SABAASH MEENA CHANDRA BABU
.சபாஷ் மீனா படத்திற்காக, சிவாஜியிடம் பேசினர். கதையை கேட்ட சிவாஜி, கதாநாயகன் பாத்திரத்துக்கு இணையாக, படம் முழுவதும் வரும் மற்றொரு நகைச்சுவை கலந்த முக்கிய கதாபாத்திரத்திற்கு, 'சந்திரபாபுவை போட்டா, ரொம்ப நல்லா வரும்...' என்று, சொன்னார்.
தன் அலுவலகத்துக்கு சென்றபின், சந்திரபாபுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய இயக்குனர், ப.நீலகண்டன், அவரை சந்திக்க வருவதாக கூறினார்.
'நீங்க இருங்க; நான் அங்க வர்றேன்...' என்று சொல்லி, மயிலாப்பூர், திருவள்ளுவர் சிலை அருகில் இருந்த, பத்மினி பிக்சர்ஸ் அலுவலகத்துக்கு, தன் காரில் வந்தார், சந்திரபாபு.
சபாஷ் மீனா படத்தின் கதை, சந்திரபாபுவின் கதாபாத்திரம் மற்றும் சிவாஜி சொன்ன கருத்து ஆகியவற்றை சந்திரபாபுவிடம் சொன்னார், ப.நீலகண்டன்.
'சிவாஜி பிரமாதமான ஆக்டர்; என் திறமையை புரிஞ்சுக்கிட்டிருக்கார்; அதான் என்னை சிபாரிசு செய்திருக்கார்...' என்று கூற, நீலகண்டனுக்கு கொஞ்சம் அதிர்ச்சி.
சுதாரித்து, 'உங்களுக்கு எவ்வளவு சம்பளம் வேணும்?' என, கேட்டார்.
'சிவாஜி கணேசனுக்கு கொடுக்குறதை விட, கூட ஒரு ரூபாய் சேர்த்து கொடுங்க...' என்றார், சந்திரபாபு சர்வ சாதாரணமாக!
இதைக் கேட்ட நீலகண்டனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. நடந்ததை சிவாஜியிடம் சொன்னார்.
அதற்கு, 'அவன்கிட்ட விஷயம் இருக்கு. இது காமெடி படம்; சில சீன்களில் அவன் நடிப்பு தான் நிக்கும்; நான் தான் பார்த்து நடிக்கணும். சில சமயங்களில் இப்படித் தான் லூசுத்தனமா பேசுவான்; கண்டுக்காதீங்க...' என்றார், சிவாஜி.
சபாஷ் மீனா படத்தில், சிவாஜிக்கு ஜோடியாக மாலினி நடிக்க, சந்திரபாபுவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார், சரோஜாதேவி. எந்தவித மறுப்பும் சொல்லாமல் ஒப்புக் கொண்டார், சரோஜா தேவி.
சபாஷ் மீனா படத்தில், மோகனை (சிவாஜி) நம்பி வாழும் உயிர்த்தோழன் சேகராகவும், சென்னை பாஷை பேசும் ரிக் ஷாக்காரன் மூக்கனாகவும் இரு வேடங்களில் நடித்தார், சந்திரபாபு.
ஒரு காட்சியில், சேகர் இடத்தில் மூக்கனும், மூக்கன் இடத்தில் சேகரும் மாட்டிக் கொள்வர்.
'இந்த வீட்டுல சாப்பாட்டுக்கு பிரச்னை இல்ல; அப்படியே செட்டில் ஆயிடலாம்...' என, நினைப்பான் மூக்கன். அப்போது அங்கு வரும் மோகன், மூக்கனை, சேகராக கருதி, 'டேய்... சேகர் இங்க வாடா...' என்பார்.
மூக்கனுக்கு, 'டேய்' என்று தன்னை ஒருவன் அழைப்பது, கவுரவப் பிரச்னை ஆகிவிடும். அதனால், கோபத்தில், 'எனக்கு சோறு போடுறவன் என்னை மாமா, மாப்ளேங்குறான். நீ என்னடான்னா டேய்ங்கிற... உன் மூஞ்சியில என் கையை வைக்க...' என்று கூறி, மோகனாக நடிக்கும், சிவாஜியின் முகத்தில், ஒரு அறை விட, யூனிட்டே அதிர்ந்து போனது. இதை எதிர்பார்க்காத சிவாஜி கணேசன், நிலை தடுமாறிப் போனார். சிவாஜிக்கு மூக்கில் ரத்தம் வராத குறையாக, 'ஷாட்' ஓ.கே., ஆனது.
இப்படம், 1958ல் வெளியாகி, மாபெரும் வெற்றி பெற்றது. சிவாஜியை ஓரம் கட்டும் விதத்தில், சந்திரபாபு தன் நடிப்பால் அசத்தியிருப்பதாக பாராட்டுகள் எழுந்தன.
ஆனால், இந்த பாராட்டுகளால், கொஞ்சம் கூட சந்தோஷம் அடைய முடியாதபடி, அவரது மனம் புண்பட்டிருந்தது. காரணம், காதல்!
அமைச்சர், லூர்தம்மாள் சைமனின் மகனுக்கு, நாகர்கோவிலில் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு போய், திரும்பி வரும் வழியில், மதுரையில் இறங்கினார், சந்திரபாபு.
சென்னை பிரதம மாகாண மாஜிஸ்திரேட்டாக இருந்த, அய்யாசாமி செட்டியார், மதுரையில் ஒரு குடும்பத்தை, சந்திரபாபுவுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவர்களது வற்புறுத்தலால், சந்திரபாபு இரண்டு நாட்கள் மதுரையில் தங்கும்படி ஆகிவிட்டது. அங்குதான் முதன் முதலாக, ஷீலாவை சந்தித்தார், சந்திரபாபு.
ஷீலாவின் தாத்தா, சாமிகண்ணு வின்சென்ட்டுக்கு ஒரு சிறப்பு உண்டு. முதன்முதலில், வெளிநாட்டிலிருந்து பிலிம் ரோல்களை தருவித்து, தமிழகம் முழுவதும் டென்ட் கொட்டகைகள் அமைத்து, படம் காட்டியவர் இவர்!
ஷீலாவின் தந்தை, மதுரை, டி.வி.எஸ். நிறுவனத்தில் மேலாளராக இருந்தார்; தாய், ஆங்கிலோ இந்தியர்.
ஷீலாவை பார்த்த நொடியே, சந்திரபாபுவுக்கு பிடித்து விட்டது. அவரது அடக்கம், பணிவு, அழகு எல்லாம் அவரை கவர்ந்தன.
ஷீலாவின் குடும்பத்தினரே, சந்திரபாபுவிடம் திருமண விஷயமாக பேச்சை துவங்கினர். சந்திரபாபுவின் நண்பர், அருள். இவர் சென்னையில் போலீஸ் கமிஷனராக இருந்தார். ஷீலாவின் குடும்பத்தினரின் அறிமுகம் அவருக்கு இருந்ததால், அவரும், 'ஷீலாவை, திருமணம் செய்து கொள்ளேன்...' எனக் கூற, சந்தோஷமாக திருமண தேதியை குறிக்கச் சொன்னார், சந்திரபாபு.
இதுவரை, யாரும் இப்படியொரு திருமண அழைப்பிதழை தயாரித்தது இல்லை எனும்படி, தன் திருமண அழைப்பிதழை, ஓலைச்சுவடி வடிவில், புதுமையாக உருவாக்கினார், சந்திரபாபு.
திரை உலக நண்பர்களுக்கும், பிற நண்பர்களுக்கும் தானே நேரில் சென்று அழைப்பிதழைக் கொடுத்து, திருமணத்துக்கு அழைத்தார்.
மே, 29, 1958ல் மதுரையில் வெகு விமரிசையாக நடந்தது, திருமணம். காலை, 7:00 மணிக்குத் துவங்கிய உணவு பந்தி, இரவு, 9:00 மணிக்கு தான் முடிந்தது.
திரை உலகப் பிரமுகர்கள் பலரும் தவறாமல் வந்திருந்தனர். காமராஜர் வந்து வாழ்த்தினார். 350க்கும் மேற்பட்ட உயர் ரகப் பட்டுப் புடவைகள், பல நூறு ஜோடி வெள்ளிக் குத்துவிளக்குகள், ரேடியோ, பாத்திரங்கள், கடிகாரம் என, அன்பளிப்புகள் குவிந்தன.
அந்த சமயத்தில், 'அருமையான, பொருத்தமான ஜோடி...' என்று வாழ்த்தியவர்களும், 'கோமாளித்தனம் செய்யும் சந்திரபாபுவுக்கு, இவ்வளவு அழகான பெண்ணா...' என்று வியந்தவர்களும் உண்டு.
ஆனால், அவர்களது திருமண வாழ்க்கை, .......
.
Image may contain: 2 people, people standing
No comments:
Post a Comment