Tuesday 23 March 2021

RAJESWARI, SHUNMUGAM , CEYLON RADIO ANNOUNCER BORN 1940 MARCH 16 - 2012 MARCH 23

 


RAJESWARI SHUNMUGAM ,

CEYLON RADIO ANNOUNCER BORN

 1940 MARCH 16 - 2012 MARCH 23





இராஜேஸ்வரி சண்முகம் (மார்ச்சு 16, 1940 - மார்ச் 23, 2012) இலங்கை வானொலி புகழ் வானொலி அறிவிப்பாளரும், நாடகக் கலைஞரும் ஆவார். 1950 களில் இலங்கை வானொலியில் சானா சண்முகநாதன் நாடகத் தயாரிப்பாளராக இருந்தபொழுது வானொலி நாடகங்களில் நடிப்பதற்காக இவர் வானொலித்துறைக்கு வந்து தொடர்ந்து நீண்ட காலமாக நடித்தவர். ஆரம்பத்தில் தற்காலிக அறிவிப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர் தமிழ் வர்த்தக சேவையில் நிரந்தர அறிவிப்பாளராக நியமிக்கப்பட்டார்.


வாழ்க்கைச் சுருக்கம்

அம்மா அண்ணாமலையம்மாள், அப்பா பிச்சாண்டிபிள்ளை ஆகியோரின் மூத்த மகள். இரண்டு சகோதரர்கள் இரண்டு சகோதரிகள். கொழும்பில் விவேகானந்த மேட்டில் பிறந்தவர். ஸ்ரீகதிரேசன் வீதி, புனித மரியாள் பாடசாலையிலும், பின்னர் கொட்டாஞ்சேனை நெல் வீதி அரசினர் மத்திய மகா வித்தியாலயத்திலும் கல்வி கற்றார்.


இவரது கணவரான சி. சண்முகமும் இலங்கை வானொலியின் அறிவிப்பாளராக இருந்ததோடு வர்த்தக சேவையில் ஒலிபரப்பான ஏராளமான தனி நாடகங்கள், தொடர் நாடகங்கள் என்பனவற்றையும், மேடை நாடகங்களையும் எழுதியவர். இவர்களது மகன் சந்திரமோகன் ஒரு மெல்லிசைப் பாடகர். இளம் வயதிலேயே இறந்து விட்டார். சந்திரகாந்தன் இலங்கை வானொலியில் அறிவிப்பாளராக உள்ளார். மகள் வசந்தி சண்முகம் வானொலி, மேடை நாடகங்களில் நடித்தவர். தற்போது திருச்சியில் வாழ்ந்து வருகிறார்.


நாடகத் துறையில்



நாடகத் துறை மூலம் கலைத்துறைக்கு அறிமுகமானவர் இராஜேசுவரி. 1952 ஆம் ஆண்டில் கொழும்பு பம்பலப்பிட்டி புனித பீட்டர்சு கல்லூரியிலும், கொட்டாஞ்சேனை விவேகானந்தா மகா வித்தியாலயத்திலும் நடைபெற்ற அகில இலங்கை மாவட்டப் பாடசாலைகள் நாடகப்போட்டியில் கண்ணகி பாத்திரத்தில் நடித்துப் பாராட்டுப் பெற்றார். "கண்ணகி" நாடகத்தைப் பார்த்த வானொலி நாடகத் தயாரிப்பாளர் சானா (சண்முகநாதன்) இவரை வானொலி நாடகங்களில் நடிக்க அழைத்தார்[1].


வானொலிக் கலைஞராக

சானா சண்முகநாதன் காலத்திலிருந்து பி. விக்னேஸ்வரன் காலம் வரை வானொலி நாடகங்களில் நடித்தவர். 1952, டிசம்பர் 26 இல் வானொலிக் கலைஞராக அறிமுகமானார். இவர் நடித்த முதல் வானொலி நாடகம் என். எஸ். எம். இராமையாவின் "விடிவெள்ளி" என்பதாகும். சில்லையூர் செல்வராசனின் "சிலம்பின் ஒலி" தொடர் நாடகத்தில் பாண்டிமாதேவியாக நடித்தார். 1952 முதல் 1969 வரை வானொலியில் நாடகம், மாதர் நிகழ்ச்சி, மற்றும் உரைச்சித்திரங்களில் நடித்து வந்தார். அசட்டு லட்சுமியாக இவர் நடித்த சி. சண்முகம் எழுதிய "நெஞ்சில் நிறைந்தவள்" நகைச்சுவை நாடகம் பூவும் பொட்டும் மங்கையர் மஞ்சரியில் 52 வாரங்கள் ஒலிபரப்பாயின.


வானொலி அறிவிப்பாளராக

1969 இல் இலங்கை வானொலி வர்த்தக சேவையில் ஆரம்பத்தில் பகுதிநேர அறிவிப்பாளராக அறிமுகமானார். 1971இல் மாதர், மற்றும் சிறுவர் நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கினார். 1994இல் மீ.உயர் அறிவிப்பாளராக உயர்ந்தார். இறக்கும் வரை இவர் அறிவிப்பாளராகப் பணியாற்றினார். வானொலியில் இசைச்சித்திரம், முத்துவிதானம், பூவும்பொட்டும், மங்கையர் மஞ்சரி, சிறுவர் நிகழ்ச்சிகள், பொதிகைத் தென்றல், வீட்டுக்கு வீடு, இசையும் கதையும், வானொலி மலர், ஒலிமஞ்சரி, கவிதைசெண்டு என பல சுவையான நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கினார். இலங்கை வானொலியில் பொங்கும் பூம்புனல், கொழும்பு சர்வதேச ஒலிபரப்பின் பொதிகைத் தென்றல் நிகழ்ச்சிகளில் ஈரடிக் கவிதை கொண்டு திரைப்படப் பாடல்களைத் தொகுத்து வழங்கி வந்தது இராஜேவரி சண்முகத்தின் தனிப்பாணியாகும்[1].



இராஜேசுவரி சண்முகத்தின் நேர்காணல்கள் இலங்கைப் பத்திரிகைகளில் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் தினமலர், தினகரன், ராணி, மங்கை, தேவி ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன.


செய்தி வாசிப்பாளர்

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் மூத்த செய்தி வாசிப்பாளராக ராஜேஸ்வரி பணியாற்றியுள்ளார். தமிழ் மொழி உச்சரிப்பில் தனக்கென தனிச் சிறப்பை கொண்டிருந்த ராஜேஸ்வரி ஏனைய களிப்பூட்டும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதிலும் வல்லவர். தனது இறுதி காலம் வரை செய்தி வாசிப்பாளராக இவர் சேவையாற்றினார்.


திரைப்படத் துறையில்

இலங்கை இயக்குனர் லெனின் மொராயஸ் இயக்கிய "நெஞ்சுக்குத் தெரியும்" தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகனின் தாயாக நடித்தார் இராஜேசுவரி சண்முகம்[1]. இலங்கையில் தயாரிக்கப்பட்ட நான் உங்கள் தோழன் திரைப்படத்தில் ருக்மணி தேவிக்கும், குத்துவிளக்கு திரைப்படத்தில் சாந்திலேகாவுக்கும் பின்னணிக் குரல் வழ்ங்கினார்.


மேடை நாடகங்கள்

சானாவின் நெறியாள்கையில் "அசட்டு வேலைக்காரன்"

முருகையனின் ":விடியலை நோக்கி"

சுஹேர் ஹமீட்டின் நெறியாள்கையில் "தேரோட்டி மகன்"

சி. சண்முகத்தின் "ஸ்புட்னிக் சுருட்டு"

விருதுகளும் பட்டங்களும்

1994 இல் சிறந்த அறிவிப்பாளருக்கான அரசுத்தலைவர் விருது.

1995 இல் டாக்டர் புரட்சித்தலைவி விருது.

காலாசார அமைச்சின் மூலம் முன்னாள் அமைச்சர் செ. இராசதுரை மொழிவளர்ச்செல்வி பட்டமளித்துக் கௌரவித்தார்.

சுவாமி விபுலாநந்தரின் நூற்றாண்டுப் பெருவிழாவினை முன்னிட்டு முன்னாள் அரசுத்தலைவர் ஜே. ஆர். ஜயவர்தனா வாகீசகலாபமணி பட்டமளித்துக் கௌரவித்தார்.

அமைச்சர் லக்சுமன் கதிர்காமர் 'தொடர்பியல் வித்தகர்' என்ற பட்டமளித்துக் கௌரவித்தார்.

எட்டயபுரம் தென்பொதிகைத் தமிழ்சங்கம், 1995 சனவரி 29 இல் 'வானொலிக்குயில்' பட்டம் வழங்கி கௌரவித்தது.

சாய்நதமருது கலைக்குரல் 'வான்மகள்' விருது வழங்கி கௌரவித்தது.

சிந்தனை வட்டம் 'மதுரக்குரல்' பட்டம் வழங்கி கௌரவித்தது.

மறைவு

இராஜேஸ்வரி சண்முகம் யாழ்ப்பாணம் சென்று கொழும்பு திரும்புவதற்காக புறப்பட்ட வேளையில், மாரடைப்பு ஏற்பட்டு யாழ்ப்பாண மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 2012, மார்ச்சு 23 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்[2].

No comments:

Post a Comment