ACTOR VIJAYAKUMAR VS VANITHA
நடிகர் விஜயகுமாரை தமிழ் சினிமா ஒரு காலத்தில் ஒட்டுமொத்த ஹீரோ, ஹீரோயின்களுக்கும் தந்தையாக குத்தகை எடுத்திருந்தது. பிரபலமான இயக்குனர்கள் அனைவரது சாய்ஸாகவும் விஜயகுமார் இருந்தார், இப்போதும் இருக்கிறார். என்ன ஒரு வித்யாசம் என்றால் தந்தையிலிருந்து முன்னேறி இப்போது பல திரைப்படங்களில் தாத்தாவாகவும் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படி தமிழ் சினிமாவில் தந்தை கதாபாத்திரங்களை மிகச் செம்மையாக உள்வாங்கி நடிக்கத் தெரிந்த விஜயகுமாருக்கு தன் மகள் வனிதா விஜயகுமாருடன் அப்படி என்ன பிணக்கு என்று தெரியவில்லை. இது விஜயகுமார் குடும்பத்தின் தனிப்பட்ட விவகாரம், இதைப் பற்றியெல்லாம் பத்ரிகைகளில் எழுத வேண்டிய அவசியமில்லை என்று சிலர் நினைக்கலாம். நிஜம் தான். எழுதத் தேவையில்லை தான். ஆனால், தொடர்ந்து சில யூ டியூப் இணையதளங்களில் வனிதா விஜயகுமார் அளித்து வரும் நேர்காணல்களைக் காணும் போது. விஜயகுமார் குடும்பத்திலிருந்து இந்தப் பெண்ணை வலிய அப்புறப்படுத்த அவரது சொந்தக் குடும்பத்தினரே நினைக்கிறார்களோ என்று தான் தோன்றுகிறது. திரைப்படங்களில் மகள்களுக்கும், மகன்களுக்கும் பாசத்தந்தையாக தன்னை முன்னிறுத்திக் கொண்ட விஜயகுமார், சொந்த மகள் விஷயத்தில் இப்படி ஊர் அறிய மூர்க்கமாக நடந்து கொள்வது வேடிக்கை பார்க்கும் அவரது ரசிகர்களுக்கும் சரி சாமான்யர்களுக்கும் சரி உவப்பாக இல்லை என்பதே நிஜம்.
கடந்த வாரத்தில் சர்ச்சையைக் கிளப்பிய விஜயகுமாரின் ஆலப்பாக்கம் வீட்டில் அவரது மகளும், நடிகையும் தற்போது இயக்குனர் அவதாரமும் எடுத்திருக்கும் வனிதா விஜயகுமார் வசித்து வருகிறார். 25,000 சதுர அடியில் அமைந்த அந்த வீடு அது கட்டப்பட்ட காலத்தில் இருந்தே சினிமா படப்பிடிப்புகளுக்கு வாடகைக்கு விடப்படுவது வாஸ்தவம் தான் என்கிறார் வனிதா. அத்துடன் தான் புதிதாக எடுக்கத் தொடங்கியிருக்கும் ‘டாடி’ எனும் சைக்கலாஜிக்கல் திரில்லர் வகைத் திரைப்படத்தின் படப்பிடிப்பை கடந்த ஆகஸ்டு மாதத்தில் அந்த வீட்டில் வைத்தே துவக்கி இருப்பதாகவும். தற்போது அதற்கான படப்பிடிப்பு வேலைகள் அரைகுறையாக நடந்தேறிக் கொண்டிருக்கையில் திடீரென்று சுஜாதா விஜயகுமார் எனும் சின்னத்திரை தயாரிப்பாளர் ஒருவர் தருவதாகச் சொன்ன அதிக வாடகைத் தொகைக்காக, வாடகையே தரத் தேவையற்ற தன்னை சொந்த மகளென்றும் பாராமல் நடிகர் விஜயகுமார் வீட்டை விட்டு அராஜகமாக அப்புறப்படுத்தினார். இதில் காவல்துறை அதிகாரிக்கும் முக்கிய பங்கு உண்டு. என்று குற்றம் சாட்டுகிறார் வனிதா.
அம்மா மஞ்சுளாவின் இறப்பிற்கு முன்பு வரை, தனது அம்மா மஞ்சுளா, அப்பா விஜயகுமார் மற்றும் சகோதரிகளான ப்ரீதா மற்றும் ஸ்ரீதேவியுடன் இணைந்து வாழ்ந்து வந்த இந்த வீட்டின் முகவரியே தனது பாஸ்போர்ட், ஆதார் கார்டு உள்ளிட்ட அனைத்து அடையாள அட்டைகளிலும் பதிவாகியிருக்கிறது. அப்படி இருக்கையில் இந்த வீட்டில் வசிக்கத் தனக்கு முழு உரிமை இருக்கும் பட்சத்தில் தன் தந்தையான விஜயகுமார் மகளென்றும் பாராமல்... 13 வயதுப் பெண் குழந்தையுடன் இருக்கும் தன்னை அந்த வீட்டிலிருந்து காவல்துறையினரை விட்டு அடித்து விரட்டியது எந்த வகையில் நியாயம்? அவரது வெறுப்புக்கு உரிய வகையில் தான் செய்த தவறென்ன? இரண்டு திருமணங்கள் செய்திருக்கிறேன்.. அதை அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை, அதனால் தான் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்றால், இதைச் சொல்ல அவருக்கு என்ன தகுதி இருக்கிறது? அவரும் அந்தக் காலத்தில் முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலே தானே என் அம்மாவைத் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார். நான் ஏன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டேன் என்றால், எனக்கு குழந்தைகள் இருக்கிறார்கள், அவர்களுக்கும், எனக்கும் எதிர்கால வாழ்வைப் பாதுகாப்பாக்கிக் கொள்ள ஒரு நம்பிக்கையான ஆண் துணை தேவைப்பட்டது. அதனால் திருமணம் செய்து கொண்டேன். அந்தத் திருமணங்கள் தோல்வியில் முடிந்ததில் கூட அவர்களது பங்கும் இருக்கிறது. என் விதி அப்படியெல்லாம் ஆனது. அதற்காக எந்தக் குடும்பத்திலாவது இப்படி சொந்த மகளின் மீது காவல்துறையில் புகார் அளித்து வீட்டை விட்டு காவலர்களை வைத்து அடித்து விரட்டுவார்களா?
இத்தனைக்கும் அந்த வீடு, என் அம்மா பெயரில் இருந்தது. இப்போது என் அப்பா, அது அம்மா பெயரில் இல்லை என்று ஏதோ சொல்லிக் கொண்டிருக்கிறார். அவர் பணத்திற்காக என்ன வேண்டுமானாலும் பேசுவார். என்னைப் பொறுத்தவரை, நான் அந்த வீட்டில் பங்கு கேட்கவில்லை. அது என் அம்மா வீடு, அதில் தங்கவோ, படப்பிடிப்பு நடத்தவோ எனக்கு முழு உரிமை இருக்கிறது. இதைத் தடுக்க என் அப்பாவுக்கு என்ன உரிமை இருக்கிறது. அவரிடம் நான் வீட்டுக்கு உரிமை கொண்டாடவில்லையே. 25,000 சதுர அடி வீட்டில் நான் படப்பிடிப்பு நடத்தக் கூடாது என்று யாரோ ஒரு சின்னத்திரை தயாரிப்பாளருக்காக என் தந்தை இத்தனை அராஜகங்களைச் செய்திருக்கிறார். அவருக்கு நான் மகளா? இல்லை அந்த தயாரிப்பாளர் மகளா? விஜயகுமாருக்கு நாங்கள் நாங்கள் 5 மகள்கள் இருக்கிறோம். அதில் ஏதோ ஒரு மகள், அவரை வீட்டை விட்டு விரட்டினால் அப்படியே பயந்து போய் விடுவார் என்று என்னை அடித்த காவல்துறை அதிகாரி மில்லர் நினைத்திருக்கலாம். அந்த தைரியத்தில் தான் ஒரு பெண் என்றும் பாராமல் என்னைக் கை நீட்டி அடித்திருக்கிறார். இந்த டாட்டர் எல்லோருக்கும் வாட்டர் காட்டும் டாட்டர் என்று அவர்களுக்குத் தெரியாது. கூடிய விரைவில் நான் அதைப் புரிய வைக்கிறேன். இவர்கள் நடத்தியது விசாரணை அல்ல. காவல்துறை கட்டப்பஞ்சாயத்து.
சர்ச்சைக்குரிய ஆலப்பாக்கம் வீடு, 1994 ல் வீட்டு மனையாக வாங்கப்பட்டு 1995 காலகட்டத்தில் வீடாகக்கட்டப்பட்டது. அப்போது நான் மைனர். 14 வயதில் முதன் முறையாக விஜய்யுடன் ‘சந்திரலேகா’ திரைப்படத்தில் அறிமுகமானேன். அதைத் தொடர்ந்து மாணிக்கம், மற்றும் பிறமொழிப் படங்கள் சிலவற்றிலும் நடித்துக் கொண்டிருந்தேன். அப்போது எனது நடிப்பிற்காக பெறப்பட்ட சம்பளத் தொகையும் கூட இந்த வீட்டின் கட்டுமானத்தில் செலவிடப்பட்டிருக்கலாம்.
அதைப் பற்றி எனக்குப் பெரிதாகத் தெரியாது. என் அம்மா மஞ்சுளா, ஒரு காலத்தில் எம் ஜி ஆர், சிவாஜி முதல் தென்னிந்தியாவின் அனைத்து சூப்பர் ஸ்டார்களுடனும் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த ஒரு சூப்பர் ஸ்டார் நடிகை. அவர் சம்பாதித்த தொகையெல்லாம் எங்கே போனது. அவரது பெயரில் இருந்த சொத்துக்களுக்கு எல்லாம் அவருக்குப் பிறந்த மூன்று மகள்களான எனக்கும் என் சகோதரிகளுக்கும் உரிமை இருக்கிறது தானே?! என்னை விட, பாட்டி சொத்தில் பேரன், பேத்திகளுக்கு உரிமை இருக்கிறது தானே? அப்படிப் பார்த்தால் என் தந்தை என் மகளையும் சேர்த்துத் தானே அந்த வீட்டில் இருந்து வெளியேற்றி இருக்கிறார். இது எப்படி நியாயம் ஆகும்? இன்று என் அப்பா பெருமையாகச் சொல்லிக் கொள்கிறார். என் பெயரில் ஒரு சொத்து கூட இல்லை என்று, அப்படியானால் அவர் சம்பாதித்த சொத்துக்களும், என் அம்மா மஞ்சுளா சம்பாதித்த சொத்துக்களும் என்னவாகின? யார் பெயருக்கு மாற்றப்பட்டன? என் தங்கைகள் இதைக் கேட்க மாட்டார்கள். அவர்களை எளிதாக ஏமாற்றி விடலாம். ஆனால், என் அம்மாவிற்குப் பிறந்த மூன்று மகள்களில் நான் தான் ஆண்பிள்ளை போல தைரியமானவள். என்னால் குடும்பத்தின் இழைக்கப்படும் அநீதிகளைத் தட்டிக் கேட்காமல் வேடிக்கை பார்க்க முடியாது.
வீட்டில் படப்பிடிப்பு நடத்த வாடகை வேண்டுமானாலும் தருவதற்கு நான் தயாராகத்தான் இருந்தேன். ஆனால், அவர்களது நோக்கம் என்னை அந்த வீட்டிலிருந்து அப்புறப்படுத்துவதாகத் தான் இருக்கிறது. இதற்குப் பிறகும் என்னால் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. நான் நீதிமன்றத்தில் நியாயம் கேட்கப் போகிறேன். என் அப்பா பாஜக அனுதாபி. அதனால் மேலிடம் அழுத்தம் கொடுத்ததால் தான்... காவல்துறையினர் ஒரு பெண்ணென்றும் பாராமல் என்னிடம் மிக மோசமாக நடந்து கொண்டனர். இதற்கான நியாயம் எனக்குக் கிடைக்க வேண்டும். மீடியாக்கள் என்னிடம் இத்தனை கேள்வி கேட்கிறீர்கள். நான் உங்களது அத்தனை கேள்விகளுக்கும் ஒன்று விடாமல் பதில் சொல்லிக் கொண்டு தான் இருக்கிறேன். இதே கேள்விகளை நீங்கள் என் அப்பா விஜயகுமாரிடமும், சகோதரர் அருண் விஜய்யிடமும் கேட்க வேண்டும். அவர்களிடம், அவர்களுக்கு என் மேல் இருக்கும் அளப்பரிய வெறுப்புக்கு காரணம் என்னவென்று நீங்கள் கேட்க வேண்டும்? தமிழ் சினிமாவில் தன்னை ஒரு ஹீரோவாக ,நல்லது மட்டுமே செய்யக் கூடிய ஹீரோவாக முன்னிறுத்திக் கொள்ள நினைக்கும் அருண் விஜய் உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும். தந்தைப் பாசம் பொங்க பொறுப்பு மிக்க தந்தை ரோல்களில் நடித்து சம்பாதித்த என் தந்தையும் உங்கள் கேள்விகளுக்குத் தைரியமாக ஒளிவு மறைவின்றி பதில் சொல்ல வேண்டும். சொல்வார்களா அவர்கள்?
என்னைப் பொருத்தவரை என் அப்பா ஒரு பொம்மை போலத்தான். அவர் ஒரு காலத்தில் என்னை மிகவும் ஆதரித்தார். என் மீது கரிசனத்துடன் இருந்தார். என் குடும்பத்தில் அருண் விஜய்க்கும், ஃப்ரீதாவுக்கும் திருமணமாகிப் புதிய உறவுகள் இணைந்ததும் அவர்களது ஈகோ காரணமாக என் அப்பாவிடம் என் மீதான வெறுப்பைத் தூண்டி வருகிறார்கள். அது மட்டுமே காரணமாக இருக்கக் கூடும் என்று நம்புகிறேன். அதைத் தாண்டிய கேள்விகளுக்கு என் அப்பாவும், சகோதரர் அருண் விஜயுமே பதில் சொல்ல வேண்டும்.
- என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் வனிதா விஜயகுமார்.
.
.
No comments:
Post a Comment