Saturday 3 March 2018

MANIMEKALAI -APUTRAN PART 1





MANIMEKALAI -APUTRAN PART 1




மணிமேகலை ஆபுத்திரன் கதை - பகுதி 1
- ராஜம்


"மணிமேகலை" என்று சொன்னவுடனே "அமுதசுரபி" என்ற சொல்லும் சிலர் நினவுக்கு வரும்.

"அமுத சுரபி"
நம்மில் பலர் பொதுவாகவும் எளிமையாகவும் புரிந்துகொண்டிருக்கும் வகையில் சொல்லப் போனால்... "அமுத சுரபி" ஒரு பிச்சைப் பாத்திரம். அந்த "அமுத சுரபி"யில் இடப்பட்ட உணவு எடுக்க எடுக்கக் குறையாமல் பெருகிக் கொண்டே இருக்கும்.

அந்தப் பாத்திரத்தில் பிச்சை பெற்று, அதிலிருந்து கிடைத்த உணவைக் கொடுத்துத்தான் மக்களின் பசிப்பிணியைத் தீர்த்தாள் மணிமேகலை.

மணிமேகலை கைக்கு அமுதசுரபி எங்கேயிருந்து வந்தது?

ஆபுத்திரன் என்பவனிடமிருந்து வந்தது. நேரடியாகவா? இல்லை... . சுற்றுவழியில் வந்தது. அந்தச் சுற்றுவழி எது?
தென்மதுரைச் சிந்தாதேவி --> ஆபுத்திரன் --> மணிபல்லவத் தீவில் கோமுகி --> மணிமேகலை

சிந்தாதேவி யார்? ஆபுத்திரன் யார்? கோமுகி என்றால் என்ன? என்று பல கேள்விகள் எழும். பார்க்கலாம்.

ஆபுத்திரன் - அமுதசுரபி

வாராணசியில் வேதம் ஓதுகிற அபஞ்சிகன் என்பவனுக்குச் சாலினி என்று ஒரு மனைவி. சாலினி இல்லறவழி தவறிவிடுகிறாள்; அந்தக் குற்றம் தீர்ப்பதற்காகத் தென் திசையில் உள்ள குமரியில் தீர்த்தமாட வருகிறாள். வழியில் ஆண் குழந்தை பிறக்கிறது. அந்தக் குழந்தையை ஒரு தோட்டத்தில் போட்டுவிட்டுத் தன் பயணம் தொடர்கிறாள். அழுகின்ற குழந்தையை ஒரு பசு பாதுகாக்கிறது; ஏழு நாட்கள் அருகே இருந்து பாலூட்டிக் காக்கிறது. அப்போது அந்த வழியில் தன் மனைவியோடு போய்க்கொண்டிருந்த பூதி என்ற அந்தணன் அழுகின்ற குழந்தைக் குரல் கேட்டு அங்கே வந்து குழந்தையைக் கண்டு "இவன் பசுவின் மகனில்லை; என் மகன்" என்று அன்போடு சொல்லி எடுத்துக்கொண்டுபோய் வளர்க்கிறான். "பசுவின் மகன்" என்பது "ஆபுத்திரன்."

பூதியின் மகனாய் வேதம் ஓதி வளரும் சிறுவன் ஆபுத்திரன் ஒரு நாள் ஓர் அந்தணரின் வேள்விச்சாலையில் நுழைகிறான். அங்கே வேள்விக்காகக் கட்டிப்போட்டிருந்த பசுவைப் பார்த்து இரக்கம் கொள்கிறான். அந்தப் பசுவைக் காப்பாற்றவேண்டி, யாருக்கும் தெரியாமல் மறைந்திருந்து இரவில் கடத்திக்கொண்டு செல்கிறான். பசுவைக் காணமல் தேடிப் போன அந்தணர்கள் பசுவைக் கடத்திச் சென்ற சிறுவனைக் "கையும் களவுமாக"ப் பிடித்துவிடுகிறார்கள். ஆபுத்திரனை அலைக்கோலால் அறைந்து ...

"புலை-ச்-சிறுமகனே போக்கப்படுதி" என்று வெருட்டுகிறார்கள்.

சிறுவனை நையப்புடைத்த வேத வாத்தியாரை அந்தப் பசு முட்டி, அவர் குடலைக் கிழித்துவிட்டுக் காட்டுக்குள் ஓடிவிடிகிறது.

ஆபுத்திரன் சொல்கிறான்:

"நோவன செய்யன்மின் நொடிவன கேண்மின்
விடு நில மருங்கின் படு புல் ஆர்ந்து
நெடு நில மருங்கின் மக்கட்கு எல்லாம்
பிறந்த நாள் தொட்டும் சிறந்த தன் தீம்பால்
அறம் தரு நெஞ்சோடு அருள் சுரந்து ஊட்டும்
இதனொடு வந்த செற்றம் என்னை"

["நொந்து போக வைக்கும் செயல்களைச் செய்யாதீர்கள். நான் சொல்வதைக் கேளுங்கள். தன்னை விட்ட நிலத்தில் விளைந்து கிடக்கும் புல்லைத் தின்று, பரந்த உலகில் உள்ள மக்களுக்கெல்லாம் பிறந்த நாள் முதல் தன் பாலைக் கொடுத்துக் காக்கும் இந்தப் பசுவின் மேல் உங்களுக்கு என்ன கோபம்?"]

அந்தணர்களுக்கும் ஆபுத்திரனுக்கும் இடையே மிக நல்ல வாக்குவாதம் நடக்கிறது. அந்த வாக்குவாதம் ஆபுத்திரன் பிறப்புப் பற்றி அந்த அந்தணர்கள் ஏசுவதாகவும் அதற்கு ஈடாக ஆபுத்திரன் பல முனிவர்களின் பிறப்புப் பற்றிச் சாடுவதாகவும் அமைகிறது.

அந்தணர்:

"பொன் அணி நேமி வலம் கொள் சக்கரக்கை
மன்னுயிர் முதல்வன் மகன் எமக்கு அருளிய
அருமறை நன்னூல் அறியாது இகழ்ந்தனை ...
... ... நீ அவ்-
ஆ மகன் ஆதற்கு ஒத்தனை; அறியா
நீ மகன் அல்லாய்"

["சக்கரத்தை வலக்கையில் தாங்கி மன்னுயிர் காக்கும் முதல்வனின் [திருமாலின்] மகன் [பிரமன்] எமக்கு அருளிய அருமையான நல்ல மறை நூலைத் தெரிந்துகொள்ளாமல் எங்களைப் பழிக்கிறாய். உனக்கு அறிவுக்குழப்பம். நீ அந்தப் பசுவின் மகன் என்பது பொருத்தமே. நீ ஒரு மகன் இல்லை."]

ஆபுத்திரன் பல முனிவர்களின் பெயர்களை அடுக்குகிறான்.

"ஆ மகன் அசலன்; மான் மகன் சிருங்கி
புலி மகன் விரிஞ்சி; புரையோர் போற்றும்
நரி மகன் அல்லனோ கேச கம்பளன்
ஈங்கு இவர் நும் குலத்து இருடி கணங்கள் என்று
ஓங்குயர் பெரும் சிறப்பு உரைத்தலும் உண்டால்
ஆவொடு வந்த அழி குலம் உண்டோ?"

"அந்த ஒவ்வொரு முனிவனின் பிறப்பிலும் ஒரு விலங்கிற்குப் பங்கு உண்டு, அப்படி இருக்கையில் பசுவிற்கு மகனாகிய எனக்கு என்ன குறை?" என்பது அவன் கேள்வி.

அப்போது ஓர் அந்தணன் ஆபுத்திரனின் தாய் சாலி பற்றிச் சொல்கிறான் -- அவள் இல்லற வழியில் தவறியவள்; அப்படிப் பிறந்தவன் ஆபுத்திரன் என்று. ஆபுத்திரன் சிரிக்கிறான். பிறகு கேட்கிறான்: "திலோத்தமைக்கும் பிரமனுக்கும் பிறந்தவர்கள் வசிட்டர், அகத்தியர் என்ற இருவரும். அது பொய்யா? அப்படியிருக்க, சாலி மேல் என்ன தவறு?"

"மா மறை மாக்கள் வரு குலம் கேண்மோ
முது மறை முதல்வன் முன் முன்னர்த் தோன்றிய
கடவுள் கணிகை காதலம் சிறுவர்
அருமறை முதல்வர் அந்தணர் இருவரும்
புரி நூல் மார்பீர் பொய் உரை ஆமோ
சாலிக்கு உண்டோ தவறு?"

இந்த உரையாடல் கேட்டு வருந்திய பூதி "ஒதும் அந்தணர்க்கு இவன் ஒத்துவராதவன்" என்று சொல்லி அவனை வீட்டைவிட்டு விரட்டிவிடுகிறான்.

ஆபுத்திரன் பிச்சை எடுக்கிறான். "பசுவைத் திருடின கள்வன்" என்று சொல்லி ஆபுத்திரனுக்கு யாரும் நல்ல பிச்சை இடாமல் அவனுடைய பிச்சைப்பாத்திரத்தில் கல்லைப் போடுகிறார்கள்.

மனம் நொந்த ஆபுத்திரன் தென்மதுரைக்கு வருகிறான். சிந்தாதேவியின் கோயிலின்முன் இருந்த அம்பலத்தைத் தன் இருப்பிடமாகக் கொண்டு, ஊரில் வாங்கிய பிச்சையைப் பிறருடன் பகிர்ந்து காலம் கழிக்கிறான். ஒரு நள்ளிரவில் சிலர் அங்கே வந்து ஆபுத்திரனிடம் தங்கள் பசிக்கு உணவு கேட்கிறார்கள். அப்படிக் கேட்டவர்களின் பசித்துன்பத்தைப் போக்கமுடியாமல் ஆபுத்திரன் தவிக்கிறான். நள்ளிரவில் பிச்சைக்கு எங்கே போவது? அப்போதுதான் சிந்தாதேவி தோன்றி அவனுக்குத் தன் கையிலிருந்த பாத்திரத்தை ["அமுதசுரபி"யைக்] அவனுக்குக் கொடுக்கிறாள். "நாடு முழுவதும் வறுமை அடைந்தாலும் இந்த ஓடு வறுமை அடையாது" என்று உறுதியும் சொல்கிறாள்.

"கேள் இது ... கெடுக நின் தீது என
யாவரும் ஏத்தும் இருங்கலை நியமத்துத் 
தேவி சிந்தா விளக்குத் தோன்றி
ஏடா! அழியல்! எழுந்து இது கொள்ளாய்
நாடு வறம் கூரினும் இவ்-ஓடு வறம் கூராது
வாங்குநர் கையகம் வருத்துதல் அல்லது 
தான் தொலைவு இல்லாத் தகைமையது"

ஆபுத்திரன் அவளை வாழ்த்தி வேண்டுகிறான்:

"சிந்தா தேவி! செழுங்கலை நியமத்து
நந்தா விளக்கே! நாமிசை-ப்-பாவாய்!
வானோர் தலவி! மண்ணோர் முதல்வி!
ஏனோர் உற்ற இடர் களைவாய்!"

அது முதல் அந்த ஓட்டில் பிச்சை எடுத்து மக்கள், விலங்கு, பறவை என்று எல்லார்க்கும் உணவளிக்கிறான் ஆபுத்திரன்.

ஆபுத்திரனின் இந்த நல்ல செய்கை தேவேந்திரனுக்கு நடுக்கம் தருகிறது. இந்திரன் ஆபுத்திரன் முன்னர் வருகிறான். "உன் புண்ணியச் செயலுக்கு வரம்கொடுக்க வந்தேன். என்ன வரம் வேண்டும்?" என்று கேட்கிறான்.

இந்திரனை எள்ளி நகையாடுகிறாண் ஆபுத்திரன்:

"ஈண்டுச் செய்வினை ஆண்டு நுகர்ந்திருத்தல்
காண் தகு சிறப்பின் நும் கடவுளர் அல்லது
அறம் செய் மாக்கள், புறம் காத்து ஓம்புநர்
நல் தவம் செய்வோர், பற்று அற முயல்வோர்
யாவரும் இல்லாத் தேவர் நன்னாட்டுக்கு
இறைவனாகிய பெரு விறல் வேந்தே!"

["இந்த உலகத்தில் செய்யும் நல்ல செயல்களின் பயனைத் தானே உங்கள் கடவுள்கள் அந்த உலகத்தில் நுகர்கிறார்கள்! அது தவிர, அறம் செய்பவர்களோ, பிறரைப் பாதுகாப்பவர்களோ, நல்ல தவம் செய்பவர்களோ, பற்றை அறுப்பதற்காக முயல்பவர்களோ, ... இப்படி யாரும் இல்லாத நல்ல ஒரு நாட்டுக்குத் தலவனே!"]

"வருந்தி வந்தோர் அரும் பசி களைந்து அவர்
திருந்து முகம் காட்டும் என் தெய்வக் கடிஞை;
உண்டி கொல்லோ உடுப்பன கொல்லோ
பெண்டிர் கொல்லோ பேணுநர் கொல்லோ
யாவை ஈங்கு அளிப்பன தேவர் கோன்?"

["பசி வாட்டுகிறது என்று வருந்தி வந்தவருடைய பசியைப் போக்கி, அவருடைய திருந்திய முகத்தைக் காட்டக் கூடிய தெய்வத் தன்மை பொருந்தியது என் பாத்திரம். தேவர் தலைவனாகிய நீர் இங்கே தருவது என்ன? உணவா? உடுப்பவையா? பெண்டிரா? பிறரைப் பாதுகாப்பவரா?"]

தொடர்ந்து "பசி தீர்ந்த மக்களின் இனிய முகத்தைக் காணச் செய்யும் இந்தப் பாத்திரம் ஒன்றே எனக்குப் போதும்" என்று சொல்லி ஆபுத்திரன் இந்திரனை விரட்டிவிடுகிறான்.

காட்டம் கொண்ட இந்திரன் 12 ஆண்டுகளாக மழையில்லாமல் வருந்திய பாண்டிய நாட்டில் வறுமை நீங்கும் வண்ணம் மழை பெய்யவைத்துச் செல்வம் பெருக்கி, ஆபுத்திரனுடைய உதவி யாருக்குமே தேவையில்லாதபடிச் செய்துவிடுகிறான். செல்வக்களிப்பால் யாருக்கும் ஆபுத்திரனுடைய பாத்திரத்திலிருந்து கிடைக்கும் உணவு தேவையில்லாமல் போகிறது; ஆபுத்திரன் மிகவும் வருந்துகிறான்.

அப்போது சாவக நாட்டிலிருந்து வந்த சில வணிகர்கள் சாவக நாட்டில் வறுமையால் மக்கள் பசிப்பிணியால் இறந்ததுபற்றிச் சொல்கிறார்கள். அதைக் கேட்ட ஆபுத்திரன் சாவக நாட்டுக்குச் செல்ல நினைத்துக் கப்பலேறுகிறான். அந்தக் கப்பல் மணிபல்லவத்தீவில் ஒரு நாள் தங்குகிறது. ஆபுத்திரன் அத்தீவில் இறங்குகிறான். தொடர்ந்த பயணத்துக்காக ஆபுத்திரன் ஏறாமலே கப்பல் புறப்பட்டுப் போய்விடுகிறது.

ஆபுத்திரன் மணிபல்லவத்தீவில் தனித்து விடப்படுகிறான். "யாருமில்லாத தீவில், பலருக்கும் உணவளிக்க வேண்டிய இந்தப் பாத்திரத்தினால் எனக்கு என்ன பயன்?" என்று வருந்துகிறான். அங்கே இருந்த கோமுகிப் பொய்கையில், "மிகவும் கருணையோடு தருமம் செய்வதையே மேற்கொண்டு எல்லா உயிர்களையும் பாதுகாப்பவர் யாராவது வந்தால் அவர் கைக்குக் கிடைப்பாய்" என்று சொல்லி அந்தப் பாத்திரத்தைப் போட்டு ...

"ஓர் யாண்டு ஒரு நாள் தோன்று என விடுவோன்
அருள் அறம் பூண்டு ஆங்கு ஆருயிர் ஓம்புநர்
உளர் எனில் அவர்கைப் புகுவாய்"

என்று விதிக்கிறான்.

பிறகு உண்ணாநோன்பு இருந்து உயிர்விடுகிறான்.

ஆபுத்திரன் கோமுகிப் பொய்கையில் விட்ட அந்தப் பாத்திரம்தான் பின்னர் ஒரு நல்ல நாளில் [கௌதம புத்தன் பிறந்த வைசாக பௌர்ணமி நாளில்] மணிமேகலை கைக்குக் கிடைத்தது.

மிகச் சுருக்கமாக ... அமுதசுரபியின் வரலாறு
அமுதசுரபி ... தென்மதுரைச் சிந்தாதேவி கையிலிருந்து ஆபுத்திரனுக்குப் போனது; ஆபுத்திரன் கையிலிருந்து மணிபல்லவத் தீவில் இருந்த கோமுகிப் பொய்கையில் விடப்பட்டது; பிறகு அது மணிமேகலை கையில் புகுந்தது.

அன்புடன், 
ராஜம்

No comments:

Post a Comment