Sunday 20 September 2020

KILAKKE POKUM RAYIL

 


KILAKKE POKUM RAYIL 


கடல் தொடாத நதி - 27 - கிழக்கே போகும் ரயில் எப்போ வரும்?

அன்னக்கிளி ஆர்.செல்வராஜ்



பிரீமியம் ஸ்டோரி

ஒரு படத்தின் திரைக்கதை எங்கேயோ ஆரம்பித்து, எங்கேயோ முடிந்த தருணங்கள் ஏராளம். பாரதிராஜா, ‘16 வயதினிலே’ படத்தை முடித்ததும் அடுத்த படத்துக்காக உருவாக்கிய கதை, ‘கிழக்கே போகும் ரயில் எப்போ வரும்?’


கடல் தொடாத நதி - 27 - கிழக்கே போகும் ரயில் எப்போ வரும்?

கதை விவாதம் முடிந்து, ஷூட்டிங் கிளம்பத் தயாராகினர். எனக்கு ‘இந்தக் கதையில் ஏதோ ஒண்ணு குறையுதே’ எனத் தயக்கமாகவே இருந்தது. மறுநாள் காலை, எல்லோரும் கிளம்பப் போகிறார்கள். முந்தின நாள் இரவு ஒரு பிரெஞ்சு நாவலைப் படித்துக் கொண்டிருந்தேன்; மூளைக்குள் ஒரு ஸ்பார்க்.


காலையில் எழுந்ததும் பாரதி ராஜாவைத் தொடர்புகொண்டேன். அப்போது செல்போன் இல்லை. யாரோ அவனுடைய அலுவலகத்தில் எடுத்தார்கள். ‘‘பாரதியை என்னிடம் பேசச் சொல்லுங்கள்’’ என்றேன். ஒவ்வொருவராக ரயில் பிடிக்க ஆயத்தமாகிக்கொண்டிருப்பது அவர்களின் பரபரப்பில் புரிந்தது. எனக்கு போன் வரவில்லை. இருப்பு கொள்ளாமல் மீண்டும் போன் செய்தேன். ‘‘ஷூட்டிங் கிளம்பிட்டேன்.அப்புறம் பேசறேன்னு சொல்லுங்க’’ என போனை எடுத்தவரிடமே சொல்லி, தகவலை எனக்குத் தெரிவிக்கச் சொன்னான். நானும் விடாமல், ‘‘ஷூட்டிங் கிளம்பறதுக்கு முன்னாடி பேசணும்னு சொல்லுங்க’’ என்றேன்.


அங்கேதான் நிற்கிறான் பாரதி. என்னுடைய வார்த்தைகள், கதையில் என்னவோ மாற்றம் நிகழ்ந்திருப்பதை அவனுக்கு உணர்த்திவிட்டது. போனில் பேசினான். ‘‘கதையில் ஒரு முக்கியமான மாற்றம் செய்ய வேண்டும்’’ என்றேன். உடனே ஷூட்டிங்கை கேன்சல் செய்தான். ஒரு கதாசிரியனுக்கு அவன் தந்த உச்சபட்ச மரியாதை அது.


‘கிழக்கே போகும் ரயில்’ படத்துக்கு நாங்கள் முதலில் உருவாக்கிய கதையைச் சொல்லிவிடுகிறேன்.



ஓர் இனிய கிராமம். ஊரின் எல்லையில் தினமும் ஒருமுறை நாகரிகத்தை நகர்த்திச் செல்லும் ஒரு ரயில். பிழைப்பு தேடி, சென்னை சென்ற தன் காதலனுக்காகக் காத்திருக்கிறாள், அந்தக் கிராமத்தின் இளம்பெண் ஒருத்தி. அவர்களுக்கு இருக்கும் ஒரே தொடர்பு, கிழக்கே போகும் ரயில். அந்த ரயிலின் கடைசிப் பெட்டியில் சாக்பீஸால் தான் காதலனுக்குச் சொல்ல விரும்பும் தகவலைச் சுருக்கமாக எழுதுவாள். அதைப் படித்துவிட்டுக் காதலன் பதில் எழுதுவான். இந்த நேரத்தில், வீட்டில் அவசரமாக திருமண ஏற்பாடு நடப்பதை அறிந்து காதலனைச் சந்திக்க சென்னைக்குச் செல்கிறாள்.


கடல் தொடாத நதி - 27 - கிழக்கே போகும் ரயில் எப்போ வரும்?

சென்னை ரயில் நிலையத்தில், தங்கள் ஊர் ரயில் பற்றி  விசாரிக்கிறாள். அந்த ரயிலில் அவள் எழுதும் தகவலைப் படிக்க காதலன் வருவான் அல்லவா? ரயில் நிலையத்தில் முதல் வகுப்பு அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் நான்கு இளைஞர்கள் அவளை, ‘‘நாங்களும் அதுக்காகத்தான் காத்திருக்கோம். ரயில் இப்ப வந்துடும். அதுவரைக்கும் இந்த ரூம்ல வெய்ட் பண்ணலாம்’’ என அழைத்துச் செல்கிறார்கள். அந்த அப்பாவிப் பெண்ணை, பலாத்காரம் செய்துவிட்டு ஓடிப் போகிறார்கள். மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் அந்தப் பெண், ‘‘கிழக்கே போகும் ரயில் எப்ப வரும்’’ என்பதையே திரும்பத் திரும்பச் சொன்னபடி சென்னைத் தெருக்களில் அலைகிறாள்.


யதேச்சையாக அந்தப் பெண்ணைப் பார்க்கும் நான்கு இளைஞர்களும் குற்ற உணர்ச்சிக்கு ஆளாகிறார்கள். அவளை மீட்டுக் காப்பாற்ற முடிவெடுக்கிறார்கள். காப்பாற்ற அவர்கள் ஓடி வர... நடுரோட்டில் அந்தப் பெண் தடுமாற... வேன் ஒன்று அவள்மீது மோதி அவளைத் தூக்கி எறிகிறது. மோதிய வேகத்தில் வேன் நிலை தடுமாறிக் கவிழ, அதிலிருந்து ‘கிழக்கே போகும் ரயில்’ என்ற தலைப்புள்ள கவிதை நூல்கள் சிதறி விழுகின்றன. அவளுடைய காதலன் தன்னுடைய நூல்களுடன் அச்சகத்தில் இருந்து வந்த வேன் அது. காயங்களோடு காதலன் வேனில் இருந்து வந்து கதறுகிறான்...


- இப்படித்தான் ஆரம்பக் கதை இருந்தது. அது ஒரு சோகக் காவியமாக இருந்திருக்கும். ஆனால், எனக்கு ஏனோ ஒரு தயக்கம் இருந்துகொண்டே இருந்தது. அந்த நேரத்தில்தான் அந்த பிரெஞ்சு கதையைப் படித்தேன். வரித் தொல்லையால் மக்கள் அவதிப்படுகிறார்கள். நாட்டின் ராணியிடம் முறையிடுகிறார்கள். ராணி, மன்னரிடம் மக்களின் துயரத்தைச் சொல்கிறாள். மன்னர் ஒரு நிபந்தனை விதிக்கிறார். ‘‘யாராவது ஒரு பெண் நடு இரவில் நிர்வாணமாக நகரத் தெருக்களில் சுற்றி வந்தால் வரியை நீக்குகிறேன்’’ என்கிறார். இப்படி ஒரு நிபந்தனையை யாரும் நிறைவேற்ற மாட்டார்கள் என்பது அரசரின் எண்ணம். அதேபோலவே ஆகிறது. மக்கள் வரிச்சுமையைப் போக்க ராணியே ஒரு முடிவெடுக்கிறாள். மக்களுக்காக ராணியே நிர்வாணமாக நடக்கிறாள்.


‘கிழக்கே போகும் ரயில்’ நாயகி பாஞ்சாலிக்கு ஊர் மக்கள் சேர்ந்து அப்படி ஒரு நெருக்கடி கொடுக்கிறார்கள். நள்ளிரவில் நிர்வாணமாக நடக்க வைக்கத் தேதி குறிப்பதாக, ரயில் பெட்டியில் அவள் தகவல் எழுதுகிறாள். அந்தத் தகவல், மழையில் அழிந்துவிடுகிறது. இறுதியில் காதலன் வந்து அவளை எப்படி மீட்டுச் செல்கிறான் என்பதாக  க்ளைமாக்ஸை மாற்றினோம். முழுவதுமாக ஸ்கிரிப்டை மாற்றிக் கொண்டுதான் மீண்டும் ஷூட்டிங் புறப்பட்டான் பாரதி. படம் ஒரு வருடம் ஓடியது.


கதைக்கான ஒரு ஸ்பார்க் நமக்கு எங்கு வேண்டுமானாலும் கிடைக்கும். தங்கம் கிடைத்து விடும். அதை நகைகளாக அலங்கரிப்பதுதான் படைப்பாளியின் வேலை. கிராமத்தில் பார்த்தது, எங்கேயோ கேட்டது, புத்தகத்தில் படித்தது, சினிமாவில் பார்த்தது எல்லாமே நினைவில் நிழல்படங்களாகப் பதிந்து கிடக்கின்றன. கதை உருவாக்கத்தின்போது அவை நம் மூளையோடு போராடுகின்றன; ரசவாதத்தை நிகழ்த்துகின்றன. அப்படி நிகழ்ந்த ரசவாதங்களைச் சொல்வது எனக்குப் பெருமையாகவும் இருக்கிறது. விஜயகாந்த் நடித்த ‘சக்கரை தேவன்’ கதையும் அப்படிப் பிறந்ததுதான். அது..?


சந்திப்பு: தமிழ்மகன்

No comments:

Post a Comment