BIOGRAPHY OF MUSIC DIRECTOR VEDHA
தமிழ்த்_திரை_இசையின்_பிதா_மகன்களில் ஒருவர் - வேதா
முழுப் பெயர் வேதாசலம். வேதாவின் பெற்றோர்கள் தென் ஆப்பிரிக்காவில் இருந்தார்கள். இந்தியாவிலேயே தன் மாமாவின் வீட்டில் தங்கிப் படித்து வந்தார் வேதா. சிறுவயதிலேயே இசையின் மீது ஈடுபாடு உண்டாயிற்று. வேதாவின் மாமாவிற்கு இசையில் மிகுந்த ஆர்வம் இருந்தது. அவர் வேதாவிற்கு கர்நாடக சங்கீதம் சொல்லிக் கொடுத்தார்.
ஒரு நாள் ப்ரொபஸர் காப்ரியல் அவர்களின் இசை நிகழ்ச்சியைக் காண நேர்ந்தது. அவரது இசையினால் பெரிதும் கவரப்பட்ட வேதா, தானும் ஒரு இசையமைப்பாளராக வேண்டும் என்று உறுதி பூண்டார். தன்னை காப்ரியலிடம் அறிமுகப் படுத்திக்கொண்டு அவரிடம் ஹிந்துதானி இசை பயில ஆரம்பித்தார். ஏற்கெனவே வேதாவிற்கு பங்கஜ் மல்லிக், சைகல் போன்றோரின் பாடல்களில் மிகுந்த ஈடுபாடு உண்டு
அந்நாளில் வெங்கடாசலம் என்பவரது வீட்டில் கலைஞர்கள் ஒன்று கூடி இசை நிகழ்ச்சிகள் நடத்துவது வ ழக்கம். இது போன்ற ஒரு நிகழ்ச்சியில் வெங்கடாச்சலத்தின் நண்பரான இசை அமைப்பாளர் சி பாண்டுரங்கனை வேதா சந்தித்தார். அவருடன் சில காலம் பணி புரிந்தார். போதிய அளவு வாய்ப்புகளும் வருமானமும் இல்லாமல் போகவே அவரிடமிருந்து விலகினார். நடிகை வைஜயந்திமாலா நடத்திவந்த நாடகக் குழுவில் சில காலம் ஹார்மோனியம் வாசித்து வந்தார்.
50களில் சில படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வந்தவர் நடிகர் ஸ்ரீராம். அவர் மூலம் சிங்களப் படத் தயாரிப்பாளர்களான ஜெயமனே சகோதரர்களின் அறிமுகம் வேதாவிற்கு கிடைத்தது. "மாறும் விதி என்ற சிங்களப் படத்திற்கு வேதா இசை அமைத்தார். அந்தப் படம் வேதாவின் வாழ்க்கையையே மாற்றிவிட்டது.
அந்தப் படம் மகத்தான வெற்றி கண்டது. பின்னர் ஜெயமனே சகோதரர்கள் தயாரித்த பத்து படங்களுக்கு வரிசையாக வேதான் இசை அமைப்பாளர். இதில் ஒரு படம் இலங்கையில் வெள்ளிவிழா கண்டது.
வேதாவிற்கு தமிழில் வந்த முதல் வாய்ப்பு, ஜூபிலி ஃபிலிம்ஸின் "மர்ம வீரன்". இதுவும் நடிகர் ஸ்ரீராமின் உதவியால் வந்த வாய்ப்பு ஆகும். இப்படத்தில் ஸ்ரீராமும் வைஜயந்திமாலாவும் இணைந்து நடித்திருந்தனர். இப்படத்தில் 10 பாடல்கள் இடம் பெற்றன. சந்திரபாபுவும் ஒரு பாடல் பாடியுள்ளார்.
அடுத்து எஸ் எஸ் ராஜேந்திரன், பண்டரிபாய், டி ஆர் ராமச்சந்திரன், பாலாஜி, எஸ் வி ரங்காராவ், தேவிகா ஆகியோர் நடித்த அன்பு எங்கே படத்திற்கு இசை அமைத்தார் வேதா. இதில் சிங்கள பைலா பாணியில் இவர் இசையமைத்த "டிங்கிரி டிங்காலே மீனாக்ஷி டிங்கிரி டிங்காலே என்ற பாடல் மிகவும் புகழ் பெற்றது. இதே படத்தில் கவ்வாலி பாணியில் "நயா தௌர்" என்ற படத்தில் இடம் பெற்ற பிரபல ஹிந்திப் பாடலான "ரேஷ்மி சல்வார் குர்தா ஜாலி கா" என்ற பாடலின் மெட்டில் "அமிர்த யோகம் வெள்ளிக்கிழமை கண்ணாளா" என்ற பாடலும் பெருத்த வரவேற்பை பெற்றது.
அடுத்து நடிகர் ஸ்ரீராம் ஜெமினி சாவித்திரி இவர்களை வைத்து தயாரித்த "மணமாலை" படத்திற்கு இசையமைத்தார் வேதா. இப்படத்தின் P B ஸ்ரீனிவாஸ் குரலில் "நெஞ்சம் அலைமோதவே, கண்ணும் குளமாகவே கொஞ்சும் கண்ணைப் பிரிந்தே போகிறாள், ராதை கண்ணனைப் பிரிந்தே போகிறாள்போகிறாள்" என்ற பாடல் மிகவும் பிரபலம். 1963ல் வேதாவிற்கு மாடர்ன் தியேட்டர்ஸின் அறிமுகம் கிடைத்தது. மனோரமா கதாநாயகியாக நடித்த கொஞ்சும் குமரி என்ற படத்திற்கு இசையமைத்தார். ஏசுதாஸ் முதல் முதலில் பாடிய படம் இதுதான், "ஆசை வந்த பின்னே, அருகில் வந்த கண்ணே" என்ற பாடலை பாடினர் (எஸ் பாலசந்தர் இசையில் பொம்மை படத்தில் இவர் பாடிய நீயும் பொம்மை 1964 ஆம் வெளி வந்தது)
அடுத்து இவர் இசை அமைத்த படம் "பாசமும் நேசமும்" என்ற ஜெமினிகணேசன், சரோஜா தேவி நடித்த படம், ஹிந்திப் படம் அனாரியின் தழுவல் இது.
அடுத்து வீராங்கனை, சித்ராங்கி படங்களுக்கு இசையமைத்தார். வீராங்கனையில் ஜேசுதாசிற்கு மூன்று பாடல்கள்.இதில் "நீலவண்ணக் கண்களிரண்டில்" என்ற பாடல் இன்றும் பிரபலம். சித்ராங்கி படத்தில் "நெஞ்சினிலே நினைவு முகம்" "இன்று வந்த சொந்தமா" போன்ற பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.
பாடல்கள் பிரபலமானாலும் படங்கள் வெற்றியடைந்தால்தான் அடுத்தடுத்து வாய்ப்புகள் குவியும். சில படங்கள் வெற்றி பெறாததால் இவர் மாடர்ன் தியேட்டர்சுக்கு ஹிந்திப் படங்களின் ரீமேக்குக்கு போய்விட்டார். இவர் ஹிநதிப் பாடல்களைத் தழுவி மெட்டமைத்தாலும் பாடல்வரிகள் ஏனோ தானோ என்று இல்லாமல் பார்த்துக் கொண்டார். இவரது பாடல்கள் அனைத்தும் புகழ்பெற்ற பாடல் ஆசிரியர்கள் எழுதியதாகவே இருந்தது,உதாரணம் கண்ணதாசன். (நூறு முறை பிறந்தாலும்).
இந்த ஹிந்திப் பாடல் வரிசைப் படங்கள் வருமுன் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த ஒரு படம் அம்மா எங்கே (1964) அதில் "பாப்பா பாப்பா கதை கேளு" என்று காக்கா நரியின் கதையை அழகான ஆங்கில மெட்டில் நமக்கு அளித்திருந்தார் வேதா
அடுத்து சரசா பி ஏ என்றொரு படம். P B ஸ்ரீனிவாசின் குரலில் "இரவின் மடியில் உலகம் உறங்கும்" என்று நிமதியின்மையை மௌனமாகப் பொழியும் பாடல். பானுமதி பாடும் "மனதில் மனதை வைத்த பின்னாலே" என்ற பாடல் எடுத்த எடுப்பிலேயே மனத்தைக் கவர்ந்து விடுகிறது.
வல்லவன் வரிசை: ஹிந்தியில் வந்த உஸ்தாத் படங்கள் மாடர்ன் தியேட்டர்ஸில் வல்லவன் வரிசை என்றானது.
"நூறு முறை பிறந்தாலும் நூறு முறை இறந்தாலும்
உனைப் பிரிந்து ஒரு நாளும் போவதில்லை"
"சௌ பார் ஜனம் லேங்கே, சௌ பார் ஃபனா ஹோங்கே" என்ற வரிகளை தமிழில் கவியரசர் இவ்வாறு எழுதினார். இந்தப் பாடல் பெரிய வெற்றியைப் பெற்றது, இந்தப் பாடல் மட்டுமல்ல, இப்படத்தின் பாடல்கள் அனைத்துமே பெரு வெற்றியைப் பெற்றன. "மனம் என்னும் மேடை மேலே" "பாரடி கண்ணே கொஞ்சம்" என்ற கவ்வாலி வகைப் பாடல், "கண்டாலும் கண்டேனே உன் போலே" "நெஞ்சுக்கு நிம்மதி"ஆகிய பாடல்கள்.
அடுத்து வல்லவன் ஒருவன். "பளிங்கினால் ஒரு மாளிகை" "தொட்டு தொட்டுப் பாடவா" "காவிரிக் கரையின் தோட்டத்திலே" ஆகிய பாடல்கள் பெரும் வெற்றி. - வேதா கவியரசர் கூட்டணி நன்முத்துகளை அளித்தது.
அடுத்து நானே வருவேன் - இதைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஹிந்தியில் "ரிம் ஜிம் ரிம் ஜிம்" என்று வந்ததை கவியரசர், சிறிதும் யோசிக்காமல், இங்கும் அங்கும் என்று அதைப் போன்றே ஒலிக்குமாறு எழுதினார். ஒரு திகில் பாடலான இது பெரும் வெற்றி ,பெற்றது. இப்படத்தின் மற்ற பாடல்களும் பிரபலம். "உன் வேதனையில் என் கண்ணிரண்டும் உன்னோடு மயங்குவதேன் கண்ணா" இசையும், பாடல் .வரிகளும் மிகவும் அற்புதம்.
அடுத்து எதிரிகள், ஜாக்கிரதை - நேருக்கு நேர் நின்று பாருங்கள் போதும்
காதலித்தால் போதுமா - கொஞ்சம் நில்லடி என் கண்ணே
சி ஐ டி சங்கர் - நாணத்தாலே கண்கள் மின்ன மின்ன
ஜஸ்டிஸ் விஸ்வநாதன் - இது நீரோடு செல்கின்ற ஓடம், சிலை, செய்ய கைகள் உண்டு, கண்வழியே கண்வழியே போனது கிளியே
என்று வெற்றிப் பாடல்கள் தந்தார்.
நேரமும் தக்க சுதந்திரமும் இருந்தால் அட்டகாசமான துள்ளல் பாடல்களை தன்னாலும் அளிக்க முடியும் என்று இவர் நிரூபித்த படம் அதே கண்கள். இந்தப் படத்தில் "பூம் பூம் மாட்டுக்காரன் தெருவில் வராண்டி" "லவ், லவ் எத்தனை அழகு இருபது வயதினிலே" என்று கலக்கல் பாடல்கள் தந்தார். இது ஒரு மர்மங்கள் நிறைந்த திகில் படம். அதற்கேற்ப "வா அருகில் வா, தா உயிரைத் தா" என்றொரு பாடலும் வடித்தார்.
உலகம் இவ்வளவுதான் என்றொரு படம்,நாகேஷ் கதாநாயகன். "இவ்வளவுதான் உலகம் இவ்வளவுதான்" "ஊத்திக் கொடுத்தாண்டி ஒரு ரவுண்டு" என்ற பாடல்களை அளித்தார். சினிமாவை கேலி செய்யும் விதமாக எடுக்கப்பட்ட "நான்கு கில்லாடிகள்" படத்தில், செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம்" என்றொரு மெலடி, நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சன்னதி என்றொரு அமைதிப் பாடல் ஆகியவற்றை வழங்கினார்.
காப்பி அடிப்பதற்கென்றே ஒரு இசையமைப்பாளர் என்ற பெயர் வேதாவிற்கு ஏற்ப்பட்டது துர்பாக்கியமே. ஆனால் அதையும் ஒரு கடமையாக செய்து வந்தார். இவரது திறமைக்கு பார்த்திபன் கனவு ஒன்றே போதும். ஹிந்திப் படங்களின் பாடல்களை தமிழில் வெற்றிகரமாக உலவ விடுவதில் தான் வல்லவனுக்கு வல்லவன் என்று காட்டினார். "ஓராயிரம் பார்வையிலே" "நாணத்தாலே கண்கள் மின்ன மின்ன" பாடல்கள் இரவல் மெட்டுக்கள் போன்றா தோன்றுகின்றன
இவர் இசையமைத்த கடைசிப் படம் "ஜஸ்டிஸ் விஸ்வநாத்" 1971.
மிக இளவயதிலேயே மரணமடைந்தார். ஆனாலும் அவர் விட்டுச்சென்ற பாடல்கள் இன்றளவும் நம் மனதை மகிழ்வித்துக் கொண்டிருக்கின்றன
எஸ்.எஸ்.வேதா [இசையமைப்பாளர்]
இவரது இயற்பெயர் எஸ்.எஸ்.வேதாச்சலம். இலங்கையைச் சேர்ந்தவர். இவருக்கு ‘திகில் மன்னன்’ என்ற பட்டமும் ரசிகர்களால் வழங்கப்பட்டிருந்தது. 1950- ஆரம்ப காலங்களில் சிங்களத் திரைப்படங்களுக்கு இசையமைத்தவர். இவரது இசையமைப்பில் முதன்முதலாக வெளிவந்த தமிழ்ப் படம் நடிகர் ஸ்ரீராம் தயாரித்த ‘மர்ம வீரன்’. இப்படம் 1956-இல் வெளிவந்தது. ஸ்ரீராமும் வைஜயந்திமாலாவும் இணைந்து நடித்திருந்தனர்.
’மர்ம வீரனில்’ 10 பாடல்கள். வழக்கமாக தாலாட்டுப் பாடல்களைப் பாடிவந்த பாலசரஸ்வதி தேவியை சிருங்கார ரசம் ததும்பும் ஒரு பாடலைப் பாட வைத்தார் வேதா. அந்தப் பாடல் தான் ‘துடிக்கும் வாலிபமே நொடிக்குள் போய்விடுமே’. இந்தப் பாடலை மிக அற்புதமாக பாடினார் பாலசரஸ்வதி தேவி. 1958-ஆம் ஆண்டு இரண்டு படங்கள். 1-’மணமாலை’ , ‘அன்பு எங்கே’. ‘மணமாலை’ படத்தில் இணைந்து நடித்தவர்கள் ஜெமினி கணேசன், சாவித்திரி. இவர்களுக்குப் பின்னணி பாடியவர்கள் ரி.எம்.சௌந்தரராஜன், பி.சுசீலா. அன்று இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பான ‘நடக்காது ஜம்பம் பலிக்காது, என்னைத் தொடவே உன்னாலே முடியாது’ என்ற பாடல். ராகங்களை மெல்லிசையாக வழங்குவதில் விற்பன்னராக விளங்கியவர் வேதா.
‘அன்பு எங்கே’ படத்திற்காக ’பைலா’ பாணியில் ஒரு பாடலை உருவாக்கினார் வேதா. சிங்களப் படங்களுக்கு இசையமைத்து வாழ்க்கையை ஆரம்பித்த வேதா இலங்கையின் பைலா பாணியில் அனைவரையுமே எழுந்து ஆடவைக்கும் விதத்தில் இசையமைத்ததில் ஆச்சரியமில்லை. சிரிக்க வைத்த பாட்டு ஆனால் அனைவரையும் சிந்திக்க வைத்தது. ரி.எம்.சௌந்தரராஜனின் இனிய குரலில் உருவான அந்தப் பாடல்தான் ‘டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே உலகம் போற போக்கைப் பாரு தங்கம தில்லாலே’.
1959-இல் ‘மின்னல் வீரன்’, 1960-இல் ‘பார்த்திபன் கனவு’, கல்கி அவர்கள் 1941-இல் எழுதிய காவியத்திற்கு மேலும் உயிர் கொடுத்தன வேதாவின் இசைக் கோலங்கள். அத்தனைப் பாடல்களுமே பெரும் வரவேற்பைப் பெற்ற பாடல்களாகும். அதிலொன்று ’இதய வானின் உதய நிலவே எங்கே போகிறாய்’. 1963-இல் ‘கொஞ்சும் குமரி’ , ‘பெண் மனம்’, 1964-இல் ‘பாசமும் நேசமும்’, ‘சித்திராங்கி’, ‘வீராங்கனை’, ’அம்மா எங்கே’ ஆகிய நான்குப் படங்களுக்கு இசையமைத்தார் வேதா. ‘ஆசை வந்த பின்னே அருகில் வந்த பெண்ணே’ என்ற பாடல் கே.ஜே.யேசுதாஸ், பி.வசந்தாவுடன் இணைந்து பாடிய பாடல். ‘வீராங்கனை’யில் கே.ஜே.யேசுதாஸ்க்கு 3 பாடல்கள் கொடுத்தார். அவற்றில் ஒரு தத்துவப் பாடல். அந்தப் பாடல் ‘இடி இடிக்குது காற்றடிக்குது’. வசனகர்த்தா மா.ரா.வின் கவி வரிகளில் உருவான பாடல்.
1965-இல் ‘வல்லவனுக்கு வல்லவன்’, ‘சரஸா பி.ஏ.’ என்ற இரண்டு படங்களுக்கு இசையமைத்தார் வேதா. ‘வல்லவனுக்கு வல்லவன்’ படத்தில் ஒரு பாடல் இந்தியிலிருந்து எடுக்கப்பட்டாலும் கவியரசு கண்ணதாசனின் அற்புதமான வரிகள் இசையோடு கலந்தபோது தமிழ் மணம்தான் வீசியது. அனைவருக்கும் பிடித்தமான அந்தப் பாடல் ஏக்கத்தின் தாக்கத்தை நம் மனங்களில் பதிய வைத்தது. அந்தப் பாடல் ’ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன்’.
ADVERTISEMENT
REPORT THIS AD
1966-ஆம் ஆண்டு ’இரு வல்லவர்கள்’, ‘வல்லவன் ஒருவன்’, ‘யார் நீ’ என்ற 3 படங்கள். ‘வல்லவன் ஒருவன்’ படத்தில் எல்.ஆர்.ஈஸ்வரியின் பிரம்மாண்டமான குரலுக்குப் பொருத்தமான வகையில் ஒரு பாடல் அமைந்தது. அந்தப் பாடல்தான் ‘பளிங்கினால் ஒரு மாளிகை பருவத்தால் மணி மண்டபம் உயரத்தில் ஒரு கோபுரம் உன்னை அழைக்குது வா’ கவியரசரின் அற்புதமான படைப்பாற்றல், பிரபஞ்சத்தின் படைப்பாற்றலுக்குச் சவாலாக அமைந்தது. வேதாயின் இசையில் எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலும் இணைந்து கேட்பவர்கள் மனதைக் கோபுரத்தின் உச்சிக்கே கொண்டு போனது.
1967-இல் மூன்று படங்கள். ‘எதிரிகள் ஜாக்கிரதை’, ‘அதே கண்கள்’, ’காதலித்தால் போதுமா’ ஆகிய படங்கள் வேதாவின் இசையில் வெளியாகின. ‘எதிரிகள் ஜாக்கிரதை’ படத்தில் ரி.எம்.சௌந்தரராஜன், பி.சுசீலா பாடிய ‘நேருக்கு நேர் நின்று பாருங்கள் போதும்’ இந்தப் பாடல், ‘இரு வல்லவர்கள்’ படத்தில் ’நான் மலரோது தனியாக ஏனங்கு நின்றேன்’, ’அதே கண்களில்’ வா அருகில் வா தா உயிரைத் தா’ போன்ற பாடல்கள் வேதாவின் இசைத் திறமையை வெளிச்சம் போட்டுக் காட்டின.
1969-இல் ‘மனசாட்சி’, ’நான்கு கில்லாடிகள்’, ‘உலகம் இவ்வளவுதான்’,‘பொண்ணு மாப்பிள்ளே’ என்ற படங்களில் அத்தனை பாடல்களும் பெரும் வரவேற்பைப் பெற்றன. ‘மனசாட்சி’ படத்தில் ரி.எம்.சௌந்தரராஜன்,பி.சுசீலா பாடிய பெரும் ஹிட்டான பாடல் ‘ஏழு ஸ்வரங்கள் ஒரு ராகம்’ இதே படத்தில் ரி.எம்.சௌந்தரராஜன் நாகேஷ் அவர்களுக்காக பாடிய நகைச்சுவையுடன் கூடிய ஒரு தத்துவப் பாடல் ‘லவ் பண்ணுங்க சார் நான் வேணாங்கல்லே அது லைஃப் பிரச்சனை சார் அது விளையாட்டில்லே’ என்ற பாடல். இந்தப் பாடல் மிக பிரபலமடைந்த பாடல். ஆனால் இன்றோ இப்படம் இணையதளங்களில் காணப்பட்டாலும் ரசனை கெட்டவர்களால் அப்பாடல் கத்தரிக்கப்பட்டுவிட்டது. நாகேஷை முக்கிய கதாபாத்திரமாக்கி எடுக்கப்பட்ட படம் தான் ‘உலகம் இவ்வளவுதான்’. இப்படத்தில் ரி.எம்.சௌந்தரராஜன் நகைச்சுவை நடிகர் சோவுக்காக பாடிய பாடல்தான் ‘ஊத்திக் கொடுத்தாண்டி ஒரு ரவுண்டு, இந்த ஒலகம் சுழலுதடி பல ரவுண்டு’ என்ற பாடல். இது அந்த நாட்களில் ஒலிக்காத இடங்களே இல்லையெனலாம். இதே படத்தில் ரி.எம்.சௌந்தரராஜன் எல்.ஆர்.ஈஸ்வரியுடன் இணைந்து பாடிய மற்றுமொரு பாடல் இவ்வளவு தான் உலகம் இவ்வளவுதான், இவ்வளவுதான் உலகம் இவ்வளவுதான்’ அனைவரையும் கவர்ந்த ஒரு பாடலாக அமைந்தது. பி.எஸ்.வீரப்பாவின் ‘பொண்ணு மாப்பிள்ளே’ படத்தில் ஏ.எல்.ராகவன், சதன் இணைந்து பாடிய ‘மணமகன் அழகனே மணமகள் அழகியே’ என்ற பாடல் மிகப் பிரபலமான பாடல்.
1970-இல் ஒரு படம் ‘சி.ஐ.டி.சங்கர்’. 1971-இல் ஒரு படம் ‘ஜஸ்ரிஸ் விஸ்வநாதன்’. அதன்பின்னர் வாய்ப்புக்கள் அமையவில்லை. கர்நாடகம் இந்துஸ்தான், பொப்பிசை, மெல்லிசை என்று எந்த பாணியிலும் இசையமைக்கும் திறமை கொண்டவர் வேதா. சினிமா உலகம் கற்பனைக்கு முதலிடம் தரும் இடமல்ல. அங்கு விற்பனைக்குத் தான் முதலிடம். திரையிசையில் எவ்வளவு மாற்றங்கள் வந்தாலும், பழைய பாடல்கள் தரும் சுகம் புதியவைகளில் இல்லை.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் வர்த்தக சேவை வானொலியில் சிரேஷ்ட அறிவிப்பாளர் திருமதி. விசாலாக்ஷி ஹமீது அவர்கள் வழங்கிய ‘இன்னிசைச் சுவடிகள்’ நிகழ்ச்சியிலிருந்து விவரங்கள் திரட்டப்பட்டது.
(நன்றி: திரு வாமனன் அவர்கள்)
No comments:
Post a Comment