T.M.SOUNDARAJAN ALWAYS BEST
இசை திலகம் திரு.கே.வி.மகாதேவன் அவர்களுக்கு இன்று பிறந்த நாள். இந்த நன்நாளில் நமது ஐயாவுடன் அவருக்கு நடந்த ஒரு இனிய சம்பவம்.
"சின்னஞ்சிறிய வண்ணப் பறவை" பாடலைக் கவியரசர் எழுதிக் கொடுத்ததும் அதற்கு யாரைப் பாடவைக்கலாம் என்று ஒரு ச ர்ச்சை எழுந்தது.
பெண் குரலுக்கு எஸ். ஜானகிதான் என்று ஒரு மனதாக முடிவானது. ஆண் குரலுக்கு பி. பி. ஸ்ரீனிவாஸை பாடவைக்கலாம் என்று முதலில் நினைத்தார் கே.வி. மகாதேவன்.
ஆனால் பாடல் காட்சியில் நடிப்பவர் சிவாஜி என்று உணர்ந்ததும் அவருக்கேற்ப கம்பீரமான குரலாக இருக்கவேண்டும் என்று தோன்றியதும் சீர்காழி கோவிந்தராஜனைப் பாடவைக்கலாம் என்று கே.வி. மகாதேவன் முடிவெடுத்தார். தயாரிப்பாளர், இயக்குனர்கள் கிருஷ்ணன் பஞ்சு ஆகியவர்களும் அதற்கு சம்மதித்ததும் சீர்காழி கோவிந்தராஜனை எஸ். ஜானகியுடன் இணைத்துப் பாடவைத்தார் கே.வி. மகாதேவன்.
தர்பாரி கானடா ராகத்தில் சீர்காழி கோவிந்தராஜனின் சஞ்சாரங்கள் அனைவரையும் பிரமிக்க வைத்தன. வெகு உற்சாகமாகப் பாடிக் கொடுத்தார் சீர்காழி. பாடல் பதிவும் முடிந்தது. நடிகர் திலகத்திற்குப் பாடல் போட்டுக் காண்பிக்கப் பட்டது. "அருமையாக வந்திருக்கிறது" என்று அவர் பாராட்டுவார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தார்கள்.
ஆனால் பாடலைக் கேட்ட சிவாஜி கணேசனின் முகம் சுருங்கியது.
"என்ன இது? எனக்கு டி.எம்.எஸ். குரல் தான் பொருந்தும் என்று தெரியாதா?
கோவிந்தராஜன் பாட்டுக்கு நான் வாயசைச்சு நடிச்சா ஜனங்க ஏத்துக்க மாட்டாங்க. இந்தப் பாட்டை டி.எம்.எஸ். பாடினாத்தான் நான் நடிக்க முடியும்." - என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார் சிவாஜி.
எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர் தன் பிடிவாதத்தைக் கைவிடாததால் மறுபடியும் டி.எம்.சௌந்தரராஜனைப் பாடவைத்து பாடலைப் பதிவு செய்தார் கே.வி. மகாதேவன்.
கல்லூரி விழாவில் மாணவி சாரதா பாடலை ஆரம்பித்து சரணம் வரும் போது "உலகம் புரியவில்லை" என்ற வரிகளை அடுத்த வரி மறந்து திணறும் போது பார்வையாளர்களின் கேலித்தனமான விசில் சப்தம் காதைப் பிளக்க மேலே என்ன செய்வதென்று புரியாமல் திகைத்து தடுமாறி தவிக்கும்போது "மனதினிலே தோன்றும் மயக்கங்கள் கோடி" என்று டி.எம்.எஸ். எடுப்பாகத் தொடங்கும்போது அப்படியே நம்மைக் கட்டிப்போடத் தவறாது.
பாடலில் டி.எம்.எஸ்.ஸுக்கு ஈடுகொடுத்து எஸ். ஜானகி கொடுத்திருக்கும் பிருகா சஞ்சாரங்கள் அவரது திறமைக்கு ஒரு எடுத்துக்காட்டு.
தான் பின்னணியில் இருந்துகொண்டு பாடலின் பெருமை முழுவதையும் பின்னணி பாடிய இருவருக்குமே சேர்த்திருக்கிறார் கே.வி. மகாதேவன்.
நன்றி: இணையதளம்
No comments:
Post a Comment