MGR SHAKED HANDS TO PUBLIC -
BLOOD FROM NAILS OF OTHERS
எம் ஜி ஆர் கரங்களில்
ரத்தக் கீறல்கள்
ANTHUMANI -JEEVAKARULLA |
_________
"எம்ஜிஆர் என்ற மகா மனிதனைச் சந்தித்தேன்" எனும் தலைப்பில் வார இதழ் ஒன்றில், "சந்தித்தேன்- சிந்தித்தேன்" தொடரில் கவிஞர் கண்ணதாசன் எழுதினார். அந்த படைப்பு சமூக வெளியில் சஞ்சரித்துக் கொண்டு இருக்கிறது.
1980-ஆம் மே மாதத்தில் ஆற்காடு முதலி தெருவில் உள்ள எம்ஜிஆரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்ததாக கண்ணதாசன் குறிப்பிட்டிருக்கிறார்.
1977-ல் ஆட்சிக்கு வந்த எம்ஜிஆர் 3 ஆண்டுகளுக்குள்ளேயே மத்திய அரசால் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். அதன் பின்னர்1980 மே மாதவாக்கில் தமிழக சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தலை சந்திப்பதில் எம்ஜிஆர் படு சுறுசுறுப்பாக இருந்த காலகட்டம் அது.
"ஆட்சி பறி போய்விட்டது. தேர்தலைச் சந்திக்கிறோம். ஆட்சியை மீட்போமா?" என்ற கவலை இல்லாமல் எம்ஜிஆர் மிகுந்த நம்பிக்கையோடு இருந்ததாக கண்ணதாசன் குறிப்பிட்டிருந்தார்.
அந்த காலகட்டத்தில் தினமலர் செய்தியாளனாக நான் களமாடிக் கொண்டிருந்தேன்.
தேர்தல் பிரச்சாரப் பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில் அடுத்த 48 மணி நேரத்தில் பொதுத் தேர்தல்.
லாயிட்ஸ் சாலையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் எம்ஜிஆரை செய்தியாளர்களாகிய நாங்கள் சந்தித்துப் பேசினோம். அப்போது அவரிடம் நாங்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பிய போது அவர் தந்த பதில் இதோ:
காரணத்தைச் சொல்லாமலேயே கலைத்து விட்டார்கள். எங்கள் ஆட்சியைக் குலைத்து விட்டார்கள். மக்கள் அளித்த ஆட்சியை மத்திய அரசு பறித்துக் கொண்டது. மீண்டும் பொதுத் தேர்தல். மக்களிடமே சென்று நான், "என்ன தவறு செய்தேன்? ஏன் டிஸ்மிஸ் செய்தார்கள்?" என்று வினா வைத்து இருக்கிறேன். இனி விடையளிக்க வேண்டியவர்கள் அவர்கள் தான்.
என் கடமையை நான் நிறைவாக செய்து முடித்து இருக்கிறேன். தேர்தல் பிரச்சாரப் பணிகளைப் பொருத்தவரை முழுமையாக நடத்தி முடித்து விட்டேன். இனி மக்கள் என்ன தீர்ப்பு தந்தாலும் அதை ஏற்க நான் தயாராகிவிட்டேன்.
நான் சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் திரண்டு வந்தார்கள். முண்டியடித்துக் கொண்டு நெருங்கினர்.என்னுடன் கை குலுக்கவும், பேசவும், முகத்துக்கு நேரே நின்று நோக்கவும் முனைந்தனர்.
ஒரே நேரத்தில் பலரும் என் கைகளைத் தொட முயன்றனர். கைகுலுக்கக் கரம் நீட்டினர். நானும் இருகரங்களையும் அவர்களுக்கு வழங்கினேன். அவர்கள் ஆர்வமிகுதியால் என் கைகளை வேகமாக தொட்டு இழுக்கும் பொழுது அவர்களின் கைவிரல் நகங்களால் கீறப்பட்டு என் கைகளில் எல்லாம் ரத்தக் கீறல்கள். கைகளைப் பாருங்கள்... -இவ்வாறு பேசியபடியே அவர் தன் கரங்களை விரித்துக் காட்டினார். அவற்றில் சின்னக் குழந்தை சிலேட்டில் கிறுக்கியது போல ரத்தக் கீற்றுகள் தென்பட்டன.
எம்ஜிஆர் நா தழுதழுத்த குரலில் கூறினார், "என் ரத்தத்தையே மக்களுக்குத் தத்தம் அளித்து விட்டேன். இனி அவர்கள் என்ன தீர்ப்பு அளித்தாலும் ஏற்பேன்" என்று சுருக்கமாக ஆனால் உருக்கமாகக் குறிப்பிட்டார்.
"நிச்சயம் வென்று விடுவோம்" என்ற நம்பிக்கை அவரின் பேச்சில் இல்லை. நாங்களோ, "வெற்றி உங்களுக்குத்தான்" என்று உற்சாகமூட்டி விட்டு வந்தோம்.
தேர்தல் முடிந்து முடிவுகளும் அறிவிக்கப்பட்டன.
அவர் கோட்டைக்கு மீண்டு வந்தார் வெற்றியோடு மீண்டும் வந்தார்.
எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கிய பின் திருச்சியில் பிரம்மாண்டப் பேரணி நடத்தினார். அப்போது ரசிகர்களின் கூட்டம், பொது மக்களின் திரள் என ஜன சமுத்திரத்தினுள் திறந்த ஜீப்பில் பயணம் மேற்கொண்டார்.
போலீஸ் பாதுகாப்பு போதிய அளவுக்கில்லை.
எம்ஜிஆரின் கைகுலுக்க அக்கூட்டம் கட்டுப்பாடின்றிப் பாய்ந்தது.ஏக காலத்தில் பல பேர் எம்ஜிஆரின் கரங்களைப் பற்றினர். அவர்களிடம் ஆர்வமிகு ஆவேசம் ஆட்கொண்ட நிலையில் எம்ஜிஆரின் கரங்கள் கீறப்பட்டன. இந்நிலையோ பல முறை.
அப்போது சென்னையில் தினமலர் பதிப்பு இல்லை. திருச்சி பதிப்பில் ஞான பாண்டியன் எனும் சப் எடிட்டர் பணியில் இருந்தார். அவர் அப்போதே, "தொண்டர்களின் அன்புத் தொல்லை.
எம்ஜிஆர் கைகளில் ரத்தக்கறை"
என்று தலைப்பிட்டு அந்துமணியின் பாராட்டைப் பெற்றார்.
80 வயதையும் தாண்டி அவர் பெங்களூரில் வசிக்கிறார்.
கடந்த ஆண்டு அவரின் இல்லம் சென்று அவருடன் உரையாடி மகிழ்வித்தேன்.
அப்போது எடுத்த படம் இப்போது இங்கே...
நூருல்லா ஆர். ஊடகன் 05-09-2020
9655578786
No comments:
Post a Comment