Tuesday 16 March 2021

THE LAST DAY OF MAHATMA GANDHI JANUARY 30,1948

 


THE LAST DAY OF MAHATMA GANDHI

 JANUARY 30,1948


#காந்தியின் #கடிகாரம்


எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவரது தளத்தில் எழுதிய கட்டுரை இது. காந்தியின் இறுதி தருணங்களை கண் முன்னாள் நிறுத்துகிறார் . காந்தி தன் நேரத்தையும் பிறரின் நேரத்தையும் மதித்தவர்.காந்தியின் இறுதி நாட்களை வாசிக்கும் பொழுது ஓர் பெறும் நாவலின் இறுதி பக்கத்தை புரட்டுவது போல் மனம் படபடக்கிறது, கனக்கிறது .காந்தியின் கடிகாரம் வழியாக காலவெளியில் ஓர் பயணம் போல் உள்ளது இக்கட்டுரை.

காந்தியைப் பற்றி வாசிப்பது எப்போதுமே மனநெருக்கத்தைத் தரக்கூடியது. சில வாரங்களுக்கு முன்பு காந்தியின் கடைசி நாளைப் பற்றிய விரிவான குறிப்புகளை வாசித்துக் கொண்டிருந்தேன். அப்போது காந்தியின் கடிகாரம் பற்றிய ஒரு குறிப்பை வாசித்தேன், அது  Ingersoll ‘Turnip’ pocket watch, என்ற காந்தி கடிகாரம் குறித்த தேடுதலுக்கு என்னை அழைத்துச் சென்றது.


இணையத்திலும் புத்தங்களிலும் தேடி வாசித்த போது காந்தியின் கடிகாரம் ஒரு சிறப்பு அடையாளம் போல மனதில் உருக் கொண்டது.

காந்தி காலத்தில் கடிகாரம் கட்டிக் கொள்வது சராசரி இந்தியர்களின்  இயல்பிலை. லண்டனில் படிக்க சென்றவர் காந்தி என்பதால் அவரது சகோதரர் இங்கர்சால் கம்பெனியின் பாக்கெட் வாட்ச் ஒன்றினை காந்திக்கு வாங்கி தந்திருக்கிறார்

பாக்கெட் வாட்ச்சுகளை உருவாக்கியவர்கள் ஜெர்மனியர்கள். தங்க மூலாம் பூசப்பட்ட பைக் கடிகாரங்கள் பிரபுக்களின் தனித்துவ அடையாளமாக கருதப்பட்டது. அதன்பிறகு ஸ்விட்சர்லாந்தில் பாக்கெட் கடிகாரங்கள் தயாரிப்பது அதிகமானது. ஆனால் அதன் விலை மிக அதிகம். 


1881 ல் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் பாக்கெட் கடிகாரங்களை  தயாரிக்க  Robert H. Ingersoll  என்பவரது அமெரிக்க நிறுவனம் முன்வந்தது. குறிப்பாக ரயில்வே தண்டாவளங்களை அமைக்கும் தொழிலாளர்களையும் அடித்தட்டு மக்களையும் மனதில் கொண்டு  இங்கர்சால் உருவாக்கிய பாக்கெட் கடிகாரங்கள் விலை மலிவானவை.  ஒரு டாலர்  விலை. ஒரு லட்சம் கடிகாரங்களை விற்று  அந்த நிறுவனம்  உலகெங்கும் பிரபலமாகியது. 

1908ல் அந்த நிறுவனம் லண்டனில் தன் விற்பனையை துவக்கியது. அங்கு அதன் விலை எட்டு ஷில்லிங். காந்தி பயன்படுத்திய பாக்கெட் கடிகாரம் அத்தகையதே. இந்தக் கடிகாரத்தில் நொடி முள் கிடையாது. 


காந்தி கடிகாரத்தை ஒரு நூலால் இணைத்து தன் இடுப்பில் சேர்த்து கட்டிக் கொள்ளும் பழக்கம் கொண்டிருந்திருக்கிறார்.  பலநேரங்களில் அவரது வேஷ்டி மடிப்பினுள் கடிகாரம் மறைந்து கிடந்திருக்கிறது. நேரம் தவறாமை என்பதை வாழ்நாள் முழுவதும் கறாராக கடைபிடித்தவர் காந்தி.

காந்தி தன் ரயில் பயணங்களில் கூட நேரத்தை வீணடிப்பதில்லை. மாறாக அவர் கடிதம் எழுதுவதற்கும், அறிக்கைகள் உருவாக்குவதற்கும் அந்த நேரத்தை பயன்படுத்திக் கொள்ள கூடியவர். அப்படி ஒரு முறை ரயிலில் பயணம் செய்யும் போது அவருடன் இருந்த உதவியாளரிடம் நேரம் என்னவென்று கேட்டிருக்கிறார். 

உதவியாளர் தன் கைக்கடிகாரத்தை பார்த்துவிட்டு ஐந்து மணி என்று சொன்னார். காந்தி அதை நம்பாமல் தன்னுடைய கடிகாரத்தை எடுத்து சரி பார்த்தார். மணி ஐந்தாக இன்னும் ஐந்து நிமிசங்கள் இருந்தன. உடனே உதவியாளரிடம் இன்னும் ஐந்தாகவில்லையே என்றதும் அவர் ஆமாம் தற்போது நாலு ஐம்பத்தைந்து என்றார். 

அதை கேட்டதும் காந்தியின் குரல் கடுமையாகியது.  ஐந்து நிமிசம் என்பது இந்தியர்களின் வாழ்வில் மிக முக்கியமானது. அந்த ஐந்து நிமிசத்தில் எது வேண்டுமானாலும் நடந்துவிடலாம். ஒரு நிமிசத்தில் எவ்வளவோ வெற்றி தோல்விகள் மாறியிருக்கின்றன. ஆகவே கையில் கடிகாரம் கட்டிக் கொண்டும் சரியான நேரம் சொல்ல  தவறிய உங்களை என்ன செய்வது, எதற்காக உங்களுக்கு கடிகாரம் என்று கடிந்து கொண்டிருக்கிறார்.

மணி ஐந்தை நெருங்கி கொண்டிருக்கும் போதோ ஐந்தாகிவிட்டது என்று சொல்வது பொது வழக்கம். ஆனால் காந்தி ஒவ்வொரு நிமிசமும் மிக முக்கியமானவை என்பதை உணர்ந்தவர். ஆகவே அதை கண்டித்திருக்கிறார். அந்த அளவு கால கண்டிப்பு கொண்டவர். 

லண்டனில் அவரோடு இணைந்திருந்த கடிகாரம் இறுதி நிமிசம் வரை கூடவே பயணம் செய்திருக்கிறது. இடையில் ஒரு முறை அந்த கடிகாரத்தை ரயிலில் வரும்போது யாரோ திருடி விட்டார்கள். காந்தி அதற்கு அடைந்த துயரம் அளவிட முடியாதது. ஆனால் திருடியவன் சில நாட்களில் அவனே தேடி வந்து காந்தியின் கடிகாரத்தை திரும்ப ஒப்படைத்துவிட்டான்.

சச்சரவும் வீண்விவாதங்களும் ஏற்படும்நேரங்களில் காந்தி தன் கடிகாரத்தை எடுத்து பார்த்து பிரார்த்தனைக்கு உரிய நேரமாகிவிட்டது என்று எழுந்து கொண்டதால் பல பிரச்சனைகள் ஆரம்ப நிலையிலே முடிந்து போயிருக்கின்றன. அவரளவில் அந்த கடிகாரம் ஒரு வலிமையான ஆயுதம். அதன் துல்லியம் அவரது நாளை நிமிச நிமிசமாக ரசித்து கடந்து செல்ல வைத்திருக்கிறது.

காந்தி கொல்லபடும் தினத்தில் அவர் காலையிலிருந்து தொடர்ந்த பணியில் இருந்திருக்கிறார். அவருக்கு இரண்டு நாட்களாகவே இருமல் இருந்திருக்கிறது.இயற்கை வைத்தியத்தில் ஈடுபாடு கொண்டவர் என்பதால் அதற்கான மருந்தாக அவரே தயாரித்த கிராம்பு பொடி மருந்து தீர்ந்து போய் அன்றைய இரவுக்கான மருந்து தேவையாக இருந்திருக்கிறது. அதை உடனே தயாரிக்கும்படி அவரது பேத்தியான மனுவை ஏற்பாடு செய்கிறார்.

அன்று காலை 7 மணிக்கு காந்தியை சந்திக்க முதல் பார்வையாளராக வந்தவர் ராஜன். அமெரிக்கா செல்ல இருந்தவர் என்பதால் அவரோடு சில நிமிசங்கள் காந்தி செலவிடுகிறார். தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்ததால் காந்தியின் உடல்நிலை நலிவடைந்திருந்தது. அதிகம் காற்றுள்ள வெட்டவெளியில் அவர் நிற்பது கூட சிரமம் தருவதாகயிருந்தது. 

அதையும் மீறி அன்று அவர் தனியாக நடந்து கழிப்பறை வரை சென்று வந்தார். ஏன் தங்களை அழைக்கவில்லை என்று அவரது மெய்செவிலிகள் போலிருந்த மனுவும் ஆபாவும் கேட்ட போது தனியே நடக்குமளவு உடலில் தெம்பு வந்துவிட்டது பார்த்தீர்களா என்று கேலி செய்தார் காந்தி

அதன்பிறகு பியாரிலாலுக்கு காங்கிரஸ் கமிட்டிக்கான புதிய தீர்மானங்களை தந்து முழுமையாக பார்வையிட்டு வேண்டிய திருத்தங்கள் செய்யச் சொல்கிறார். வெளியே காலையில் இருந்தே குளிராக இருந்த காரணத்தால் அறை எங்கும் கணப்பு அடுப்புகள் எரிந்து கொண்டிருக்கின்றன. 

தினசரி நாளிதழ்களை காந்தி வாசித்து முடிக்கிறார். அன்றாடம் அவருக்கு அளிக்கபடும் மசாஜ் நடக்கிறது. அதன்முடிவில் பியாரிலால் திருத்தங்களை மேற்கொண்டுவிட்டரா என்று விசாரித்துவிட்டு மதராஸ் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள அரிசிதட்டுபாடு குறித்து உரிய கவனம் கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்கபட வேண்டும் என்பதை நினைவுறுத்துகிறார்.

காந்தியை குளிக்க அழைத்து செல்கிறார் மனு. குழந்தையை போல அவர் காந்தியை கவனித்து கொள்ளக்கூடியவர். காந்தி இளவெந்நீரில் குளிக்கிறார். அதன் பிறகு உடலை முழுமையாக துடைத்துக் கொண்டு திரும்புகிறார். அவரது உடல் எடை சோதிக்கபடுகிறது. அன்று அவர் 109 பவுண்ட் எடையிருக்கிறார்.

காந்தி அப்போது பெங்காலியில் எழுதக் கற்றுக் கொண்டிருந்தார். ஆகவே அன்றும் அவர் பெங்காலி மொழியில் சில வாக்கியங்கள் எழுதி பயிற்சி செய்கிறார்.

9.30 மணிக்கு காலை உணவு சாப்பிடுகிறார் காந்தி.  ஒரு டம்ளர் ஆட்டுபால். நான்கு ஆரஞ்சு பழங்கள். காரட் சாறு, வேகவைத்த காய்கறிகள், இஞ்சி கலந்த எலுமிச்சை சாறு. சாப்பாட்டின் போதும் பியாரிலாலோடு தீர்மானங்கள் பற்றி உரையாடுகிறார். நவகாளியில் ஏற்பட்டு வரும் கலவரத்திற்கு பிறகான மாறுதல்கள் குறித்து ஆழ்ந்த அக்கறையுடன் விசாரிக்கிறார்.

அதன்பிறகு காந்தி தென்னாப்பரிக்காவில் இருந்தபோது அவரோடு நண்பராகயிருந்த ருஸ்தம்  சோராப்ஜியின் குடும்பத்தினர்களை சந்திக்கிறார். பழைய நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார். அவர்கள் சென்றபிறகு சிறிது நேரம் ஒய்வு கொள்கிறார். 

தேன்கலந்த வெந்நீர் ஒய்விற்கு பிறகு தரப்படுகிறது. அதை குடித்துவிட்டு அடுத்த பணியான இஸ்லாமிய தலைவர்களோடு உள்ள சந்திப்பிற்கு தயார் ஆகிறார். தொடர்ந்து நடைபெறும் வன்முறை மற்றும் கலவரங்கள் குறித்த தனது மனவேதனையை அவர்களுடன் பகிர்ந்துகொள்கிறார். மத ஒற்றுமை குறித்து கருத்துகளை கேட்டு அறிகிறார். தான் வார்தா புறப்பட போவதை பற்றி தெரிவிக்கிறார். 

இதற்கிடையில் நேரு பட்டேல் இருவருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள மனவிரிசல் மற்றும் அதிகாரசண்டை குறித்து உதவியாளர்களிடம் காந்தி ஆதங்கபடுகிறார். இருவரையும் தனித்தனியே சந்திப்பதற்கு ஏற்பாடு செய்கிறார். அன்றிரவு 7 மணிக்கு நேரு சந்திப்பதற்காக நேரம் ஒதுக்கபடுகிறது. நாலு மணிக்கு பட்டேல் சந்திப்பதற்காக சொல்கிறார்.

மதியம் தன் உடலில் களிமண் பூசிக் கொண்டு இளவெயிலில் மண்சிகிட்சை செய்து கொள்கிறார் காந்தி. மனுவும் ஆபாவும் அவரது கால்களை தேய்த்துவிடுகிறார்கள்.  பிரட்ஜ் கிருஷ்ணா நாளிதழ் செய்தி ஒன்றை வாசித்து காட்டுகிறார். அதில் காந்தி அரசியலை விட்டு விலகி  இமயமலையில் சென்று ஒய்வெடுத்து கொள்ள வேண்டும். அவரால் தான் இத்தனை பிரச்சனையும்  என்று வெளிப்படையாக   தாராசிங் என்பவர் அறிவித்திருக்கிறார் . முதல்நாள் இதுபோன்று ஒரு அகதி ஒருவனும் அவருக்கு நேராக கத்தியது நினைவிற்கு வருகிறது. காந்தியின் முகத்தில் கலக்கமும் யோசனையும் ஒடுகின்றன. 

மதியம் 2. 30 க்கு வழக்கமான அவரது நேர்காணல்கள் சந்திப்புகள் தொடர்கின்றன. ஆல் இண்டியா ரேடியோவில் இருந்து வந்த இரண்டு பஞ்சாபிகள் அவரை நேர்காணல் செய்கிறார்கள். இலங்கையிலிருந்து வந்த பிரதிநிதி ஒருவர் தன்மகளோடு காந்தியை சந்திக்கிறார்.  அந்தபெண் காந்தியிடம் ஆட்டோகிராப் வாங்கிக் கொள்கிறாள். அது தான் காந்தி கடைசியாக போட்ட கையெழுத்து என்பதை அப்போது அந்தப் பெண் அறியவில்லை. 

மூன்று மணி அளவில் ஒரு பேராசிரியர் காந்தியை சந்தித்து புத்தர் காலத்திலிருந்து வரும் போதனை முறை பற்றி விவாதிக்கிறார். அதன்பிறகு 3.15க்கு பிரெஞ்சு புகைப்படகலைஞர் ஒருவர் தன் புகைப்படங்களை காந்தியிடம் காட்டி விவரிக்கிறார். நான்கு மணிக்குள் அவரது நேர்காணல்கள் நிறைவடைகின்றன

பட்டேலை சந்திப்பதற்கு தயார் ஆகிறார் காந்தி. இடையில் ஏதோ யோசனையுடன் சனிக்கிழமை வார்தா செல்வதற்கான ரயில்பயண ஏற்பாடுகளை கவனிக்க சொல்கிறார். நடந்து கழிப்பறைக்கு செல்கிறார்.

பட்டேல் அவரது மகள் மற்றும் உதவியாளர் மணி வந்து சேர்கிறார்கள்.

கழிப்பறையிலிருந்து காந்தி வரும்வரை அவர்கள் கிருஷ்ணாவோடு  பேசிக் கொண்டிருக்கிறார்கள்.  காந்தி பட்டேல் சந்திப்பு துவங்குகிறது. நேரடியாக மனதில் உள்ளதை அவர்கள் பேசிக் கொள்கிறார்கள். தான் நேருவிடம் பேசுவதாக வாக்குறுதி அளிக்கிறார் காந்தி.

அந்த உரையாடலின் நடுவே கந்தியவாரிலிருந்துவந்திருந்த இரண்டு தலைவர்கள் காந்தியை சந்திக்க இயலுமா என்று காத்திருக்கிறார்கள். மனு உள்ளே நுழைந்து அதைப்பற்றி கேட்கிறார். உடனே காந்தி பிரார்த்தனை முடிந்தவுடன் சந்திப்பதாக சொல்லி அவர்களையும் பிரார்த்தனையில் கலந்து கொள்ள சொல்கிறார் .

காந்திக்கு மீண்டும் கேரட் சாறும் வேகவைத்த காய்கறிகளின் சாறும் ஆரஞ்சு பழச்சாறும் தரப்படுகிறது. அதைக் கொஞ்சம் கொஞ்சமாக அருந்துகிறார். தனது ராட்டையை கொண்டு வரச்சொல்லி சில நிமிசங்கள் நூல் நூற்கிறார். அதுவரை அவரது எல்லா நாளும் போலவே இயல்பாக கடந்து செல்கிறது காலம்

அதே நாளின் காலையில் முப்பத்தியேழு வயதான கோட்சே, பழைய டெல்லி ரயில்வே நிலைய தங்குமிடத்தின் ஆறாம் எண் அறையில் விழித்து எழுகிறான். அன்றைக்கு அவனுக்கு முக்கியமான பணியிருக்கிறது. அவனை நாராயன் ஆப்தேயும், விஷ்ணு கர்கரேயும் சந்திக்கிறார்கள். 

காந்தியை கொலை செய்ய போகின்ற சதியில் எட்டு பேர் ஈடுபட்டிருந்தார்கள். அதில் இவர்கள் முக்கியமானவர்கள். ஒருவேளை கோட்சே காந்தியை கொல்ல தவறினால் அவரை கொல்வதற்கான இரண்டாவது குழு மக்களோடு கலந்திருக்க வேண்டும் என்பதை பற்றி திட்டமிடுகிறார்கள். 

கோட்சே துப்பாக்கி சுடுவதில் அதிக பயிற்சி இல்லாதவன். அவனிடம் ஏழ குண்டுகள் போடப்படும் துப்பாக்கி இருந்தது. அதை காலையில் ஒருமுறை எடுத்து பார்த்து கொண்டான். முந்தைய இரவு சரியான உறங்கமின்மைக்கு அவன் ஆட்பட்டிருந்தான். அந்த சோர்வு அவன் முகத்திலிருந்தது. தன் மனக்கலக்கதை அவன் முகம் காட்டிக் கொள்ளவில்லை. 

பின்மதிய நேரத்தில் அவர்கள் பிர்லாமந்திருக்கு சென்றார்கள். இரண்டுபேரும் சாமி கும்பிட்டார்கள். கோட்சே சாமி கும்பிடவில்லை.  4.30 மணியளவில் கோட்சே தயார் ஆனான். புதிதாக வாங்கியிருந்த காக்கி உடையை அணிந்து கொண்டான். 

ஜனவரி 20ல் காந்தியை கொல்ல செய்யப்பட்ட ஏற்பாடு ஒன்று தோற்றுபோகவே அன்றிலிருந்து  காந்தியின் பாதுகாப்பிற்காக சீருடை அணியாத காவலர்கள் முப்பது பேர் பிர்லா மாளிகையில் காவல் இருந்தார்கள்.

அவர்கள் எவ்வளவு தூரத்தில் இருப்பார்கள் என்பதை பற்றி கோட்சேயுடன் மறுமுறை விவாதித்து கொள்கிறார்கள். பாதுகாப்பு சோதனை கடுமையாக இருக்குமா என்ற அச்சம் அவர்களுக்குள் தலையெடுக்கிறது. அதை அவர்கள் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

கோட்சே ஒரு குதிரைவண்டியில் சென்று பிர்லா மாளிகையில் இறங்குகிறான். சில நிமிசங்களுக்கு பிறகு இன்னொரு வண்டியில் ஆப்தேயும கர்கரேயும் வருகிறார்கள். அவர்கள் எதிர்பார்த்தது போல பாதுகாப்பு சோதனையில்லை. பிரார்த்தனைக்காக மக்கள் காத்திருக்கிறார்கள்.

காந்தி உள்ளே ஒரு அறையில் பட்டேலுடன் பேசிக்கொண்டிருப்பதை அறியாமல் ஏன் தாமதமாகிறது என்று கோட்சே அங்கிருந்த மக்களை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தான்.

பட்டேலுடன் பேச்சுவார்த்தை நீண்டு போகிறது. பிரார்த்தனைக்கு நேரமாகிவிட்டது என்று மனு தலையிட்டு சொல்கிறாள். காந்தி எழுந்து கொள்கிறார். பத்து நிமிசம் தாமதமாகியிருப்பது தெரிய வருகிறது. காந்தி தன் கடிகாரத்தை தேடுகிறார். காணவில்லை. அது ஆபா கையிலிருந்தது, அதற்குள் அவர்கள் காந்தியை அழைத்துக் கொள்கிறார்கள்.

காந்தி தனக்கு தாமதம் என்பது பிடிக்காது என்று கடிந்து கொண்டபடியே செவிலிகள் கடவுளே குறுக்கே நின்றாலும் நோயாளிகளை நேரம் அறிந்து மருந்து தந்து கவனிக்கவேண்டும். நீங்களும் அப்படி பட்டவர்கள் தான் என்று சொல்லியபடியே நடக்கிறார். வெளியே குளிர்காற்று அடிக்கிறது. குளிர்கால சூரியன் வெளிறிப்போய் ஒடுங்கிக் கொண்டிருந்தது. வெண்ணிற சால்வையை தோளோடு சேர்த்து போர்த்திக் கொள்கிறார். 

வலது பக்கம் மனு இடது பக்கம் ஆபா இருவரும் காந்தியை தாங்கி பிடித்துக் கொள்கிறார்கள். காந்தி மெதுவாக நடந்து வருகிறார். மனு கையில் காந்தியின் கண்ணாடி கூடு குறிப்பேடு மற்றும் சில அத்யாவசிய பொருட்கள் இருந்தன. காந்தியின் பின்னால் பிர்லா குடும்பத்தினர் சிலரும் கத்தியவார் தலைவர்கள் இருவரும் வருகிறார்கள். 

எப்போதும் காந்திக்கு முன்னால் நடந்துவரும் சுசிலாநய்யார் அன்று வரவில்லை. காந்தியின் பாதுகாவல் போல தினசரி முன்னால் நடந்து செல்லும் குருபஷன் சிங்கூட அன்று வரவில்லை. காந்தி ஏன் அன்று தாமதமாக பிரார்த்தனைக்கு வருகிறார் என்று எவருக்கும் தெரியவில்லை.

காந்தி தன் சாவை நோக்கி நடக்க துவங்குகிறார். போர்பந்தரின் வீதியில் துவங்கிய அவரது நடை இறுதிநாள் வரை நீண்டு கொண்டே சென்றது. எவ்வளவு தூரம் எத்தனை ஆயிரம் மைல்கள் அந்த பாதங்கள் கடந்து சென்றிருக்கின்றன. ராஜ்கோட்டிலிருந்து லண்டனுக்கு சென்றிருக்கிறது. லண்டனிலிருந்து இந்தியா திரும்பியிருக்கிறது. அங்கிருந்து தென்ஆப்ரிக்கா. அங்கிருந்து மீண்டும் இந்தியா. அதன்பிறகு கன்யாகுமரிவரையான முழுஇந்திய பரப்பை சுற்றியலைந்திருக்கிறது. வன்முறை, கலவரம், மதக்கலவரம் அத்தனையின் ஊடேயும் காந்தி நடந்திருக்கிறார். அவர் கால்கள் சரித்திரசாட்சி கொண்டது.

அவ்வளவு நடந்து அலைந்த கால்கள் கடைசியாக சாவை நோக்கி நடக்க துவங்கின. வழக்கமாக செல்லும் பாதையை விட்டு விலகி பசுந்தரை வழியாக வேகமாக அந்த கால்கள் சாவை நோக்கி முன்னேறுகின்றன. அவர் மனது லகுவாக இருக்கிறது. தன்னை கேரட் தின்னும் ஆடுமாடு போலாக்கிவிட்டீர்களே என்று தன்னோடு வரும் மனுவிடம் கேலி செய்கிறார். 

காந்தி நடந்துவருவது கோட்சே கண்களில் தென்படுகிறது. அவன் முன்னேறி செல்வதா வேண்டமா என்ற தயக்கம் கொள்கிறான். காந்தியின் சால்வை காற்றில் அசைவது அவன் கண்ணில் படுகிறது. சுற்றிலும் பார்க்கிறான். காந்திக்கும் அவனுக்கும் இருநூறு அடி இடைவெளியே இருக்கிறது. கூட்டத்தை விலக்கி கொண்டு முன்னேறி செல்கிறான்.  நூற்றுக்கணக்கான மக்கள் பிரார்த்தனைக்காக காத்திருக்கிறார்கள்.

காந்தி சாவை நெருங்கி அடுத்த அடியை எடுத்து வைக்கிறார். அதே நேரம் நேரு தன் அலுவலகத்தில் பணியில் இருக்கிறார். பட்டேல் வீடு திரும்பிக் கொண்டிருக்கிறார். மவுண்ட்பேட்டன்  தன் வசிப்பிடத்தில் உரையாடிக்கொண்டிருக்கிறார். மீராபென் இமயமலையில் உள்ள ஆசிரமத்தில் இருக்கிறார். லைப் இதழின் புகைப்பட நிபுணர் மார்க்ரெட் புருக் சில தெருக்கள் தள்ளியிருந்த விடுதியில் காத்திருக்கிறார். வின்சென்ட் சீன் என்ற அமெரிக்கபத்திரிக்கையாளர் காந்தியின் நேர்காணலுக்கு நேரம் ஒதுக்கபட்டு பிரார்த்தனை முடிந்து காந்தி வரட்டும் என்று காத்துக் கொண்டிருக்கிறார்.

வழக்கமாக காந்தியின் குறுக்கே வரும் பார்வையாளர்கள் அன்றில்லை. காந்தி பிரார்த்தனை மேடையை நெருங்கி செல்கிறார். 

கோட்சே தனது இத்தாலிய பெர்தா துப்பாக்கியை தொட்டுப்பார்த்துக் கொள்கிறான். அது காத்துக் கொண்டிருக்கிறது. காந்தியின் முன்னால் போய் நிற்கிறான். அவனது உதடுகள் நமஸ்தே காந்திஜி என்று முணுமுணுக்கின்றன.

காந்தியின் கைகள் கூப்புகின்றன. வணக்கம் சொல்கிறார்.  மனு அந்த மனிதன் காந்தியின் கால்களில் விழுந்து வணங்க போகிறானோ என்று நினைக்கிறாள். அது காந்திக்கு பிடிக்காத செயல் என்பதால் அவனை தவிர்க்க அவரை சிரமப்படுத்தாதீர்கள் சகோதரா என்று சொல்கிறாள் 

காந்தியின் கண்களை கோட்சே எதிர்கொள்கிறான். சலனமற்ற கண்கள். கோட்சேயின் வலது கை துப்பாக்கியை எடுக்கிறது. இடது கையால் மனுவை தள்ளிவிடுகிறான். அவள் தடுமாறுகிறாள். கையிலிருந்த பொருட்கள் கிழேவிழுகின்றன. அவளுக்கு ஏதோ நடக்க போகிறது என்று புரிகிறது. அதற்குள் கோட்சேயின் வலது கை துப்பாக்கியை ஏந்துகிறது.

காந்தியின் கண்கள் துப்பாக்கியை எதிர் கொள்கின்றன. கோட்சே துப்பாக்கியை இயக்குகிறான். மூன்று முறை வெடிக்கிறது. அடிவயிறு இதயம் என தோட்டா பாய்கிறது. காந்தி தான் சுடப்பட்டோம் என்பதை உணர்ந்தபடியே நிற்கிறார். அந்த கண்கள் உலகை கடைசி முறையாக காண்கின்றன. அவரது உடல் சரிகிறது. கால்கள் நடக்க மறுத்து ஒடுங்குகின்றன.  புகையின் நடுவில் கூக்குரல் எழுகிறது. காந்தி மண்ணில் சரிகிறார். அவரது உதடு முணுமுணுக்கிறது. ஆஸ்திரேலிய கம்பளியால் தயாரிக்கபட்டிருந்த அவரது வெண்ணிற சால்வை ரத்தகறை படிகிறது. கூச்சலும் சப்தமும் அதிகமாகிறது. காந்தியின் கடிகாரம் தரையில் விழுந்து அப்படியே நிற்கிறது. அப்போது மணி 5.17. அதன் பிறகு அந்த கடிகாரம் ஒடவேயில்லை.

லண்டனில் தனித்திருந்த நாட்களில் துவங்கி இறுதி நிமிசம் வரை அவரோடு இருந்த கடிகாரம் இன்று வெறும்காட்சிப்பொருளாக உள்ளது. ஆனால் ஒடாத அந்த கடிகாரத்தில் இந்தியாவின் சரித்திரம் புதையுண்டு உள்ளது.

காந்தியின் கொலைச்சதி விசாரணையின் போது சதிவழக்கில் குற்றசாட்டப்பட்ட கோட்சேயின் சகோதரன் நீதிமன்றத்தில் நாங்கள் செய்தது கொலையில்லை. அது ஒருசேவை. குற்றமாக அதை நாங்கள் நினைக்கவில்லை. ஒருவேளை அவரது கடிகாரத்தை  திருடி பிடிபட்டிருந்தால் அதை குற்றம் என்று சொல்வோம். இது அப்படியானதில்லை என்று குறிப்பிடுகிறார்

அங்கும் காந்தியின் கடிகாரம் குறிப்பிடப்படுகிறது.

தன்வாழ்நாளில் காந்தி ஒருமுறை கூட விமானத்தில் பயணம் செய்ததில்லை. எவருக்காகவும் நேரத்தை வீண் அடித்ததில்லை. அவரது எளிமை இன்று பரிகசிக்கபடுகிறது.ஆனால் அதன் வலிமையும் சிறப்பும் நம்மால் கைக்கொள்ள முடியாது. 

காந்தியை நினைவு கொள்வோம். காந்தியை பயில்வோம். செயல்படுத்துவோம். அதற்கான தேவையும் அவசியமும் இன்று அதிகமிருக்கிறது.

#நன்றி -எஸ்.#ராமகிருஷ்ணன்



No comments:

Post a Comment