"வயது என்பது எண்ணிக்கையே தவிர, வயதாகி வருகிறது என்று நீங்கள் நினைத்தால்தான் அது உங்களுக்கு பிரச்னையாக தெரியும்'' என்று கூறும் மாதுரி தீட்சித். நீண்ட இடைவெளிக்குப் பின் "பாக்கெட் லிஸ்ட்' என்ற மராத்தி படத்திலும், "டோட்டல் தமால்' மற்றும் "கலங்க்' ஆகிய இரு இந்தி படங்களில் நடித்து வருகிறார். அவர் முன்பு நடித்துக் கொண்டிருந்தபோது இருந்த திரையுலகம், இன்றைய மாறுதல் பற்றி தன் அனுபவங்களை இங்கு பகிர்ந்து கொள்கிறார்:
"80-களில் நான் சினிமாவில் நடிக்க தொடங்கியபோது சின்னசின்ன வேடங்களில் தான் நடித்து வந்தேன். கூடவே தொடர்ந்து நான் நடிப்பேனா என்ற சந்தேகமும் இருந்தது. என் வீட்டைப் பொறுத்த வரை அனைவருமே நன்கு படித்தவர்கள். நானும் அறிவியல் மாணவி என்பதால் மைக்ரோ பயாலஜி படிக்க விரும்பினேன். "அபோத்' என்ற படத்திற்குப் பின் தொடர்ந்து நடிப்பதில் ஆர்வம் ஏற்பட்டது. என்னுடைய குடும்பத்தில் யாருக்குமே திரையுலக தொடர்பு இல்லாததால், படங்களை எப்படி தேர்வு செய்வது என்பது எனக்கு தெரியவில்லை. ஆரம்பத்தில் நான் நடித்த படங்கள் பெரிதும் பேசப்படவில்லை என்றாலும், சினிமாவைப் பற்றி நிறைய கற்றுக் கொண்டேன்.
நான் நன்றாக நடனமாடுவேன் என்பதால் எல்லா படங்களிலும் மாதுரி நடனமாடுவார் என்ற பொதுவான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது. நடன காட்சி இல்லையென்றால் "ஏன் நடனமாடவில்லை?'' என்று கேட்பதும் உண்டு. கதைக்கு தேவை என்றால் மட்டுமே பாடலை வைக்க வேண்டுமே தவிர திணிக்கக் கூடாது. அப்போதுதான் இயற்கையாக இருக்கும் என்று நான் விரும்புகிறேன்.
இந்த 53 வயதிலும், என்னை நான் வயதானவளாக நினைப்பதில்லை. என் உடல், மனம், ஆத்மா ஒரே சீராக இருப்பதற்கு தொடர்ந்து நடனமாடுவதும் காரணமாகும். உங்கள் உடலையும், மனதையும் கவனித்துக் கொண்டால் வயதாவது ஒரு பிரச்னையே இல்லை.
நான் நடிக்க வந்தபோது இருந்த திரையுலகம் இன்றும் அப்படியே தான் இருக்கிறது. தொழில்நுட்பமும், இளம் கலைஞர்களும் வளர்ந்துள்ளனர். ஒரு வித்தியாசம் இப்போதெல்லாம் நாங்கள் நடிக்கும் காட்சிகள், வசனங்கள், எப்படி நடிக்க வேண்டும் என்ற விவரங்கள் முன்கூட்டியே தரப்படுகிறது. வரவேற்க தகுந்த மாற்றம். இது முன்பு இல்லை. பல விஷயங்களில் திரையுலகம் முன்னேறி வருகிறது.
நான் நடிகை என்பதால் வீட்டில் எந்தவிதமான விசேஷ கவனிப்பும் கிடைக்காது. இப்போதும் கூட என்னுடைய அம்மா என்னை அதட்டுவதுண்டு. நடிகை என்ற மதிப்பு, மரியாதை எல்லாம் ஸ்டூடியோவில்தான். வீட்டில் எதிர்பார்க்க முடியாது. நான் நடித்த படங்களை வீட்டில் இப்போது பார்க்கும்போது எனக்கே வேடிக்கையாகவும், வெட்கமாகவும் இருக்கும். உடனே சேனலை மாற்றச் சொல்வேன். ஆனால் என் பிள்ளைகள் மிகவும் ரசித்து பார்ப்பதுண்டு.
மீண்டும் நான் நடிக்க வந்ததற்கு என் கணவரின் ஆதரவுதான் காரணம். " நீ என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறாயோ அதை செய். நான் உனக்கு துணையாக இருக்கிறேன்'' என்பார். ஏதாவது தவறு நடக்குமோ என்று அவர் நினைப்பதும் இல்லை. எங்களுக்குள் ஒருவருக்குகொருவர் புரிதலும், பாதுகாப்பும் உள்ளது. அவர் ஓர் இதய மருத்துவர் என்பதால் பல மரணங்களை நேரில் பார்த்துள்ளார். வாழ்க்கை என்பது மிக குறுகிய காலம் என்பதால் அதை மகிழ்ச்சியுடன் அனுபவிக்க வேண்டும் என்பார்.
எங்களுக்குள் பல விருப்பங்கள் இருப்பதால் பார்ட்டிகளுக்கு போகமாட்டோம். குழந்தைகளுடன் சேர்ந்திருப்பதையே விரும்புவோம். என் சுயசரிதையை எழுதுவதற்கு முன், வாழ்க்கையில் நான் இன்னும் செய்ய வேண்டியது நிறையவே இருப்பதாகவே கருதுகிறேன்'' என்கிறார் மாதுரி தீட்சித்.
- பூர்ணிமா
.
.
No comments:
Post a Comment