Thursday 17 September 2020

ANGRY BIRDS IN FAMILY

 

ANGRY BIRDS IN FAMILY

கோபத்தின் வடிகால் ......

கோபத்தின் வடிகால் வீடா..... ?
லேனா தமிழ்வாணன்


விடியற்காலையில் பயணிக்க வேண்டிய வெளிநாட்டுப் பயணம்; காலை, 3:45க்கு அழைப்பு... வாடகை வாகனத்திற்கு சொல்லியிருந்தேன்.
பெரும்பாலும், நமக்கு அமையும் நிரந்தர ஓட்டுனர்கள் தாம், பல குறைகளைக் கொண்டிருப்பர்; ஆனால், அவ்வப்போது, தற்காலிகமாக வரும் வாகன ஓட்டிகள், மிகப் பணிவாக, அன்பாக, மரியாதையாக நடந்து கொள்வதுடன், 'இப்படி ஓர் ஓட்டுனர் நமக்கு நிரந்தரமாக அமையக் கூடாதா...' என்று, ஏங்குமளவுக்கு மிக நன்றாக வாகனத்தை ஓட்டுவர்.

ஆனால், அன்று எனக்கு வாய்த்த ஓட்டுனர் இப்படிப்பட்டவரில்லை; எடுத்த எடுப்பிலேயே, 'சிடு சிடு' முகத்துடன், 'இவ்வளவு லக்கேஜ் வச்சிருக்கறீங்க... பெரிய வண்டியால்ல கேட்டிருக்கணும்...' என்றார். காலையிலேயே இவரது வீட்டினர் இவரை கடுப்பு ஏற்றியிருப்பரோ!
'இதற்கு ஏன், கோபப் படுகிறீர்கள்... மகிழ்ச்சியுடன் ஆரம்பிக்க வேண்டிய வெளிநாட்டுப் பயணத்தின் போது இப்படி மனம் சங்கடப்படும்படி பேசுகிறீர்களே... இது தான் வாடிக்கையாளரிடம் நடந்து கொள்ளும் முறையா...' என்று, தன்மையான குரலில் கேட்டேன்.
அவரால் பதில் சொல்ல முடியவில்லை.
நாம் யாரால் வாழ்கிறோமோ (வருமானம் தருகிறவர்கள்), யாருக்காக வாழ்கிறோமோ (இல்லத்தினர்), இவர்கள் இருவரிடமும் முடிந்த வரை எரிந்து விழக் கூடாது.

'அலுவலகத்தில், தொழில் செய்யும் இடத்தில் காட்ட முடியாத கோபத்தை வீட்டில் காட்டாமல், யாரிடம் காட்டுவது...' என்கிறீர்களா... இந்தப் பார்வையே தவறு.

அன்பு, பாசம், பரிவு, நேசம் மற்றும் கருணையை, நம்மிடம் தொடர்ந்து எதிர்பார்க்கிற நம் குடும்ப உறுப்பினர்களின் மீது, அமிலம் கொட்டுவது எந்த வகையில் நியாயம்?

'அப்பா... ஸ்போர்ட்ஸ்ல நான் இன்னைக்கு பர்ஸ்ட்...' என்று நெருங்கி வருகிற பிள்ளையைப் பிடித்து தள்ளி, 'அடச்சீ... ரொம்ப முக்கியமாக்கும்... நானே, 'மூடு - அவுட்' ஆகி வந்திருக்கேன்; வந்துட்டே பெரிசா கப்பை தூக்கிக்கினு...' என்பவர், இலக்கணம் வகுக்கும் குடும்பத் தலைவராகவோ, தலைவியாகவோ இருக்க முடியுமா!

'ஏங்க... காஸ் தீர்ந்து போச்சு; அப்புறம், மின் வாரிய ஊழியர் வந்து பியூசைப் பிடுங்கிட்டு போயிட்டாரு. காஸ்க்கு சொல்லிடுங்க. போனை எடுக்க மாட்டேங்குறான்; நேர்ல போங்க. ஈ.பி.,க்கு பணம் கட்டுங்கன்னு போன வாரமே சொன்னேன்... வர வர நீங்க எதையுமே கண்டுக்க மாட்டுறீங்க...' என்று மனைவி கூறினால், 'எப்படியோ நாசமாய் போங்க; என் உயிரை வாங்குறதுக்குன்னே வந்து வாச்சிருக்கீங்க...' என்றா சீறுவது!

'உள்ளே நுழைஞ்சதும் புகார் பட்டியல் வாசிக்க வேண்டாம்மா... என், 'மூடு' பாத்து சொல்லு...' என்கிற குடும்ப தலைவரின் முன்னறிவிப்பு, மேற்கூறிய காட்சியைத் தவிர்க்கும்.

வேலைக்குப் போய் திரும்புகிற குடும்பத் தலைவியர் சிலரும், பெண்மைக்கே உரிய பொறுமைக் குணத்தை இழந்து, அமிலம் கொட்டுவது உண்டு.
முன்பின் தெரியாத யார் யாரிடமோ குழைகிறோம்; அறிமுகமற்ற எவர், எவரிடமோ நெளிகிறோம்...
இவற்றை, ஏன் நம்மைச் சார்ந்து வாழ்பவர்களிடம், நம் அன்பிற்குரியவர் களிடம் செலுத்த மறுக்கிறோம்...

கோபத்தின் வடிகால் வீடு தான் என்ற எண்ணத்தை நமக்குள் விதைத்தது யார்? செடியாகி, மரமாகி விட்ட இந்த உணர்வை வேரோடு வெட்டி எறிய வேண்டும். 'இவையெல்லாம் எனக்குப் பிடிப் பதில்லை...' என்று அறிவுறுத்தாமல் இருப்பது அடிப்படைத் தவறு. நம் வீட்டினருக்கு இதைத் தெளிவு படுத்திவிட்டால், நெருப்பாற்றில் நீந்த வேண்டியிருக்காது.

நாம் பாசமானவர்கள்; ஆனால், நமக்கும் எப்போதாவது கோபம் வரும். அப்படிக் கோபம் வந்தால், அதில், ஒரு வித நியாயம் இருக்கும் என்று குடும்ப உறுப்பினர்கள் உணரும்படி நடந்து கொள்ள வேண்டியது அவசியம். இதன்படி நடந்து, அதன்பின் அமிலம் கொட்டினால், அதைக்கூட மழை நீரென, துடைத்து விட, தாராளமாக முன்வரும் நம் குடும்பம்.

லேனா தமிழ்வாணன்

Image may contain: 2 people, people smiling, people sitting and outdoor

No comments:

Post a Comment