SONG COMPOSING IN LIVE IN MADRAS -AVARKAL
கவியரசர் கண்ணதாசன் பற்றி அவருடைய மகன் அண்ணாதுரை கண்ணதாசன் அவர்கள்
இப்படி கூறுகிறார்...
************************************************
ஒரு திரைப்படப் பாடல் எப்படி உருவாகிறது என்பதை, ரசிகர்கள் முன்னிலையில் அரங்கேற்றிய நிகழ்வு ஒன்று உண்டு. 1970 - 80-ம் ஆண்டுகளில் ‘பிலிமாலயா’ என்று ஒரு சினிமா இதழ் வந்து கொண்டிருந்தது.
ராமச்சந்திரன் என்பவர் பதிப்பாளர். பஞ்சு அருணாசலம் அதன் ஆசிரியர். பஞ்சுவின் தம்பி லட்சு மணன் என்பவர் நிருபராகவும், துணை ஆசிரியராகவும் பணியாற்றினார். செய்திகள் சேகரிப்பதில் எனக்கு ஆர்வம் அதிகம். அதனால் லட்சுமணனுடனோ அல்லது புகைப்பட கலைஞர் அர்ஜுன் ராவ் என்பவருடனோ நானும் செய்திகள் சேகரிக்க சுற்றிக்கொண்டு இருப்பேன்.
தமிழ் திரைப்பட கலைஞர்களுக்கு ஒரு பிரமாண்டமான பரிசளிப்பு விழாவிற்கு, பிலிமாலயா ஏற்பாடு செய்து இருந்தது. அந்த காலத்தில் தமிழ் படங்களுக்கு அது போன்ற பிரமாண்டமான விழாக்கள் என்பது கிடையாது. பிலிம்பேர் என்ற பத்திரிகை மட்டும்தான் செய்து கொண்டிருந்தது. அதுவும் இந்திப் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் விழா. எனவே பிலிமாலயாவின் விழாவிற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதனாலேயே புதிது புதிதான நிகழ்ச்சிகளை உருவாக்கினார்கள்.
எம்.எஸ்.விஸ்வநாதன், கே.வி.மகாதேவன், சங்கர் கணேஷ், வி.குமார் ஆகியோரின் இசை நிகழ்ச்சி. இவர்கள் அனைவரும் ஒரே மேடையில் தோன்றி அடுத்தடுத்து இசை விருந்தளிப்பார்கள் என்பதே அன்று பெரிதாக பேசப்பட்டது. இத்துடன் நடிகர் நடிகைகளின் கலை நிகழ்ச்சிகள். இதுவும் அந்த நேரத்தில் மிகப் புதுமையான ஒன்று.
இந்த நிகழ்ச்சிகளுடன் இன்னொரு புதுமையான நிகழ்ச்சி இருந்தால் நன்றாக இருக்கும் என்று லட்சுமணன் யோசித்தார். அதற்காக இயக்குனர் கே.பாலசந்தர், எம்.எஸ்.விஸ்வநாதன், கண்ணதாசன், எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆகியோரிடம் பேசி ஒரு அற்புதமான நிகழ்ச்சியை உருவாக்கினார்.
அதாவது, அந்த விழா மேடையிலேயே இயக்குனர் பாலசந்தர், அவர் இயக்கும் புதிய படத்தில் (அவர்கள்) இடம்பெறவிருக்கும் ஒரு பாடலுக்கான சூழலைச் சொல்ல, அங்கேயே விஸ்வநாதன் மெட்டுப் போட, கண்ணதாசன் பாடல் எழுத, அந்த மேடையிலேயே எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடுவார் என்பதுதான் அது.
அப்பாவை விழாவுக்கு அழைத்து வரும் பொறுப்பு என்னிடம் தரப்பட்டது. எனக்கோ விழாவை தொடக்கத்தில் இருந்து பார்க்க வேண்டும் என்ற ஆசை. அப்பா நிச்சயமாக 6½ மணிக்கு கிளம்பமாட்டார் என்று தெரியும். வேறு வழியில்லாமல் 7 மணியளவில் அப்பாவை கூட்டிக்கொண்டு கிளம்பி விட்டேன்.
கார் போய்க்கொண்டு இருக்கிறது. அப்பா என்றைக்கும் காரின் பின் சீட்டில் உட்கார மாட்டார். வெளியூர் போகும் போது மட்டும் பின் சீட்டில் படுத்து உறங்குவார். அப்பா என்னை திரும்பிப் பார்த்து, “என்ன நிகழ்ச்சிக்கு என்னை கூட்டிகிட்டு போற?” என்று கேட்டார்.
“பிலிமாலயா விழாப்பா. அதுல பாலசந்தர் படத்துக்கு ஒரு பாட்டை மேடையில எழுதுறீங்க. விளம்பரத்துல எல்லாம் வந்திருக்குப்பா”
“ஓ.. அப்படியா?” என்றவர், அதன்பிறகு விழா அரங்கிற்கு வரும் வரையில் ஒன்றும் பேசவில்லை.
விழாவில் இசை நிகழ்ச்சி முடிந்து அடுத்த நிகழ்ச்சியை அறிவிக்கிறார்கள்.
“அடுத்தது ஒரு பாடல் எப்படி உருவாகிறது என்ற நிகழ்ச்சி, இயக்குனர் பாலசந்தர் பாட்டுக்கான சூழலை சொல்ல, விஸ்வநாதன் மெட்டுப் போட, கண்ணதாசன் பாடல் எழுதுவார்”.
கூட்டம் மொத்தமும் அமைதியானது. ஒரு பாடல் உருவாகும் விதத்தை தெரிந்து கொள்ளும் ஆர்வம் அவர்கள் முகத்தில் தெரிந்தது.
பாலசந்தர் சூழலைச் சொல்கிறார்.
“கவிஞர்.. இந்தப் படத்தோட கதாநாயகி அனு. அவ அவங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்கிற ஒருத்தரை காதலிக்கிறா. உண்மையான, ஆழமான காதல். ஆனா சந்தர்ப்ப சூழ்நிலையால வேற ஒருத்தரை கல்யாணம் செஞ்சுக்கிறா. அவன் ஒரு சாடிஸ்ட். ஒரு குழந்தை பிறந்த பிறகு அவனை பிரிந்து வேற ஊருக்கு வந்து தனியா வாழ்றா. இங்க ஒரு வெகுளியான இளைஞன் அவளை விரும்புறான்.
ஒரு கட்டத்துல அவளோட காதலனும், அவளோட முன்னாள் கணவனும் திரும்ப அவ வாழ்க்கைக்குள்ள வராங்க. ஒரு தடவை அவளுக்கு உடம்பு சரியில்லாம போயிடுது. இந்த மூணு பேரும் போட்டி போட்டுக்கிட்டு அவளுக்கு சேவை செய்றாங்க. இந்த இடத்தில ஒரு பாட்டு வருது. பின்னணிப் பாடல். இந்த மூணு பேரைப் பற்றிய அவளோட மனநிலையை இந்தப் பாட்டுல சொல்லணும்.
கூட்டம் அப்படியே ஊன்றி கவனித்துக் கொண்டு இருக்கிறது.
விஸ்வநாதன் மெட்டுப்போட ஆரம்பிக்கிறார்.
மூன்று நான்கு மெட்டுக்கள் போட்டபிறகு ஒன்றை இயக்குனர் தேர்வு செய்கிறார். ‘நல்ல தேர்வு’ என்று கூட்டம் கரவொலி மூலம் தெரிவிக்கிறது.
பாடல் எழுதும்போது அப்பா காலணி அணிய மாட்டார். சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டு, யோசித்து பல்லவியை சொல்லத் தொடங்குவார். இது வழக்கம்.
அன்று மேடையின் ஓரத்தில் காலணியை கழற்றி வைத்துவிட்டார். ஆனால் பொதுமேடை என்பதால் புகைப்பிடிக்க முடியவில்லை. அவர் சிகரெட் பிடித்து இருந்தால் யாரும் கேட்கப்போவது இல்லை. ஆனால் பொது மேடையில் அமர்ந்திருக்கும் போது எதிரே இருக்கும் மக்களுக்கு தருகின்ற மரியாதையாக நினைத்து அவர் சிகரெட் பிடிக்க மாட்டார். அன்று மேடையில் அவர் சிகரெட் பெட்டியை திறக்காமல் கையிலேயே வைத்து இருந்தார்.
விஸ்வநாதன் மெட்டை திரும்ப திரும்ப பாடுகிறார். அப்பா ஆள்காட்டி விரலையும், கட்டை விரலையும் இணைத்து சின் முத்திரை போல உயர்த்துகிறார். அப்படி அவர் கையை உயர்த்தினால் பல்லவியை சொல்லப் போகிறார் என்று அர்த்தம். விஸ்வநாதன் பாடுவதை நிறுத்துகிறார். அப்பா சொல்ல ஆரம்பிக்கிறார்.
‘அங்கும் இங்கும் பாதை
உண்டு
இன்று நீ எந்தப் பக்கம்
ஞாயிருண்டு திங்கள்
உண்டு
எந்த நாள் உந்தன் நாளோ’
அந்த வரிகளை மெட்டுடன் விஸ்வநாதன் பாட, கூட்டம் ஆர்ப்பரித்து கையை தட்டு கிறது.
பாலசந்தருக்கு பல்லவி ஓகே. “சூப்பர் கவிஞர்” என்கிறார்.
அடுத்து சரணத்திற்கான மெட்டை விஸ்வநாதன் வாசிக்கிறார். பாலசந்தர் சூப்பர் என்றதும், கூட்டம் கரவொலி எழுப்பியதும் அப்பாவுக்கு உற்சாகத்தை தந்திருக்க வேண்டும். கடகடவென்று சரணத்தை சொல்லத் தொடங்குகிறார்..
‘கல்லைக் கண்டாள் கனியைக் கண்டாள்
கல்லும் இன்று மெல்ல மெல்ல
கனியும் மென்மைக் கண்டாள்
கதை எழுதி பழகி விட்டாள்
முடிக்க மட்டும் தெரியவில்லை’
உடனே பாலசந்தர் ‘ஆஹா, இது அவளோட சாடிஸ்ட் கணவனைப் பத்தி சொல்றது, ரொம்ப அருமையா இருக்கு. அவளோட காதலனை பத்தி அடுத்து சொல்லணும்’.
“முன்னாள் காதலன்னு சொன்னாலும், அவங்களோட அந்தக் கால காதலை சொன்னாலும் நல்லா இருக்காது. வேற மாதிரி சொல்லலாமா பாலு?”
“சொல்லுங்க”
பாலசந்தரை விட கூட்டத்தினரின் ஆர்வம் அதிகமாக இருக் கிறது. ஆங்கிலத்தில் ‘பின் டிராப் சைலன்ஸ்’ என்று சொல்வார்களே, அப்படி ஒரு அமைதி. அப்பா சொல்ல ஆரம்பிக்கிறார்.
‘கண்ணா என்றாள் முருகன் வந்தான்
முருகா என்றாள் கண்ணன் வந்தான்
எந்தத் தெய்வம் சொந்தம் என்று
பூவை பூஜை செய்வாள்
அவள் எழுதும் கவிதைகளை
விதி புகுந்தே திருத்துதம்மா’
“என் கதையை அப்படியே ரெண்டு வரியில சொல்லிட்டீங்க கவிஞர்”
‘அவள் எழுதும் கவிதைகளை
விதி புகுந்தே திருத்துதம்மா...’
“இந்த வரிகளைத்தான் நான் பாட்டு புத்தகத்தில கதை சுருக்கத்தில போடப்போறேன். சூப்பர் கவிஞர். சரி இந்த வெகுளி கதாபாத்திரத்தை பத்தி சரணத்தில ஒண்ணும் சொல்லலியே”.
“அப்ப ரெண்டு சரணத்தோட முடிச்சுக்காம, மூணாவது சரணம் போட்டுக்கலாமா?”
“போட்டுக்கலாமே”
அப்பா சொல்ல ஆரம்பிக்கிறார்
‘சொந்தம் ஒன்று பந்தம் ஒன்று
வெள்ளை உள்ளப்பிள்ளை ஒன்று
நடுவில் ஊஞ்சல் ஒன்று
தொடர்கதையோ பழங்கதையோ
விடுகதையோ எது இன்று’
பாலசந்தர் முகத்தில் அப்படி ஒரு சிரிப்பு. பாடல் நன்றாக வந்ததில் விஸ்வநாதன் அண்ணனுக்கு நிம்மதி.
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடப்போவதை எதிர்பார்த்து கூட்டம் காத்திருக்கிறது.
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாட ஆரம்பிக்கிறார். கூட்டம் மொத்தமும் அவருடன் சேர்ந்து பாடுகிறது. அவர்களுக்குத் தான் பாடல் வரிகள் தெரியுமே.
அந்த மாலைப் பொழுதை இன்று நினைத்தாலும் எனக்கு சிலிர்ப்பு உண்டாகும்.
வாழ்க்கையில் சில தருணங்கள் மீண்டும் வராதா என்று நம்மை ஏங்க வைக்கும். இந்தப் பாடலை கேட்கும்போதெல்லாம் எனக்கு அப்படித்தான் தோன்றும்.
நன்றி : தினத்தந்தி.
1977 ஆண்டு வெளிவந்த 'அவர்கள்'
திரைப்படத்தில் இடம்பெற்றது
இந்த பாடல்....
https://youtu.be/d5jh-5Tka7o
No comments:
Post a Comment