Tuesday 23 March 2021

K.P.SUNDARAMBAL - AP NAGARAJAN

 

K.P.SUNDARAMBAL - AP NAGARAJAN




‘‘என்ன ஏபிஎன்.. சாவகாசமாச் சொல்றே. அந்தப் பையன் டான்ஸ் கத்துக்கிட்டு ஆடுவான்’-னு... பதற்றமாய்க் கேட்டார், இசைஞானப் பேரொளி -பத்மஸ்ரீ பட்டம் பெற்ற கே.பி.சுந்தராம்பாள் அம்மையார்.

புகழ்பெற்ற இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன்தான் 'திருவிளையாடல்', 'கந்தன் கருணை', 'சரஸ்வதி சபதம்' என்று ஏபிஎன் படங்களுக்கு இசையமைப்பார்.


குன்னக்குடி வைத்தியநாதன் ‘காரைக்கால் அம்மையார்’ படத்துக்கு இசையமைக்கிறார் என்று ஏபிஎன் சொன்னபோதே என் கச்சேரிக்கு வயலின் வாசிச்சவனா மியூசிக் டைரக்டர் என்று கிண்டலாகக் கேட்டார் கே.பி.எஸ்.

குன்னக்குடி, கவிஞர் கண்ணதாசன் எழுதிக் கொடுத்த, ‘தகதகதக தகதகவென ஆடவா.. சிவ சக்தி சக்தி சக்தியோடு ஆடவா...! ஆலகாலனே ஆலங்காட்டினில் ஆடும் நாயகனே நீலகண்டனே வேதநாயகா நீதியின் காவலனே’ - என்று துரிதகதியில் உள்ள பாடலுக்கு திஸ்ரம், சதிஸ்ரம் -கண்டம், மிண்ட்ரம், சைக்கியம் -என்று பலவகை தாளங்களுடன் டியூன் போட்டு வீட்டிலே ஆர்மோனியப் பெட்டியுடன் சென்று கேபிஎஸ் முன் வாசித்துக் காட்டி மெய் மறக்கச் செய்துவிட்டார்.

எஸ்.ஜி.கிட்டப்பா

64 வயதில், சுருதி பிசகாமல், உச்சஸ்தாயியில் வயதை மறந்து அவர் பாடி முடித்தபோது- அவருக்கே பிரமிப்பாக இருந்தது.

‘பாட்டு பிரமாதமா வந்திருக்கு ஏபிஎன் -யாரு இதுக்கு ஆடப்போறாங்க?’ - என்று ஆர்வமாகக் கேட்டார்.

‘‘ஸ்ரீ வித்யா, பார்வதியா டான்ஸ் ஆடப்போறா!’’

‘‘அது 5 வயசிலிருந்து மேடையில் ஆடற பொண்ணு-பையன் யாருன்னு நீ சொல்லலையே!’’

‘‘பையன் கோயமுத்தூர்’’

‘‘கோயமுத்தூர் பையன் பரதநாட்டியம் ஆடப்போறானா? அவனுக்கு டான்ஸ் தெரியுமா?’’

‘‘கத்துக்கிட்டு நல்லா ஆடுவான்..!’’

‘‘இனிமே கத்துக்கிட்டு ஆடப்போறானா? ம்..கூம்... நான் உயிரோட இருக்கும்போது நீ இந்தப் பாட்டை படமாக்க மாட்டே!’’

பயந்துவிட்டார்.

எனக்குப் பதற்றமாகப் போய்விட்டது. உடனே ஏபிஎன் என் தோளில் கைபோட்டு, ''ஒண்ணும் கவலைப்படாதீங்க. உங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. 10 நாள் அல்லது 15 நாள் நல்லா ஒத்திகை பாத்துட்டு நீங்க எப்ப ரெடி சொல்றீங்களோ அப்ப ஷூட்டிங் வச்சுக்கலாம்!’’ என்றார்.

ஔவையார் படத்தில்

புகழ்மிக்க பாடகி -கர்நாடக சங்கீத வித்வான் எம்.எல். வசந்தகுமாரி மகள் ஸ்ரீவித்யா. 5 வயதிலிருந்து மேடையில் ஆடியவர். நான் மின்சாரமில்லாத கிராமத்தில், 15 வயது வரை ரேடியோவே கேட்காமல் வளர்ந்த பையன். மெல்லிசையே கேட்டதில்லை என்னும்போது ராகம், தாளம், பாவம் என்றால் என்ன தெரியும்?

ஏபிஎன் அவர்கள் கொடுத்த தைரியத்தில் தினம் ஒரு பம்பாய் டவலை எடுத்துக் கொண்டு நடன ஒத்திகைக்கு காலை 9 மணிக்குச் சென்றால் மாலை 5 மணி வரை ஆடி, ஆடி உடம்பை சாறாகப் பிழிந்து டவலில் துடைத்துக் கொண்டு வீடு திரும்புவேன்.

இப்படி 15 நாட்கள். ஏவிஎம் ராஜேஸ்வரி திருமண மண்டபத்தையொட்டி ஈ.வி. ராஜன் -காரைக்கால் அம்மையார் தயாரிப்பாளர் -அவருக்குச் சொந்தமான யோகலட்சுமி திருமண மண்டபத்திற்கு காலையில் ஒத்தையில் கலந்துகொள்ள ஸ்ரீ வித்யா வருவார். அவரை ஆட விடமாட்டேன். நான் நன்றாகப் பயிற்சி எடுத்த பின் அந்த மூவ்மென்ட்டை என்னோடு அவர் ஆட அனுமதிப்பேன்.

இப்படி பயிற்சி எடுத்து வாஹினி ஸ்டுடியோவில் 1972 மே மாதம் 29-ம் தேதி முதல் ஜூன் 5-ம் தேதி வரை 7 நாட்கள் படமாக்கப்பட்டது, அந்தப் பாடல் காட்சி.

திருவிளையாடல்

டான்ஸ் மாஸ்டர் பி.எஸ். கோபாலகிருஷ்ணன் -நான் சிறு தவறு செய்தாலும் மிரட்டி வேலை வாங்கினார். பாடல் காட்சி படமாக்கி முடிக்கப்பட்டதும் வித்யாவையும் என்னையும் அருகே அழைத்து இரண்டு பேரையும் கன்னத்தோடு கட்டி அணைத்து, ‘நீங்க ரெண்டு பேருமே ‘ஜெம்ஸ்’ -பிரமாதமாக ஆடினீங்க. காலத்துக்கும் இது உங்க பேர் சொல்லும் - சிவகுமார் புதுப் பையன். திறமைசாலி. கொஞ்சம் கோபமா திட்டினா நல்லா ஆடுவார்னுதான் அப்படிப் பேசினேன். அவரால செய்ய முடியாதுன்னா நான் பேசாம விட்டிருப்பேன். பாட்டு பிரமாதமா வரும்!’ என்றார்.

கே.பி.எஸ். கன்னத்தின் மேல் கை வைத்து, ‘‘எப்படியப்பா, அவளோட போட்டி போட்டு இப்படி ஆடினே?’’ என்றார். 1000 பூக்கள் தலையில் தூவி ஆசீர்வதித்த மகிழ்ச்சி எனக்கு.

காரணம் அவர் அவ்வளவு பெரிய கலைஞர். மகாத்மா காந்தியே அவர் வீட்டுக்கு வந்து பாராட்டியவர். தியாகராஜ பாகவதர் தன் முதல் படத்துக்கு 1934-ல் 1000 ரூபாய் சம்பளம் வாங்கியபோது இந்த அம்மையார் 1935-ல் நடித்த 'நந்தனார்' படத்திற்கு 1 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கியவர்.

'ஒளவையார்' என்ற வார்த்தையைக் கேட்டால் எங்கள் தலைமுறைக்கு கே.பி.எஸ் அம்மா உருவம்தான் நினைவுக்கு வரும். ஆறு ஆண்டுகள் தயாரிக்கப்பட்ட அந்தப் படத்தில் நடித்ததற்கு 1953-ல் 4 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிய ஒரே நடிகை கே.பி.எஸ் அம்மையாராகத்தான் இருக்க முடியும்.

64 வயதில் அவர் பெரும் சிரமமெடுத்துக் கொண்டு பாடிய கண்ணதாசனின் பாடலுக்கு ஆனந்த நடனமாட வாய்ப்பு கொடுத்த ஏபிஎன் அவர்களுக்கு என்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

கொங்கு மண்ணில் பிறந்தவர் அவர் என்பதாலேயே எங்களுக்கெல்லாம் பெருமை உண்டு. 1908-ல் கொடுமுடியில் பிறந்தவர். அப்பா பூர்வீகம் கரூர். அவர் அகால மரணமடைந்ததால் அம்மா தான் பிறந்த கொடுமுடியிலேயே குழந்தைகளோடு தங்கிவிட்டார்.

கோயிலில் பூஜை நடக்கும்போது சிறுமி கேபிஎஸ்ஸை வரவழைத்து பாடச்சொல்வார்களாம். அப்பா ஊரான கரூருக்கு அம்மாவுடன் ரயிலில் போகும் சமயம். இவர் பாட்டைக் கேட்டு மெய்மறந்த ரயில் பயணிகள் அன்பளிப்பாக சிறுமி கையில் காசைத் திணிப்பார்களாம்.

ரயில்வே துறையில் பணிபுரிந்த எஃப்.ஜி. நடேசய்யர் நாடகக்குழுக்களோடு சம்பந்தம் உள்ளவர். கேபிஎஸ் திறமையைப் பார்த்து வேலுநாயர் என்பவர் கும்பகோணத்தில் நாடகக் கம்பெனி நடத்திக் கொண்டிருந்ததை அறிந்து அவரிடம் கொண்டு போய் சேர்த்து விட்டார். இது நடந்தது 1917-ல் சூட்டிகையான சிறுமி பாலபார்ட் -பின்னர் ஸ்ரீபார்ட் - ராஜபார்ட் - மூன்று வேடங்களிலும் தூள் பறத்தினாள். ராஜபார்ட் என்பது ஆண் வேடமிட்டு நடிப்பது.

காரைக்கால் அம்மையார் சிவன் -பார்வதி

மைக் இல்லாமல் ஒரு மைல் தூரத்திற்குக் கேட்கும் அளவு குரல் வளத்தை இறைவன் அவருக்கு வழங்கி இருந்தான். கும்பகோணம் வட்டாரத்தில் 10 ஆண்டுகள் ராணியாகக் கொடி கட்டிப் பறந்தார். காரணம் வேலு நாயர் நாடகக்குழுவில் ஆசானாக இருந்தவர் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள். தமிழ்நாடக உலகத் தலைமை ஆசானாகப் போற்றப்பட்டவர்.

வள்ளித் திருமணம், பவளக்கொடி, கோவலன், மணிமேகலை, அல்லி அர்ஜூனா, சத்தியவான் சாவித்திரி, அபிமன்யு சுந்தரி - என 24 வயதில் 68 நாடகங்கள் எழுதியவர் சங்கரதாஸ் சுவாமிகள். அவருடைய நாடகங்களுக்கு மேடையில் உயிர் கொடுத்தவர் கே.பி.எஸ் அம்மையார்.

முடிசூடா ராணியாக பெண்களில் இவர் கொடிகட்டிப் பறந்த அதே சமயம் 1906-ல் செங்கோட்டையில் பிறந்த எஸ்.ஜி. கிட்டப்பா உச்ச ஸ்தாயியில் பாடுவதில் முடிசூடா மன்னனாக விளங்கினார்.

கிட்டப்பாவுடன் பிறந்த 4 சகோதரர்களும், இவரும் சங்கரதாஸ் சுவாமிகளின் சீடர்களே. 1914-லேயே இலங்கை சென்று நாடகங்கள் நடத்திப் பெயர் பெற்றவர் எஸ்.ஜி.கிட்டப்பா.

தமிழ்நாடு, இலங்கை இரண்டு பகுதிகளிலும் தனித்தனியே மேடையில் மிரட்டியவர்கள் 1926-ல் இலங்கையில் சந்திக்கிறார்கள். 1927-ல் கிட்டப்பாவும், கே.பி.எஸ்ஸும் எட்டுக்கட்டை சுதியில் உச்சஸ்தாயியில் பாடியபோது ரசிகர்களின் ஆரவாரம் எல்லை மீறிவிட்டது. திறமையின் அடிப்படையில் இணைந்தவர்கள் வாழ்க்கையிலும் இணைந்தனர். 1927-ல் மாயவரம் கோயில் ஒன்றில் மாலை மாற்றித் தாலி கட்டினார் கிட்டப்பா. ஏற்கெனவே திருமணமானவர் என்பதால் வீட்டில் பிரச்சினை வெடித்தது. செங்கோட்டை போனால் எப்போது வருவார் என்று தெரியாது. இதற்கிடையில் 1928 ஜனவரி 28-ம் தேதி கே.பி.எஸ்ஸுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. சேதி கேட்டும் குழந்தையைப் பார்க்க அவர் வரவில்லை. 11 நாளில் குழந்தை இறந்துவிட்டது.

6 ஆண்டு திருமண வாழ்வு - 3 ஆண்டு பிரிவு. கடைசி 3 ஆண்டு சேர்ந்து வாழ்ந்தனர். 1933-ல் மதுவுக்கு அடிமையான கிட்டப்பா மரணத்தைத் தழுவினார்.

ஆனந்த நடனம்

வெள்ளைச்சேலையிலும், விபூதியுமாக வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த மாபெரும் கலைஞரை கல்கத்தா ஹசன்தாஸ் தயாரித்த 'நந்தனார்' படத்தில் ஆண் வேடத்தில் நடிக்க வற்புறுத்தியவர் காமராஜரின் அரசியல் குரு சத்தியமூர்த்தி.

சென்னையில் 20 கிரவுண்ட் இடம் வாங்கிய கே.பி.எஸ், சத்யமூர்த்திக்கு 4 கிரவுண்ட் நிலத்தை அன்பளிப்பாக வழங்கினார். 1958-ல் காமராஜர் மந்திரிசபையில் எம்எல்சி- மேல்சபை உறுப்பினரானார். 1964-ல் எஸ்.எஸ்.ஆரின் வற்புறுத்தலில் 'பூம்புகார்' படத்தில் கவுந்தி அடிகளாக நடித்தார்.

1968-ல் கொடுமுடியில் சொந்தமாக தியேட்டர் கட்டி -கலைஞர்-எம்ஜிஆர்-ஜெயலலிதாவை அழைத்து திறப்பு விழா செய்தார். 1970-ல் மத்திய அரசு பத்மஸ்ரீ விருது கொடுத்து கவுரவித்தது. 1972-ல் காரைக்கால் அம்மையாராக அவர் நடித்த படத்தில்தான் இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்தில் சொன்ன அவர் பாடல் இடம் பெற்றது.

12 படங்களில் மட்டுமே நடித்தவர், 260 பக்திப் பாடல்கள் பாடியவர் 1980-ல் இவ்வுலகை விட்டுப் புறப்பட்டு விட்டார். எத்தனை திரைப்படங்களில் நடித்தாலும், ‘தனித்திருந்து வாழும் மெய்த் தவமணியே!’ , ‘ஞானப்பழத்தை பிழிந்து..!’, ‘மயிலேறும் வடிவேலனே!’ பாடலை எங்கு கேட்டாலும் கே.பி.எஸ்ஸின் விபூதி அணிந்த முத்துப்பல் வரிசை முகம் நம் மனக்கண்ணில் தோன்றவே செய்யும்.

அனுபவிப்போம்...

தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

No comments:

Post a Comment