Thursday 17 September 2020

FAMILY TRAGEDY WITH FATHER IN LAW

 


FAMILY TRAGEDY WITH FATHER IN LAW

காலம்பூரா எங்களுக்குத் தான் கெட்ட பேரு
மானசா


''பொம்பளைங்களுக்கு மட்டும் லீவே கிடையாதா... நான் மட்டும், 24 மணிநேரமும் அடுப்படிய கட்டிட்டு அழணுமா... இன்னைக்கு சாப்பாடு, ஓட்டல்ல தான்...'' என்று போர்க்கொடி பிடித்து, சமையல் கட்டுக்கு, கவுசல்யா லீவு விட, பையை எடுத்து, மகனையும் அழைத்துக் கொண்டு, ஓட்டல் நோக்கி, வண்டியை செலுத்தினான், மாதவன்.
ஓட்டலில் பார்சலுக்கு பணம் கட்டி, காத்திருந்த போது, கடைசி இருக்கையில் அமர்ந்திருந்த ராஜேந்திரனைப் பார்த்தான், மாதவன். அவன் பக்கத்தில் அமர்ந்திருந்த வயதானவரை பார்த்ததும், தூக்கிவாரிப் போட்டது. ஒடிசலான தேகம், கண்கள் இடுங்கிய நிலையில்... ராஜேந்திரனின் அப்பா தான்!
எழுந்து உள்ளே போய், ராஜேந்திரனின் முதுகில் தட்டினான். திரும்பி பார்த்தவனின் முகம், அதிர்ச்சியில் லேசாய் மிரண்டு, பின் இயல்பானது.
''வாடா மாதவா... எப்படி இருக்கே?''
''நான் இருக்கிறது இருக்கட்டும்... நீ எங்க இங்கே... அதுவும் அப்பாவோடு...'' மேற்கொண்டு பேச முற்பட்டவனை இழுத்து, வெளியே வந்தான், ராஜேந்திரன்.
''அப்பா, இப்ப, அருந்தவம் முதியோர் இல்லத்துல இருக்காரு; என்ன தான் அவங்க நல்லபடியா கவனிச்சுக்கிட்டாலும், மனசு கேட்க மாட்டேங்குது. அதான் வாரம் ஒருநாள், இப்படி வெளியில கூட்டிட்டு வந்து, அவர் ஆசைப்பட்டத வாங்கித் தர்றேன்,'' என்றவனை, புழுவைப் போல் பார்த்தான் மாதவன்.
பள்ளியிலிருந்து கல்லூரி வரை, இருவரும் ஒன்றாய் படித்தவர்கள்.

அந்த வகையில், இருவர் குடும்பத்துக்கும் நெருக்கம். கல்வித்துறையில் நல்ல பணியில் இருந்தவர், ராஜேந்திரனின் அப்பா. ராஜேந்திரனின் திருமணத்துக்கு பின், அவனுடைய பெற்றோர் தனியாக இருந்தனர். மூன்று ஆண்டுகளுக்கு முன், ராஜேந்திரனின் அம்மா இறந்து விட, மகனுடன் வந்து விட்டார், அவனது அப்பா.ஆறு மாதத்திற்கு முன், ஐயப்பன் கோவிலில் ராஜேந்திரனை பார்த்த போது, ரொம்பவும் சோர்ந்து போய் இருந்தான். என்னவென்று விசாரித்த போது,'அப்பாவுக்கும், என் மனைவிக்கும் சுத்தமா ஒத்துப் போகலடா... வீடே நரகமா இருக்கு. நாலு நாளைக்கு முன் நடந்த பிரச்னையில, அப்பா கோபிச்சுட்டு போயிட்டாரு. எங்க போனாருன்னு தெரியல...' என்று சொன்னான்.

ஆறுதல் சொல்லிப் போன மாதவன், இன்று தான் அவனைப் பார்க்கிறான்.

''மாதவா... உங்கப்பா, அம்மா, உன் கல்யாணத்துக்கு முன் போய் சேர்ந்துட்டாங்க; உனக்கு, என் கஷ்டம் புரியாது. இந்த உலகத்துல ஆம்பளையா பிறக்கிற மாதிரி பாவம் எதுவுமில்லடா. மூணு வேளை சோறு, வருஷத்துக்கு ரெண்டு துணி வாங்கிக் கொடுத்தா போதும்; வீட்டுல இருக்கிற வயசானவங்க ஜடம் மாதிரி இருக்கணும்ன்னு சொல்றா, என் மனைவி. 'டிவி'யில பழைய பாட்டு கேட்டா, கிழவனுக்கு இந்த வயசுல இது தேவையாங்கிறா... அவருக்கு கிரிக்கெட்டுன்னா உசிரு; மேட்ச் பாக்க ஆசைப்பட்டா, 'கோவில், குளம்ன்னு போய் தொலையாம, பதினாறு வயசுப் பையன் மாதிரி கிரிக்கெட் என்ன வேண்டிக் கிடக்கு'ங்கிறா. வயசாகிடுச்சுங்கறதாலயே எல்லா உணர்ச்சிகளையும் சுருக்கி, ஒரு மனுஷன் வாழ முடியுமா சொல்லு...''

அவன் கேள்வியில் இருந்த நியாயம் புரிந்தது.
''முதுமை எல்லாருக்கும் தான் வரும்ன்னு நினைக்காம, வயசானவங்கள பாடாப்படுத்தறது தப்புன்னு ஏன் இந்த பொம்பளைங்களுக்கு உறைக்க மாட்டேங்குது,'' என்றான் கோபமாக!

மாதவனுக்கு அவன் மீது பரிதாபம் வரவில்லை; மாறாய், எரிச்சல் தான் வந்தது.
''லகான் பிடிக்கிறவன் சரியா இருந்தா, குதிரை தறிகெட்டு ஓடாது. எல்லாம் நீ குடுக்கிற இடம். நீ, உன் பொண்டாட்டிக்கு புரிய வச்சு, உன் கட்டுக்குள் வச்சிருக்கணும். அதை விட்டு இப்படி பெத்த தகப்பனை ஒளிச்சு வச்சு விளையாடுனா, உன்னைப் பாக்க ஆம்பளையாவே தெரியல,'' என்றான் சுருக்கென்று!

வேதனையாய் சிரித்த ராஜேந்திரன், ''மாதவா... எங்கப்பாவுக்கு நான் ஒரே பிள்ளை; அத்தனை அன்பாய் வளர்த்தாரு! அவர நல்லா கவனிச்சுக்க சொல்லிட்டு தான் ஆபிசுக்கு போறேன். ஆனா, வீட்டுல என்ன நடக்குதுன்னு நான் எப்படி அறிய முடியும். அவரை மாமனாரா கூட நடத்த வேணாம்; மனுஷனா நடத்தக் கூடாதா..
.
''தட்டிக்கேட்டேன்; வீடு ரணகளமாச்சு. நிம்மதி போச்சு. கை கூட ஓங்கிப் பார்த்துட்டேன். அம்மா, வீட்டுக்கு ஓடிப்போயிட்டா. ரெண்டு குழந்தைங்க இருக்கு; அதுகளோட எதிர்காலம் பயமுறுத்துது.

''எல்லாரும் என்னைத்தான், 'பொண்டாட்டிய வழிக்கு கொண்டு வர துப்பில்லயா'ன்னு குறை சொல்றாங்க. இந்த உலகத்துல வாழ்ற, தொள்ளாயிரம் கோடி புருஷன்மார்கள்ல யாருக்காவது அந்த யுக்தி தெரியுமான்னு கேட்டா, யாருக்கும் தெரியல...'' என்று கூறி, கசப்பாக சிரித்தவன், ''இருபது வருஷம் தாய் வீட்டுல மாறாத குணம், கல்யாணமாகி, பத்து வருஷம் ஆகியும் மாறாத குணம், இனிமேலா மாறப் போகுது... எங்கப்பாவ பராமரிக்கலன்னு அவள துரத்திட்டு, நான் வேற கல்யாணம் செய்யலாம் தான்;

ஆனா, என் ரெண்டு குழந்தைகளும் சித்தி கொடுமைக்கு ஆளாகுமே... இதை, எங்கப்பாவே விரும்ப மாட்டாரு. நம்பள மாதிரி ஆம்பளைங்க எத்தனை பாவம்டா,'' என்றான்.

அதற்குள், சப்ளையர் பார்சலைக் கொண்டு வந்து, மாதவனிடம் கொடுத்து விட்டு போனார்.
''அப்பாவ முதியோர் இல்லத்துல சேர்க்க மனசே வரலடா. மனசு கதறுச்சு. வேற வழியில்லாம தான் சேர்த்தேன்.

அதை வெளியில சொல்ல அவமானப்பட்டு, அப்பா எங்கேயோ ஷேத்ராடனம் போயிட்டதா பொய் சொன்னேன். வாரத்துல ஒருநாள் அவரை வெளியில கூட்டிட்டு வந்து, நல்ல சாப்பாடு வாங்கித் தந்து ஷுகர், 'செக்கப்' எல்லாம் எடுத்து, பார்க், பீச்சுன்னு அழைச்சுட்டு போயிட்டு, சாயங்காலம் ஹோம்ல விட்டுட்டு போவேன்,'' என்றான்.

அவன் வார்த்தைகளில், அவன் அனுபவிக்கும் வலி தெரிந்தது.இவர்கள் பேசிய அத்தனையும் ஒன்றுவிடாமல் கேட்டுக் கொண்டிருந்தான், மாதவனின் மகன், 13 வயது, பிருத்வி.
''எல்லாம் சரியாகும் ராஜேந்திரா,'' என்று ஆறுதல் சொல்லி கிளம்பினான், மாதவன்.
பின் சீட்டில் அமர்ந்து, அப்பாவின் வயிற்றை கட்டியபடி பயணம் செய்த பிருத்வி, ''ஏன்பா... அந்த அங்கிள் செய்றது சரின்னா நினைக்கிறீங்க... '' என்றான்.

''வேறென்ன செய்வான் பாவம்... ராட்சசி பொம்பளை... சொல்லி பாத்தான்; கண்டிச்சு பாத்தான்; ஏன் அடிச்சுக்கூடப் பாத்திருக்கான்; திருந்தல. இந்த பிரச்னைய இழுத்து விட்டு திரிஞ்சா, அவனோட சேர்த்து, குழந்தைகள் நிம்மதியும் பாழாப்போயிடுமில்ல...'' என்றான்.

''நான் அப்படி நினைக்கலப்பா... நீங்க படிச்சதில்ல... 'தந்தை தாய் பேண்'ன்னு... நியாயமான காரணமாகவே இருந்தாலும், நம் கடமைய தட்டி கழிக்க கூடாதில்லயா... சண்டை போட்டா, தன் குழந்தைகள் வாழ்க்கை, நிம்மதி போயிடும்; அதற்கு பதில், அவங்கப்பா நிம்மதி போனா பரவாயில்லன்னு அவருக்கு தோணுது. ஏன்னா, அவருக்கு, அவர் குழந்தைகள விட, அப்பா முக்கியமில்ல!''
சட்டென்று, 'பிரேக்' அடித்து நிறுத்தினான், மாதவன். மகனுடைய பேச்சு சாதுர்யமும், மாறுபட்ட சிந்தனையும், சாட்டையாய் மனதில் இறங்கியது.

''இல்ல பிருத்வி... இதை அப்படி பார்க்கக்கூடாது; இது, ராஜேந்திரனின் பிரச்னையில்ல; அவனை மாதிரி லட்சோப லட்சம் மனிதர்களின் மனசுக்குள் இருக்கிற கவலையோட வெளிப்பாடு. இத்தனை சிக்கல்களுக்கு நடுவே, அப்பாவுக்காக வாரத்தில் ஒருநாள் ஒதுக்கி, தன் கடமைய நிறைவேத்த துடிக்கிற அவனை பாராட்டணுமே தவிர, குறை சொல்லக்கூடாது,'' என்று சொல்லி முடிக்க, வீடு வந்திருந்தது.
''ரெண்டு பேரும் சாப்பாடு வாங்க போனீங்களா இல்ல ஓட்டல்ல சமைக்க போனீங்களா...'' என்று அலுத்தபடி பையை வாங்கி, உள்ளே போனாள் கவுசல்யா. அவளை பின் தொடர்ந்து ஓடிய பிருத்வி, அவள் சாப்பாட்டை பிரிப்பதற்குள், நடந்த அத்தனையையும் சொல்லி முடித்தான்.

''அம்மா... அப்பா சொல்றதும் ஒரு வகையில் நியாயம்தான்னு தோணுது. அந்த அங்கிள் அவங்கப்பாவ கவனிக்காததுலயும் ஒரு நியாயம் இருக்கு; இல்லயாம்மா...'' என்றான்.

சாதத்தை இலையில் போட்டுக் கொண்டிருந்த கவுசல்யா, ஒரு நொடி அப்படியே நிறுத்தி, கணவனை முறைத்துப் பார்த்தாள். பின், ''அப்படியெல்லாம் இல்ல பிருத்வி... தான் செய்த செயல் தப்புங்கிறது அவருடைய மனசாட்சிக்கு தோணுனதால தானே, அவர் அதை வெளியில சொல்ல தயங்குறாரு... கடவுள் நம்மோட எல்லா காரியங்களையும் கவனிக்கிறார்ன்னு நாம நம்புறது நிஜம்ன்னா, வெளியில சொல்ல தயங்குற எந்த காரியத்தையும் செய்யக்கூடாது,'' என்றாள்.

''அப்படியா சொல்றீங்க?'' என்றான் யோசனையாய் பிருத்வி! மாதவனுக்கு, கவுசல்யா ஏன் ராஜேந்திரனை இத்தனை மோசமாய் மகனுக்கு சித்தரிக்கிறாள் என்று கோபம் வந்தது என்றாலும், பேச்சை வளர்க்காமல் அமைதியாக இருந்தான்.

ஒரு வாரத்திற்கு பின் - மார்க்கெட் சென்று திரும்பிய கவுசல்யா, பரபரப்பாக நடையில் செருப்பை உதறி, உள்ளே வந்தவள், கூடையை சோபாவில் விசிறியபடி, ''என்னங்க... விஷயம் தெரியுமா...'' என்றாள்.
''என்னாச்சு கவுசி?''

''உங்க பிரெண்டு ராஜேந்திரனையும், அவர் மனைவியையும் இப்பத்தான் பாத்துட்டு வர்றேன். போன வாரம் திருச்செந்தூர் டூர் போயிருந்தப்ப, அவங்க வீட்டுல திருட்டு போயிடுச்சாம்; எட்டு லட்சம் தேறுமாம். சம்பாதிச்ச எல்லாமும் போச்சு; இனி, எப்படி வாழ்க்கைய நகர்த்த போறோம்ன்னு ரொம்ப வேதனைப்பட்டாங்க. பாத்தியா பிருத்வி... நான் அன்னைக்கு சொல்லல... கடமைய தட்டிக்கழிச்சா, உரிமையும் பறி போகும்ன்னு!

''சரி, தப்பு, சவுகரியமானதுன்னு பிரிச்சுப் பாக்ககூடாது; வாய்ல சுவாசிக்கிறது சவுகரியம்ன்னா, எதுக்கு கடவுள் மூக்கை படைச்சுருக்காரு... வாயே போதும்ன்னு விட்டுருப்பார்ல. உலகத்துல எல்லாரும் அவங்கவங்க கடமைய செஞ்சே ஆகணும்!''
புரிந்தவனாய் தலையாட்டினான் பிருத்வி. அவனுக்குள் விளைந்திருந்த குழப்பங்கள் மெல்ல அகன்று, லேசான தெளிவு ஏற்படத் துவங்கியது.
ராஜேந்திரனுக்கு ஏற்பட்ட துயரம் மனசுக்குள் வருத்தத்தை உண்டாக்க, போன் செய்து விசாரிக்கலாம் என்று மாடிக்கு வந்தான், மாதவன். அவனை தொடர்ந்து வந்த கவுசல்யா, ''என்ன... உங்க பிரெண்டுக்கு போன் செய்ய போறீங்களாக்கும்...'' என்றாள்.

''ஆமாம்...'' என்று தலை அசைத்தவனை, கேலியாக பார்த்து, ''அதெல்லாம் தேவையில்ல... நான் யாரையும் பாக்கல, யார் வீட்டுலயும் எதுவும் நடக்கல,'' என்றாள் கூலாக!

''அப்புறம் ஏன் பொய் சொன்னே...'' என்றான் கோபமாக! ''சொல்லாம என்ன செய்றது... சரி எது, தப்பு எதுன்னு யோசிக்கிற வயசுல இருக்கிற பையன் முன், தப்பான செய்திய நியாயப்படுத்தி நீங்களும், உங்க பிரெண்டும் பேசி இருக்கீங்க... தாய், தகப்பனை பராமரிக்காததுக்கு தக்க காரணம் சொன்னா போதும்ங்கிற நினைப்பை ஏற்படுத்துறது எத்தனை பெரிய தவறு...

''நியதிகளை உருவாக்குறதே, அதை தாண்டக்கூடா துங்கற தாத்பரியத்துக்காக தான். ஒருமுறை, அதை தாண்ட கத்துக் கிட்டா, காலம்பூரா தாண்ட ஆசைப்படும், மனசு. இதுகூட தெரியல ஆம்பளைகளுக்கு... வளரும் போது நல்ல பராமரிப்பை தரலாம்; அது வளர்ந்து, காய் தருதா, கனி தருதாங்குற தீர்மானத்தை, ஆண்டவன் கையில விட்டுடணும். நீங்க உடைச்சு உருக்குலைச்சதை எல்லாம் நாங்கதான் ஒட்டவச்சு, மறுபடியும் உருவாக்கணும். ஆனா, காலம்பூரா எங்களுக்குத் தான் கெட்ட பேரு,'' அலுத்துக்கொண்டே கீழே இறங்கிப் போக, மனைவியை பெருமையாக பார்த்தான் மாதவன்.

பெண்ணை புரிந்து கொள்ளும் விவரணை, எந்த தவப்பயனாலும் கிடைப்பதில்லை என்ற உண்மை புரிந்தது.

மானசா

Image may contain: text
Image may contain: 7 people, people standing
Image may contain: 4 people, people smiling, people standing

No comments:

Post a Comment