Wednesday 10 March 2021

GIREESH PUTHENCHERRY , LYRICS WITH ILAIYARAJA

 

GIREESH PUTHENCHERRY , 

LYRICS WITH ILAIYARAJA



பாடலாசிரியர் GIREESH PUTHENCHERY அவர்கள் 🙏

இந்தத் தாமரைப் பூ தீயில் இன்று, காத்திருக்கும் உள்ளம் நொந்து, கண்கள் என்னும் பூந் தேன் தும்பி பாடிச் செல்லாதோ? ❤️
இசைஞானி இளையராஜா அவர்களின் இசையில், மலையாளத்தில் பல பாடல் வரிகளைப் பாடலாசிரியர் Gireesh Puthenchery அவர்கள் எழுதியுள்ளார். இசைஞானியின் இசையில், "Kaalapani" எனப்படும் மலையாளப் படத்தில் (தமிழ்: சிறைச்சாலை) அனைத்துப் பாடல்களின் வரிகளையும் எழுதியது இவரே என்பது குறிப்பிடத் தக்கது. இப் படத்தில் வந்த "Chempoove Poove" என்னும் மலையாளப் பாடலின் போது இசைஞானிக்கும், இவருக்குமிடையில் நடந்த சம்பவமொன்றை எப்போதோ வாசித்துள்ளேன். அச் சம்பவம் பற்றி என் நினைவிலிருப்பதை இங்கே உங்களனைவருடனும் பகிர விரும்புகிறேன்:
"Chempoove Poove" பாடலுக்காகக் Gireesh Puthenchery அவர்கள் எழுதிய வரிகள் விரசம் கொண்டனவையாக இருப்பதினால், பாடலின் வரிகளை மாற்றா விடில் இப் பாடலுக்கு இசையமைக்க மாட்டேனென இசைஞானி மறுத்து விட்டார். வரிகளில் ஒரு சொல்லைக் கூட மாற்ற மாட்டேனெனச் சொல்லிய Gireesh Puthenchery அவர்கள், வரிகளில் இயற்கை (Nature) பற்றிச் சொல்லப்பட்டுள்ளதே தவிரப் பெண்ணைப் பற்றியல்ல என்று சொல்லிச், சில சமஸ்கிருத ஸ்லோகங்களை எடுத்துரைத்து, இயற்கை பற்றிச் சொல்லும் இச் சமஸ்கிருத ஸ்லோகங்களின் மலையாள வடிவமே தானெழுதிய வரிகளென இசைஞானிக்கு விளக்கமளித்தார். இவருக்கிருந்த சமஸ்கிருத அறிவைக் கண்ட இசைஞானி, இளம் வயதில் கடினமான சமஸ்கிருதத்தில் எப்படி இவ்வளவு அறிவு வந்ததென வியந்து போய் கேட்க, ஆயுர்வேத வைத்தியரான தனது தந்தையிடமிருந்தும், சமஸ்கிருதத்தில் மிகவும் தேர்ச்சி பெற்ற தனது தாயாரிடமிருந்தும் பாரம்பரியமாகத் தனக்குப் புகட்டப்பட்ட சமஸ்கிருதத்தைத் தான் உயிரோடு வைத்திருந்ததே தனது அறிவுக்குக் காரணமென இவர் பதிலளித்துள்ளார். தானெழுதிய பாடல் வரிகளில் தனது சமஸ்கிருத அறிவை இதுவரை உபயோகிக்காததால் தனது சமஸ்கிருதப் புலமை வெளியே தெரிய வரவில்லையென்றும் இவர் சொல்லியுள்ளார். இதைக் கேட்ட இசைஞானி "தற்காலிகமான விளையாட்டு வீரர் போலில்லாமல் வாழ்நாள் விளையாட்டு வீரராக இருக்க வேண்டும்" என்று சொல்லி இவரை வாழ்த்தியதோடு, இவர் எழுதிய "Chempoove" பாடல் வரிகளில் ஒரு சொல்லைக் கூட மாற்றாது அவ் வரிகளுக்கு இசையமைத்தார். அந்தப் பாடல் பெரும் வெற்றியடைந்தது அனைவருக்கும் தெரிந்ததே. இளம் வயதிலேயே, நோய்வாய்ப்பட்டு இவர் மரணமாகியது பாடல் துறைக்கு மிகப் பெரும் இழப்பாகும்.
விரசமிருப்பதால் தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாத வரிகளுக்கு இசையமைக்க மாட்டேன் என்று தன் நிலையில் நின்ற இசைஞானியின் பிடிவாதத்தையும், வரிகளின் அர்த்தங்களுக்கு விளக்கம் கொடுத்த பின், ஒரு பாடலாசிரியரின் விளக்கத்திற்காகத் தன் நிலையை விட்டு இறங்கி வருவதா என்ற மனநிலையில்லாமல், பாடலாசிரியரைப் பாராட்டியதோடு, வரிகளிலுள்ள ஒரு சொல்லைக் கூட மாற்றச் சொல்லிக் கேட்காமல் இசையமைத்த இசைஞானியின் மேன்மையான குணத்தையும், மிகப் பெரிய இசையமைப்பாளரிடம், வாய்ப்புப் போகலாம் என்ற பயமின்றித் தான் எழுதிய வரிகளில் ஒரு சொல்லைக் கூட மாற்ற மாட்டேன் எனச் சொன்ன பாடலாசிரியரின் தைரியத்தையும், இசைஞானியே சம்மதம் தெரிவிக்குமாறு விளக்கம் கொடுக்கக் கூடிய பாடலாசிரியரின் புலமையையும் எண்ணி வியக்கிறேன் 🙏
எனக்கு மிகக் குறைவான மலையாள மொழிப் புரிதலிருப்பதால், மலையாள மொழியில் மிகவும் தேர்ச்சி பெற்றவர்கள் இப் பாடல் வரிகளில் சொல்லப்பட்டுள்ள இயற்கை பற்றிப் பின்னூட்டங்களில் சொல்லவும். இயற்கையை விடப் பெண்ணின் அழகே பாடல் காட்சியில் படமாக்கப்பட்டுள்ளது.
இப் பாடலின் தமிழாக்க வரிகளைப் பாடலாசிரியர் அறிவுமதி அவர்கள் எழுதியிருப்பார்கள்:
செம்பூவே !! பூவே !!
உன் மேகம் நான்
வந்தால் ஒரு வழியுண்டோ?
சாய்ந்தாடும் சங்கில்
துளி பட்டாலும்
முத்தாகிடும் முத்துண்டே
படை கொண்டு நடக்கும்
மன்மதச் சிலையோ?
மன்னவன் விரல்கள்
பல்லவன் உளியோ?
இமைகளும் உதடுகள் ஆகுமோ?
வெட்கத்தின் விடுமுறை
ஆயுளின் வரை தானோ?
அந்திச் சூரியனும் குன்றில் சாய
மேகம் வந்து கச்சை ஆக
காமன் தங்கும் மோகப் பூவில்
முத்தக் கும்மாளம்
தங்கத் திங்கள் நெற்றிப்
பொட்டும் இட்டு
வெண்ணிலாவின் கன்னம் தொட்டு
நெஞ்சிலாடும் சுவாசச் சூட்டில்
காதல் குற்றாலம்
தேன் தெளிக்கும் தென்றலாய்
நின் அருகில் வந்து நான்
சேலை நதி ஓரமாய்
நீந்தி விளையாடவா?
நாளும் மின்னல் கொஞ்சும்
தாழம் பூவைச் சொல்லி
ஆசை கேணிக்குள்ளே
ஆடும் மீன்கள் துள்ளி
கட்டிலும் கால் வலி கொள்ளாதோ?
கை வளை கைகளைக் கீறியதோ?
இந்தத் தாமரைப் பூ தீயில் இன்று
காத்திருக்கு உள்ளம் நொந்து
கண்கள் என்னும் பூந் தேன் தும்பி
பாடிச் செல்லாதோ?
அந்தக் காமன் அம்பு என்னைச் சுட்டுப்
பாவை நெஞ்சின் நாணம் சுட்டு
மேகலையின் நூலறுக்கும்
சேலைப் பொன் பூவே
விம்மியது தாமரை
வண்டு தொடும் நாளிலா?
பாவை மயில் சாயுதே
மன்னவனின் மார்பிலோ?
முத்தத்தாலே பெண்ணே
சேலை நெய்வேன் கண்ணே
நாணத்தால் ஓர் ஆடை
சூடிக் கொள்வேன் நானே
பாயாகும் வழி சொல்லாதே
பஞ்சணைப் புதையல் ரகசியமே..
தமிழ்:
செம்பூவே பூவே (படம்: சிறைச்சாலை):
பாடியவர்கள்: S P பாலசுப்ரமணியம் & K S சித்ரா:

No comments:

Post a Comment