Thursday 25 March 2021

LOVE ON THE MURDEROUS CAMP -WW II

 

ஹிட்லரின் வதை முகாமில் மலர்ந்த காதல்

  • ரிது பிரசாத்
  • பிபிசிக்காக




ரத்தக் களறிக்கு நடுவில் இதயத்தில் காதல் மலருமா? வதை முகாமில் யாருடைய இதயமாவது காதல் இன்பத்தை அனுபவிக்க முடியுமா? உயிர் பிழைத்தால் போதுமென்று இறுதி நிமிடங்களை அச்சத்துடன் கழிக்கும் நிலையில், கண்முன் கொத்துக்கொத்தாக மக்கள் இறப்பதை காணும்போது காதல் உணர்வு இதயத்தில் ஏற்படுமா?


இதுபோன்ற கேள்விகளுக்கான பதில் இல்லை என்பதாகவே இருக்கும். ஆனால் காதல் என்பது வரையறைகளுக்குள் அடங்காது என்பதை மெய்ப்பிக்கும் வகையில் ஹிட்லரின் வதைமுகாமில் பூத்த காதலை அமரக்காதல் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.





மிகப்பெரிய வதைமுகாம்

ஜெர்மனியில் யூதர்களுக்கு எதிரான ஹாலோகாஸ்ட் படுகொலை நடவடிக்கைகளின்போது, யூதர்களை அடைத்து கொடுமைப்படுத்திக் கொல்ல பல வதை முகாம்கள் அமைக்கப்பட்டன. அவற்றில் மிகப்பெரிய வதைமுகாம் அவுஷ்விட்ஸ் வதைமுகாம், ஜெர்மனி வசம் இருந்த தெற்கு போலந்தில் அமைந்திருந்தது. நாஜிக்களின் உளவு அமைப்பான எஸ்.எஸ், ஐரோப்பா முழுவதிலும் இருந்து யூதர்களை பிடித்துவந்து இங்கு அடைத்து சித்திரவதை செய்வார்கள்.


முகாம்களுக்கு கொண்டு வரப்பட்ட உடனேயே பலர் நச்சுவாயு அறைகளில் அடைக்கப்பட்டு கொல்லப்பட்டனர். வேறு சிலரோ சில மாதங்கள் வரை வதைமுகாம்களில் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். அவர்களின் தலைமுடி மழிக்கப்பட்டு, ஆடைகள் களையப்பட்டு அரையாடையுடன் இரவும் பகலும் கடுமையான வேலையில் ஈடுபடுத்தப்பட்டனர். உயிர் வாழ்வதற்கு போதுமான உணவு மட்டுமே வழங்கப்பட்டது.



அவுஷ்விட்ஸ் வதைமுகாம்

பட மூலாதாரம்,ALAMY

படக்குறிப்பு,

அவுஷ்விட்ஸ் வதைமுகாம்


வதைமுகாம்களில் இருந்த குழந்தைகள் பெற்றோர், உற்றார் உறவினரிடமிருந்து, பிரிக்கப்பட்டதோடு, அரை வயிறு உணவு கொடுக்கப்பட்டு பசியுடனே வைக்கப்பட்டனர். இதனால் பலவீனமான குழந்தைகளால் வேலை செய்யமுடியாது. அவர்கள் நச்சுவாயு நிரப்பப்பட்ட அறைக்கு அனுப்பப்பட்டு கொல்லப்படுவார்கள்.


ஹிட்லரின் அவுஷ்விட்ஸ் வதைமுகாம் பல ஆண்டுகள் தொடர்ந்து செயல்பட்டது. 1945ஆம் ஆண்டு, இரண்டாம் உலகப்போரின் போது சோவியத் ஒன்றியத்தின் படைகள் அவுஷ்விட்ஸை கைப்பற்றியபிறகு வதைமுகாம்கள் நிரந்தரமாக மூடப்பட்டன.



அவுஷ்விட்ஸ் வதைமுகாமில் குழந்தைகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

அவுஷ்விட்ஸ் வதைமுகாமில் குழந்தைகள்


கைகளில் பச்சைக் குத்தப்பட்ட அடையாள எண்கள்

பெயரைக் கேட்டாலே அச்சம் விளைவிக்கும் அவுஷ்விட்ஸ் வதைமுகாமில் கைதிகள் தங்களது பெயர்களால் அல்ல, எண்களால் அடையாளம் காணப்படுவார்கள். கைதிகளின் கைகளில் அவர்களின் அடையாள எண்கள் பச்சைக் குத்தப்படும்.



அவுஷ்விட்ஸ் வதைமுகாமில் அடையாளத்திற்காக பச்சை குத்தப்படும்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

அவுஷ்விட்ஸ் வதைமுகாமில் அடையாளத்திற்காக பச்சை குத்தப்படும்


வதைமுகாமில் இருந்த 32407 என்ற ஒரு கைதியின் வாழ்க்கையை அண்மையில் உலகிற்கு வெளிகொண்டு வந்திருக்கிறது , 'The Tattooist of Auschwitz' என்ற புத்தகம். வதைமுகாமில் கைதி எண் 32407 ஆக பச்சைக் குத்தப்பட்டவரின் இயற்பெயர் லுட்விக் லேல் எய்சன்பர்க் (Ludwig Lale Eisenberg). யூதரான இவர், 1916ஆம் ஆண்டு ஸ்லோவாக்கியாவில் பிறந்தார்.


1942 ஏப்ரல் மாதம் லேலின் வீட்டிற்கு நாஜிப்படைகள் வந்தன. விவரம் எதுவும் தெரியாத நிலையில், நாஜிப் படையில் பணிபுரிய முன்வந்தார் வேலையில்லாமல் இருந்த லேல். தான் ராணுவத்தில் சேர்ந்துவிட்டால், குடும்பத்தினருக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்று அவர் தப்புக்கணக்கு போட்டார்.


ஹிட்லரின் கைதியான லேலின் பணி என்ன?

கைது செய்யப்பட்ட லேல் போலந்தில் இருந்த அவுஷ்விட்ஸ் வதைமுகாமில் அடைக்கப்பட்டு, கைகளில் 32407 என்ற எண் பச்சை குத்தப்பட்டது.


பிற கைதிகளுடன் வேலை செய்த லேல், வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்படும் யூத கைதிகளுக்கு கட்டடங்களைக் கட்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்டார்.



ஹிட்லர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

வதைமுகாமுக்கு வந்த சில நாட்களுக்குள் டைஃபாய்டால் பாதிக்கப்பட்ட லேலை, பிரான்சிலிருந்து அழைத்துவரப்பட்ட பேபன் என்ற யூத கைதி கவனித்துக்கொண்டார். கட்டுக்காவலில் இருக்கும்போது கட்டுப்பாடாக இருக்கவேண்டும் என்பதை பேபன் கற்றுக்கொடுத்தார்.


பணிக்கப்பட்ட வேலையை அமைதியாக செய்யும்படியும், யாரைப் பற்றியும் அதிகமாக பேச வேண்டாம் என்றும் அறிவுறுத்திய பேபன், பச்சை குத்தும் வேலையையும் கற்றுக்கொடுத்தார்.


ஒரு நாள் பேபன் திடீரென காணமல் போய்விட்டார். ஜெர்மன், ரஷியன், பிரஞ்சு, ஸ்லோவாக்கியன், ஹங்கேரிய மற்றும் போலந்து மொழி என பல மொழிகள் பேசத்தெரிந்த லேலுக்கு பச்சை குத்தும் பணி வழங்கப்பட்டது.


பச்சை குத்தும் பொருட்கள் கொண்ட ஒரு பை அவருக்கு வழங்கப்பட்டு, பிற கைதிகளிடம் இருந்து பிரித்து வேறு அறையில் தங்க வைக்கப்பட்டார். தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்ட அவருக்கு மற்றவர்களுக்கு வழங்கப்பட்டதைவிட அதிக உணவு கொடுக்கப்பட்டது.


கைதிகளை வரிசைப்படுத்துவது யார்?

வதைமுகாமில் அடைக்கப்பட்ட பிற யூத கைதிகளைவிட லேலின் வாழ்க்கை சற்று மேம்பட்டிருந்தாலும் மரண பயம் எப்போதுமே அவரை சூழ்ந்திருந்தது. இரவு உறங்கச் செல்லும் கைதிகள் நச்சு வாயு செலுத்தப்பட்டு மீளாத்துயிலிலும் ஆழ்த்தப்படலாம்.


அருகிலுள்ள நச்சுவாயு அறையில் மக்கள் கொல்லப்படுவது தினசரி வாடிக்கை என்பதால் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்ததை அவர் அறிந்திருந்தார்.



நாஜி அதிகாரிகளிடன் ஜோசஃப் மெங்கேலே (இடப்புறம் நிற்பவர்)

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

நாஜி அதிகாரிகளிடன் ஜோசஃப் மெங்கேலே (இடப்புறம் நிற்பவர்)


நாள்தோறும் கூட்டம் கூட்டமாக கொண்டுவரப்படும் கைதிகளை அடையாளப்படுத்த, ஊசியால் அவர்களின் கையில் பச்சைக் குத்தி அவர்களின் அடிப்படை அடையாளத்தை அழிக்கும் வேலையை செய்தார் லேல்.


வதைமுகாமுக்கு வந்த உடனேயே பச்சை குத்தாமல் விடப்படுபவர்களின் இறுதி நாள் அது, அவர்கள் நச்சுவாயு அறைக்கு அனுப்பப்படுவார்கள் என்பதை அவர் நன்குக் அறிந்திருந்தார்.


நாஜி தளபதி ஜோசப் மெங்கேலே அந்த வதைமுகாமிற்கு வரும் கைதிகளை வரிசைப்படுத்துவார். கொலைகளத்திற்கு அனுப்படுவார்கள், வேலைக்கு அனுப்பப்படுபவர்கள், வேலை வாங்குவதோடு அணுஅணுவாக சித்ரவதை செய்பவர்கள் என்று கைதிகளை தரவாரியாக வகைப்படுத்துவது அவர்தான்.


1943 ஆம் ஆண்டின் முடிவில், அந்த வதைமுகாமில் இருந்த அனைத்து கைதிகளிலுக்கும் பச்சை குத்தும் பணி முடிக்கப்பட்டது.



அவுஷ்விட்ஸ் வதைமுகாமில் பச்சைக் குத்தும் பணியில் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்த லேல், பச்சைக் குத்தும்போது குழந்தைகள் மற்றும் பெண்களின் கைகள் நடுங்குவதையும் பயம் நிறைந்த கண்களையும் தொடர்ந்து பார்த்துவந்த லேலின் மனம் துக்கத்தால் உறைந்துபோனது.


உறைபனியும் உருகுவதுபோல் லேலும் காதலினால் உருகும் காலமும் கனிந்தது.


பெண் கைதிகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,


வதைமுகாமில் வரிசையில் நிற்கும் பெண் கைதிகள்


கைதியின் மனதில் ஏற்பட்ட காதல்

இயந்திரத்தனமான வேலையில் ஈடுபட்டிருந்த லேல், 1942ஆம் ஆண்டு புதிய கைதிகளின் கைகளில் பச்சை குத்திக் கொண்டிருந்தபோது 34902 என்ற பெண்ணுக்கு பச்சை குத்தினார்.


கைகளில் பச்சைக் குத்துவதில் கைதேர்ந்த லேலுக்கு அந்த அனுபவம் வித்தியாசமானதாக இருந்தது. ஊசியால் குத்திய அந்த பெண் கைதிக்கு பச்சை குத்திக் கொள்வதால் ஏற்பட்ட வலியால் கைகள் நடுங்கியது. ஆனால் ஊசியால் பச்சை குத்திய லேலின் கைகள் ஏன் விதிர்விதித்தன?


லேலின் கண்கள் கைதியின் கண்களை சந்தித்ததும், இரு ஜோடி கண்களும் சிறைப்பட்டன. சிறைக்குள் இருந்த இரு கைதிகளின் இதயங்களும் சிறைப்பட்டன. லேலின் மனம் கவர்ந்த கைதி 34902 என்று அடையாளப்படுத்தப்பட்ட கீதா.



கீதா-லேல் தம்பதிகள்

படக்குறிப்பு,

குடும்பத்தினருடன் லேல் மற்றும் கீதா


இந்த காதல் கதை இத்தனை நாள் ஏன் மறைக்கப்பட்டது?

லேல் மற்றும் கீதாவின் காதல் கதையை அடிப்படையாக கொண்டு ஆஸ்திரேலிய திரைப்படத் தயாரிப்பாளர் ஹீதர் மோரிஸ் 'The Tattooist of Auschwitz' என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார்.


பல ஆண்டுகளுக்கு முன்பே இந்த காதலர்களை சந்தித்த மோரிஸ், வதைமுகாமில் சிறைப்பட்டிருந்த அவர்களின் கதையை திரைப்படமாக தயாரிக்க முடிவு செய்தார். இந்த அற்புத காதல் கதையை தனக்குள்ளேயே ரகசியமாக வைத்திருந்த லேல், தான் நாஜிக்களின் ஆதரவாளராக கருதப்படலாம் என்று அஞ்சினார்.


கைதியாக கட்டாயத்தின் பேரில் பச்சைக் குத்தும் வேலையில் ஈடுபடுத்தப்பட்டார் என்பதை உலகம் புரிந்து கொள்ளுமா என்ற சந்தேகம் அவருக்கு இருந்தது.


இந்த உண்மையை வெளியே கூறவேண்டாம் என்று கீதா தடுத்தார். கீதா 2003இல் தனது மரணத்திற்கு முன்னர் மரணக்குகையில் மலர்ந்த காதலைப் பற்றி உலகத்திற்கு தெரியவேண்டும் என்று விரும்பினார் லேல்.


காதல் மனைவியின் கட்டளைக்கு கட்டுப்பட்டிருந்த லேல், அவர் காலமான பிறகு காலத்தை கடந்து நிற்கும் தங்கள் காதல் கதை உலகிற்கு தெரியவேண்டும் என்பதால் ஹீதரிடம் தங்களது அதிசய காதல் கதையை தெரிவித்தார்.


34902 என்ற கைதி எண்ணை கீதாவிற்கு பச்சைக் குத்தவேண்டும் என்ற தகவல், கீதாவின் பெயரை லேலுக்கு தெரிவித்தது. அவுஷ்விட்ஸ் முகாமிற்கு அருகில் பிர்கெங்கோ வதைமுகாமில் இருந்த கீதாவுக்கு லெலே, தனக்கு பாதுகாவலாக இருந்தவர்களின் உதவியுடன் கடிதங்களை அனுப்பினார்.


கீதாவை அக்கறையுடன் கவனித்துக் கொண்டார் லேல். பிற கைதிகளுக்கு உணவு குறைவாக வழங்கப்பட்டாலும் முக்கிய பணியில் ஈடுபடுத்தப்பட்ட லேலுக்கு போதுமான அளவு உணவு வழங்கப்பட்டது. தனது உணவை மிச்சப்படுத்தி அதை கீதாவிற்கு அனுப்புவார். லேலின் காதல் பசி கீதாவின் பசியை மட்டுமல்ல, அவருடன் இருந்த சக கைதிகளின் பசியையும் ஆற்றியது.



2003இல் கீதாவின் மரணத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படம்

படக்குறிப்பு,

2003இல் கீதாவின் மரணத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படம்


பிரிந்த காதலர்கள்

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் நீடித்த காதல், 1945இல் நாஜிகள் தோற்கடிக்கப்பட்ட பிறகு பிரிந்தது. வதைமுகாம்களிலிருந்து வேறொரு இடத்திற்கு கைதிகள் அழைத்துச் செல்லப்பட்டனர்.


தனது காதலியின் பெயர் கீதா ஃபுர்மானோவா என்பதைத் தவிர வேறு எந்த தகவலும் லேலுக்கு தெரியாது.


சோவியத் ராணுவம் அவுஷ்விட்ஸ் வதைமுகாமிலிருந்து கைதிகளை விடுவித்தபோது, செக்கோஸ்லோவாக்கியாவில் இருந்த தனது ஊருக்கு சென்றார். வதைமுகாமின் கசப்பான நினைவுகளுக்கு மத்தியில் அவரது மனதில் கீதாவின் நினைவு மட்டுமே சுகானுபவமாக பதிந்திருந்தது. எப்படியாவது கீதாவைக் கண்டுபிடிக்கவேண்டும் என்று உறுதிபூண்டு அலைந்து திரிந்தார் லேல்.


யூத கைதிகள் அன்பளிப்பாக கொடுத்த சில ஆபரணங்கள் லேலிடம் இருந்தன. அதில் சிலவற்றை விற்ற லேல், தனது ஊருக்கு குதிரை வண்டியில் செல்வதற்கான கட்டணத்தை செலுத்தினார். தனது சகோதரி கோல்டியையும் கண்டுபிடித்தார்.



கீதா-லேல் தம்பதிகள்

பிரிந்த காதலர்கள் இணைந்தது எவ்வாறு?


தனது ஊரிலிருந்து கிளம்பி ஸ்லோவாக்கியாவின் ப்ரதிஸ்லாவா நகரத்திற்கு சென்ற லேல், அந்த ஊர் ரயில் நிலையத்தில் காலை முதல் மாலை வரை வந்து செல்லும் ரயில்களை கண்காணிப்பார். கீதாவை கண்டுபிடித்துவிடமுடியும் என்று அவர் நம்பினார்.


லேலின் தவிப்பைப் பார்த்த ரயில் நிலைய அதிகாரி, செஞ்சிலுவை சங்கத்தின் அலுவலகத்திற்கு சென்றால் முயற்சி வெற்றிபெறலாம் என்று கூறிய ஆலோசனையையும் செவிமடுத்தார்.


குதிரை வண்டியில் வழக்கம்போல் ரயில் நிலையத்திற்கு செல்லும் வழியில் கீதாவை பார்த்துவிட்டார் லேல். முயற்சி திருவினையாகி, திருமணத்தில் முடிந்தது.


கீதாவும் தன்னைத் தேடிக் கொண்டிருந்த்தை பிறகு அறிந்துக் கொண்டார் லேல். வதைமுகாமில் பிரிந்த இரண்டு இதயங்களும் ரயில் நிலையத்திற்கு செல்லும் பாதையில் சந்தித்துக் கொண்டன.


மனமொத்த காதலர்கள் 1945 அக்டோபர் மாதம் திருமண பந்தத்தில் இணைந்தனர். சோவியத் யூனியன் ஸ்லோவாக்கியாவை ஆக்கிரமித்தது, கைதி எண் 32407, கைதி எண் 34902 என்ற அடையாளம் மாறி இருவரும் தங்களது இயற்பெயர்களை பெற்றார்கள்.


லேல்- கீதா தம்பதிகள் துணிக்கடை ஒன்றை நடத்தி நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்தார்கள். உண்மையான ஆனந்தம் என்ன என்பது மரணங்களுக்கு மத்தியில் உயிர்த்தெழுந்த காதலை அனுபவித்த இவர்களுக்கு நன்றாகவே தெரியும்.


ஹிட்லர் வரைந்த ஓவியம் கிழிப்பு

ஹிட்லரை நேசித்த சாவித்ரி தேவி

இஸ்ரேலுக்கு உதவியதாக குற்றச்சாட்டு

ஆனால், ஆனந்தமான வாழ்வும் அஸ்தமித்தது, மீண்டும் ஒருமுறை சிறைவாசத்தை எதிர்கொண்டார்கள் தம்பதிகள். இஸ்ரேலுக்கு உதவ பணம் அனுப்பியது தேசத்துரோகமாக கருதப்பட்டதால், அவர்களுடைய தொழிலை முடக்கிய அரசு இருவரையும் சிறையில் அடைத்த்து.


ஹிட்லரின் வதைமுகாமில் இருந்து உயிரோடு வெளியே வந்த இவர்களுக்கு சிறைவாசம் எம்மாத்திரம்? சில நாட்களுக்குப் பிறகு சிறையிலிருந்து தப்பிய இருவரும் வியன்னாவிற்கு சென்று, அங்கிருந்து பாரிஸுக்கு சென்றார்கள். இறுதியாக, ஐரோப்பாவில் இருந்து வெகுதொலைவிற்கு சென்றுவிட்டனர்.


ஆஸ்திரேலியா சென்ற அவர்கள் அங்கு புது வாழ்க்கையை, புது ஜவுளிக்கடையை தொடங்கினார்கள். கீதா ஆடை வடிவமைப்பில் ஈடுபட்டார். தங்கள் ஒரே மகனுக்கு கேரி என்ற பெயரிட்டார்கள்.



1945இல் சோவியத் படைகள் வதைமுகாமிற்கு வந்த பிறகு எடுக்கப்பட்ட புகைப்படம்



மெல்பர்னில் வாழ்ந்தபோது பல முறை கீதா ஐரோப்பாவிற்கு பயணம் மேற்கொண்டாலும், லேல் மீண்டும் அங்கு செல்லவில்லை. நாஜி முகாமில் பச்சைக் குத்தி படையினருக்கு உதவியவர் என்ற ரகசியம் வெளிப்பட்டுவிடுமோ என்று அவர் அஞ்சினார். இந்த ரகசியத்தை வெளியில் தெரிவிப்பது ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் தங்கள் காதல் கதையை தெரிவிக்க வேண்டாம் என்று கீதாவும் அன்புக் கட்டளை இட்டிருந்தார்.


வதைமுகாமில் ஏற்பட்ட காதலை நாஜி படையினருக்கு தெரியாமல் மறைத்த காதலர்கள், பிரிவு, சந்திப்பு, சிறைவாசம், என பல தடைகளை கடந்து அன்பான தம்பதிகளாக வாழ்ந்த கதை காதலர்களின் மரணத்திற்கு பிறகே உலகிற்கு தெரியவந்துள்ளது. 2003ஆம் ஆண்டு கீதா காலமாக, 2006ஆம் ஆண்டு லேல் அவரை பின் தொடர்ந்தார்.


இருப்பது சிறையே ஆனாலும், அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?



No comments:

Post a Comment