MALAIKALLAN ,M.B.B.S - MGR
எம்.ஜி.ஆரைப்பற்றி நான் கேள்விப்பட்ட கதை ஒன்றை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஒரு முறை ஐந்து வயது மகனை தோளில் சுமந்தபடி தந்தை ஒருவர் ராமாவரம் தோட்டத்து வாயிலில் நிற்பதை எம்.ஜி.ஆர் கவனித்துள்ளார்.
அவர்களை அழைத்து அவர்களின் தேவை குறித்து கேட்டுள்ளார்.
அப்போது அந்தத் தந்தை தனது மகனுக்கு தாங்கள் தான் பெயர் வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
ஐந்து வயது வரை ஏன் பெயர் வைக்கவில்லை எனவும், என்ன பெயர் சொல்லி அவரை அழைக்கிறீர்கள் எனவும் கேட்டுள்ளார் எம்.ஜி.ஆர்.
அதற்கு தந்தை இவனுக்கு நீங்கள் தான் பெயர் வைக்க வேண்டும் எனவும், உங்கள் படமான மலைக்கள்ளன் படம் பார்த்துக் கொண்டிருக்கும்போது இவன் பிறந்ததால், இன்று வரை மலைக்கள்ளன் என்றுதான் அழைப்பதாகக் கூறினார்.
இதைக்கேட்டு வியப்படைந்த எம்.ஜி.ஆர், நூறு ரூபாய் தாள் ஒன்றை கொடுத்துள்ளார். மிகவும் மகிழ்ச்சி அடைந்த அந்தத் தந்தை ரூபாய் தாளை போட்டோ பிரேம் செய்து வைத்துள்ளார்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்தச் சிறுவன் வளர்ந்து பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றும் மருத்துவப் படிப்பில் சேர முடியவில்லை. அப்போது மீண்டும் அந்தத் தந்தையும் மகனும் எம்.ஜி.ஆர் தந்த ரூபாய் நோட்டின் பிரேமை தலையில் வைத்துக் கொண்டு ராமாவரம் வாசலில் காத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். அந்த வழியாக வந்தபோது காரை நிறுத்தி, “நீ மலைக்கள்ளன் தானே?” எனக் கேட்டுள்ளார். 15 ஆண்டுகளுக்குப் பிறகும் தங்களை அவர் நினைவில் வைத்திருப்பதைக் கண்டு இருவரும் அளவற்ற மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அவர்களின் தேவைக் குறித்து எம்.ஜி.ஆர். கேட்டபோது மருத்துவப் படிப்பில் சேர வேண்டும் என்கிற ஆசையைப் பற்றி அவர்கள் கூறியுள்ளனர்.
உடனே அவர்களை தனது காரில் ஏற்றிக்கொண்டு கோட்டைக்குச் சென்றார் எம்.ஜி.ஆர். ஆனால், அந்தநேரம் மருத்துவப் படிப்பிற்கான மாணவர் தேர்வு நிறைவடைந்ததால், உடனடியாக ஆந்திராவில் அப்பொழுது முதலமைச்சராக இருந்த எம்.டி.ராமாராவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மருத்துவ படிப்பிற்கான சேர்க்கையில் இடமளிக்க வேண்டும் எனக் கூறினார்.
எம்.ஜி.ஆரே கேட்டுக்கொண்டதால், மாணவரை உடனடியாக அனுப்பி வைக்குமாறும், அவரது படிப்பு செலவிற்கான அனைத்து செலவுகளையும் தாங்களே ஏற்றுக் கொள்வதாகவும் எம்.டி.ராமராவ் கூறினார்.
பின்னர் ஆந்திரா சென்று கல்வி பயின்று மருத்துவராகப் பட்டம் பெற்றார் மலைக்கள்ளன். அப்போது எம்.ஜி.ஆர். அவர்களின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அமெரிக்காவிற்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொண்டார்.
அப்பொழுது எம்.ஜி.ஆருக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார் ஜப்பானிய மருத்துவர் டாக்டர்.கான். ஆனால் அன்று டாக்டர்.கானுக்கு மருத்துவ உதவிக்காக நியமிக்கப்பட்டவர் மலைக்கள்ளன் என்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
- கரு.பழனியப்பன் நேர்காணல் ஒன்றில் எம்.ஜி.ஆர் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டதிலிருந்து ஒரு பகுதி.
No comments:
Post a Comment