Tuesday 16 March 2021

IMPORTANCE OF VIJAYAKANTH ON THOSE DAYS

 

IMPORTANCE OF VIJAYAKANTH

 ON THOSE DAYS 2009



மத்திய அமைச்சர் ஜவடேகர் பி.ஜே.பி சார்பில் பேச ஃபிளைட் பிடித்து வருகிறார். பொன்னாரும் தமிழிசையும் ஷிப்ட் போட்டு வந்து அட்டென்டன்ஸ் போடுகிறார்கள். வைகோவும் நேரில் போய் அழைப்புவிடுக்கிறார். மக்கள் நலக் கூட்டணியே விஜயகாந்த்தின் வரவுக்குக் காத்திருக்கிறது. ‘ஸ்டன்ட் நடிகர் அதனால்தான் பிடி கொடுக்காமல் இருக்கிறார்... அவர் எங்கள் அணியில் இருக்க வேண்டும்... பழம் கனிந்திருக்கிறது..’ என்றெல்லாம் உருகுகிறார் கருணாநிதி. கூட்டணி முடித்து வேட்பாளர் பட்டியலை அறிவித்து பிரசாரத்துக்கு முதல் ஆளாகக் கிளம்பும் ஜெயலலிதாகூடக் காத்திருக்கிறார். தே.மு.தி.க எடுக்கும் முடிவை பொறுத்தே அ.தி.மு.க கூட்டணியை உருவாக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஜெயலலிதாவுக்கு. இப்படி தி.மு.க., அ.தி.மு.க கட்சிகளுக்குக் கிடைக்காத டிமாண்ட் இன்று விஜயகாந்த் கட்சிக்கு ஏற்பட்டிருக்கிறது. ‘தனித்துப் போட்டி’ என்ற விஜயகாந்த்தின் அறிவிப்பு தேர்தல் களத்தில் யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்.
2005-ம் ஆண்டுதான் விஜயகாந்த்தின் தேசிய முற்போக்குத் திராவிடக் கழகம் உதயமானது. அடுத்த சில மாதங்களிலேயே 2006 சட்டசபைத் தேர்தலை முதன்முறையாக எதிர்கொண்டது. அடுத்து 2009 நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்தது. இந்த இரண்டு தேர்தல்களிலும் தனித்துக் களமிறங்கிய விஜயகாந்த், 2011 சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இணைந்து 41 தொகுதிகளைப் பெற்று 29 இடங்களில் வெற்றி பெற்றார்.
சட்டமன்ற எதிர்க் கட்சி என்கிற அந்தஸ்தும் கிடைத்தது. அதன் பின் 2014 நாடாளுமன்றத் தேர்தலை பி.ஜே.பி., ம.தி.மு.க., பா.ம.க கட்சிகளோடு கூட்டணி சேர்ந்து சந்தித்தார் விஜயகாந்த். ஆனால், ஓர் இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. அந்தக் கூட்டணியில் இருந்து பி.ஜே.பி-யும் பா.ம.க-வும் தலா ஓர் இடங்களைப் பிடித்தன.எனவே, இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால் ஆட்சி அமைக்க முடியாது என்பது விஜயகாந்த்துக்கும் தெரியும். ஆனால், இரண்டு திராவிடக் கட்சிகளையும் அது பாதிக்கும் என்பதுதான் உண்மை. தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க., மக்கள் நலக் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என பலமுனைப் போட்டி நிலவும் சூழலில் மூன்றாவது வேட்பாளர் பிரிக்கும் வாக்குகளே முக்கியத்துவம் பெறும்.
2006-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் தே.மு.தி.க எந்த அணியிலும் சேராமல் தனித்துப் போட்டியிட்டது. வன்னியர்கள் கோட்டையான விருத்தாசலத்தில் ‘தில்’ ஆக நின்றார் விஜயகாந்த். விருத்தாசலத்தில் மட்டுமே கட்சி ஜெயித்தது. அந்தத் தேர்தலில் தே.மு.தி.க வாங்கிய வாக்குகள் அரசியலில் அதிர்வலைகளை உண்டாக்கின. விஜயகாந்த் பெரிய சக்தியாக உருவெடுத்தார். பலரின் வெற்றி தோல்விகளுக்கு தே.மு.தி.க காரணமாக இருந்தது.
128 தொகுதிகளில் வெற்றி, தோல்வியை தே.மு.தி.க நிர்ணயித்தது. 232 தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.க 150-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் 3-வது இடத்தைப் பிடித்தது. 105 தொகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை வாங்கிக் குவித்தது தே.மு.தி.க. எடுத்த எடுப்பிலேயே 8.45 சதவிகித வாக்குகளை வாங்கி அரசியல் அரங்கைத் திரும்பிப் பார்க்க வைத்தது.
2006 தேர்தலில் அ.தி.மு.க அணியில் ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், ஐ.என்.டி.யு.சி கட்சிகள் இடம்பெற்று இருந்தன. தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ், பா.ம.க., இடதுசாரிகள் பங்கேற்றன. தே.மு.தி.க-வின் வாக்குகள் இந்த இரண்டு கூட்டணிகளையும் பாதித்தன. அ.தி.மு.க-வை 62 தொகுதிகளிலும், தி.மு.க-வை 23 தொகுதிகளிலும், பா.ம.க-வை 12 தொகுதிகளிலும், ம.தி.மு.க-வை 11 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சியை 10 தொகுதிகளிலும், விடுதலைச் சிறுத்தைகளை 6 தொகுதிகளிலும், சி.பி.எம் கட்சிக்கு 2 தொகுதிகளிலும், ஒரு இடத்தில் ஐ.என்.டி.யு.சி கட்சிக்கும் தனிப்பட்ட முறையில் தே.மு.தி.க வேட்பாளர்கள் பாதிப்பை உண்டாக்கினார்கள்.
தென் மாவட்டங்களில் அ.தி.மு.க கூட்டணியையும், வட மாவட்டங்களில் தி.மு.க கூட்டணியையும் தே.மு.தி.க பெற்ற வாக்குகள் புரட்டிப் போட்டன. தே.மு.தி.க பெற்ற வாக்குகளால் அ.தி.மு.க., தி.மு.க கூட்டணிக் கட்சிகளுக்கு இடையேயான வெற்றி வித்தியாசம் மிகவும் குறைந்துபோனது. இதனால் சொற்ப ஓட்டுகளில்தான் பலரும் ஜெயித்தார்கள்.
2001-2006 அ.தி.மு.க ஆட்சியின்போது பெரிய அளவில் அதிருப்திகள் இல்லாத நிலையில் அ.தி.மு.க 61 தொகுதிகளைக் கைப்பற்றியது. தி.மு.க 96 தொகுதிகளைக் கைப்பற்றியபோதும் மெஜாரிட்டி இல்லாமல் காங்கிரஸ் தயவில்தான் ஆட்சியை நகர்த்தியது. இப்படி மைனாரிட்டி ஆட்சி அமைவதற்கே தே.மு.தி.க-தான் காரணம். தே.மு.தி.க பிரித்த வாக்குகள்தான் அ.தி.மு.க-வை மீண்டும் அரியணை ஏறவிடமால் தடுத்தது. தே.மு.தி.க பிரித்த வாக்குகள் 128 தொகுதிகளில் வெற்றி தோல்வியைத் தீர்மானித்தன.
விஜயகாந்த் எப்படி பாதிப்பை உண்டாக்கினார் என்பதையும் அலசுவோம். 2006 சட்டசபைத் தேர்தலின்போது, தொகுதி மறுசீரமைக்கப் படவில்லை. அதனால் அப்போது இருந்த பல தொகுதிகள் இப்போது இல்லை.
ஆயிரம் விளக்கு தொகுதியில், மு.க.ஸ்டாலின் ஆதிராஜாராமை (அ.தி.மு.க.)விட 2,468 ஓட்டுகள் அதிகம் பெற்று வென்றார். இங்கே விஜயகாந்த் கட்சி வாங்கிய ஓட்டுகள் 5,545. அப்போது அமைச்சராக இருந்த நயினார் நாகேந்திரன் (அ.தி.மு.க.), நெல்லை தொகுதியில் 606 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். அங்கே தே.மு.தி.க வாங்கிய ஓட்டுகள் 4,080. ஜெயங்கொண்டம் தொகுதியில் பா.ம.க வேட்பாளர் காடுவெட்டி குரு, 3 ஆயிரத்து 57 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். அங்கே தே.மு.தி.க பெற்ற ஓட்டுகள் 6 ஆயிரத்து 427.
2006 தேர்தலில் பலரும் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். போடி தொகுதியில் லட்சுமணன் (தி.மு.க.), 898 ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றார். இங்கே விஜயகாந்த் கட்சி வாங்கிய ஓட்டுகள் 4,973. தொட்டியம் தொகுதியில் ராஜசேகரன் (காங்கிரஸ்) 53 ஓட்டுகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றார். இங்கே தே.மு.தி.க பெற்ற ஓட்டுகள் 12,445. திருமயத்தில் அப்போது அமைச்சராக இருந்த ராதாகிருஷ்ணன் 314 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்றார். இங்கே தே.மு.தி.க வாங்கிய ஓட்டுக்கள் 7,863. மேட்டுப்பாளையம் தொகுதியில் சின்னராஜ்
(அ.தி.மு.க.) 142 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இங்கே விஜயகாந்த்தின் வேட்பாளர் பெற்ற ஓட்டுகள் 10,077. தி.மு.க பொதுச் செயலாளர் க.அன்பழகன் துறைமுகம் தொகுதியில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ம.தி.மு.க வேட்பாளர் சீமாபஷீரைவிட 410 ஓட்டுகளே அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
ஆனால், தே.மு.தி.க இங்கே வாங்கிய வாக்குகள் 4,781. மைலாப்பூர் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் நடிகர் எஸ்.வி.சேகர், தி.மு.க. வேட்பாளர் நடிகர் நெப்போலியனை தோற்கடித்தார். ஓட்டு வித்தியாசம் 1,667-தான். தே.மு.தி.க பெற்ற ஓட்டுகள் 7,441. கும்மிடிப்பூண்டியில் விஜயகுமார் (அ.தி.மு.க.), பா.ம.க வேட்பாளர் ஜெயவேலுவைவிட 229 ஓட்டுகளே அதிகம் பெற்றார். இங்கே தே.மு.தி.க பெற்ற ஓட்டுகள் 21,738. மதுரை மத்தி தொகுதியில் சி.பி.எம் நன்மாறன் ம.தி.மு.க பூமிநாதனை 51 ஓட்டுகள் வித்தியாசத்தில்தான் தோற்கடித்தார். இங்கே தே.மு.தி.க பெற்ற ஓட்டுக்கள் 18,632. சிங்காநல்லூர் தொகுதியில் சின்னசாமி (அ.தி.மு.க.)யை எதிர்த்து தி.மு.க கூட்டணியில் போட்டியிட்ட சி.பி.எம் வேட்பாளர் செளந்திரராஜன் வெறும் 14 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்றுப் போனார். இங்கு விஜயகாந்த் கட்சி வேட்பாளர் 31,268 ஓட்டுகள் வாங்கினார்.
2009 நாடாளுமன்றத் தேர்தல்!
அடுத்து 2009 நாடாளுமன்றத் தேர்தலில் முடிவுகளைப் பார்ப்போம். 2006 சட்டசபைத் தேர்தலைப் போலவே 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் தே.மு.தி.க பெரிய தாக்கத்தை உண்டாக்கியது. 2009 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க என்ற இரண்டு பெரிய கூட்டணிகள் களத்தில் நின்றபோது தனித்து 40 தொகுதிகளிலும் களமிறங்கியது தே.மு.தி.க. பெரும்பாலான தொகுதிகளில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான ஓட்டுகளை வாங்கிக் குவித்து மூன்றாம் இடம்பிடித்தது. மொத்தமாக 31.26 லட்சம் ஓட்டுகளைப் பெற்று 10.08 சதவிகித வாக்குகளைப் பெற்றது. கள்ளக்குறிச்சியில் சுதீஷ் 1,32,223, விழுப்புரத்தில் கணபதி 1,27,476, விருதுநகரில் பாண்டியராஜன் 1,25,229 வாக்குகளைப் பெற்று பெரிய கட்சிகளையே கலகலக்க வைத்தனர். திருவள்ளூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், சேலம், விருதுநகர், ஆரணி, விழுப்புரம், தர்மபுரி ஆகிய 9 தொகுதிகளில் 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை வாரி குவித்தது.
வைகோ, தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தா.பாண்டியன், சாருபாலா தொண்டைமான், பிரபு, மணிசங்கர் அய்யர் ஆகியோரின் வெற்றியைத் தட்டிப்பறித்ததோடு, தி.மு.க., அ.தி.மு.க ஆகிய இரண்டு திராவிடக் கட்சிகளின் வெற்றி தோல்வியைத் தீர்மானித்தது தே.முதி.க. அனைத்துத் தொகுதிகளிலும் வாக்குகளை வாரிச் சுருட்டியதால் 25 தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக தே.மு.தி.க மாறியது.
தே.மு.தி.க வேட்பாளர்கள் பிரித்த ஓட்டுகளால் அ.தி.மு.க கூட்டணி 13 இடங்களிலும், தி.மு.க கூட்டணி 11 இடங்களிலும், பி.ஜே.பி கூட்டணி ஓர் இடத்திலும் வெற்றி வாய்ப்பைப் பறிகொடுத்தன. இதில், அதிகபட்சமாக அ.தி.மு.க வேட்பாளர்கள் 8 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் 2 இடங்களிலும் ம.தி.மு.க ஓர் இடத்திலும், பா.ம.க 2 இடங்களிலும் தோல்வியைத் தழுவின. தி.மு.க கூட்டணியைப் பொறுத்தவரையில் தி.மு.க வேட்பாளர்கள் 3 இடங்களிலும், காங்கிரஸ் வேட்பாளர் 7 இடங்களிலும், விடுதலைச் சிறுத்தைகள் ஓர் இடத்திலும் தோற்றுப்போனார்கள்.
2009 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை சட்டசபை தொகுதி வாரியாகப் பிரித்துக் கணக்கிட்டபோது 234 சட்டசபைத் தொகுதிகளில் உளுந்தூர்பேட்டை தொகுதியில்தான் அதிகபட்சமாக 26,042 ஓட்டுகளை தே.மு.தி.க பெற்றிருந்தது. மிகக் குறைந்த வாக்குகள் வாங்கி கடைசி இடத்தில் அதாவது 234-வது இடத்தில் இருந்த தொகுதி வால்பாறை. அந்தத் தொகுதியில் 4,065 ஓட்டுகளைப் பெற்றது.
அதிகபட்சமாக 26,042 ஓட்டுகளும் குறைந்த பட்சமாக 4,065 வாக்குகளையும் பெற்றிருந்தது. 27 தொகுதிகளில் மட்டும் 20 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை தே.மு.தி.க வேட்பாளர்கள் பெற்றிருந்தார்கள். 10 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரம் வரையில் ஓட்டுகள் வாங்கிய தொகுதிகளின் எண்ணிக்கை மட்டுமே 142. பத்தாயிரத்துக்கும் குறைவான வாக்குகள் பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கை 65.
இந்தத் தேர்தலில் என்ன ஆச்சர்யங்களை தே.மு.தி.க. விதைக்கப் போகிறதோ?
2009 தேர்தல் ஹைலைட்ஸ்கள்!
* வாங்கிய வாக்குகள் 31.26 லட்சம்.
* வாக்கு சதவிகிதம் 10.08.
* 20 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்ற சட்டசபைத் தொகுதிகள் 27.
* 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை வாக்குகள் பெற்ற சட்டசபைத் தொகுதிகள் 142.
* 10 ஆயிரத்துக்கும் குறைவான வாக்குகள் பெற்ற சட்டசபைத் தொகுதிகள் 65.
* உளுந்தூர்பேட்டை சட்டசபைத் தொகுதியில் அதிகபட்சமாக 26,042 ஓட்டுகள்.
* வால்பாறை சட்டசபைத் தொகுதியில் குறைந்தபட்சமாக 4,065 ஓட்டுகள்.
* 40 நாடாளுமன்றத் தொகுதிகளில் கள்ளக்குறிச்சியில் அதிகபட்சமாக 1,32,126 வாக்குகள்.
*9 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள்.









No comments:

Post a Comment