நடிகவேள் எம்.ஆர்.ராதா எந்த அதிகாரங்களைக் கண்டும் அஞ்சாதவர். தன் மனதில் பட்டதைச் சொல்லும் சுபாவத்துக்குச் சொந்தக்காரர். அவர் இம்பாலா காரில் வைக்கோல் ஏற்றிக்கொண்டு ஊர்வலம் வந்த கதை பலருக்கும் தெரியும். அதே இம்பாலா காரை, அப்போதைய குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் சென்னை வந்தபோது, அவரை அழைத்து வருவதற்காக எம்.ஆர்.ராதாவிடம் சில அதிகாரிகள் கேட்டிருக்கிறார்கள். 'இந்த ராதாகிருஷ்ணன் போவதற்காகத்தான் கார். அந்த ராதாகிருஷ்ணனுக்காக இல்லை' என்று துணிச்சலாக மறுத்தவர். அண்ணா, பெரியாரைவிட்டுப் பிரிந்தபோது 'அண்ணாவின் அவசரப் புத்தி' என்று புத்தகம் எழுதி, அவரிடமே கொண்டுபோய்க் கொடுத்தார். 'நீங்களா எழுதினீர்கள்?' என்று அண்ணா கேட்க, 'எனக்குத்தான் எழுதத் தெரியாதே, நான் சொல்லச் சொல்ல எழுதினது. யார் எழுதினால் என்ன?' என்றார். அந்தக் காலகட்டத்தில் கட்சியில் இருந்தவர்களுக்கு ஒளி வட்டம் சூட்டப்படுவதைக் கடுமையாக எதிர்த்தவர் ராதா. அண்ணா, திராவிடர் கழகத்தில் 'தளபதி' எனத் தொண்டர்களால் அழைக்கப்பட்டவர். ஒருமுறை அவர் நாடகத்துக்கு அண்ணா வந்திருந்தபோது, மேக்கப் ரூமில் இருந்த ராதாவிடம் 'தளபதி வந்திருக்கிறார்' என்று அவசர அவசரமாகச் சொல்லியிருக் கிறார்கள். 'தளபதி குதிரையை எங்கே நிறுத்திட்டு வந்திருக்கார்?' என்று நக்கலாகக் கேட்டாராம் ராதா. 'காசு கொடுத்து டிக்கெட் வாங்கினவன்லாம் தரையிலே உட்கார்ந்திருக்கான். ஓசியிலே வந்தவன்லாம் சேர்ல உட்காந்திருக்கான்' என்று ஓசியில் நாடகம் பார்க்கும் வி.ஐ.பி-க்களையும் நாடக மேடையிலேயே கலாய்ப்பாராம்.
தன் மனதில் பட்டதை, தயக்கமின்றி சொல்லி, தான் நினைத்தபடி வாழ்ந்தவர் எம்.ஆர்.ராதா. அதனால், கலகக்காரன் என்ற பெயர் எடுத்தவர். தன் கொள்கைகளில் முரட்டுத்தனமான பிடிவாதத்தை காட்டினாலும், சக நடிகர்களில் பலர் முன்னுக்கு வர காரணமாக இருந்தவர். தன் தொழிலை நேசித்தவர். நாடக மேடையில் நடித்துக் கொண்டிருக்கும் போதே உயிர் பிரிய வேண்டுமென்று ஆசைப்பட்டவர். திரைத்துறையில் அப்போது ஆட்சி செலுத்திய எம்.ஜி.ஆர்., மற்றும் சிவாஜிக்கு சமமான ஆளுமைப்பண்பை பெற்றிருந்தவர். இவரது வாழ்க்கை வரலாற்றை விறுவிறுப்பாகவும், சுவையாகவும் தொகுத்திருக்கிறார் முகில்.
தேனாம்பேட்டை போயஸ் சாலை; நேரம் காலை, 10:00 மணியை தாண்டியிருந்தாலும், வெயில் அவ்வளவு கடுமையாக இருக்கவில்லை. அந்த வீட்டின் கதவுக்கு அருகே, நாற்காலியை கொண்டு வந்து போட்ட பணியாள் ஒருவர், அதை தன் மேல் துண்டால் ஒருமுறை துடைத்து விட்டு உள்ளே சென்றார்.
முட்டிவரை நீண்ட அண்டர்வேர், வெள்ளை நிற முழுக்கை பனியனோடு, வீட்டை விட்டு வெளியே வந்தார் எம்.ஆர்.ராதா. முதுமையின் ஆக்ரமிப்பு அவரது தேகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. சிறை அவருக்கு புதிதல்ல என்றாலும், கடந்த இரு முறை அனுபவித்த நீண்ட சிறை தண்டனைகள், அவரது கம்பீரத்தை கொஞ்சம் களவாடி போயிருந்தன. மெதுவாக நடந்து வந்து, அந்த நாற்காலியில் அமர்ந்தார்.
தெருவில் வருவோர், போவோரெல்லாம் அவரை பார்த்து வணக்கம் கூறினர். பதிலுக்கு இவரும் வணக்கம் கூறினார்.
'அண்ணே... நல்லாயிருக்கீங்களாண்ணே?' - ராதாவின் அருகில் மிகவும் பவ்யத்துடன் வந்து நின்றார் ஒருவர்.
'வாய்யா... என்னய்யா இன்னிக்கு நாடகம் எதுவும் இல்லையா?'
'இல்லண்ணே...'
'சாப்பிட்டியா?'
'அது....'
'சரி சரி... உள்ள போய் சாப்பிடு...' வந்த நபரை உள்ளே அனுப்பிய ராதா, வாசல் பக்கம் திரும்புகையில், கதவருகே ஒரு பெண் வந்து நின்றார்.
'வாம்மா லலிதா... என்ன ரொம்ப நாளா ஆளைக் காணோம்...எப்படி இருக்க?'
'அண்ணா... சுகமாயிருக்கீங்களா?'
லலிதாவை, கருப்பு வெள்ளை காலத்தவருக்கு தெரிந்திருக்கும். தாம்பரம் லலிதா என்று கூறினால், 'பளிச்'சென்று புரிந்து விடும். முன்னாள் கதாநாயகி; வீரபாண்டிய கட்டபொம்மன் உட்பட சில படங்களில் நடித்திருப்பதுடன், நாடகக் குழு ஒன்றையும் நடத்திக் கொண்டிருந்தார். மிகவும் நலிந்து போயிருந்தார். எனவே, எம்.ஆர்.ராதாவிடம் உதவி கேட்டு வந்திருந்தார்.
'என்னம்மா நீ... நான் நல்லாயிருந்த காலத்துல எல்லாம் விட்டுட்டு, இப்ப வந்து உதவி கேட்குறியே?'
'இல்லண்ணே... நீங்க வந்து நாடகம் போட்டீங்கன்னா, அதுல வர்ற நிதியில...'
'சரி... நாடகத்தை எப்போ வச்சுக்கலாம்... கஜபதி இங்க வாய்யா...'
ராதாவின் ஒப்பனையாளரும், மேலாளருமான கஜபதி, வீட்டின் உள்ளிருந்து வேகமாக வந்தார். அடுத்த மாதம் திருக்கோவிலூரில் நாடகம் என்று முடிவு செய்யப்பட்டது; நன்றி சொல்லி கிளம்பினார் லலிதா.
அடுத்த நாள் நாடகம் -
திருக்கோவிலூருக்கு கிளம்பிக் கொண்டிருந்த லலிதா, அதற்கு முன் ராதாவை பார்த்து விடலாம் என்று தேனாம்பேட்டை வீட்டுக்குச் சென்றார்.
'அண்ணன் ஓய்வு எடுத்துக்கிட்டு இருக்காரு...' என்று பணியாள் சொல்ல, மாடிப்படி ஏறி, அவருடைய அறைக்குள் நுழையும் போதே ஏதோ மருந்து வாசனை.
கட்டிலில் அமர்ந்திருந்தார் ராதா. லலிதாவை பார்த்தவுடன், புன்னகையுடன் வரவேற்ற ராதாவின் முகத்தில் வலியால் உண்டாகும் வேதனையின் பிரதிபலிப்பு; லலிதாவின் முகத்தில் கலவரம்.
'என்னண்ணே ஆச்சு?' - கண்களில் நீர்முட்டிக் கொண்டு நின்றது.
'அது ஒண்ணுமில்லம்மா... ஏதோ கட்டி வந்துருச்சு; டாக்டருக்கிட்ட காண்பிச்சேன்... வைத்தியம் செய்யுறேன்னு சதையை தோண்டி எடுத்துட்டான்...' என்றார்.
ராதா தன் வலது தொடையில் இருந்த காயத்தின் மீது வைக்கப்பட்டிருந்த பஞ்சை எடுத்துக் காட்டினார். தோண்டப்பட்ட சதையின் வழியாக எலும்பு தெரிந்தது. அவருக்கு சர்க்கரை வியாதி என்பதால், தையல் எதுவும் போட முடியாத நிலை.
லலிதாவால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.
'அட... நீ ஏம்மா அழுவுற?'
'அண்ணே... இந்த நிலைமையில...'
'நாளைக்கு தானே நாடகம்; நீ போம்மா நான் வந்துடுவேன்!'
'வேண்டாம்ண்ணே... நாடகத்தை கேன்சல் செய்துடலாம்!'
'அதெல்லாம் செய்யாதே... நாளைக்கு நாடகம் நடக்கும்...' என, உறுதியான குரலில் கூறினார் ராதா. அவர் சொல்லி விட்டால், அதை எதிர்த்து பேச யாராலும் முடியாது.
லலிதா கண்களை துடைத்தபடி அங்கிருந்து கிளம்பினார்.
'நடிகவேள் எம்.ஆர். ராதா நடிக்கும், ரத்தக்கண்ணீர் இன்று மாலை, 7:00 மணியளவில்' என திருக்கோவிலூர் எங்கும் போஸ்டர்கள். நாடகத்துக்கு தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமை தாங்குவதால், கூடுதல் பரபரப்பு. ராதாவின் நாடகம் என்பதால், திருவிழாவையும் மிஞ்சும் கூட்டம். மணி மாலை, 6:30 மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. நாடக மேடை தயாராக இருந்தது.
சின்ன உறுமலுடன் வந்து நின்றது ராதாவின் கார். அதிலிருந்து மெதுவாக இறங்கிய ராதாவை, ஓடிச்சென்று வரவேற்றார் லலிதா. அவ்வளவு நேரம் தேங்கியிருந்த பயம், லலிதாவின் கண்களிலிருந்து விலகியது. ஒருவரது தோளைப் பிடித்தபடி, மேக்-அப் அறையை நோக்கி, கொஞ்சம் சிரமப்பட்டு நடந்தார் ராதா. ரத்த கண்ணீர் நாடகத்துக்காக வேடம் போட ஆரம்பித்து, அப்போது, 25 ஆண்டுகள் நிறைவாகி இருந்தன. டாம்பீக கோட், சூட் நவநாகரிக தோற்றத்தில், மோகன் என்ற கதாபாத்திரமாக மாறியிருந்தார் ராதா.
'மணி, 7:00 ஆகப் போகுது; ஆரம்பிக்கலாமா?' எனக் கேட்டார் ராதா.
அண்டர்வேர் அணிந்திருந்தால், காயத்தின் மேல் படாமல் வசதியாக இருக்கும். ஆனால், அரிதாரம் பூசியாயிற்று. இனி, வேறெதையும் நினைக்கக் கூடாது என நினைத்து, மேடையை நோக்கி கிளம்பினார்.
கடந்த ஆண்டுகளில் எத்தனை மேடை ஏறியிருப்பார். நாடக மேடைகள் அவரது சுவாசம். 'நாடக மேடையில் நடித்துக் கொண்டிருக்கும் போதே, என் உயிர் பிரிய வேண்டுமென்று ஆசைப்படுகிறேன்...' என்று எத்தனையோ முறை கூறியிருக்கிறார்
எம்.ஆர்.ராதா. ஆனால், இன்று? மேடையேறுவதற்கு முன் உயிர் போய் விடும் போலிருந்தது. பாழாய்ப்போன காயம், படியில் காலெடுத்து வைக்க முடியவில்லை. அருகில் நின்ற இருவரை அழைத்தார். அவர்கள் தோள் கொடுத்தனர். சிரமப்பட்டு மேடை மேல் ஏறி நின்றார். திரை விலக்கப்பட்டது.
மக்களின் ஆரவாரம். மேடை மேல் கம்பீரமாக நடக்க ஆரம்பித்தார். வெளிநாட்டிலிருந்து திரும்பும் சீமான் மோகன், தொழிலாளர்கள் மத்தியில், கர்வத்துடன் பேசும் காட்சி ஆரம்பமானது...
'லேடீஸ் அன்ட் ஜென்டில்மேன்...'
அதே குரல், அதே வேகம், அதே துணிச்சல். அவ்வளவு நேரம் முகத்தில் சம்மணமிட்டு அமர்ந்திருந்த வலியின் பிரதிபலிப்பை காணவில்லை. ராதா அங்கில்லை; அவருக்குள் மோகன் இறங்கியிருந்தான். மக்களின் வழக்கமான கை தட்டலும், விசில்கள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. ஒவ்வொரு காட்சியாக முடிந்தது. காட்சிகளுக்கிடைப்பட்ட நேரத்தில் ராதா, வேகவேகமாக காயத்தில் வைக்கப்பட்டிருந்த பஞ்சை மாற்றிக் கொண்டார். ரத்தக் கசிவு கொஞ்சம் அதிகமாக தான் இருந்தது. நாடகம் ஆரம்பித்தபின் அதையெல்லாம் யோசிக்க தோன்றுமா என்ன?
மோகன், குஷ்டரோகி ஆகிக் கொண்டிருந்தான்...
அடுத்த காட்சியாக, கதாநாயகி காந்தா, போலீசார் மூலம் குஷ்டரோகி மோகனை வீட்டை விட்டு அடித்துக் துரத்தும் காட்சி. அக்காட்சியில் கொஞ்சம் அதிகமாக விழுந்து புரண்டு நடிக்க வேண்டியிருக்கும். காட்சிப்படி மரம் ஒன்று சாய்ந்து விழும்.
'அண்ணே... அந்த மரம் விழுறதெல்லாம் வேண்டாம்ண்ணே... தவறுதலா உங்க மேல விழுந்துட்டா கஷ்டம்...' என, கெஞ்சலாக கேட்டார் லலிதா.
'என்னை நம்பி காசு கொடுத்து நாடகம் பார்க்க வந்திருக்கிற மக்களை நான் ஏமாத்த மாட்டேன்; 'முன்னாடியெல்லாம் என்னமா நடிப்பாரு தெரியுமா... இப்போ வயசாயிருச்சு; அதான் அவரால முடியல'ன்னு சொல்லிடுவான்; அதெல்லாம் நான் பாத்துக்குறேன். நீ போ...' என்றார் ராதா.
ராதாவின் குரலில் கண்டிப்பு இருந்தது.
"கடைசி காலத்தில் தொழில் இல்லாமல்தான் கலைவாணர் இறந்தார்.
தியாகராஜ பாகவதருக்கும் அந்த நிலைதான் ஏற்பட்டது.
எனக்கு அந்த நிலை ஏற்படக்கூடாது"
- எம்.ஆர்.ராதா
எம்.ஆர்.ராதாவின் கடைசி நாள்கள்
ராதா இறந்த அன்று தந்தை பெரியாருக்கு
101வது பிறந்த நாள் விழா.
எம்.ஆர்.ராதா கவர்ச்சிகரமான மனிதர். அவரது வாழ்க்கை மிகவும் சுவாரசியமானது. இன்றைக்கு, எம்.ஜி.ஆரைச் சுட்டவர் என்று மட்டுமே வெளி உலகுக்குத் தெரியும் ராதா நடிப்புக்கலையில் கைதேர்ந்தவராக இருந்திருக்கிறார். புரட்சிகரமான நாடகங்களை நடத்தியிருக்கிறார். அதற்காக அப்பொழுதைய காங்கிரஸின் அடக்குமுறைகளைப் பலவிதமாக எதிர்கொண்டிருக்கிறார். இவரது முழுமையான வாழ்க்கை வரலாறு இன்னமும் சரியாக எழுதப்படவில்லை...
12 ஜனவரி 1967 அன்று எம்.ஜி.ஆர் வீட்டில் நடைபெற்ற வாக்குவாதம், தொடர்ந்து துப்பாக்கிச் சூட்டில் யார் யாரைச் சுட்டார்கள் என்பதில் பிரச்னை. எம்.ஜி.ஆர், எம்.ஆர்.ராதா தவிர வாசு என்ற திரைப்படத் தயாரிப்பாளரும் சம்பவம் நடந்த இடத்தில் இருந்தார். இவர்கள் மூவரையும் தவிர சுட்டதை நேரில் பார்த்தவர் வேறு எவரும் இல்லை. அரசுத் தரப்பு வாதம் - லைசென்ஸ் காலாவதியான துப்பாக்கியால் எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆரைச் சுட்டார், பின் தன்னையும் சுட்டுக்கொண்டார் என்பது. எம்.ஜி.ஆர், வாசு இருவரும் இதைத்தான் சொன்னார்கள். எம்.ஆர்.ராதா தரப்பு வாதம் - எம்.ஜி.ஆர் முதலில் எம்.ஆர்.ராதாவைச் சுட்டார், தொடர்ந்து நடந்த கைகலப்பில் எம்.ஆர்.ராதா அந்தத் துப்பாக்கியைப் பிடுங்கி எம்.ஜி.ஆரைச் சுட்டார் என்பது.
முதலில் சைதாப்பேட்டை மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் நடந்த வழக்கு, பின் செங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்றம் சென்றது. அங்கு எம்.ஆர்.ராதா மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு அவருக்கு ஏழாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
-*-
தீர்ப்புக்குப் பின்...
ராதாவின் மகளான ரஷ்யா என்கிற ராணிக்கும் டாக்டர் சீனிவாசன் என்பவருக்கும் ராதா சிறையில் இருக்கும்போதுதான் திருமணம் நடந்தது. ராதாவால் திருமணத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. 1968-ம் வருடம் ஆகஸ்ட் 26-ம் தேதி நடந்த திருமணத்துக்கு தந்தை பெரியார்தான் தலைமை தாங்கினார். முதலில் காமராஜர்தான் தலைமை தாங்குவதாக இருந்தது. ராதா வேண்டாமென்று மறுத்துவிட்டார். காமராஜர் சொல்லித்தான் ராதா எம்.ஜி.ஆரைச் சுட்டார் என்கிற வதந்தி பரவிக் கிடந்தது. அதனால் காமராஜர் திருமணத்தில் கலந்து கொண்டார்; தலைமை தாங்கவில்லை.
திருமணத்தைத் திரையுலகப் பிரபலங்கள் பலரும் புறக்கணித்தனர். ராதாவின் நாடக மன்றத்தில் நடித்து வளர்ந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அவர் திருமணத்துக்கு வரவில்லை. வந்த ஒரே நட்சத்திர தம்பதிகள் ஜெமினி கணேசனும், சாவித்திரியும்தான். இதன் பிறகு 1968 இறுதியில் ராதாவுக்கு ஜாமீன் கிடைத்தது. ஆனால் அவர் திருச்சியில் தங்கியிருக்க வேண்டும் என்று நிபந்தனை.
இதற்கிடையில் என்ன நடந்ததோ தெரியாது, நீதிமன்ற வரலாற்றிலேயே ஆபூர்வமாக ஒரு விஷயம் நடந்து. வழக்கமாக ஒரு வழக்கு விசாரணைக்கோ, தீர்ப்புக்கோ எடுத்துக் கொள்ளப்பட்டால், அதைப் பற்றிய ஓர் அறிவிப்பு வெளிவரும். இதை லிஸ்ட் என்பார்கள். இப்படி ஒரு லிஸ்ட் வராமலேயே உயர் நீதிமன்றம் இந்த வழக்கை எடுத்துக் கொண்டு செஷன்ஸ் கோர்ட்டில் வழங்கிய ஏழு ஆண்டுச் சிறைத் தண்டனையை உறுதி செய்தது. ராதாவின் ஜாமீனையும் நிராகரித்தது. ராதா மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
உயர் நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு, வழக்கு உச்சநீதிமன்றம் சென்றது. வழக்கமாக இது போன்ற வழக்குகளில் கீழ் நீதிமன்றங்களில் சரியான முறையில் விசாரணை நடந்திருக்கிறதா என்றுதான் உச்ச நீதிமன்றம் பார்க்கும். ராதா வழக்கில் இன்னொரு அசாதாரணமான விசாரணையும் உச்ச நீதிமன்றத்தில் நடந்தது. உயர் நீதிமன்ற சாட்சிகளையும் அழைத்து விசாரித்தது உச்ச நீதிமன்றம். இந்த விசாரணையின்போதுதான், ராதாவின் தண்டனைக் காலம் குறைக்கப்பட்டது. ஏற்கெனவே அனுபவித்த சிறைத் தண்டனையை மனத்தில் கொண்டு, மூன்றரையாண்டு சிறை வாசத்துக்குப்பின் ராதா விடுதலையானார்.
விடுதலையானதற்குப் பிறகு ராதாவால் வெகுநாட்கள் வேலை ஏதும் செய்யாமல் சும்மா இருக்க முடியவில்லை. நாடகம் போடத் தீர்மானித்தார். புதிய நாடகத்தின் தலைப்பு கதம்பம். அவர் ஏற்கெனவே மேடையேற்றி நடித்த தூக்குமேடை, ரத்தக்கண்ணீர், லட்சுமிகாந்தன் கொலை வழக்கு ஆகிய மூன்று நாடகங்களின் தொகுப்பு. அவருடன் முன்னர் நடித்த பழைய ஆள்கள் பலர் அப்போது இல்லை. இருந்த சிலரும் அவருடன் நடிக்க பயந்தார்கள். ஆனாலும் வேறு சிலரைத் தயார் செய்து நடிக்க வைத்தார்.
அப்போது திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதி சபா அரங்கம் மிகவும் பிரபலம். அங்கேதான் நாடக அரங்கேற்றம். யாரைத் தலைமை தாங்க அழைக்கலாம் என்கிற யோசனை எழுந்தது. உடனே ராதா எம்.ஜி.ஆரை அழைக்கலாம் என்றார். ராதாவே எம்.ஜி.ஆருடன் பேசி தலைமை தாங்க அழைத்தார். எம்.ஜி.ஆரும் ஒப்புக்கொண்டார். ஆனால் கடைசி நிமிடத்தில் வரவில்லை. நாடகத்தில் ஒரு காட்சியில் லட்சுமிகாந்தனைத் துப்பாக்கியால் ராதா பாத்திரம் சுடுவதுபோல் வரும். பழைய பகையை மனத்தில் வைத்துக்கொண்டு நிஜமாகவே உண்மையான துப்பாக்கியால் எதிரே பார்வையாளர் பகுதியிலுள்ள எம்.ஜி.ஆரைச் சுட்டுவிட்டால் என்னாவது என்று யாரோ எம்.ஜி.ஆரிடம் சொல்லியதால்தான் அவர் கலந்து கொள்ளவில்லை என்று பேசப்பட்டது. அப்போது ராதாவுக்கு அறுபத்தைந்து வயது.
வெளியூர்களில் ராதாவின் நாடகங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்க ஆரம்பித்தது. கீமாயணம்-1 என்கிற பெயரில் 'லட்சுமிகாந்தன் கொலை வழக்கு' நடக்கும். கீமாயணம்-2 என்கிற பெயரில் 'தூக்கு மேடை' நாடகம். கீமாயணம்-3 என்கிற பெயரில் 'ரத்தக்கண்ணீர்'. உடல் தளர்ந்தபோதும் நாடகம் போடுவதை நிறுத்தவில்லை. நாடகம் போட்டுத்தான் ஆக வேண்டுமா என்று குடும்பத்தினர் ராதாவிடம் கேட்டார்கள். அதற்கு அவர், "கடைசி காலத்தில் தொழில் இல்லாமல்தான் கலைவாணர் இறந்தார். தியாகராஜ பாகவதருக்கும் அந்த நிலைதான் ஏற்பட்டது. எனக்கு அந்த நிலை ஏற்படக்கூடாது" என்றாராம்.
சில மாதங்கள் கழித்து 'சமையல்காரன்' என்கிற படத்தில் நடிக்க ராதாவுக்கு வாய்ப்பு வந்தது. அன்றைய தமிழக முதல்வரான கருணாநிதியின் மகன் மு.க.முத்துதான் படத்தின் கதாநாயகன். மைசூரில்தான் படப்பிடிப்பு. படப்பிடிப்புக்காக ராதா காரில் மைசூர் சென்றார். அதிகாலை நேரம், பெங்களூரில் காரைவிட்டு வெளியே இறங்கிய ராதா, "பெட்டி படுக்கையெல்லாம் காரிலேயே இருக்கட்டும். பெரியார் இறந்துடுவார்னு தோணுது. அநேகமாக நாம மறுபடியும் திரும்ப வேண்டியிருக்கும்" என்றாராம். ராதாவும் மற்றவர்களும் ஹோட்டல் அறையில் ஒய்வு எடுத்துக் கொண்டிருந்தார்கள். காலை ஏழரை மணிக்கு பெரியார் இறந்துவிட்டதாகத் தகவல் வந்தது.
காரில் சென்னை திரும்பிய ராதா, நேராகப் பெரியாரின் உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி ஹாலுக்குத்தான் போனார். அவர் உடல் மீது விழந்து புலம்பினார். "போச்சு, எல்லாம் போச்சு. இனிமேல் தமிழ்நாட்டுக்குத் தலைவனே கிடையாது" என்றாராம். அந்த இடத்தில்தான் எம்.ஜி.ஆர் - ராதா சந்திப்பு பல வருடங்களுக்குப்பின் நடந்தது. அப்போது ராதா எம்.ஜி.ஆரிடம், "உன் கூட இருக்கிற யாரையும் நம்பாதே, கழுத்தறுத்துடுவாங்க" என்றாராம்.
'சமையல்காரன்' படத்தில் வில்லனுக்கு அப்பா வேடம் ராதாவுக்கு. அவருக்கு அந்த வயதான பாத்திரம் பிடிக்கவில்லை. கருணாநிதியிடம் சொல்லிப்பார்த்தார். பாத்திரத்தை எப்படி வேண்டுமானலும் மாற்றிக்கொள்ளுங்கள் என்று கருணாநிதி ராதாவுக்கு அனுமதி கொடுத்தாராம். அதற்கு பிறகே ராதா நடித்தார். அந்தப் படத்தில் ராதாவை அறிமுகம் செய்கிற காட்சியில் அவர் ஜெயிலிலிருந்து வெளியே வருவார். "ஜெயில்லதான் காபி கொடுக்கிறான். வெளியே கடைசி எழுத்தத்தான் கொடுக்கிறான்" என்றுதான் அறிமுகமாவார்.
தொடர்ந்து ராதா ஜெய்சங்கருடன் 'ஆடுபாம்பே', 'தர்மங்கள் சிரிக்கின்றன', 'பஞ்சபூதம்', 'கந்தரலங்காரம்' ஆகிய படங்களில் நடித்தார்.
அதற்குப் பிறகு அரசியல் மாறியது. இந்தியப் பிரதமராக இருந்த இந்திரா காந்தி 1975-ல் இந்தியா முழுவதும் "எமர்ஜென்ஸி' கொண்டு வந்தார். பலர் இந்தியா முழவதும் கைது செய்யப்பட்டனர். ராதாவையும் மிசாவில் கைது செய்தார்கள். ராதா கைதானவுடனேயே, "உங்களுக்கும் தந்தை பெரியாருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று எழுதிக் கொடுங்கள். உங்களை விடுதலை செய்கிறோம்" என்றனர். ராதா மறுத்துவிட்டார். பிறகு ராதாவின் மகன் ராதா ரவி டெல்லி சென்று அன்றைய மத்திய மந்திரியாக இருந்த ஒம் மேத்தாவையும், இந்திரா காந்தியையும் சந்திந்து ராதாவின் உடல்நிலையை விளக்கி ராதாவுக்கு விடுதலை பெற்றுத் தந்தார்.
பதினோரு மாதங்கள் சிறைவாசம் அனுபவித்துவிட்டுத் திரும்பியவுடன் மலேசியா, சிங்கப்பூரில் நாடகம் போட ராதாவுக்கு அழைப்பு வந்தது. மூன்று மாதங்கள் இரண்டு நாடுகளிலும் நாடகம் நடத்தினார். சில கூட்டங்களில் பேசினார். அந்தப் பேச்சுக்கள் ஒலிநாடாவாக்கப்பட்டு பல ஆயிரம் பிரதிகள் விற்றுத் தீர்த்தது. பல ஆபூர்வமான சுயசிந்தனைக் கருத்துக்கள் அந்தப் பேச்சுக்களில் நிறைந்து இருந்தது. அங்கிருந்தபோதே ராதாவை மஞ்சள் காமாலை நோய் தாக்கியது. இந்தியா திரும்பி நேரே திருச்சி சென்று தங்கினார் ராதா.
ராதா 1979-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி இறந்தார். எம்.ஜி.ஆர் அப்போது தமிழக முதல்வர். அவர் ராதாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளக் கிளம்பினார். ராதாவுக்கு திருச்சியில் செல்வாக்கு அதிகம், பிரச்னை வரக்கூடாது என்பதற்காக ராதா குடும்பத்தினர் எம்.ஜி.ஆரை வரவேண்டாம் என்று தடுத்துவிட்டனர். எம்.ஜி.ஆர் ராதாவின் இறுதிச் சடங்குக்காக ஓர் அரசாங்க வண்டிக்கு ஏற்பாடு செய்தார். ஆனால் ராதா குடும்பத்தினர் அதையும் ஏற்றுக்கொள்ளவில்லை என்கிற தகவலும் உண்டு.
ராதா இறந்த அன்று தந்தை பெரியாருக்கு 101வது பிறந்த நாள் விழா.
No comments:
Post a Comment