Tuesday, 2 March 2021

VEERAPPAN ,TERRORISTS BIOGRAPHY

 

VEERAPPAN ,TERRORISTS BIOGRAPHY

#வீரப்பன் #வீழ்ந்ததும் #வாழ்ந்ததும்


*9.முதல் வழக்கு!*

 இதற்கு முன் வீரப்பனுக்கும் மனிதர்களைச் சுட்ட அனுபவமில்லை. இப்போது கூட கருப்பணன் தான் பரமசிவத்தை சுடப் போகிறான் என வீரப்பன் முடிவு செய்து வைத்திருந்தார். எதிர்பாராத நேரத்தில் வீரப்பனே சுட வேண்டியதானது. அதனால், பரமசிவத்துக்கு சரியாக அடி பிடிக்கவில்லை. உயிர் தப்பிய பரமசிவம் தப்பியோடினார். வீரப்பன் விடாமல் துரத்திக் கொண்டே போனார்.  முருகண்டி மலையின் பாதி உயரத்திற்குப் போன பரமசிவம் கால் இடறிக் கீழே விழுகிறார். பக்கத்தில் போன வீரப்பனைப் பார்த்து பரமசிவம் பயப் படவில்லை. “இடு, இன்னொரு ஈடு இட்டு என்னைக் கொன்னு போட்டுரு...” என்று சொல்கிறார். அந்த இடத்தில் வைத்தே மீண்டும் ஒரு ஈடு கொடுத்து பரமசிவனின் கதையை முடிக்கிறார் வீரப்பன். 

“பரமசிவம் உயிருக்குப் பயந்தவன் இல்லை. அவன் தலையிலும், தோள் பட்டையிலும் இரட்டைச் சுழி இருக்கும். அது போலவே இரட்டை குண்டியும், இரண்டு உயிரும் பெற்றவன். அதனால தான் வீரப்பன் கூட ரெண்டு முறை சுட்டுத் தான் அவனைக் கொல்ல முடிஞ்சுது....” என்கிறார் இந்தக் கொலை நடந்த நேரத்தில் அங்கிருந்த ஆண்டி கிருஷ்ணா. இந்த நிகழ்வு குறித்து என்னோடு பேசிய வீரப்பன், “யானையை அடிச்சா மூச்சு அடங்க கொறஞ்சது பத்து நிமிஷமாவது ஆகும். கடத்தியை அடிச்சாக் கூட அது ஓடற போக்கிலயே கொஞ்ச தூரம் போயித்தான் கீழே விழுந்து சாகும். ஒரு சமயத்தில நான் கிட்டத்தில் போய் பார்க்கும் போது, குண்டடிபட்டுக் கிடக்கும் கடத்தி, (கடமான்) யானை எல்லாம் கண்ணீர் விட்டு அழுதிருக்கு. சில யானையிலிருந்து நான் தந்தத்தை வெட்டிக்கிட்டு கிளம்பற வரைக்கும் சுடு இரத்தம் வந்துகிட்டே இருக்கும். எனக்கும் கூட சில நேரத்தில் இதையெல்லாம் பார்க்கவே பாவமா இருக்கும். ஆனா என்ன செய்யறது. ஒன்னு செத்தாத்தான் நாலு ஜீவன் வயிறு கழுவ முடியுமுன்னு எனக்கு வேண்டியதை எடுத்துக்குவேன். மீதியை மற்ற பறவை, பட்சிகளுக்கு இரையா விட்டுட்டு வந்திருவேன். 

நான் முதன் முதலா பரமசிவத்தை இட்டப்ப ஒரே நொடியில் பேச்சு மூச்சில்லாமே போயிட்டான். எம் பாட்டுக்கு இருந்த என்னைக் கொலைகாரன் ஆக்கீட்டயேன்னு வருத்தப் பட்டேன். அப்புறம் வேற என்ன பண்ணறது.  நானும், கருப்பணனும் சேர்ந்து சுத்தியிலும் காஞ்சு கெடந்த கட்டையும், செத்தையும் பொறுக்கிப் போட்டு, நெருப்பு வச்சுட்டு வந்துட்டோம்...” என்றார். பரமசிவம் கொலை செய்யப்பட்ட இரண்டாவது நாள் இந்தச் செய்தி ஊருக்குத் தெரிந்தது. நான்கு நாளுக்குப் பிறகு செங்கப்பாடிக்கு வந்த இராமாபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பரமசிவத்தை அவனுடைய அண்ணன் கருப்பணன் தான் சுட்டுக் கொன்றான் என்று தெரிகிறது. போலீசார் அப்படியே வழக்குப் பதிவு செய்தனர். கண்டியார் வீட்டு ராஜூ வாயைத் திறந்த பின்னரே, பரமசிவத்தை வீரப்பன் சுட்டுக் கொன்றார் என்பது மக்களுக்குத் தெரிந்தது. அப்போது வீரப்பன் குடும்பத்துக்குப் பெரிய அளவில் அரசியல் செல்வாக்கும்,  எந்த நேரமும் கையில் துப்பாக்கியுடன் இருந்ததால் அவர் மீது மக்களுக்கு அச்சமும் இருந்தது. இதன் பயனாகப் பரமசிவத்தை வீரப்பன் கொன்றது குறித்து யாரும் புகார் கொடுக்கவில்லை. 

பரமசிவத்தின் இரண்டாவது மனைவி மாதுவும், முதல் மனைவியின் மகன் மணிவண்ணனும் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப் பட்டனர். வீரப்பனுக்கு மனசாட்சி உறுத்தியது. இந்த நிகழ்வு நடந்த சில நாளுக்குப் பின்னர் பரமசிவத்தின் மனைவி மற்றும் அவரது மகனையும் தன்னுடைய வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு வருகிறார். தன்னுடைய அம்மாவிடம் விட்டு, “நீ உயிரோடு இருக்கும் வரைக்கும் இவங்களை நல்லபடியா பாத்துக்கம்மா...” என்கிறார். பரமசிவத்தின் மகன் மணிவண்ணன் 12 வயது வரை வீரப்பனின் வீட்டில் வளர்கிறார். இப்போது நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நகரச் செயலாளர் பொறுப்பில் இருக்கிறார். 



இந்த நூலை எழுதுவதற்காக அவரைச் சந்தித்தேன். “உங்கள் அப்பாவைச் சுட்டுக் கொன்ற வீரப்பன் மீது உங்களுக்குக் கோபமில்லையா...”? என்றேன். 

 “அந்தக் காலத்துல என்ன நடந்ததுன்னு யாருக்குமே சரியாத் தெரியிலைங்க. எங்க அப்பன், பெரியப்பன் எல்லோருமே குடிகாரனா இருந்திருக்காங்க. பொண்டாட்டி, புள்ளைங்க, குழந்தை, குட்டியைப் பத்தியெல்லாம் கவலைப் படாம காட்டையே சுத்திக்கிட்டே இருந்திட்டு, எங்க யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லாம ரெண்டு பேரும் செத்துப் போயிட்டாங்க. என்னை வளர்க்க முடியாம எங்க சின்னம்மா தற்கொலை செஞ்சுக்க முயற்சி பண்ணியிருக்காங்க. அப்போ வீரப்பன் மாமா எங்களைக் கூட்டிட்டு வந்து அவங்க வீட்டிலயே இருக்கச் சொன்னார். எனக்கு நினைவு தெரியற காலம் வரைக்கும் நான் வீரப்பன் மாமா வீட்டில தான் வளர்ந்தேன். வீரப்ப மாமனின் அம்மா (பொன்னுத்தாய்) தான் எனக்குச் சோறு போட்டு வளத்துனாங்க. என்னை அவங்க பெற்ற பிள்ளை மாதிரி தான் பாத்துக்கிட்டாங்க. நான் கொஞ்சம் பெரியவன் ஆனதும், சிகரல்பட்டியில் இருக்கும் எங்க சின்னம்மா வீட்டுக்குப் போயிட்டேன்...” என்று சொன்னவரின் கண்களில் தாரை தாரையாய் நீர் வழிந்தது. மணிவண்ணன் விட்ட கண்ணீர் தன்னைப் பெற்ற அப்பா பரமசிவத்துக்காகவா...? இல்லை, வளர்த்த வீரப்பனுக்காகவா...? என்று தெரியவில்லை. அப்போது இராமாபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளராக இருந்தவர் வெங்கிடுசாமி. ADSP யாக பதவி உயர்வு பெற்று ஓய்வு பெற்றவர். பரமசிவம் கொலை குறித்துப் பேசும் போது, “கொலை நடந்த அடுத்த நாள் கொளந்தைன்னு ஒருத்தன் ஸ்டேசனுக்கு வந்தான். கருப்பணனுக்கும், அவன் தம்பி பரமசிவனுக்கும் முன்பகை இருந்துச்சு. அந்த மோட்டிவில் பரமசிவத்தை எறக்கியம் காட்டில வச்சு கருப்பணன் சுட்டுக் கொன்னுட்டான்னு புகார் கொடுத்தான். (Ramapuram P.S Cr No-14/1978). அப்போ நான் வேலைக்கு வந்து ஒரு வருஷம் ஆகியிருக்கும். அதுக்கு முன்னே கொலை வழக்குப் பதிவு செய்த அனுபவம் இல்லை. அதனால, மர்டர் கேஸ் எப்படி எப்.ஐ.ஆர் போடறதுன்னு தெரிஞ்சுக்க கொள்ளேகால் போனேன். அங்கிருந்த இன்ஸ்பெக்டர் லக்கையாவை பார்த்தேன். பரமசிவம் கொலையானது பற்றிச் சொன்னேன். எப்படி வழக்குப் பதிவு செய்ய வேண்டும், என்னென்ன மெட்டிரியல் எடுக்க வேண்டும். எப்படி மகஜர் ரிப்போர்ட் போட வேண்டும் என்ற விபரமெல்லாம் சொன்னார். “ஒன்பது பேரைக் கொன்னவன் மம்பட்டியான். அவனையே கொன்றவன் கருப்பணன். பெரிய ஆளா இருப்பான். நானே வயசானவன். நான் எங்கே வந்து கருப்பணனை புடிக்கப் போறேன். நீயே போய் ஏதாவது செஞ்சிட்டு வா...”ன்னு சொல்லிட்டார். அப்போ செங்கப்பாடிக்கு பஸ் இல்லை. அடுத்த நாள் பாலாற்றுக்குப் போனேன். அங்கிருந்து கருங்கல் குவாரிக்குப் போன ஒரு லாரியைப் பிடித்து செங்கப்பாடிக்குப் போனேன். ஊர் பெரியவங்க திம்மராய செட்டியார், நடராஜ முதலியாரை கூப்பிட்டுப் பேசினேன். எப்படியாவது பரமசிவம் பாடியைக் கண்டு பிடிக்கனுமுன்னு சொல்லிட்டு வந்துட்டேன். அடுத்த நாள் ஒரு டீமோட செங்கப்பாடிக்குப் போனோம். உள்ளூர் பெரியவங்க ஏற்பாட்டின் பேரில், கொஞ்சம் ஆளுங்களைக் கூட்டிட்டு கொலை நடந்த இடத்துக்குப் போனோம். பரமசிவம் கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து ஆயிரம் அடி தொலைவில் ஒரு பள்ளத்தில உடலை எரிச்சுட்டுப் போயிருந்தான். அதை வச்சுத்தான் எப்.ஐ.ஆர் போட்டு கேஸ் பைல் பண்ணினேன். நான் செங்கப்பாடிக்கு போயிட்டு வந்தது தெரிஞ்சதும் கருப்பணன் தமிழ்நாட்டுக்குப் போயிட்டான். உள்ளூர் ஆளுங்ககிட்டே பேசி, அவனை வந்து சரணடையச் சொன்னேன். அதுக்குப் பிறகு, வக்கீல் மல்லிகார்ஜுனையா மூலம் கருப்பணன் கோர்ட்டில் சரணடைந்து பின்னர் பெயிலில் போயிட்டான். ​ 


1990-வாக்கில் எஸ்.டி.எப் அமைக்கப்பட்ட பின்னர், நாங்க பழைய கேஸ்களை பற்றியெல்லாம் விசாரிச்சோம். அப்போத்தான் பரமசிவத்தைக் கொலை செய்ததும் வீரப்பனேன்னு தெரிஞ்சுது. ஆரம்ப காலத்தில் வீரப்பன் கொலை செஞ்சான்னா பாடியைக் கண்டு பிடிக்க முடியாம செஞ்சிருவான். அதைப் போலவே, பரமசிவம் கொலையிலும் உடலை அடையாளம் கண்டு பிடிக்க முடியாதபடி நெருப்பு போட்டு எரிச்சிட்டுப் போயிருந்தான். இதையெல்லாம் கணக்கில் எடுத்துத் தான் இந்தக் கொலையும் வீரப்பனே செய்துள்ளான் என்பதை உறுதிப் படுத்திக் கொண்டோம்.” என்கிறார். 

செங்கப்பாடியில் சாராயக்கடை நடத்திய பாலவாடி பண்ணாடி என்கிற பொன்னுசாமியிடம் பேசும் போது, “போலீஸ்காரங்க பொணத்தை பார்த்தே ஆகனுமுன்னு சொன்னதால நான் தான் உள்ளூர் ஆளுங்களை புடிச்சு அவங்களை எல்லாம் பாங்காட்டுக்குக் கூட்டிக்கிட்டுப் போனேன். எறக்கியம் பள்ளத்தில் கட்டையைப் போட்டு பரமசிவம் பொணத்தை எறிய விட்டுருந்தது. பரமசிவம்  காலின் ஒரு பகுதியும், அஞ்சு வெரலோட கையின் ஒரு பகுதி மட்டுந்தான் கெடச்சுது. அதைப் போலீசார் பக்கெட்டில் போட்டு எடுத்துக்கிட்டுப் போனாங்க...” என்றார். பண்ணாடி (எ) பொன்னுசாமி வீரப்பனின் நெருங்கிய நண்பரான டி.பி.பெருமாள்:- “முதலில் கருப்பணன் தான் பரமசிவனை சுடப் போயிருக்கான். ஆளைப் பார்த்ததும் கை நடுங்கிட்டுது. அப்பறமாத்தான் வீரப்பன் சுட்டிருக்கான். ஒரு மாசம் போன பிறகு, வீரப்பந்தான் செலவுக்கு மூவாயிரம் ரூபாய் குடுத்தான். “கருப்பணனை கூட்டிக்கிட்டு போயி கொள்ளேகால் கோர்ட்டில் சரண்டர் பண்ணிட்டு வந்திடு”ன்னு சொன்னான். நானும், கருப்பணனும் பெங்களூர் வழியா கொள்ளேகால் போனோம். வக்கீல் மல்லிகார்ஜுனையாகிட்டே 1,500 ரூபாய் குடுத்தேன். இன்ஸ்பெக்டர் லக்கையாகிட்டே 900 ரூபாய் குடுத்து கருப்பணனை சரண்டர் பண்ணிட்டு வந்தேன்” என்கிறார். 

இந்த வழக்கில் கொலையை நேரில் பார்த்த சாட்சிகள் இல்லை. கொலை செய்யப்பட்டவரின் உடலும் கிடைக்காததால், வழக்கு விரைவாக நடந்து முடிந்தது. கருப்பணன் விடுதலையாகிறார். பொது மக்களுக்குத் தொல்லையாக இருந்த பரமசிவம் கொலை செய்யப்பட்ட பின் வீரப்பனைச் சந்தித்த ஊர் மக்களெல்லாம் “நீ பரமசிவனைக் கொன்னது சரிதான்” என்ற போக்கிலேயே பேசியுள்ளனர். குறிப்பாகக் காட்டுக்கு விறகு பொறுக்கவும், ஆடு, மாடு  மேய்க்கச் செல்லும் பெண்கள் எல்லோருமே வீரப்பனைப் பார்த்ததும், கையெடுத்துக் கும்பிட்டுள்ளனர். வீரப்பனுக்கு இது ஒரு வகையான போதையைக் கொடுத்துள்ளது. அதன் பின்னர், செங்கப் பாடியிலுள்ள மக்களுக்கு பிரச்சனை என்று வந்தால், அதற்காகக் கொலை செய்யவும் வீரப்பன் தயங்க மாட்டார் என்ற பெயர் ஏற்பட்டது. இந்த பெயரைத் தக்க வைத்துக் கொள்ளவே வீரப்பன் மீண்டும் மீண்டும் கொலை செய்வதைத் தொடர்ந்துள்ளார். அப்படி நடந்த இரண்டாவது கொலையைப் பற்றிச் சற்றுப் பார்ப்போம். 

பெ. சிவசுப்பிரமணியம்.


No comments:

Post a Comment