Sunday 20 September 2020

KANNAMBAA THE LEGEND BORN SEPTEMBER 20 , 1912

 



KANNAMBAA THE LEGEND BORN 

SEPTEMBER 20 , 1912

20-9-2020

தமிழ் சினிமா உலகில் சிவாஜி-எம்.ஜி.ஆருக்கு முந்தைய ஹரோக்கள்

தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பாதான். இந்த இரு ஹீரோக்களுக்கும் ரசிகர்கள் ஏராளம் இருந்தனர் . அவர்கள் மீண்டும் மீண்டும் தங்களுக்கு பிடித்தமான ஹீரோவின் படத்தைப் பார்த்தனர். ஆனால் ஒரு கதாநாயகியின் சிறப்பான நடிப்பைக் கண்டு வியந்து போய் அவரது நடிப்பை ரசிப்பதற்காகவே பல தடவை ஒரு படத்தை ரசிகர்கள் அடித்துப் பிடித்துக் கொண்டு பார்த்தார்கள். அதனாலேயே அது வெற்றி முரசு கொட்டி பட்டி தொட்டி எங்கும் முழங்கியது .
அந்தப்படம்தான் கண்ணகி. நடிகை கண்ணாம்பா.

‘கண்ணகி’ படத்தின் வெற்றி பற்றி அந்நாளைய தமிழ் சினிமா பத்திரிகை ஒன்று , “கண்ணாம்பா தமிழ்ப் படங்களில் நடிக்க வந்தாலும் வந்தார் , தெலுங்குப் படங்களிலும் தமிழ்ப் படங்களிலும் நடிக்கும் நடிகைகளில் நடிப்பில் முதல் ஸ்தானம் யாருக்கு? என்ற கேள்விக்கு பதில் அளிப்பது சுலபமாகி விட்டது . பதில் கண்ணாம்பா தான்!” என்று எழுதி இருந்தது.

பிறப்பு

கண்ணாம்பா ஆந்திராவில் பிரபல தென்னிந்திய நடிகை கண்ணாம்பா 1912-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20-ந் தேதி ஆந்திர மாநிலம் குட்டப்பா என்ற ஊரில் பிறந்தார். தந்தை பெயர் வெங்கணராசையா. தாயார் பெயர் லோகம்பா. இவர்களின் ஒரே குழந்தைதான் கண்ணாம்பாள். பதினைந்து வயதில் மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். அவர் முதன்முதலில் அரிச்சந்திரா நாடகத்தில் சந்திரமதியாக நடித்தார். அதன்பின் தாமே சொந்த நாடகக் கம்பெனி துவங்கி தெலுங்கு தேசத்தின் பல ஊர்களில் நாடகம் நடத்தி வந்தார் . சாவித்திரி, அனுசுயா, சந்திரமதி, யசோதை போன்ற பாத்திரங்களில் சிறப்பாக நடிக்க அவரை விட்டால் ஆளில்லை எனும் அளவிற்கு தெலுங்கு நாடக மேடைகளில் கோலோச்சினார்.
நாடகத்தை விட்டு அவர் சினிமாவிற்கு வந்த பிறகும் அவரது நாடகப் புகழ் மங்கவில்லை. இடையிடையே பல ஊர்களில் தொடர்ந்து நாடகங்களும் நடத்தி வந்தார் .

துக்கம் , வீரம், கோபம் போன்ற உணர்ச்சிமயமான கட்டங்களில் கண்ணாம்பா மேடைக்கு வந்து விட்டாலே அவரது வசனங்களாலும் நடிப்பாலும் நாடகம் பார்ப்பவர்களும் உணர்ச்சி வசப்பட்டு விடுவார்களாம் . கொட்டகை அதிருமாம் .

சினிமாவிலே பல துண்டு துண்டு ஷாட்களில் அவர் நடித்திருப்பதை ஒரு கோர்வையாகப் பார்க்கும் போதே ரசிகர்களுக்கு உற்சாகமும் உணர்ச்சி வேகமும் ஏற்படுகிறதென்றால் மேடையில் தொடர்ச்சியாக ஒரு காட்சியில் அவர் நடிக்கும் போது எப்படிப் பிரமாதப்படுத்தி விடுவார் பாருங்கள்!” என்கிறார் அந்நாளைய நடிகர் ஒருவர்.
பேசும் படம் வந்ததும், நாடகத்தில் பிரபலமான எல்லோரையும் அது தன் பக்கம் ஈர்த்துக் கொண்டது.

கண்ணாம்பாவும் சினிமா நடிகையானார். 1935 -ல் வந்த ‘ஹரிசந்திரா’ தெலுங்குப் படத்தில் முதன் முதலில் நடித்தார். அப்போதே அவருக்கு வயது இருபத்தைந்து. அதைத் தொடர்ந்து திரௌபதி, வஸ்திராபஹரணம், கனக தாரா , கிரகலட்சுமி ஆகிய படங்கள் கண்ணாம்பா என்ற ஒரு சினிமா நடிகையை மக்களுக்கு அறிமுகப்படுத்தியது .

தமிழில்…


தமிழுக்கு 1940 ல் கிருஷ்ணன் தூது என்ற படத்தில் திரௌபதியாக நடித்ததின் மூலம் பிரவேசித்தார். அவருக்கு முதல் தமிழ் படம். பாஷையும் புதிது . உச்சரிப்பும் சுத்தமில்லை. அதனால் இந்தப் படத்தில் அவர் நடிப்பு பிரகாசிக்கவில்லை. அடுத்து அவர் அசோக்குமார் படத்தில் ஒப்பந்தமானார். “தெலுங்கு நடிகையாவது, தமிழைப் பேசி நடிப்பதாவது, சாத்தியமே இல்லை. கிருஷ்ணன் தூதுவில் இவர் பேசிய தமிழைத்தான் நாம் பார்த்தோமே!” என்று பேசினர் பட உலகத்தினர் .
ஆனால் அப்படி நினைத்தவர்களை எல்லாம் கண்ணாம்பா அசோக்குமார் மூலம் பிரமிக்க செய்து விட்டார் . தமிழ் வசனங்களை தெலுங்கில் எழுதிப் படித்து , மனனம் செய்து தமிழ்ப் பெண்ணை விட மிகச் சிறப்பாகத் தமிழ் வசனங்களைப் பேசி அசத்தினார் . முப்பது வயது கண்ணாம்பா , அந்தப் படத்திற்காகவே பரத நாட்டியமும் கற்றுக் கொண்டு, படத்தில் ஒரு நடனக் காட்சியை அழகாக ஆடினார். அந்தப் படத்தில் வேறு எவ்வளவோ நல்ல அம்சங்கள் இருந்த போதிலும் அவற்றை எல்லாம் விட்டுவிட்டு ரசிகர்கள் கண்ணாம்பாவின் நடிப்பையும், நாட்டியத்தையுமே புகழ்ந்து வந்தனர் .

அடுத்து அவர் நடித்த படம், சூப்பர் டூபர் ஹிட்டான கண்ணகி. அது நாள் வரை ‘கோவலன் கதை’ என்ற பெயரிலேயே மேடையேறி வந்த கதையை வசனகர்த்தா இளங்கோவன், கதாநாயகியை மையப் படுத்தி ‘கண்ணகி’ எனப் பெயரிட்டு திரைக்கதை அமைத்தார் . அதற்குப் பொருத்தமாக கண்ணாம்பா கிடைத்தார். கண்ணாம்பா நடித்திரா விட்டால் இந்தக் கதை மாறுதலை மக்கள் ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார்கள், படமும் தோல்வி கண்டிருக்கும். ‘அசோக் குமார்’ பரபரப்பை ஏற்படுத்தியது என்றால் ‘கண்ணகி’ புரட்சியையே உண்டாகியது. அது நாள் வரை பாடல்களைக் கேட்டு ரசிக்கவே திரையரங்குக்கு வந்த தமிழ் ரசிகர்கள் கண்ணகி படத்திலிருந்துதான் நட்சத்திரங்களின் நடிப்புத் திறனைக் கண்டு ரசிக்கத் தொடங்கினர். அதன் பின் வந்த படங்களிலும் நடிகர்களின் நடிப்புத் திறனை எதிர்பார்க்கத் தொடங்கி விட்டனர்.

கண்ணாம்பாவின் வெற்றிக்கு இளங்கோவனின் வசனங்கள் முக்கிய காரணம் .தமிழரல்லாதவர்களுக்கு வசனத்தை எப்படி அமைக்க வேண்டும் என்பதை அறிந்து ‘ழ’ என்ற எழுத்து கூடுமானவரையில் இல்லாமல் வசனத்தை அமைத்தார் . அது நாள் வரை நடித்த நடிகைகள் திரையில் வந்து வசனத்தைப் பேசி விட்டு போவார்கள். ரசிகர்களும் திரையில் ஏதோ நடக்கிறது, நாம் பார்க்கிறோம் என்கிற விதத்திலேயே பார்த்தார்கள். ஆனால் கண்ணாம்பாதான் தனது வசனத்தாலும் நடிப்பாலும் ரசிகர்களைத் திரையோடு ஒன்றிப் போகச் செய்தார். மெய் சிலிர்க்கச் செய்தார். திரைப் படம் பார்ப்பதை ஒரு பரவச அனுபவம் என்றாக்கிக் காட்டினார் .

‘மகனே , மனோகரா ! பொறுத்தது போதும் பொங்கி எழு !’ என்ற வசனத்தை நாம் யாரிடம் சொன்னாலும் அவர்களுக்கு சிவாஜி கணேசன் நடித்த மனோகரா படமும், அதில் கண்ணாம்பா பேசும் இந்த வசனமும் நினைவுக்கு வராமல் போகுமா? அந்தக் காலத்தில் பல இளம் கதாநாயகிகளின் பெயரைத் கூடத் தெரியாத தமிழ் மக்களுக்கு கண்ணாம்பாவின் பெயர் தெரியாமலிருக்காது. வீடு தோறும் சென்றடைந்த முதல் கதா நாயகி .! பசுபுலேட்டி என்பது அவரது குடும்ப பெயர். தமிழில் அதனை சுருக்கி பி .கண்ணாம்பா என்று வைத்துக் கொண்டார் , பசுபுலேட்டி கண்ணாம்பா.

இவர் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 25 படங்களை தயாரித்து இருக்கிறார்.

குடும்பம்

கண்ணாம்பா நாடக நிர்வாகியான கே.வி.நாகபூஷணம் என்பவரை 1934-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அந்த ஆண்டு இருவரும் சேர்ந்து ஸ்ரீராஜராஜேஸ்வரி நாட்டிய மண்டலி என்ற புதிய நாடக கம்பெனியை ஆரம்பித்து தென் இந்தியா முழுவதும் நாடகங்களை நடத்தினார்கள்.

வளர்ப்பு பிள்ளைகள்

இந்த தம்பதியருக்கு குழந்தைகள் கிடையாது.
இவர்களுக்கு குழந்தைகள் இல்லாததால் ஒரு ஆண்பிள்ளையும், பெண் பிள்ளையையும் தத்தெடுத்து வளர்த்தார்கள். மகள் ராஜராஜேஸ்வரி பிரபல தெலுங்கு இயக்குனர் சி. புல்லையாவின் மகனைத் திருமணம் செய்து கொண்டார்.
கண்ணாம்பாள் 1964-ம் ஆண்டு மே மாதம்7-ந் தேதி மரணம் அடைந்தார்.

-நாகராஜன், சிவகாசி

No comments:

Post a Comment