இருந்தவர்களில் செட்டியாரும் ஒருவர். அவர், ருக்மணியின் தாயாருடன் பேசி, தொடர்ந்து மூன்று படங்களுக்குக் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்து கொண்டார். டி.ஆர். மகாலிங்கம் முருகனாகவும், குமாரி ருக்மணி வள்ளியாகவும் நடிக்க படப்பிடிப்பு முடிந்தது. படத்தைப் போட்டுப் பார்த்தார் செட்டியார். எஸ்.ஜி. கிட்டப்பாவின் குரலையொத்த டி.ஆர். மகாலிங்கத்தின் . கணீர் குரலுக்கு முன் ருக்மணியின் குரல் எடுபடவேயில்லை. அப்படியே படத்தை வெளியிட்டால் நன்றாயிருக்காது என்று தோன்றியது.
அந்தச் சமயத்தில்தான் பின்னணி குரல் பதிவு செய்யும் தொழில்நுட்பம் சினிமாவில் அறிமுகமாகி இருந்தது. அதாவது, படப்பிடிப்புத் தளத்திலேயே பக்க வாத்தியங்கள் இசைக்க நடித்துக்கொண்டே பாடி, ஆடி வசனம் பேசி வந்தனர். அது அப்படியே அங்கேயே பதிவு செய்யப்பட்டது. இது அல்லாமல் தனியாகவும் குரல் பதிவு செய்து வாயசைப்புடன் இணைக்கும் முறையும் அப்போது அறிமுகம் ஆகியிருந்தது. இத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ருக்மணி பாடிய பாடல்களை அழித்துவிட்டு அவரது வாயசைப்புக்கு ஏற்றாற்போல் அன்றைய பிரபல கர்நாடக சங்கீதப் பாடகி கணீர் குரல் பி.ஏ.பெரிய நாயகியைப் பாட வைத்துப் பதிவும் செய்தார். அப்போது அது முற்றிலும் புதியதோர் தொழில்நுட்ப முறை என்பதால் பாடல்கள் மிகப் பிரமாதமாக வந்திருந்தன. பெரிய நாயகியின் குரல் வெகு கம்பீரமாக டி.ஆர். மகாலிங்கத்தின் குரலுக்கு இணையாக அமைந்து பொருந்திப் போனது. ஆனால், இப்போது ஒரு புதிய சிக்கல் எழுந்தது.
சொந்தக் குரல் இல்லையெனில் ஒப்பந்தம் வேண்டாம்
ஏற்கனவே தொடர்ச்சியாக மூன்று படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில், தன் குரலுக்கு மாற்றாக வேறு ஒருவர் பாடுவதற்கு ருக்மணி ஆட்சேபம் தெரிவித்தார். அப்போதெல்லாம் நடிகர்களே பாடி, நடித்ததால் அதற்குத்தான் மதிப்பும் மவுசும் இருந்தது. அப்படியல்லாமல் தான் வாயசைக்க தனக்காக வேறு யாரோ ஒருவர் பாடி வெற்றி பெற்றால் தமது திரையுலக மார்க்கெட் சரிந்து போய்விடும் என ருக்மணி பயந்தார். இந்தப் புதிய தொழில் நுட்பம்தான் அடுத்து வரும் நூற்றாண்டுகளிலும் ஆட்சி செய்யப் போகிறது என்பதெல்லாம் அப்போது அவர்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.
அதனால் தயங்கினர். செட்டியாரிடம் ஒரேயடியாக விரோதமாகப் பேசவும் முடியாது. எனவே, அப்படி அதற்கு ஒத்துக் கொள்ள வேண்டுமென்றால், மூன்று படங்களுக்குத் தன்னை ஒப்பந்தம் செய்திருப்பதை ரத்து செய்து, இந்தப் படத்துடன் தன்னை விடுவித்து விட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். ருக்மணியின் கோரிக்கை ஏற்கப்பட்டு, ஒப்பந்தத்திலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார். 1945 ஏப்ரல் 13 தமிழ்ப் புத்தாண்டு அன்று
‘ஸ்ரீ வள்ளி’ வெளியாகி படம் அமோக வெற்றி பெற்றது. இளம் ஜோடிகளான மகாலிங்கமும் ருக்மணி யும் ரசிகர்களைக் கிறங்கடித்தார்கள். இரண்டு லட்சம் ரூபாய் முதலீட்டில் எடுக்கப்பட்ட படம், அதைப்போல பத்து மடங்குக்கும் அதிகமாகச் சம்பாதித்துக் கொடுத்தது. மதுரை சென்ட்ரல் தியேட்டரில், ‘வள்ளி’ 55 வாரங்களுக்கு ஓடி பெரும் வெற்றி பெற்றது. ஏறக்குறைய 600 சதவிகித லாபம். சென்னை மந்தைவெளிப்பாக்கத்தில் அமைந்திருந்த பிரகதி ஸ்டுடியோவை விற்று விட்டு, ‘வள்ளி’ படத்தின் மூலம் கிடைத்த லாபத்தில் காரைக்குடி தேவகோட்டை ரஸ்தாவில் ஏ.வி.எம். ஸ்டுடியோவை ஆரம்பித்தார் செட்டியார். கதாநாயகன் டி.ஆர்.மகாலிங்கம் பெற்ற வளர்ச்சியை கதாநாயகி ருக்மணியால் எட்டிப் பிடிக்க முடியவில்லை என்பது துயரம். பி.ஏ.பெரியநாயகியின் இரவல் குரல் பாடலுடன் ஏ.வி.எம்.மின் ஒப்பந்தத்திலேயே ருக்மணி தொடர்ந்து நீடித்திருந்தால் ஒருவேளை அவர் வெற்றி பெற்ற கதாநாயகிகளின் வரிசையில் ஒருவராக இருந்திருப்பாரோ என்னவோ!
அசல் வாழ்க்கையில் திருப்பம் ஏற்படுத்திய லவங்கி ராகம்
1946 ஏப்ரலில் ஓராண்டு இடைவெளியில் ‘லவங்கி’ படம் வெளியானது. அழகான ராகத்தின் பெயரைக் கொண்ட இப்படத்தின் காதல் ஜோடிகளாக ஒய்.வி. ராவ் -குமாரி ருக்மணி. பி.ஆர்.பந்துலு, கே.சாரங்கபாணி என பலரும் நடித்த இப்படத்தை இயக்கியவரும் ஒய்.வி.ராவ் தான். இவரும் ஒரு முன்னோடி இயக்குநரே. இந்தப் படத்தின் மூலமாக குமாரி ருக்மணிக்கு அசல் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. ஒய்.வி.ராவ் குமாரி ருக்மணி இருவரும் திருமண பந்தத்தில் ஒன்றிணைந்தனர். கே.டி.ருக்மணி, திருச்சூர் ருக்மணி என பல ருக்மணிகள் திரையுலகில் இருந்ததால் அதன் பின்னும் குமாரி ருக்மணியாகவே அவர் பெயர் திரையுலகில் நீடித்தது.
வேங்கடலட்சுமி என்ற மகளுக்குத் தாயான பிறகும், தொடர்ந்து 30 ஆண்டுகள் திரையுலகில் நீடித்தபோதும் இறுதிவரை அவர் குமாரி ருக்மணியாகவே நிலைத்தார். ஆனால், இந்தத் திருமண பந்தம் நீடிக்கவில்லை. 1947ல் வெளியான ‘பங்கஜ வல்லி’ ருக்மணியின் திரை வாழ்க்கையில் குறிப்பிடத்தக்கதொரு படம். நாயகன் பி.யு.சின்னப்பா, நாயகி டி.ஆர்.ராஜகுமாரி இவர்களுடன் ருக்மணி கிருஷ்ணனாக ஆண் வேடமேற்று நடித்தார். கே.பி.சுந்தராம்பாள், எஸ்.டி.சுப்புலட்சுமி, என்.சி.வசந்த கோகிலம், எம்.எஸ்.சுப்புலட்சுமி என பலரும் நந்தனார், கிருஷ்ணன், நாரதர் வேடமேற்றுப் படங்களில் நடித்ததைத் தமிழ்த் திரையுலகம் கண்டு களித்திருக்கிறது. அந்த வரிசையில் ருக்மணியும் தப்பாமல் இடம் பிடித்தார்.
50களில் முற்றுப் பெற்ற நாயகி வேடம்
1955ல் ‘முல்லைவனம்’ என்ற படத்தில் கதாநாயகியாக வாய்ப்பு; நாயகன் ஸ்ரீராம். ‘முல்லைவனம்’ என்ற கிராமத்தில் அமைந்துள்ள தபால் நிலையத்தில் பணியாற்றும் கதாநாயகனுக்கும், அவ்வூருக்கு வந்து சேரும் நாயகி இருவருக்குமான காதலே முதன்மையாகப் படத்தில் சொல்லப்பட்டது. அதற்குப் பின் வெளிவந்த படங்களில் எல்லாம் நடுத்தர வயதுப் பெண் மற்றும் வயதான கதாபாத்திரங்களே அவருக்கு அமைந்தன.
பி.ஆர்.பந்துலுவின் ‘கப்பலோட்டிய தமிழன்’, அதில் முதன்மையானதொரு வேடம். வ.உ.சிதம்பரம் பிள்ளையின் மனைவியாக. அப்படத்தில் சிவாஜிக்கு இணையாக நடித்துப் பாராட்டுதலையும் பெற்றார். இதன் பிறகு அவர் நாயகியாக நடிக்கவில்லை. அதன் பின் நடிக்க வந்த பல நாயக, நாயகியரின் அம்மாவாகப் பல படங்களில் தொடர்ந்து நடித்தார். 1969ல் திரையுலகில் நுழைந்த அவரின் மகளுக்கும் அம்மாவாக‘காரைக்காலம்மையார்’ படத்தில் நடித்தார்.
நான்கு தலைமுறை கலைப் பெண்கள்
நுங்கம்பாக்கம் ஜானகியில் ஆரம்பித்து நான்கு தலைமுறையாகத் திரைக்குடும்பம் என்ற பெயர் பெற்றவர்கள். குமாரி ருக்மணியின் மகள் லட்சுமி பெயரிலும் புகழிலும் தன் பாட்டியையும் தாயையும் மிஞ்சிப் பெரும் புகழ் பெற்றவர். ‘ஊர்வசி’ விருது பெற்றுத் தன் நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர். கொள்ளுப் பாட்டி, பாட்டி, அம்மா என அதே வரிசையில் நம் சம காலத்தில் நடிகையானவர் லட்சுமியின் மகள் ஐஸ்வர்யா. இந்த நால்வரில் முதன்மையான இடத்தைத் தன் நடிப்பின் மூலம் பெற்று நிலைத்தவர் லட்சுமி மட்டுமே. 75களுக்குப் பின் நடிப்பதைக் குறைத்துக் கொண்டார் ருக்மணி. தன் மகள் லட்சுமியுடனேயே வசித்து வந்தவர் 2007ம் ஆண்டு முதுமை மற்றும் நோயின் காரணமாகக் காலமானார்.
(ரசிப்போம்!)
- ஸ்டில்ஸ் ஞானம்
குமாரி ருக்மணி நடித்த படங்கள்
அரிச்சந்திரா, மாயாபஜார், பாலயோகினி, வாலிபர் சங்கம், பாக்யலீலா, சிந்தாமணி, பக்த குமணன், ஜெய் பாரத், ரிஷ்ய சிருங்கர், பக்த நாரதர், ஸ்ரீவள்ளி, லவங்கி, பங்கஜவல்லி, முல்லைவனம், ஜெகந்நாத் பண்டிட், பூலோக ரம்பை,கப்ப லோட்டிய தமிழன், பார் மகளே பார், மணியோசை, வெண்ணிற ஆடை, இதயக்கமலம், தேடி வந்த திருமகள், அருட் பெருஞ்ஜோதி, வா ராஜா வா, விளையாட்டுப்பிள்ளை, மூன்று தெய்வங்கள்,இருளும் ஒளியும், தலைவன், காரைக் காலம்மையார், ரோஜாவின் ராஜா, என்னைப் போல் ஒருவன்.
Tags:CelluloidWomenகுட்டி நட்சத்திரம்ருக்மணி
அன்று வந்ததும் அதே நிலா: குமாரி ருக்மணி
எழுபது ஆண்டுகளுக்கு முன் இளமை பூகம்பமாக வெள்ளித்திரையை வசீகரித்தவர் குமாரி ருக்மணி. ’சினிமா ராணி’ டி.பி. ராஜலட்சுமியின் கண்டுபிடிப்பு. தமிழ் டாக்கியின் முதல் கனவுக்கன்னி டி.ஆர். ராஜகுமாரியைவிடக் கூடுதல் பிரகாசம் பரப்பும் எழில் தோற்றமும், மிகக் களையான முகமும், பேசும் கருவண்டுக் கண்களும் கொண்டவர் குமாரி ருக்மணி.
மும்பையில் ஹரிச்சந்திரா படப்பிடிப்பு. லோகிதாசன் வேடத்துக்குப் பொருத்தமான பாலகன் கிடைக்கவில்லை. பளிச்சென்று ஒரு சிறுமி டி.பி. ராஜலட்சுமியின் கண்களில் தெரிந்தாள். சினிமாக்காரர்கள் குடியேறிய லாட்ஜில், பக்கத்து அறையில் அரசு அதிகாரி ஒருவர் தன் குடும்பத்தோடு தங்கியிருந்தார். யார் எவர் என்ற விசாரணையில் ஏற்கெனவே தெரிந்தவர்தான் என்கிற விவரம் புரிந்தது. அதிகாரிக்கும் நடிகைக்கும் ஒரே ஊர், தஞ்சை - மெலட்டூர்.
‘குழந்தை அழகாக, சமர்த்தாக இருக்கிறாள். லோகிதாசனாக நடிக்க வைக்கலாமா?’
டைரக்டர் ப்ரபல்ல கோஷின் சற்றும் எதிர்பாராத கேள்வியால் மவுனம் சாதித்தார்கள் பெற்றோர். ருக்மணியின் அம்மா, நடிகை நுங்கம்பாக்கம் ஜானகிக்கு (சீதா வனவாசம், லலிதாங்கி, மாயாபஜார் படங்களில் நடித்தவர்) தன் ஆறு வயது மகள், எடுத்த எடுப்பில் காமிரா முன்பு லோகிதாசனாகப் பாம்பு கடித்து இறப்பதில் சென்டிமென்ட் சங்கடம். அப்பாவுக்கோ இயல்பான சந்தேகம்.
‘பாப்பாவுக்கு நடிப்பு வருமா ...?’ என்றார்.
‘அது எங்கள் பொறுப்பு!’
ருக்மணிக்கு நெற்றியில் அழகாகத் திலகமிட்டு ஆசி கூறி நடிக்க வைத்தார் டி.பி. ராஜலட்சுமி.
ஹரிச்சந்திரா தொடங்கி குழந்தை நட்சத்திரமாக ருக்மணி பிரபலமானார். டி.பி. ராஜலட்சுமியுடன் தொடர்ந்து நடிக்கும் வாய்ப்பு. ‘ஜலஜா’ படம் மூலம் இந்தியிலும் தோன்றும் அதிர்ஷ்டம்! அம்மா ஜானகியும் ருக்மணியும் சேர்ந்து ‘பாக்யலீலா’ படத்தில் இடம் பெற்றார்கள்.
டி.ஆர். மகாலிங்கத்துடன் ’பூலோக ரம்பையில்’ நடித்தபோது ‘குமாரி ருக்மணி’ என்று டைட்டிலில் காட்டினார்கள். அதே இணையின் அடுத்த சூறாவளி ஏவிஎம்மின் ஸ்ரீ வள்ளி. திருச்சூரிலிருந்து வந்து சேர்ந்த நாலு வயது யானைக்குட்டி ருக்மணியுடன் நடித்தது. ஏ.வி.எம்-மின் பேபி ஆஸ்டின் காரிலிருந்து இறங்கியதும் ருக்மணி நேராக யானையிடம் செல்வார். வெல்லமும் தேங்காயும் போதும் போதுமென அதற்குத் தந்து தாஜா செய்வார்.
‘ஹாத்தி மேரா சாத்தி’ என்று உரக்கக் கூவலாம் போலிருந்தது ருக்மணிக்கு. குட்டியிடம் அத்தனை அன்யோன்யம்! யானை தன் துதிக்கையால் வள்ளியை இடுப்பைப் பிடித்து, அலேக்காகத் தலைக்கு மேல் தூக்கி, முருகனின் மடியில் போடும் மன்மதலீலை காட்சி. ருக்மணியுடன் ஏற்பட்ட நெருக்கத்தால் சூப்பராக நடித்தது குட்டி யானை.
சொந்தமாகப் பாடி நடிப்பது அக்காலத்திய மரபு. டி.ஆர். மகாலிங்கத்தின் கந்தர்வ கானத்துக்கு இடையூறாக ஒலித்தது ருக்மணியின் குரல். ஏ.வி.எம் ஏற்கெனவே ருக்மணி பாடியதைத் தயங்காமல் நீக்கி, பி.ஏ. பெரிய நாயகியைப் பின்னணி பாடச் செய்தார். விளைவு ருக்மணியின் விலகலில் முடிந்தது. ஏ.வி.எம்-முடன் மூன்று சினிமாக்களுக்கு ஒப்பந்தமான ருக்மணி விட்டு விடுதலையானார். ஹரிதாஸ் படத்துக்கு இணையாக ஸ்ரீ வள்ளி, எல்லா ஊர்களிலும் ஓடி வசூலில் பிரளயத்தை ஏற்படுத்தியது. காரணம் ருக்மணிக்குப் பருவம் 18. மகாலிங்கத்துக்கு வயது 21.
தமிழ் டாக்கியின் முதல் இளஞ்ஜோடி!
“ஏ.வி.எம். ஸ்ரீ வள்ளி படத்தை செட் போட்டு எடுத்தார். மொத்த யூனிட்டும் அதிகாலை நாலரை மணிக்கு லொகேஷனுக்கு வந்தால், அன்றைய படப்பிடிப்பு முடியும் வரை அங்கேதான் இருப்போம்.
சொன்னா ஆச்சர்யப்படுவீங்க. ஏ.வி. எம். பிரம்மாண்டமா எடுத்த ‘வாழ்க்கை’ படத்துல நான் ஹீரோயினா நடிச்சிருக்கணும். எனக்குத்தான் கான்ட்ராக்ட் இருந்துச்சு. ஆனா அதுக்குள்ள என் பதினெட்டாவது வயசுல டைரக்டர் ஒய். வி. ராவுக்கு திருமதி ஆகிட்டேன். அதனால அதுல வைஜெயந்திமாலா நடிச்சாங்க” என்றார் குமாரி ருக்மணி.
ஒய்.வி. ராவ்- கே. பாக்யராஜ்களுக்கு முன்னோடி!
தியாகராஜ பாகவதருடன் இணைந்து நடித்து, ஒய். வி. ராவ் இயக்கிய ‘சிந்தாமணி’, தமிழ் சினிமா வரலாற்றில் மாபெரும் சாதனைச் சரித்திரம்! அதைத் தயாரித்த ராயல் டாக்கீஸார் தங்களுக்குக் கிடைத்த அமோக வசூலில், ‘சிந்தாமணி’ என்ற பெயரிலேயே மதுரையில் சினிமா தியேட்டர் ஒன்றைக் கட்டினார்கள்.
1946 கோடையில் வெளியானது ‘லவங்கி’.
பெயர்க் காரணம் பெரிதாக ஏதுமில்லை. நாயகன் ஒய்.வி.ராவ். தாம்பூலத்தோடு லவங்கத்தையும் சுவைப்பார். அழகான யுவதி கண் எதிரே வருவாள். ‘ஏ லவங்கி!’ என அழைப்பார். குமாரி ருக்மணி - லவங்கி.
ஒய்.வி. ராவுக்கும் ருக்மணிக்கும் லவங்கியின்போது நிகழ்ந்தது காதல் கல்யாணம். அவர்களது ஒரே வாரிசு வேங்கட லட்சுமி. பின்னர் சினிமா வழக்கமாக ஒய்.வி. ராவும் - ருக்மணியும் பிரிந்துவிட்டார்கள்.
ஸ்ரீ ராம் ஜோடியாகக் குமாரி ருக்மணி ஹீரோயினாக நடித்த கடைசி படம் ‘முல்லை வனம்’.
ஒய்.வி. ராவின் பிரியசகா பி.ஆர். பந்தலு. அவரது வற்புறுத்தலால், ‘கப்பலோட்டிய தமிழன்’ படத்தில் சிவாஜி கணேசனின் மனைவியாக நடித்தார் ருக்மணி.
1961 தொடங்கி 1975 வரையில் ஏராளமான அம்மா வேடங்கள். ஜெயலலிதா உட்பட அநேக நாயகிகளுக்குத் தமிழில் அமைந்த முதல் நட்சத்திர தாய் - மாமியார் குமாரி ருக்மணி. மாலையில் ஒய்.ஜி.பி. நாடகக் குழுவிலும் பங்கேற்று, அரும்பாடு பட்டு மகள் லட்சுமியைக் காப்பாற்றினார். லட்சுமி பெற்றோரைப் போலவே நடிப்பிலும் புகழிலும் உச்சம் பெற்றவர். ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்துக்காக நடுவண் அரசின் சிறந்த நடிகை பரிசு 1977-ல் ஒரே ஒரு முறை லட்சுமிக்குக் கிடைத்தது. அவ்வாறு தேசிய விருது வராமல் போனவற்றுக்குக் கணக்கேது?
லட்சுமியின் மகள் ஐஸ்வர்யா. இயற்பெயர் சாந்த மீனா. ருக்மணி பாட்டியின் செல்லம். குழந்தையை அவளது முதல் பிறந்த நாள் அன்று மட்டுமே படம் பிடிக்க வேண்டும். அதற்கு முன்பு ஃபோட்டோ எடுக்கக் கூடாது என்று தடை விதித்ததவர் ருக்மணி. ஏ.பி. நாகராஜன் இயக்கத்தில் ருக்மணியும் லட்சுமியும் சேர்ந்து நடித்த பக்திப் படம் ‘காரைக்கால் அம்மையார்’. சாந்த மீனாவைக் கவனித்துக்கொள்ள வேண்டி, காலையில் லட்சுமியும் மதியத்தில் ருக்மணியும் ஷூட்டிங்கில் கலந்துகொண்டார்கள்.
பின்னர் ஐஸ்வர்யாவும் 1990-ல் ‘நியாயங்கள் ஜெயிக்கட்டும்’ படம் மூலம் திரைக்கு அறிமுகமானார்.
ஒரே குடும்பத்தில் பிறந்து ஸ்ரீ வள்ளி, சம்சாரம் அது மின்சாரம், எஜமான் போன்ற ஏ.வி.எம்-மின் வெற்றிச் சித்திரங்களில் பாட்டி, அம்மா, பேத்தி மூவரும், வெவ்வேறு தலைமுறைகளில் நடித்துள்ளது மிகவும் அபூர்வமான சுவாரஸ்யம்!
Powered by Streamlyn
No comments:
Post a Comment